இந்திய வணிகர் கிடங்கில் மீட்ட 1,500 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் – மருத்துவ உலகை புரட்டிப்போட்டது எப்படி?

இந்திய வணிகர் கிடங்கில் மீட்ட 1,500 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - மருத்துவ உலகை புரட்டிப்போட்டது எப்படி?

மனித எலும்புகளின் சேகரிப்பகம்

சுமார் 5 கோடி மதிப்புள்ள மனித எலும்புகளைச் சேகரித்து வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சயா ஃபெர்ரி. சமூக ஊடகங்களில் பலர் இவரைப் பின்தொடர்கின்றனர்.

எலும்பியல் துறைக்கு இவரது பணி புத்துயிர் அளிக்கிறது. நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள அவரது கிடங்கிற்குச் சென்றபோது, ​​தான் சேகரித்த எலும்புகள் மற்றும் கண்டுபிடித்த கண்கவர் பொருட்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்தார்.

‘முறையாக சேகரிக்கப்பட்ட மனித எலும்புகள்’ என்றால் என்ன? அவற்றைச் சேகரிப்பதால் எலும்பியல் துறைக்கு என்ன பயன்? மனித இனம் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் இந்த எலும்புகள் மூலம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

மனித எலும்புகளின் சேகரிப்பகம்

மனித எலும்புகளின் சேகரிப்பகம்

“பல வீடுகளின் அடித்தளத்தில், பழங்கால குடியிருப்புகளின் பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனித எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கும் மக்களுக்கு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. முறையாகச் சேகரிக்கப்பட்ட மனித எலும்புகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மனித எச்சங்களின் சேகரிப்பகம் இது,” என்கிறார் ஜான் பிச்சயா ஃபெர்ரி.

ஒருகாலத்தில் மருத்துவ ஆய்வுகளுக்காக எலும்புகளை விற்பனை செய்யும் நடைமுறை பிரபலமாக இருந்தது. 1980களில் அந்த முறை முடிவுக்கு வந்தது. அப்போது பெறப்பட்ட எலும்புகளை வாங்கித் தனது சேகரிப்பகத்தில் ஜான் வைத்துள்ளார்.

“மருத்துவ ஆய்வுகளுக்காக தங்கள் உடலை தானமாக அளித்தவர்களின் மனித எச்சங்கள் இவை. சட்டத்திற்குப் புறம்பாக கல்லறைகளில் இருந்தோ அல்லது பழங்கால புதைவிடங்களில் இருந்தோ இதைப் பெறவில்லை. இவை பழங்குடிகளின் எலும்புகளும் இல்லை. அத்தகைய பொருட்களை நான் வாங்குவதில்லை,” என்கிறார் ஜான்.

அமெரிக்காஅல்லது ஐரோப்பாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கும் வல்லுனர்களுக்கும் 1980கள் வரை ஆய்வுப் பணிகளுக்காக அசல் மனித எலும்புகளை வாங்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று அதுபோன்ற ஆயிரக்கணக்கான மனித எலும்புகள், ஏலத்தின் மூலமாக அல்லது குடும்பச் சொத்தாக பல தனி மனிதர்களின் பொறுப்பில் உள்ளது.

“ஒரு மாதத்திற்கு 30 முதல் 50 மின்னஞ்சல்கள் வரை எங்களுக்கு வருகின்றன. உதாரணமாக, ‘எங்கள் தாத்தா இறந்துவிட்டார், அவரது வீட்டின் அடித்தளத்தில் இருந்த அவரது அறையைச் சுத்தம் செய்தபோது ஒரு மனித எலும்புக்கூடு கிடைத்தது. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை, பார்த்தால் பயமாக இருக்கிறது’ என்பது போன்ற மின்னஞ்சல்கள் அவை,” என்கிறார் ஜான்.

தொடர்ந்து பேசிய ஜான், “இவை அமிலங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்ட எலும்புகள் என்பதால் இதில் டி.என்.ஏ ஏதுமில்லை. அதனால் இவற்றை டி.என்.ஏ ஆய்வுகளுக்குப் பயன்படுத்த முடியாது. இவற்றைப் புதைப்பதும் சட்டப்படி குற்றம்.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மருத்துவ அருங்காட்சியகங்கள் அதிக அளவிலான மனித எலும்புகளைக் கையாளும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. எனவே மனித எலும்புகளை வைத்திருப்பவர்களுக்கு இதை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது,” என்று கூறுகிறார்.

