காதலர்கள் பிரிந்தால், இதயம் நொறுங்கிப்போனதாக உணர்கிறார்கள்.
இது அவர்களுக்கு மிகவும் வலியைக் கொடுக்கக் கூடிய விஷயமாகவும் இருக்கிறது.
ஆனால் பிரேக்கப் எனப்படும் இந்தப் பிரிவால் இந்த நாம் பயனடைய முடியுமா?
இது என்ன மாதிரியான கேள்வி என்று நீங்கள் யோசிக்கக் கூடும். உறவு முறிவதால் யாராவது பயனடைய முடியுமா?
இதைப்பற்றி ஆராய்ந்தவர்கள் என்ன கூறுகிறார்கள்?
‘தி பிரேக்கப் மோனோலாக்ஸ்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ரோஸி வில்பி, உறவை முறிப்பதால் பல நன்மைகள் இருப்பதாகக் கருதுகிறார்.
இந்த நூலை எழுத, பல மனோதத்துவ நிபுணர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடமும் பேசினார் வில்பி.
தனது புத்தகத்தைப் பற்றி பிபிசி ரீல்ஸிடம் பேசிய அவர் காதலர்கள் பிரிவது ஒருபோதும் நல்ல விஷயமாகக் கருதப்படுவதில்லை, ஆனால் பார்க்கப்போனால் அது உங்களுக்கு நல்லதாகவும் இருக்கலாம் என்று கூறுகிறார்.
இது எப்படிச் சாத்தியம்?
‘உங்களையே புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு’
ரோஸி வில்பியின் கூற்றுப்படி, காதல் முறிவுகள், நம் உறவுகளில் நாம் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும் அல்லது எப்படிப்பட்ட மனிதருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்வதற்கும் சிந்திக்கவும் ஒரு வாய்ப்பை நமக்க்கு வழங்குகின்றன என்கிறார்.
சில சமயங்களில் மனவேதனையின் வலிமிகுந்த அனுபவத்தின் மூலம் மட்டுமே நம்மைப் பற்றிய உண்மையான தகவல்களைப் பெறுகிறோம், மேலும் சிறந்த முடிவுகளை நம்மால் எடுக்க முடிகிறது, என்கிறார்.
மனநலம் மற்றும் நடத்தை அறிவியலில் நிபுணரான டாக்டர் சமீர் மல்ஹோத்ரா, சில சமயங்களில் உறவை முறிப்பது உங்கள் கண்களைத் திறக்கும் என்கிறார்.
பிபிசி செய்தியாளர் பாத்திமா பர்ஹீனிடம் பேசிய மருத்துவர் மல்ஹோத்ரா, “சில சமயங்களில் பிரேக்கப் உங்கள் குறைபாடுகளை உங்களுக்கு உணர்த்துகின்றன. இது உங்கள் குறைகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. ஆனால் இது பிரிவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. மற்றவர்களின் தவறுகளை மட்டுமே நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், உங்களை மேம்படுத்திக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பே கிடைக்காது,” என்கிறார் அவர்.
‘ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்துவமானது’
டெல்லியைச் சேர்ந்த உளவியல் நிபுணரும் திருமண ஆலோசகருமான ஷிவானி மிஷ்ரி சாது கூறுகையில், “பிரிந்து செல்வது அனைவருக்கும் கடினம் என்றாலும், ஒவ்வொருவரும் அதனை ஒவ்வொரு முறையில் கடக்கின்றனர்” என்று கூறுகிறார்.
பாத்திமா ஃபர்ஹீனிடம் அவர் பேசுகையில், சில சமயங்களில் உறவுகள் முறிவதும் நமக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று கூறுகிறார்.
மேலும், “உங்களுக்கு பிரேக்-அப் ஏற்படும்போது, உங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் உங்களை மேம்படுத்தவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த உறவில் நாங்கள் தவறு செய்ததை நாமும் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்கிறார்.
‘காதலும் போதை போன்றதுதான்’
ரோஸி வில்பி, மனவலியை போதைப் பழக்கத்துடன் ஒப்பிடுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, உறவு முறிந்த பிறகு, ஒரு நபரின் நடத்தை போதைக்கு அடிமையானவர் போதைப்பொருள் உட்கொள்வதை நிறுத்துவதைப் போன்றது, என்கிறார்.
