ஆகஸ்ட் 27, 2015.
இரவு சுமார் 8 மணியளவில் கோவை – திருச்சி நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வகனங்கள் பயணித்துக்கொண்டிருந்தன. கோவை நகரின் எல்லையைக் கடந்ததும் வேகத்தடை போல இருந்த அந்த சேலம்-கொச்சி மற்றும் கோவை-திருச்சி நெடுஞ்சாலை சிக்னல் சந்திப்பில் வாகனங்கள் சற்றே இளைப்பாரி, க்ரீன் சீக்னலுக்காக காத்திருந்தன.
அப்போது, கோவை மத்திய சிறைச்சாலையில் இருந்து கொலை வழக்கில் பிணை பெற்று வெளியே வந்த மணிகண்டன் என்கின்ற லாலி மணிகண்டன் பயணித்த சொகுசு காரை நோக்கி ஒரு கார் வந்தது.
என்ன நடக்கிறது என யூகிப்பதற்குள் எதிரே வந்தவர், லாலி மணிகண்டன் பயணித்த காரின் ஓட்டுனரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அந்த ஒரு நொடி தேசிய நெடுஞ்சாலையே நிசப்தமானது. சுட்டது, திண்டுக்கல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல ரவுடி மோகன் ராம்.
அடுத்து என்ன நடக்கும் என யூகித்த லாலி மணிகண்டனும், அவருடன் காரில் பயணித்த ஆட்களும், வாகனங்களில் இருந்து இறங்கி, நாலாபுறமும் சிதறி ஓடினர். மோகன்ராமுடன் வந்த அவரது ஆட்கள், பழி தீர்ப்பதற்காக அவர்களை விரட்டிச் சென்று, மூன்று பேரை அடையாளம் தெரியாத அளவுக்குக் கொடூரமாக வெட்டிச் சரித்தனர்.
இறந்த மூவரில், ஒருவரின் முகம்கூடத் தெரியாத அளவுக்கு வெட்டிச் சிதைத்துவிட்டு, அங்கிருந்து தப்பியது அந்தக் கும்பல். தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தங்களது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
அன்று இரவே பெரும்பாலான செய்தித் தொலைக்காட்சிகளிலும், மறுநாள் வெளியான நாளிதழ்களிலும், கொலை வழக்கில் பிணையில் வெளிவந்த மணிகண்டனைத்தான் மோகன் ராமும் அரவது கூட்டாளிகளும் பழிதீர்த்தார்கள் என செய்திகள் வெளியானது.
கொலை நடந்த இரவு போலீசாரும்கூட அப்படித்தான் நம்பியிருந்தார்கள். ஆனால், கொலை செய்யப்பட்ட மூன்று பேரில் இறந்ததாகக் கருதப்பட்ட மணிகண்டன் மறுநாள் அதிகாலை உயிருடன் வந்தார்.
என்ன நடந்தது?
இந்த கொலைச் சம்பவத்திற்கு முன்று மாதத்திற்கு முன், 2015 ஏப்ரல் 3ஆம் தேதி அன்று இரவு, பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஸ்டாலினின் தம்பியும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எம்.கே.ராஜா(32), தஞ்சாவூர் மாவட்டம் தெப்பெருமாநல்லூரில் கோவில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு, கும்பகோணம் அருகே உள்ள தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காரில் எதிரே வந்து வழிமறித்த கும்பல் ஒன்று, அரிவாள், கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ராஜா மற்றும் அவர்களது நண்பர்களை நோக்கி வந்துள்ளனர்.
அப்போது, காரில் இருந்து அனைவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். இருந்தபோதும், அவர்களை விரட்டிய அந்தக் கும்பல், அனைவரையும் சரமாரியாகக் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதில், ஸ்டாலினின் தம்பி ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்ற மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
முன்விரோதம் காரணமாக நடந்த இந்தக் கொலையில், லாலி மணிகண்டன் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான லாலி மணிகண்டன் முதலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
கைது செய்யப்பட்டு, நான்கு மாதங்களுக்குப் பிறகு பிணையில் வந்த லாலி மணிகண்டனை கொலை செய்யும் முயற்சியில்தான், அவருடன் வந்த மூவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
லாலி மணிகண்டனை மோகன் ராம் ஏன் கொலை செய்ய வேண்டும்?
