IND vs NZ: நாக்-அவுட் சுற்றில் வெளிப்படும் இந்திய அணியின் பலவீனம் என்ன?

IND vs NZ: நாக்-அவுட் சுற்றில் வெளிப்படும் இந்திய அணியின் பலவீனம் என்ன?

கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2019 உலகக் கோப்பை போட்டியில் வெற்றிகரமான இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நியூசிலாந்து அணி, வரும் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 2-ஆவது முறையாக இந்திய அணி எதிர்கொண்டு பலப்பரீட்சை நடத்த உள்ளது.

2019-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி.

அதன்பின் 2023 நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியை 2-வது முறையாக அரையிறுதியில் நியூசிலாந்து எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்திய அணியின் பயணம்

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றில் 9 ஆட்டங்களிலும் வென்று 18 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

நியூசிலாந்து அணி தொடக்கத்தில் அடுத்தடுத்த போட்டிகளை வென்றாலும், அதன்பின் தொடர் தோல்விகளைச் சந்தித்து, கடும் போராட்டத்துக்குப்பின் 3வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி கடந்த 2015, 2019-ஆம் ஆண்டுகள் என இருமுறை உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியும், இறுதிப்போட்டிக்கு செல்லமுடியாமல் தோல்வி அடைந்து வெளியேறியது. 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியபின் பெரிதாக ஐசிசி நடத்தும் எந்தத் தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை.

அரையிறுதியில் தோல்வி, இறுதிப் போட்டிகளில் தோல்வி என்று ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அனைத்திலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து, உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பையாகக் கூட இருக்கலாம்

இந்த முறை எப்படி?

ஆனால், இந்தமுறை உலகக் கோப்பைத் தொடர் உள்நாட்டில் நடப்பதும், உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு, மைதானத்தின் தன்மை ஆகியவை இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்திருப்பதும் இந்திய அணிக்கு பெரும் பலங்கள். அது மட்டுமல்லாமல், திறமையின் அடிப்படையில் வலுவான ஃபார்மில் இருக்கும் பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் என உலகக் கோப்பையை வெல்லும் முனைப்போடு இந்திய அணி இருக்கிறது.

‘வாய்ப்பை தவறவிட்டால் 12 வருடம் காத்திருக் வேண்டும்’

முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும். இந்த உலகக் கோப்பையைத் தவறவிட்டால், அடுத்ததாக 3 உலகக் கோப்பை வரை ஐசிசி சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

“இந்திய அணியில் 7 முதல் 8 வீரர்கள் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்ல இதுதான் சரியான தருணம். கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன் சாம்பியன் பட்டத்தை வென்றோம், அதன்பின் இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது,” என்றார்.

மேலும், “இப்போதுள்ள இந்திய அணியின் பந்துவீச்சு உலக அணிகளுக்குச் சவாலாக இருக்கிறது, இதுபோன்ற பந்துவீச்சில் சவால்விடுக்கும் வகையில் வளர்ந்திருப்பது ஓர் இரவில் நடந்துவிடவில்லை. ஒவ்வொரு வீரர்களும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தீவிரமான பயிற்சிக்குப்பின் தங்கள் திறமையை மெருகேற்றியுள்ளனர். பெரும்பாலான வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பையாகக் கூட இருக்கலாம், இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

இந்தியா, நியூசிலாந்து, உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தத் தடவை 3வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு நியூசிலாந்து முன்னேறியுள்ளது

ஏக்கத்தில் நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணியும் இதற்கு முன் 2015, 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத சோகத்தில் இருக்கிறது.

இந்தத் தடவை 3-ஆவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு நியூசிலாந்து முன்னேறியுள்ளது. இந்த முறையாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தோடு நியூசிலாந்து அணியும் தீவிரமாக முயற்சிக்கும்.

ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கடந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. கடந்த உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த விராட் கோலி, இந்தமுறை 274 ரன்களை சேஸிங் செய்யும் போராட்டத்தில் 95 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் 2-ஆவது முறையாக இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

வரலாறு என்ன சொல்கிறது?

கடந்த உலகக் கோப்பை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால். இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் இதுவரை ஐசிசி உலகக் கோப்பைத் தொடர்களில் 10 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 4 முறையும், நியூசிலாந்து அணி 5 முறையும் வென்றுள்ளன, ஒரு போட்டி முடிவின்றி இருக்கிறது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றிகளை நியூசிலாந்துக்கு எதிராகப் பெற்றதில் 3 வெற்றிகள் உள்நாட்டில் நடந்த ஆட்டங்களில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, நியூசிலாந்து, உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் இந்திய அணியுடன் நியூசிலாந்து நேருக்கு நேர் மோதியது. தற்போது 3-வது முறையாக இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன

உள்நாட்டுப் போட்டி இந்தியாவுக்கு சாதகம்

கடந்த 1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்தன. இதில் அக்டோபர் 14-ஆம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

2-வது சுற்றில் நாக்பூரில் அக்டோபர் 31-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

அதன்பின் 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தரம்சாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

இந்த 3 ஆட்டங்கள் தவிர்த்து 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூ செஞ்சூரியனில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

இந்திய அணிக்கு கிடைத்த 4 வெற்றிகளில் 3 உள்நாட்டில் விளையாடியபோது கிடைத்தவை என்பது கவனிக்கப்பட வேண்டும். ஆதலால், இந்தமுறை பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாகத் திகழும் மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி நடப்பதால் இந்திய அணி வெற்றி பெற பல சாத்தியங்கள் உள்ளன.

ஆனால், 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இருந்து 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் வரை இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் 16 ஆண்டுகளாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது இல்லை.

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் இந்திய அணியுடன் நியூசிலாந்து நேருக்கு நேர் மோதியது. தற்போது 3-வது முறையாக இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம்

ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை இரு அணிகளும் 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 59 போட்டிகளில் வென்றுள்ளது, நியூசிலாந்து அணி 50 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் முடிவு ஏதும் கிடைக்கவில்லை 7 ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டன.

இந்தியா, நியூசிலாந்து, உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நாக்-அவுட் போட்டிகளைப் பொறுத்தவரை நியூசிலாந்து வலுவான வரலாற்றை வைத்திருக்கிறது

நாக்-அவுட் போட்டிகளில் ஓங்கிய நியூசிலாந்தின் கை

ஐசிசி நடத்தும் நாக்-அவுட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபின், இதுவரை எந்த கோப்பையிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி பல போற்றத் தகுந்த வெற்றிகளைப் பெற்றாலும், ஐசிசி பட்டத்தை வெல்ல முடியவில்லை என்ற குறைபாடு அவரின் கேப்டன் பதவிக்கே ஆபத்தாக அமைந்தது.

ஏறக்குறைய 13 ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பல்வேறு வரலாற்று வெற்றிகளை இந்திய அணி வெற்றிருந்தாலும், ஐசிசி நடத்தும் எந்த போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. அரையிறுதி, இறுதிப்போட்டிவரை சென்று தோல்வியுடன் இந்திய அணி திரும்பியது.

நாக்-அவுட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் 3 முறை மோதியுள்ளன. அந்த மூன்றிலுமே இந்திய அணியை தோற்கடித்து நியூசிலாந்து வலுவான வரலாற்றை வைத்திருக்கிறது.

2000-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 2 பந்துகள் மீதம் இருக்கும்போது, 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் கங்குலியின் சதத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்தது. 265 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி படபடவென விக்கெட்டுகளை இழந்தது, ஆனால், நடுவரிசையில் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் (102), கிறிஸ் ஹாரிஸ் (45), ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 2 பந்துகள் மீதம் இருக்கும்போது வென்றது. கடைசிவரை போராடி அந்த தொடரிலும் கோப்பையை இந்திய அணி நியூசிலாந்திடம் பறிகொடுத்தது.

இந்தியா, நியூசிலாந்து, உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2019 ஜூலை 9-ஆம் தேதி மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்தில் தோனி மீது ரசிகர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தனர்.

