செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது.
வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும்.
ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளைச் செயற்கை நுண்ணறிவு செய்யத்துவங்கும். இது மனித பணியாளர்களுக்கான தேவையைக் குறைக்கும், ஊதியத்தை பாதிக்கும், மேல்லும் சில வேலைகளை இல்லாமலே செய்துவிடும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
அதேசமயம் வளர்ந்துவரும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு 26% வேலைகளை பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
‘ஏற்றத்தாழ்வுகள் மோசமடையக்கூடும்’
இதனால், ஏற்கனவே இருக்கும் பொதுவான ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமடையும் என்கிறார் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜார்ஜியேவா. சட்டம் இயற்றுபவர்கள் இந்த ‘கவலையளிக்கும்’ விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார். இல்லையெனில் சமூகச் சிக்கல்கள் மேலும் மோசமடையும் என்றார்.
“[வளர்ந்துவரும் நாடுகள்] செயற்கை நுண்ணறிவின் பலன்களை உபயோகித்துக்கொள்ளும் அளவுக்கு உட்கட்டமைப்போ திறன்மிக்க பணியாளர்களோ இல்லை. இதனால் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கக் கூடும்,” என்கிறார் ஜார்ஜியேவா.
இந்த ஆய்வு முடிவுகள், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு அறிக்கை முடிவுகளை ஒத்திருக்கிறது. அந்த அறிக்கை, 30 கோடி முழுநேர வேலைகளைக் காலி செய்துவிடும் என்று கூறியிருந்தது. ஆனால், அதற்கேற்றாற்போல் புதிய வேலைகளும் உற்பத்தித்திற்ன் பெருக்கமும் இருக்கும் என்று கூறியிருந்தது.
யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
பொதுவாக அதிக ஊதியம் பெறுபவர்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஊதியம் செயற்கை நுண்ணறிவினால் மிக அதிகமாக உயரும். ஆனால் குறைந்த ஊதியமுள்ளவர்கள் முதியவர்கள் ஆகியோரின் ஊதியம் குறையலாம் என்கிறது சர்வதேச நாணய நிதியம்.
“இதனால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும், பாதிக்கப்படக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சித்திட்டங்களையும் உலகநாடுகள் உருவாக்க வேண்டும்,” எ ந்கிறார் ஜார்ஜியா. “அப்படிச் செய்தால் செயற்கை நுண்ணறிவுக்கான மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வாழ்வாதாரங்களை பாதுகாப்பதாகவும், எற்றத்தாழ்வுகளை குறைப்பதகவும் அமையும்,” என்கிறார் ஜார்ஜியேவா.
ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தைப் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அய்வு வெளிவருகிறது. இந்த மன்றத்தில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மன்றத்தில், ChatGPT போன்ற செயலிகளின் வளர்ச்சி குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த சட்டங்கள்
பல நாடுகளும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்டங்களை இயற்றி வருகின்றன. கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகின் முதல் சட்டங்களை முதற்கட்டமாக முடிவுசெய்தனர்.
தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவுச் சட்டங்களை முதலில் அமுல்படுத்தியது சீனா. இந்தச் சட்டங்கள் அல்காரிதம் எவ்வாறு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சொல்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் பைடன் மென்பொருள் உருவாக்குபவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாதுகாப்புத் தரவுகளை அரசாங்கத்துடன் பகிருந்துகொள்ளுமாறு ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார்.
அதற்கு அடுத்த மாதம், இங்கிலாந்து செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தியது. அதில் பல நாடுகளும் பாதுகாப்பான தொழில்நுட்பம் சார்ந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஒரு மனிதனைப் போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் வைக்கிறது. மனிதனைப் போலவே ஒரு விஷயத்தை கணித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கிறது.
கணினியைக் கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.
அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது. இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம்.
அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவைகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம்.
வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உபயோகிக்கிறது. அத்துடன் போலி ரிவ்யூகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்