லாலி மணிகண்டனுக்கும் மோகன் ராமுக்கும் நேரடியான தொடர்போ முன்பகையோ இல்லை என்கின்றனர் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள்.
“அவர்களுக்கு முன்னதாவே அறிமுகம் இருந்து, அவர்களுக்குள் முன்பகை இருந்திருந்தால், அவர்கள் மணிகண்டனை தவறவிட்டுவிட்டு, மற்றவர்களைக் கொலை செய்திருக்க மாட்டார்கள். மணிகண்டனை மட்டுமே குறி வைத்திருப்பார்கள்,” என்றார் அப்போது இந்த வழக்கை விசாரித்த ஒரு மூத்த அதிகாரி.
லாலி மணிகண்டனை கொலை செய்வதற்காக யாரேனும் இவர்களைப் பணம் கொடுத்து மோகன்ராமை கூலிப்படையாக அனுப்பினார்களா எனக் கேட்டபோது, “அதுதான் இல்லை. பழக்கத்திற்காக மோகன்ராம் செய்த பல கொலைகளில் இதுவும் ஒன்று,” என்றார் அந்த மூத்த அதிகாரி.
மோகன் ராம், லாலி மணிகண்டனை கொலை செய்ய வந்ததற்கான காரணத்தை விரிவாகப் பேசிவார் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சிறப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி.
“கடந்த 2014 ஆம் ஆண்டில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த மோகன்ராம், சிதம்பரத்தில் கையெறிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக வெடித்துவிட்டது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்படித்தான் அவரை போலீசார் ஒருமுறை கைது செய்தனர். ஆனால் அந்த நேரத்தில், இந்த வெடி விபத்தில் அவர் கடுமையாகக் காயமடைந்திருந்தார்.
அப்போது, அவரது மருத்துவ செலவுகள் உட்பட அனைத்தையும் பார்த்துக்கொண்டவர் இந்த தஞ்சை கொலையில் இறந்த ராஜாவின் அண்ணன் ஸ்டாலின். அந்தப் பழக்கத்திற்காகத்தான், அவரது தம்பி கொலைக்குப் பழிதீர்ப்பதற்காக மோகன் ராம் இந்த மூவர் கொலையில் ஈடுபட்டார். இதிலும்கூட பெரியளவில் பணப் பரிமாற்றம் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை,” என்றார் அந்த அதிகாரி.
2015இல் நடந்த கொலையில் 2018இல் எப்படி கைதானார்?
கோவை மாவட்டம் சூலூரில் நடந்த கொலை வழக்கை விசாரித்த அதிகாரி, மோகன்ராமை கைது செய்தது குறித்து விரிவாக பிபிசியிடம் பேசினார்.
அப்போது அவர், “கொலை நடந்த இடத்தில் இருந்து, வெளி இடத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் உள்ள சோதனைச் சாவடிகளையும் ‘அலர்ட்’ செய்துவிட்டோம். இந்தக் கொலை வழக்கில் சம்பவ இடத்தில் மட்டுமே சுமார் 12 பேர் வரை ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவியது, ஆயுதங்கள் கொடுத்தது என மொத்தம் 21 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், தப்பிச் செல்லும் வழிகளை அலர்ட் செய்ததன் பயனாக, அடுத்த நாளே சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேரை உடனடியாக கைது செய்ய முடிந்தது. ஆனால், இதற்கு தலைமை வகித்த மோகன்ராம் எப்படியோ தப்பிவிட்டார்,” என்றார் அந்த அதிகாரி.
மற்ற குற்றவாளிகளை விடவும் மோகன்ராமை பிடிப்பது சற்று சவாலானதுதான் என்றார் அந்த அதிகாரி.
“அவர் கொலை சம்பவம் முடிந்தவும் யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார். அதேபோல, இது ஆதாயக் கொலை, அல்லது பணத்திற்காகச் செய்யும் கொலையாக இருந்தால், ஒரு முறையேனும் பணம் கேட்பதற்காக குற்றவாளிகள் தொடர்புகொள்வார்கள்.
ஆனால், மோகன்ராமுக்கு அந்த வழக்கமும் இல்லை. அவர் செல்போனும் பயன்படுத்த மாட்டார். அதனால், அவர் எங்கிருக்கிறார் என்றே மூன்று ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்றார். பின் எப்படி 2018ஆம் ஆண்டு அவரது கைது சாத்தியமானது என்றபோது, அதற்கு திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும், என்றார்.
“திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கில் தினேஷ் என்ற குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். ஒரு வழியாக அவரது செல்போன் எண்ணைக் கொண்டு, அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் இருக்கும் இடம் மும்பையில் உள்ள ஒரு நெருக்கமான குடியிருப்புப் பகுதி எனக் கண்டுபிடித்தனர். தினேஷை கைது செய்வதற்காக அங்கு துப்பாக்கியுடன் சென்ற சிறப்புப் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சிதான் மோகன்ராம்.
தினேஷை கைது செய்ய துப்பாக்கியைத் தூக்கிய போலீசார் முன், மறுமுனையில் இருந்த நபரும் பதிலுக்கு துப்பாக்கியை நீட்டியுள்ளார். அப்போதுதான், திண்டுக்கல் சிறப்புப் படையினருக்கே அவர் மோகன்ராம் எனத் தெரிய வந்துள்ளது.
ஆனால், மோகன்ராம் அப்போது துப்பாக்கியால் சுட்டு சண்டையிடவில்லை. கைதுக்கு ஒத்துழைத்து கைதாகியிருக்கிறார். பின்னர், நாங்கள் மும்பை சென்று அவரைக் கைது செய்து அழைத்து வந்தோம்,” என்றார் அந்த அதிகாரி.
கடந்த 2018ஆம் ஆண்டு கைதான மோகன்ராம், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் பிணை பெற்ற மோகன்ராம், மும்பையில் சற்று நாள் இருந்துவிட்டு, மீண்டும் தமிழ்நாடு திரும்பினார்.
கோவையில் நடந்த மூவர் கொலைதான் அவர் செய்த கடைசி குற்றச் சம்பவம் என்றார்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கண்காணிக்கும் போலீஸ் அதிகாரிகள்.
பழக்கத்திற்காக கொலை செய்யும் மோகன்ராம் ரவுடியானது எப்படி?
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு அரசுப் பேருந்து ஓட்டுநரின் மகன். பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துக்கொண்டிருந்த மோகன் ராமும், திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியின் தம்பி நாகராஜனும் நெருங்கிய நண்பர்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில், ரவுடி பாண்டிக்கும் அவரது எதிரணியான கரடி மணிக்கும் நீண்டகாலமாகப் பகை இருந்து வந்துள்ளது. இதில், ஒருமுறை பாண்டியைப் பழிதீர்க்க நினைத்த கரடி மணி, பாண்டியின் தம்பியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அப்போது, மோகன்ராமும், பாண்டியின் தம்பி நாகராஜனும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருவரையும் கரடி மணி மற்றும் அவரது கூட்டாளிகள் வழிமறித்துத் தாக்கினர்.
இதில், படுகாயமடைந்த மோகன்ராம், தன் நண்பர் நாகராஜை காப்பாற்றக் கடுமையாகப் போராடியுள்ளார். இருப்பினும், சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்தார். தன் நண்பன் கொலைக்காக அரிவாளை எடுத்த மோகன்ராம், பின்னாளில் பாண்டிக்கு மிகவும் நெருக்கமானார்.
சில ஆண்டுகளுக்குப் பின், திண்டுக்கல் பாண்டி, போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்படவே, பாண்டியின் கூட்டாளிகள் அனைவரும் மோகன்ராம் தலைமையில் அணி திரண்டனர்.
தற்போது, 20க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கும் நேரத்தில், அனைத்து வழக்குகளையும் தனது வழக்கறிஞர் அணியைக் கொண்டு நடத்தி வருகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்