28 மணிநேரம் காத்திருக்க வைத்த ஆட்டம்

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தை இப்போதுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. இந்தப் போட்டியின் முடிவுக்காக ரசிகர்கள் 28 மணிநேரம் 24 நிமிடங்கள் காத்திருந்தனர்.

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணி அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாகத் திகழ்ந்தது. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி 3 பேரும் அசுரத்தனமான ஃபார்மில் இருந்தனர். இதில் கோலி கேப்டனாக இருந்தாலும், தோனியின் ஆலோசனை, தோனி இருக்கும் துணிச்சல் கூடுதலாக இந்திய அணிக்கு வலு சேர்த்தது.

ஆனால், 2019 ஜூலை 9-ஆம் தேதி மான்செஸ்டரில் நடந்த ஆட்டம் மழையால் தடைபடவே ஆட்டம் ரிசர்வ் நாளான மறுநாள் நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

இதையடுத்து கடைசி 3 ஓவர்கள் மட்டும் மறுநாள்(10-ஆம் தேதி) காலை வீசப்பட்டது. நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் என 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது.

240 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஏற்கனவே மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருந்தது. மேலும் காலநிலை, குளிர்ந்த சூழல், காற்று ஆகியவை நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தது.

லீக் ஆட்டங்களில் பட்டையை கிளப்பி வந்த ரோஹித் சர்மா, ராகுல், கோலி ஆகியோர் மாட் ஹென்றியின் வேகப்பந்துவீச்சில் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களில் ஏமாற்றினார். ரிஷப் பந்த் ஆடிய விதம் ஓரளவு நம்பிக்கையளித்தாலும் நீண்டநேரம் தாக்குப்பிடிக்காமல் 32 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் 32 ரன்களில் நடையைக் கட்டினார். 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோல்வியின் பிடியில் இருந்தது.

தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2019 ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் தோனி 50 ரன்னில் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் தோல்வி உறுதியானது

6-வது விக்கெட்டுக்கு ஜடேஜா, தோனி கூட்டணி இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டது. அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்தனர். ஜடேஜா தன்னை ஆல்ரவுண்டர் என்று பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ஆடினார். இருவரும் சிஎஸ்கே அணியில் ஒன்றாக விளையாடியதால், இருவருக்குமான கெமிஸ்டிரி அருமையாக வேலை செய்தது.

இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நெருங்கியது. கடைசி 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. டிரன்ட் போல்ட் வீசிய ஸ்லோவர் பாலில் ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்கவே இந்திய அணியின் வெற்றி சற்று நகர்ந்தது.

கிரேட் ஃபினிஷர் தோனி களத்தில் இருந்ததால், அவர் மீது ரசிகர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை பெர்குஷன் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைக்க தோனி முயன்றார். ஆனால், 2-வது ரன்னுக்காக தோனி ஓடியபோது, கப்திலின் டைரெக்ட் ஹிட்டில் ரன்அவுட் ஆகினார். தோனி 50 ரன்னில் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

தோனி, ஜடேஜாவின் போராட்டத்தை ரசிகர்கள் எளிதாக மறந்திருக்கமாட்டார்கள். இருவரும் களத்தில்இருந்தவரை நியூசிலாந்து அணியின் வெற்றி உறுதியில்லாமல்தான் இருந்தது. 2-வது முறையாக நாக்அவுட் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி வெற்றியைப் பறிகொடுத்தது.

இந்த முறை இந்தியாவின் நம்பிக்கை பலிக்குமா?

மூன்றாவது முறையாக, 2021-ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. பல அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி, சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து கோப்பைபை பறிகொடுத்தது.

நாக்அவுட் சுற்றுகள் அனைத்தும் இந்தியாவுடன் மோதிய அனைத்து ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணியின் ஆதிக்கமே இருந்துள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

ஆனாலும், இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஃபார்ம், வீரர்களின் திறமை, உற்சாகம், தோல்வி அடையாமல் வரும் வெற்றிப்பயணம், உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு, ஆடுகளம் ஆகியவை இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை வெல்லும் என நம்பிக்கையளிக்கிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *