கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சிக்கு உள்ளே சக போட்டியாளர்களாலும் சமூக வலைதளங்களிலும் எதிர்பார்க்கப்பட்டது போன்றே போட்டியின் நடுவில் ‘வைல்ட் கார்ட்’ என்ட்ரியாக உள்ளே நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனா ‘பிக் பாஸ்’ பட்டத்தை வென்றார்.
வெற்றியாளருக்கான கோப்பையை நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் வழங்கினார். ’வைல்ட் கார்ட்’ என்ட்ரியில் உள்ளே வந்த போட்டியாளர் ஒருவர் தமிழ் பிக் பாஸ் சீசனில் கோப்பையை வெல்வது இதுவே முதன்முறை.
போட்டியில் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதுதவிர, 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
கோப்பையை வென்ற பின்னர் பேசிய அர்ச்சனா, “இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பேன் என நினைத்திருந்தேன். இத்தனை நாட்கள் இருப்பதற்கு நான் என்னை தயார்படுத்திக் கொள்ளவேயில்லை.
பள்ளி, கல்லூரி நாட்களில் என்னை சுற்றி யாரும் இருந்ததில்லை. ஆனால், இப்போது திரும்பி பார்த்தால் நிறைய பேர் இருக்கின்றனர். இதை கனவில் கூட நினைத்ததில்லை. உங்களுக்கும் (கமல்) என் குடும்பத்தினருக்கும் நன்றி” என தெரிவித்தார்.
இரண்டாம், மூன்றாம் இடம் யாருக்கு?
போட்டியில் இரண்டாம் இடத்தை மணியும் மூன்றாம் இடத்தை மாயாவும் பிடித்தார்.
வைல்ட் கார்ட் போட்டியாளர் தினேஷ், இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வதற்கான டிக்கெட்டை வென்ற விஷ்ணுவும் முறையே 4, 5-வது இடங்களை பிடித்தனர்.
இந்த சீசனில் நடைபெற்ற சில சுவாரஸ்ய நிகழ்வுகளையும் வீட்டுக்குள் அர்ச்சனா என்னென்ன செய்தார் என்பதையும் இங்கு திரும்பி பார்க்கலாம்.
இந்த சீசனில், சர்ச்சைகள், விமர்சனங்கள், ட்ரோல், சண்டைகள் என எதற்கும் பஞ்சமில்லை. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு அதிகளவில் 23 போட்டியாளர்கள் இந்த சீசனில் இருந்தனர். அதில் 18 பேர் போட்டியின் ஆரம்பத்திலேயே இல்லத்திற்கு வந்தவர்கள். மீதம் 5 பேர் போட்டியின் நடுவில் ‘வைல்ட் கார்ட்’ என்ட்ரியாக வந்தவர்கள்.
எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகர் – பாடகர் யுகேந்திரன், சின்னத்திரை நடிகை வினுஷா, இயக்குநர் பிரதீப் ஆண்டனி, ஐஷு, அக்ஷயா, ஜோவிகா, அனன்யா, ‘கூல்’ சுரேஷ், சின்னத்திரை நடிகர் விக்ரம் சரவணன், ‘ராப்’ பாடகர் நிக்சன், நடிகை ரவீனா, பூர்ணிமா ரவி, விசித்ரா, நடனக்கலைஞர்கள் விஜய் வர்மா, மணி, விஷ்ணு, மாயா உள்ளிட்ட 18 பேர் இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே பங்கேற்றனர்.
’வைல்ட் கார்ட்’ போட்டியாளர்களாக சின்னத்திரை நடிகை அர்ச்சனா, ‘கானா’ பாலா, சின்னத்திரை நடிகர் தினேஷ், பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி, ஆர்.ஜே. பிராவோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், போட்டியிலிருந்து வெளியேறிய விஜய் வர்மா, அனன்யா இருவரும் மீண்டும் நிகழ்ச்சியில் களமிறக்கப்பட்டனர். இதில், அனன்யா சில வாரங்களிலேயே வெளியேற விஜய் வர்மா போட்டியின் இறுதி வாரம் வரை வந்தார்.
ரெட் கார்டு குறித்த விவாதம்
தமிழ் பிக் பாஸில் எந்த சீசனிலும் இல்லாதது போன்று புதிதாக ‘ஸ்மால் பாஸ்’ என்ற ஒன்றையும் ஏற்படுத்தினர். இதில், ஒவ்வொரு வாரத்தின் கேப்டனும் ‘பிக் பாஸ்’ தெரிவிக்கும் காரணங்களுக்காக 5-6 பேரை தேர்ந்தெடுத்து ‘ஸ்மால் பாஸ்’ வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஸ்மால் பாஸ் வீட்டில் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருப்பது போன்ற பெரிய வசதிகள் இருக்காது. மேலும், வீட்டில் உள்ள அனைவருக்குமே சமைக்கும் பொறுப்பும் ஸ்மால் பாஸ் வீட்டுக்காரர்களுடையது.
போட்டியாளரை வெளியேற்றுவதற்கான ‘நாமினேஷன்’ நடைமுறையிலும் பிக் பாஸ் வீட்டினர், ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்தும், ஸ்மால் பாஸ் வீட்டினர் பிக் பாஸ் வீட்டிலிருப்பவர்களையும் தான் நாமினேஷன் செய்ய முடியும்.