மனித உடல்களுக்காக அதிகரித்த கல்லறைத் திருட்டுகள்

மனித எலும்புகளின் சேகரிப்பகம்

மனித எலும்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் முன், மருத்துவ வரலாற்றின் ஒரு விசித்திரமான அத்தியாயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

“அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில், 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளின்போது கல்வித்துறையில் மனித உடல்கள், எலும்புகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. இதனால் கல்லறைகளில் இருந்து பிணங்கள் திருடப்படுவது அதிகமாக நடைபெற்றது. இதைத் தடுக்க எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் ஒன்று கொலைச் சட்டம், 1751.

அதன்படி ஒருவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். ஆனாலும்கூட அப்போது மனித எச்சங்களுக்கான தேவை குறையவில்லை. இந்த நிலை மோசமானதால், கல்லறைகளுக்கு இரும்பு வேலிகள், கூண்டுகள் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது,” என்று கூறுகிறார் ஜான்.

உடற்கூறியல் சட்டம் 1832, உயிரற்ற மனித உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கியது. சிறைச்சாலைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வாங்க 48 மணிநேரத்திற்கும் மேலாக யாரும் வரவில்லை என்றால், அந்த உடல்கள் ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டன.

இறந்தவர்களின் உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக தானமாக கொடுப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

மனித எலும்புகளின் சேகரிப்பகம்
படக்குறிப்பு,

ஒருவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற சட்டம் 1751இல் இயற்றப்பட்டது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள்

மனித எலும்புகளின் சேகரிப்பகம்

“மருத்துவ எலும்பு வணிகம் 1800களில் தொடங்கி, 1920 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் பெருமளவில் நடைபெற்றது” என்று குறிப்பிடுகிறார் ஜான்.

இவ்வாறு தொடங்கப்பட்ட எலும்பு வணிகம் உலகம் முழுவதும் பரவியது. 1950களில் எலும்புகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தான் முன்னணியில் இருந்தது.

“உங்கள் உறவினர்களின் உயிரற்ற உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக தானமாக வழங்கினால், அவர்களின் இறுதிச் சடங்குக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறோம் என அப்போது பல மருத்துவ நிறுவனங்கள் கூறின. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன, பல குற்றங்களுக்கு அது வழிவகுத்தது” என்கிறார் ஜான்.

இந்தியாவில் 1985ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ஒரு அதிர்ச்சிகரமான செய்தியால், உலகளவில் இந்த வணிகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

“ஒரு எலும்பு வணிகரின் கிடங்கில் இருந்து 1500 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இந்த முறைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது,” என்கிறார் ஜான்.

இந்தியாவில் போடப்பட்ட இந்தத் தடையால் மருத்துவ நிறுவனங்கள் செயற்கை எலும்புக்கூடுகளைப் பயன்படுத்தத் தொடங்கின. இன்று மருத்துவ எலும்பு வணிகம் என்பது ஒரு மறுவிற்பனை சந்தையாக மாறிவிட்டது. அமெரிக்காவின் லூசியானா, டென்னஸி, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்களில் தங்களிடம் உள்ள மனித எலும்புகளை விற்க மக்களுக்கு அனுமதியுண்டு.

“எலும்புகளை நாங்கள் பொது மக்களுக்கு விற்பதில்லை. பள்ளிகள், பல்கலைக்கழகங்களே எங்களது முக்கியமான வாடிக்கையாளர்கள். தேடுதல் மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்களே எங்களது இரண்டாவது பெரிய வாடிக்கையாளர்கள்.

எங்களிடம் எலும்புகளை வாங்கி, மோப்ப நாய்களுக்கு சடலங்களைக் கண்டறிவதற்கான பயிற்சிகளை அளிக்கப் பயன்படுத்துகிறார்கள். மனித எச்சங்களின் நாற்றத்தை மோப்ப நாய்கள் இந்த எலும்புகள் மூலம் தெரிந்துகொள்ளும்” என்று கூறுகிறார் எலும்பு சேகரிப்பாளர் ஜான்.

தனது சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாக மனித எலும்புகள் குறித்த மக்களின் பொதுப் பார்வையை மாற்ற முயல்கிறார் ஜான்.

“இவை வெறும் காட்சிப் பொருட்கள் அல்ல. ஒரு காலத்தில் உயிரோடு வாழ்ந்த, நம்மைப் போன்ற மனிதர்களின் எலும்புகள் இவை. எனவே இவற்றை மரியாதையோடும், கண்ணியத்தோடும் கையாள வேண்டும். இவற்றைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்,” என்கிறார் ஜான்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *