இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையில் ராஜதந்திர மோதலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த விவகாரத்தில் கனடாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகும் இலங்கை கருத்துத் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், இந்தியாவிற்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை அடுத்தே இந்த ராஜதந்திர மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த ராஜந்திர மோதல் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தற்போது பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இலங்கை யார் பக்கம் என்ற ஒரு பேச்சும் பலரது மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும், கனடா – இந்தியா இடையிலான ராஜதந்திர மோதல் குறித்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
தமக்கு பாதுகாப்பான இடமாக தீவிரவாதிகள், கனடாவை அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் எந்தவித ஆதாரங்களுமின்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடா பிரதமர் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும், அது குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் இனப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக கனடா பிரதமர் வெளியிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என அவர் கூறுகின்றார்.
இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என கனடா பிரதமரிடம் கேட்டுக்கொள்வதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா – கனடா விவகாரத்தில், கனடாவிற்கு எதிராக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்ட கருத்தானது, இலங்கை – கனடாவிற்கு இடையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் சர்வதேச அரசியல் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான ராஜகோபால் யசிஹரனிடம், பிபிசி தமிழ் வினவியது.
இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்தானது, கனடா வாழ் இலங்கை தமிழர்கள் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
”அடிப்படையில்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பிழை என்ற அடிப்படையிலும், ஆதாரங்கள் இருந்தால் இந்தியா மீது குற்றஞ்சுமத்தலாம் என்ற விதத்திலும் ராஜதந்திர ரீதியில் ஒரு வெளிவிவகார அமைச்சர் பேசியிருப்பாராக இருந்தால், அது ஒரு விதமான ஆரோக்கியமான நிலைப்பாடாக இருந்திருக்கும்.”
“ஆனால், அலி சப்ரி தன்னிலை மறந்து பேசியிருக்கின்றார். இதற்கு முன்னரும் நிறைய சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர், போர் குற்றங்கள் தொடர்பான பிரச்னைகள் சர்வதேசத்தினால் எழுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில் இவரின் கருத்துக்கள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. காணாமல் போனோரை இனி தேட முடியாது. அவர்கள் இறந்து விட்டார்கள் என நேரடியாகவே சொல்லியிருந்தார்.”
“இதில் கூட கனடா பிரதமர் இலங்கை மீது முன்வைத்த குற்றச்சாட்டை கையில் எடுத்துக்கொண்டு, இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றதாக கனடா பிரதமர் போலி குற்றச்சாட்டுக்களை சொன்னார் என்று சொல்லி, இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வகையில் தனது நிலைப்பாட்டை முன்வைத்தாலும் கூட, மறுபக்கம் இலங்கை – கனடா என்ற உறவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார் அவர்.
“போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் போரின் பின்னரான காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற பல இலங்கை தமிழர்கள், கனடாவில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். இன்றைக்கும் தமக்கான நீதியை கேட்டு நிற்கின்ற போது, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்வதானது, தமிழர்களை ஒரு பக்கத்தில் காயப்படுத்தும் செயலாக காணப்படுகின்றது. அதேசமயம், கனேடிய தமிழர்களை இன்னும் கோபப்படுத்தும் செயற்பாடாக அமைகின்றது. இலங்கை – கனடாவிற்கு இடையிலான உறவு, மிக பலமான உறவாக தான் இருக்கின்றது.” என அவர் கூறுகின்றார்.
இந்தியாவை இலங்கை ஆதரிப்பது ஏன்?
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏன் இந்தியாவிற்கு ஆதரவாக பேசினார் என்பது தொடர்பிலும் ராஜகோபால் யசிஹரன் கருத்து வெளியிட்டார்.
”இலங்கை வெளிவிவகார அமைச்சர், தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு எடுத்த முயற்சியாக இருக்கலாம். மறுபக்கத்தில் இந்தியா தம்மை பாதுகாக்கும் என்ற நிலைப்பாட்டில் அதனை சொல்கின்றாரா என்பது கேள்வி தான். இந்த சந்தர்ப்பத்தில் தாம் இந்தியாவுடன் இருக்கின்றோம் என்றால், ஜெனீவா விவகாரங்களில் இந்தியா தம்முடன் இருக்கும் என்ற எண்ணத்தில் இப்படி சொல்லியிருக்கின்றாரா என தெரியவில்லை.”
“இலங்கை விடயத்தில் காரசாரமாக பேசக்கூடிய வாய்ப்புக்கள் தான் எதிர்காலத்தில் அமையும். அதில் சந்தேகம் இல்லை. இலங்கை விடயங்கள் தொடர்பில் இலங்கை தமிழரான கனடாவின் அமைச்சர் ஏற்கனவே எதிரான கருத்துக்களை சொல்லியிருந்தார். இது இலங்கை போர் குற்றங்கள் – கனடா தமிழர்கள் விவகாரத்தில் மேலும் வலுப் பெறும். ஒரு வேளை, தற்போதுள்ள கனடா பிரதமருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றாலும் கூட, வரக்கூடிய கனடா பிரதமர்கள் தமிழர்கள் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டை தான் கொள்வார்கள்.”
“காரணம், அங்குள்ள தமிழர்களின் செல்வாக்கு, பண பலம் அதிகமாக காணப்படுகின்றது. அதனால், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், புலம்பெயர் தமிழர் விவகாரத்தில் கனடா அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறாது. இதனால், இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்து, முரண்பட்ட கருத்தாகத் தான் இருக்கும். இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக இதுவரை எவ்வாறு கனடா செயற்பட்டதோ, அந்த விடயம் இனியும் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.” என ராஜகோபால் யசிஹரன் தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்