போட்டியின் முதல் வாரம் முடிவிலேயே எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்று கூறி போட்டியிலிருந்து தாமாகவே வெளியேறினார்.
தமிழ் பிக் பாஸில் முன்பு நடக்காத ஒன்றும் இந்த சீசனில் நடந்தது. பிரதீப் ஆண்டனி தங்களிடம் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் அருவருக்கத்தக்க கருத்துகளை கூறுவதாகவும் புகார் கூறி ‘உரிமைக் குரல்’ எழுப்பினர் வீட்டிலுள்ள பெண் போட்டியாளர்கள்.
குறிப்பாக, மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர். இதைத்தொடர்ந்து அவருக்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு தன் தரப்பை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என, சமூக வலைதளங்களில் ஆதரவும் அதேசமயம் எதிர்ப்பும் கிளம்பியது.
வீட்டுக்குள்ளேயும் அவருக்கு ரெட் கார்டு வழங்கியது தவறு என போட்டியாளர்கள் விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்டோர் கூறினர்.
புல்லி கேங் குறித்த விமர்சனம்
‘வைல்ட் கார்ட்’ போட்டியாளர் அர்ச்சனா, முதல் வாரத்தில் பெரும்பாலும் அழுதுகொண்டே இருப்பதாக, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் கேலி செய்ததால், தன்னை சக போட்டியாளர்கள் ‘புல்லி’ (எள்ளி நகையாடுதல்) செய்வதாக அர்ச்சனா குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இதனால், மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுக்கு ‘புல்லி கேங்க்’ என்ற பெயரே சமூக ஊடகங்களில் வைரலானது.
அர்ச்சனாவுக்கு ஆதரவாக விசித்ரா துணைநின்றார்.
அதேபோன்று, நிக்சன் வினுஷா உடலமைப்பு குறித்து பேசியதும் பெருமளவில் சர்ச்சையை சந்தித்தது. அதற்கு தான் வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டதாக நிக்சன் கூறியிருந்தார்.
ஆனால், அதற்கு முன்பாகவே போட்டியிலிருந்து வெளியேறிய வினுஷா, தன்னிடம் நிக்சன் மன்னிப்பு கேட்கவில்லை என, சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
போட்டியாளர் பூர்ணிமா வார இறுதி நாட்களில் அவருடைய நடவடிக்கைகளை தொகுப்பாளரான நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விமர்சித்ததால், தன்னை குறித்து வேறு மாதிரியாக சித்தரிக்கப்படுவதாக நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்தார்.
தனக்கு பாராட்டே வரவில்லை என்றும் தான் அந்தளவுக்கு என்ன தவறு செய்தேன் என்றும் கேட்டுக்கொண்டே இருந்தார்.
கமல் மீது எழுந்த விமர்சனங்கள்
மாயா-பூர்ணிமா இருவரும் தோழிகளாக ஒருவருக்கொருவர் இணைந்து விளையாடுவதாகவும் விமர்சனத்தை சந்தித்தனர். அதேபோன்று, மணி – ரவீனா மீதும் விமர்சனம் எழுந்தது. நடன போட்டியில் தன்னிடமிருந்த அனைத்து பணத்தையும் மற்றவர்களின் நடனங்களை பார்க்காமலேயே ரவீனா மணிக்கு அளித்ததை சக போட்டியாளர்கள் காட்டமாக கண்டித்தனர்.
ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களின் நிறை, குறைகளை தனக்கேயுரிய பாணியில் அலசினார் கமல்ஹாசன். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த நிலையில், விணுஷா குறித்த நிக்சனின் கருத்துக்கு ஏன் ரெட் கார்டு வழங்கப்படவில்லை எனவும் கமல் மீது விமர்சனங்கள் எழுந்தன. பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கப்படுவது குறித்து எடுத்த முடிவை சேனல் ஒப்புக்கொள்ளாவிட்டால் தான் இந்நிகழ்ச்சியிலிருந்தே விலகிவிடுவேன் என்று கூட கமல் தெரிவித்திருந்தார்.
பல போட்டிகளை கடந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக வெளியேற, இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான நேரடி டிக்கெட்டை விஷ்ணு விஜய் வென்றார். மேலும் இறுதி வாரத்திற்கு முன்னதாக 16 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறினார்.
முதலில் அழுகை – பின்னர் கோபம்
தான் வீட்டுக்குள் நுழைந்தபோதே தன்னை சரியாக வரவேற்காமல், அழுத்தம் தரும் வகையில் சக போட்டியாளர்கள் நடந்துகொண்டதாக கூறி அழுதார் அர்ச்சனா.
ஆரம்பத்தில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப்புக்கு ஆதரவாக பேசினார் அர்ச்சனா. பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ந்து பேசினார். வார இறுதியில் மாயா, பூர்ணிமா தரப்புக்கு கமலிடமிருந்து விமர்சனங்கள் வர, மறுபுறம் அர்ச்சனாவுக்கு ஆதரவு எழுந்தது.
ஆனால், ஒருகட்டத்தில் அர்ச்சனாவின் நடவடிக்கைகளையும் கமல் விமர்சித்தார். இருப்பினும் அவருக்கான ஆதரவு தொடர்ந்து வந்தது. அர்ச்சனாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இதனால் ‘பி.ஆர்’ வேலைகளை கச்சிதமாக செய்துவிட்டே வீட்டுக்குள் வந்திருப்பதாக சக போட்டியாளர்களே கூறினார். இந்நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்