
தமிழ்நாட்டில் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாகக் கன்றுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவக் காரணம் என்ன? பெரியம்மை பாதித்த மாடுகளைப் பராமரிப்பது எப்படி?
மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகள் இருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் மாடுகளின் தோல் முழுவதிலும் கொப்புளம் கொப்புளமாக பெரியம்மை பாதிப்பு (LSD-Lumpy Skin Disease) ஏற்பட்டது.
வட மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டில் சில கன்றுகள் இறந்துள்ளன என்றாலும் மாடுகளின் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் தற்போது வரை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கின்றன.
இந்த நோயால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு பால் உற்பத்திக் குறைவு, மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, சில நேரங்களில் மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மைக்கு நேரடியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆடுகளுக்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.மேலும், மாடுகளுக்கு ஏற்படக்கூடிய அம்மை பாதிப்பைத் தடுக்க நேரடியாக தடுப்பூசி தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
‘பெரியம்மையால் கன்றுகள் உயிரிழப்பு’

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஈரோடு விவசாயி குமார் கூறும்போது, “எங்களது பகுதியில் 15 விவசாயிகளின் 30க்கும் மேற்பட்ட கன்றுகள், இளம் வயது மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அவற்றில் சில கன்றுகள் இறந்துள்ளன.
அம்மை நோயால் பாதிக்கப்படும் கன்றுகளைப் பாதுகாக்க நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதேபோல் கோவை, திருப்பூர், ஈரோட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் குறிப்பாக கன்றுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி வருகின்றனர். இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும்,” எனக் கூறினார்.
‘ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிப்பு’
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். என். புண்ணியமூர்த்தி பிபிசியிடம் பேசினார்.
தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கு பெரியம்மைத் தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. இந்தத் தொற்று ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது கண்டுபிடிக்கப்பட்டதாக டாக்டர்.என்.புன்னியமூர்த்தி கூறினார்.
மேற்கொண்டு பேசியவர், “வடமாநிலங்களில் மாடுகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்ததன் காரணமாக அதிக அளவில் மாடுகள் உயிரிழந்தன. ஆனால், அந்தப் பரவல் தமிழ்நாட்டுக்கு வந்தபோது பெரிய அளவில் இறப்புகள் இல்லை.
ஆனால், தற்போது வரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கின்றன. தற்போது ஆயிரக்கணக்கான மாடுகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நோய் பாதிப்புக்கு நேரடியாக சிகிச்சை முறை கிடையாது. சித்த மருத்துவ முறையில் தீர்வு இருக்கிறது,” என்று கூறினார்.
சித்த மருத்துவமுறை கால்நடைகளை காப்பது எப்படி?

“பெரியம்மை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடல் முழுவதும் கொப்பளங்கள் வெடிக்கும். இதனால் மாட்டின் தோல் மென்மையடையும். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மாட்டை மற்ற மாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்துவது அவசியம்.
பெரியம்மை பாதிக்கப்பட்ட மாட்டிற்கு 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, கல் உப்பு, நாட்டு சர்க்கரை ஆகியவற்றைக் கலவையாகச் சேர்த்து தினசரி நான்கு வேளை ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும். பின்பு அதை மூன்று வேளையாக மாற்றி ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்தால் நல்ல பலன் இருக்கும்,” என்கிறார் டாக்டர் என்.புன்னியமூர்த்தி.
அதேபோல், “தோல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளுக்கு, நான்கு பல் பூண்டு, மஞ்சள் தூள், குப்பைமேனி தலை, வெண்ணெய் அல்லது வேப்பெண்ணையை நன்றாகக் காய்ச்சி கொப்பளங்கள் இருக்கும் பகுதியின் மீது தொடர்ந்து தேய்த்து வருவதன் மூலம் கொப்பளங்கள் ஆறிவிடும்.
ஒரு வயதுக்கு கீழ் இருக்கக்கூடிய கன்றுகள் தற்போது இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை தானாக உண்ணும் திறன் படைத்தவையாக இருக்காது. எனவே இதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் தனிக் கவனம் எடுத்து கன்றுகளைப் பராமரித்தால் மட்டுமே அவற்றைப் பாதுகாக்க இயலும்,” என்றார்.
மாட்டிடமிருந்து மனிதர்களுக்கு பெரியம்மை பரவுமா?
“உலக விலங்குகள் நல மையம்( WOAH – World organization for animal health) இந்தத் தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்பதை உறுதி செய்துள்ளது.
எனவே, விவசாயிகள் அச்சமின்றி தங்களது கால்நடைகளுக்கு வரக்கூடிய பெரியம்மை நோய்க்கான சிகிச்சையை அருகிலிருந்து வழங்கலாம்,” எனக் குறிப்பிட்டார் புண்ணிய மூர்த்தி.
கால்நடைகளுக்கு மூன்று தவணை தடுப்பூசி

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தமிழ்நாடு கால்நடைத்துறை உயர் அதிகாரி கூறும்போது “கடந்த 2019ஆம் ஆண்டு மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு பரவியது. இதைத் தொடர்ந்து ஆடுகளுக்கு அம்மைக்காகச் செலுத்தப்படும்( GFV – Goat Fox vaccine) தடுப்பூசி மாடுகளுக்கும் செலுத்தப்பட்டு அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டில் மூன்று முறை தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த 62 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாடுகளுக்குப் பரவும் பெரியம்மை பாதிப்பு பற்றிய தகவல்கள் மாவட்டங்களில் இருந்து பதிவாகவில்லை. அது பெறப்பட்டால் அதற்கு ஏற்பத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று கூறினார்.
கன்றுகள் உயிரிழப்பது ஏன்?
இந்தத் தடுப்பூசி நான்கு மாத கன்று முதல் செலுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் மாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அதன் கன்றுக்கு இந்த நோய்த் தாக்கம் ஏற்படுகிறது.
கன்றை விவசாயிகள் முறையாகப் பராமரிக்காத காரணத்தால் அது உயிரிழக்க நேரிடுகிறது, முறையாக கால்நடை மருத்துவமனையை அணுகுவதன் மூலம் கன்றுகள் உயிரிழப்பு தடுக்கப்படுவதாக”, மதுரை கால்நடை மருத்துவர் பழனிவேல் தெரிவிக்கிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்