சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு தனியார் சிகிச்சை மையத்தில், பேச்சு வராத மூன்று வயது குழந்தைக்கு, பயிற்றுநர்கள் சிகிச்சை அளிப்பதாக கூறி கை,கால்களை கட்டிப்போட்டு துன்புறுத்தியது சர்ச்சையானது.
இதனை அடுத்து, மையத்தின் உரிமையாளர், பயிற்றுநர் உள்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த மையம் உரிமம் இல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்ற போலி கிச்சை மையங்களை கண்டறிவதற்கான நிபுணர்குழு உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு மூன்று ஆண்டுகளாக நியமிக்கவில்லை என்று சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த பயஸ் நவாஸ், தனது மகன் மூன்று வயதை எட்டியபோதும், சரியாக பேசவில்லை என்பதால் ஒரு பேச்சுத்திறன் சிகிச்சை மையத்தில் மகனை சேர்த்திருந்தார். எழும்பூரில் உள்ள அந்த மையத்தில் சேர்த்த, ஆறு மாதங்களுக்கு பின்னரும் எந்தவித முன்னேற்றமும் குழந்தையிடம் தென்படவில்லை.
”என் குழந்தையை அழைத்துவர என் தந்தை அம்ஜத்கான் சென்றபோது, அவன் கை, கால்கள் கட்டிப்போடப்பட்ட நிலையில், அழுதுகொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நான் இதுபற்றி கேட்டபோது, அதுபோல துன்புறுத்துவதும் சிகிச்சையில் ஒரு விதம் என்றார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. போலீசில் புகார்கொடுத்தோம். அந்த சிகிச்சை மையம் உரிமைபெறாமல் இயங்கி வருகிறது என்று இப்போது வெளிப்பட்டுள்ளது,” என்கிறார் பயஸ் நவாஸ்.
தற்போது எழும்பூரில் உள்ள அந்த தனியார் சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்த மையத்தின் மற்ற 23 கிளைகளும் மூடப்பட்டுள்ளன என எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தனியார் சிகிச்சை மையங்களில் குழந்தைகள் மோசமாக தாக்கப்பட்டதாக புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த புகார்களை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பேச்சுத்திறன் மற்றும் உடலியக்க சிகிச்சை மையங்கள் உரிமம் இல்லாமல் எப்படி இயங்குகின்றன, அரசாங்கம் இந்த மையங்களை முறைப்படுத்த தவறியது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இந்த மையங்களில் உள்ள முறைகேடுகள் குறித்த ஆய்வை தொடங்கியுள்ளனர்.
பிபிசிதமிழிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பேச்சுத்திறன் மற்றும் உடல் இயக்க குறைபாடுகள் தென்பட்டால், குழந்தைகள் நல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, உரிமம் உள்ள மையங்களை நாடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
உங்கள் குழந்தைக்கு சிகிச்சை தேவை என்று எப்படி தெரிந்துகொள்வது?
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் சிகிச்சை பயிற்றுநர் சுதாகர் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா ஆகியோர் பெற்றோர் கவனிக்கவேண்டிய முக்கியமான சமிக்கைகளை சொல்கிறார்கள்.
- குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் சத்தமாக அழுவது மற்றும் ஒருவிதமாக கத்துவதை கவனிக்கவேண்டும். மூன்று மாதத்தில் ஒரு குழந்தை தனது பெற்றோரை அடையாளம் கண்டு, அவர்களை பார்க்க தொடங்கும். உற்சாகத்துடன் கை,கால் அசைவுகளை செய்யும். இதுபோன்ற அசைவுகள் இல்லை எனில், உடனே மருத்துவரை அணுகவேண்டும்.
- முதல் ஆறுமாதங்களில், சிரிப்பு, சிலவிதமான முணுமுணுப்பு செய்வது, விதவிதமான அழுகை சத்தத்தை குழந்தை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் தென்படவில்லை என்றாலும் கவனம் தேவை. ஆறு மாத காலத்தில் படுத்த நிலையில் திரும்புவது, குப்புற படுப்பது போன்ற செயல்களை செய்வார்கள். அவர்கள் நகர முயற்சிக்கவில்லை, எந்தவித சத்தமும் ஏற்படுத்தவில்லை எனில், அதற்கான காரணங்களை கேட்டு, தேவைப்பட்டால், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். குழந்தையை உட்காரவைக்க முயற்சிக்கவேண்டும், அப்போது தலை தொங்காமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். தலை நிற்கவில்லை எனில் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.
- ஆறுமுதல் ஒன்பது மாதங்களில் பேசுவது போல பாவனை செய்வது, சில விதமான பேசும் வகையிலான சத்தங்களை ஏற்படுத்துவது போன்ற செயல்களை குழந்தைகள் செய்வார்கள். பொருட்களை தரையில்தட்டுவது, உதவியின்றி தானாக உட்காருவது, சத்தங்களை கேட்டு திரும்பிப் பார்ப்பது போன்ற செயல்களை குழந்தை செய்கிறதா என்று பார்க்கவேண்டும். அதேபோல, முதல் ஆண்டை எட்டும் நேரத்தில் ஏதாவது ஒரு வார்த்தையை பேசிவிடுவார்கள். குறைந்தபட்சம் ‘மா’, ‘பா’ போன்றசொற்களை உதிர்ப்பார்கள். நடக்க முயற்சிப்பது, உதவியுடன் நடப்பது, தனக்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை தவழ்ந்து சென்று எடுப்பது போன்ற செயல்களை செய்வார்கள்.
- 18 மாதங்கள் ஆனநிலையில், பேச முயற்சிக்கவில்லை, கைகளை பயன்படுத்தி எந்த பொருட்களையும் தானாக எடுக்கவில்லை, விளையாட்டு காட்டினாலும் அதை கவனிக்கவில்லை, தானாக உட்காரவில்லை என்றால், மருத்துவ ஆலோசனையின் பேரில் சிகிச்சை மையத்தில் பயிற்சியில் குழந்தையை ஈடுபடுத்தவேண்டும்.
- ஒரு வயது முதல் இரண்டு வயது வரை, குடும்ப நபர்களை அடையாளம் காண்பது, விளையாட்டுகளில் அதிக ஆர்வம், தனக்கான பொருட்களை எடுத்துக்கொள்வது, பொருட்களை கலைப்பது, எடுத்துவைப்பது என விதவிதமான செயல்களை செய்வார்கள். இரண்டு வயதை எட்டுவதற்கு முன்னதாக, ஓடுவது, சிரிப்பது என்பதுடன், சில எளிமையான வார்த்தைகளை பேசுவார்கள். சில வார்த்தைகளை முழுமையாக சொல்வார்கள், ஒரு சில வார்த்தைகளை சொல்வது போல குளறிப் பேசுவார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை எனில் உடனை அதனை கவனிக்கவேண்டும்.
- இரண்டு வயதைஎட்டும் குழந்தைகள் வீட்டில் பெற்றோர், பிற குடும்ப உறுப்பினர்கள் செய்யும் செயல்களை பார்த்து தானும் அதை செய்து விளையாடுவார்கள். எடுத்துக்காட்டாக, வீட்டை கூட்டுவது, சமையல் செய்வது போல பாவனை செய்வது, வண்டி ஓட்டுவது, செல்போன் பேசுவது போன்ற செயல்களை பாவனை செய்வார்கள்.
இதுபோன்ற செயல்களில் குழந்தை ஈடுபடவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று, உரிமம் உள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சையை தொடங்கவேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
சிகிச்சை மையங்கள் எங்குள்ளன?
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் சிகிச்சை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. பெற்றோர்கள் எவ்வாறு சரியான மையங்களை தேர்வு செய்யவேண்டும், அந்த மையங்கள் எங்கு உள்ளன என்று தமிழ்நாடு அரசு குழந்தைகள் நல நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையின் இயக்குனர் ரெமா சந்திரமோகனிடம் கேட்டோம்.
அவர், தமிழ்நாட்டில் உள்ள எல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு பயிற்றுநர்கள் உள்ளனர் என்கிறார். குழந்தைகள் நல மருத்துவர் பரிந்துரை செய்தால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பயிற்றுநர்கள், பேச்சுத்திறன் மற்றும் உடலியக்க திறனுக்கான சிகிச்சைகளை அளிப்பார்கள் என்கிறார்.
”மருத்துவக் கல்லூரிமருத்துவமனை மட்டுமல்லாமல், அரசாங்கம் நடத்தும் 38 ஆரம்பகால தலையீடுமையங்கள்(Early intervention center)பல ஊர்களில்செயல்படுகின்றன. குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்குள் தென்படும் பிரச்னைகளை சரிப்படுத்த இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அருகில் உள்ள அரசு சிகிச்சை மையங்கள் எங்கு உள்ளன என்ற தகவலை பெற்றோர் பெறலாம்,” என்கிறார்.
ஆனால், அரசாங்கத்தின் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதாலும், பெற்றோர் தங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள தனியார் மையங்களுக்கு செல்ல அதுவே காரணமாக அமைகிறது என்ற வாதத்தை வைக்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் சாந்தி.
”சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் பயிற்றுநர்கள் உள்ளனரா என்பது கேள்விக்குறிதான். பல நேரம், பெற்றோர்கள் அதிக தொகை கொடுத்து அருகில் உள்ள தனியார் சிகிச்சை மையத்திற்குச் செல்வதற்கு பயணதூரம்தான் காரணம். சிகிச்சை மையங்களின் தேவையை உணர்ந்து, எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்கவேண்டும். தனியார் சிகிச்சை மையங்களுக்கு செல்லும் பெற்றோர் அந்த மையம் உரிமம் பெற்றதா என்று சோதித்துவிட்டு செல்லவேண்டும். குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையை கேட்டுதான் சிகிச்சை மையத்திற்கு செல்லவேண்டும்,”என்கிறார் மருத்துவர் சாந்தி.
தமிழ்நாட்டில் தனியார் சிகிச்சை மையங்களை கண்காணிப்பது யார்?
தனியார் சிகிச்சை மையங்களில் உள்ளவர்களின் தகுதியை நிர்ணயம் செய்வது சுகாதாரத்துறையாக இருந்தாலும், சிகிச்சை மையங்களின் உரிமத்தை மத்திய அரசின் சமூகநீதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘இந்தியமறுவாழ்வு கவுன்சில்’ (Rehabilitation council of India) என்று சொல்லப்படும் நிறுவனம்தான் வழங்குகிறது. இதனைதமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மேற்பார்வை செய்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய மறுவாழ்வு கவுன்சில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த கவுன்சிலில், பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், சிகிச்சை அளிக்கும் பயிற்றுநர்கள், இரண்டு தன்னார்வ அமைப்புகளின் உறுப்பினர்கள், மாற்றுத்திறன்களுக்காக கல்வி நிலையம் நடத்தும் நபர்கள் அல்லது அந்த கல்வி நிலையங்களில் பணிபுரியும் இரண்டு சிறப்பு ஆசிரியர்கள், சிகிச்சை மையங்களின் சங்கத்தை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்த நிபுணத்துவம் பெற்ற இரண்டு நபர்கள் உள்ளிட்டவர்கள் அதில் இருக்கவேண்டும்.
இந்த உறுப்பினர்கள்தான் போலியான சிகிச்சை மையங்கள் செயல்பட்டுவந்தால், அதனை உடனடியாக இந்திய மறுவாழ்வு கவுன்சிலுக்கு தெரியப்படுத்துவார்கள். 2021ஆம்ஆண்டுமுதல்அக்டோபர்2023வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை என அந்த கவுன்சிலின் இணையதளத்தில் உள்ள தகவலை கொண்டு உறுதிப்படுத்தமுடிந்தது.
பிபிசிதமிழிடம் பேசிய மாற்றுத்திறனாளி உரிமைகள் செயற்பாட்டாளர் சிம்மச்சந்திரன், சிகிச்சை மையங்கள் குறித்த புள்ளிவிவரங்களை கூட தமிழ்நாடு அரசாங்கம் இதுவரை சேகரிக்கவில்லை என்கிறார்.
”தனியார் சிகிச்சை மையத்தை திறப்பவர்கள் கணிசமான தொகையை வசூலிக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை மையங்களுக்கு உரிமம் அவசியம், அதனை வைத்திருக்கிறார்களாக என்று பார்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம்தான் ஏற்படுத்தவேண்டும். ஆனால் போலி மையங்களை கண்டறிய உறுப்பினர்களைக்கூட நியமனம் செய்யவில்லை என்பது மிகவும் ஆபத்தான போக்கு,”என்கிறார் அவர்.
தமிழ்நாட்டின் சார்பாக முன்னர் நியமிக்கப்பட்டிருந்த இந்திய மறுவாழ்வு கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர் ராமகிருஷ்ண பெத்தலாவிடம் பேசினோம். அவர் தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே உறுப்பினர் நியமனம் குறித்த அறிவிப்பு அளிக்கப்பட்டிருந்தது என்றும் நினைவூட்டல்களும் அனுப்பப்பட்டன என்றும் உறுதிப்படுத்துகிறார்.
முதல்வரின் துறைக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லையா?
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள துறையாக செயல்படுகிறது. இருந்தபோதும், அவ்வப்போது நடைபெறும் துறை ரீதியான கூட்டங்களை சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்தான் நடத்துகிறார் என கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் சொல்லவிரும்பாத தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.
தனியார் சிகிச்சை மையங்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவது குறித்தும், இந்திய மறுவாழ்வு கவுன்சிலுக்கு உறுப்பினர் நியமனம் நடைபெறவில்லை என்பது குறித்தும் அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம்.
”இந்த தகவல்என்னுடையகவனத்திற்கு இப்போதுதான் வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு ஆலோசனை நடத்துகிறேன், முதல்வரின் கவனத்திற்கும் எடுத்துச்செல்கிறேன்,”என்கிறார் அமைச்சர் கீதா ஜீவன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு சிகிச்சை மையங்களை முறைப்படுத்துவது குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. நவம்பர் 2021ல்அந்தஆய்வின்முடிவில், சிகிச்சைமையங்களுக்கான தரக்கட்டுப்பாடுகள், விதிகள், தேவையான வசதிகள் குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டன. ஆனால் அந்த முடிவுகள் தற்போதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கேட்டபோதும் அமைச்சர் கீதா ஜீவன், ஆய்வு முடிவுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் சிகிச்சை மையங்கள் உரிமம் இல்லாமல் இயங்குவது குறித்து விசாரணை எதுவும் நடைபெற்றுள்ளதா என்று கேட்டபோது, தான் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றப்பட்டு ஒருவார காலம்தான் ஆகிறது என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்