மூளைக்குள் காதல் ரசாயனம் — அதாவது ஆக்ஸிடாஸின் ஹார்மோன் — அதிகரிக்கும் போது மற்றவர் மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது என்று மருத்துவர் சமீர் மல்ஹோத்ரா கூறுகிறார். இது எந்த வகையான காதலிலும் தெரியும்.
“பல நேரங்களில் டோபமைன் ஹார்மோனை உணரும் நரம்பியல் பொறி மூளையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, அந்த நபரை மீண்டும் மீண்டும் சந்திக்கும் விருப்பம் அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் அதைப் பெறவில்லையெனில், அல்லது உறவு முறிந்தால், உங்கள் நிலை போதைப்பொருளுக்கு அடிமையானவரின் நிலையைப் போலவே மாறும், என்கிறார்.
பிரிவுக்குப்பின் உடனே ஒரு புதிய உறவை ஏற்படுத்தலாமா?
ரோஸி வில்பி, காதல் உறவுகளைப் பேணுவதற்குக் கடின உழைப்பு தேவைப்படுகிறது என்கிறார். “ஏனென்றால் அவை உங்கள் வாழ்க்கையில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. நீங்கள் மற்றொரு நபரையும் அவருடைய நல்லது கெட்டதையும் சமாளிக்க வேண்டும்,” என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “ஒரு உறவு பிரிந்த பிறகு, மற்றொரு உறவில் ஈடுபடுவதற்கு முன், கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி, உங்களைப் பற்றியே நீங்கள் சிந்தித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அதற்காக நீங்கள் துறவியாக வேண்டுமென்பதோ, உடலுறவில் இருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்பதோ இல்லை, என்கிறார்.
உங்களுடனான உறவு முக்கியமானது
மருத்துவர் சமீர் மல்ஹோத்ராவும் ரோஸி வில்பியின் கருத்தை வழிமொழிகிறார்.
“ஒரு உறவு முறிந்தால், மற்றொரு உறவு மிக விரைவில் உருவாக வேண்டும் என்று பல நேரங்களில் மக்கள் நினைக்கிறார்கள். இது தவறு. நமது மிக முக்கியமான உறவு நாம் நம்முடன் கொண்டிருக்கும் உறவுதான். அதிலும் விதிகள், சமநிலை, ஒழுக்கம் ஆகியவை இருக்க வேண்டும்,” என்கிறார்.
அவரது கூற்றுப்படி, ஒரு உங்கள் காதல் பிரிவுக்குப்பின் ஆற்றல் சில ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகள் அல்லது ஆர்வங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். தங்கள் சுயத்துடனான உறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தங்கள் குறைகளைப் புரிந்து கொண்டு அவற்றை நீக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், என்று கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், நாம் பிரிந்துபோனவரை ‘ஸ்டாக்’ செய்யக்கூடாது, அதாவது பின்தொடரக்கூடாது, என்கிறார். அதேபோல் நமது உறவைக் காட்ட இன்னொருவர் தேவை என்ற விரக்தியில் புதிய நபரை நாடக்கூடாது, என்கிறார்.
“நாம் உறவுகளைப் பற்றி பேசும்போது, அவற்றில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவை. ஒன்று ஆரோக்கியமான நெருக்கம், ஆரோக்கியமான தூரம். இதை எளிய மொழியில் சொன்னால், உறவுகளைப் பேணுவது முக்கியம். அதேசமயம் சிறிது இடைவெளியும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நபருக்கும் அந்தரங்க இடம் மிகவும் அவசியம்,” என்கிறார்.
இந்தியாவில் பிரேக்-அப் நிலை என்ன?
இந்தியாவிலும், பிரேக்-அப் தொடர்பான மக்களின் கருத்து மாறத் தொடங்கியுள்ளது என்று ஷிவானி மிஸ்ரி சாது நம்புகிறார்.
மோசமான உறவில் இருப்பது உடல், மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை இப்போது மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், அதிலிருந்து வெளிவருவது சற்றுக் கடினம் என்ற நிலைதான் இந்தியாவில் இன்னும் இருக்கிறது.
“காதலில் இருந்து பிரிந்த பிறகு, நீங்கள் புதிய நபர்களைச் சந்திக்கலாம், ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடங்கலாம், உங்கள் வாழ்க்கையை புதிதாக வாழக் கற்றுக் கொள்ளலாம், மிக முக்கியமாக, உங்கள் சொந்த முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ளத் தொடங்கலாம்,” என்று பூஜா சிவம் ஜேட்லி கூறுகிறார்.
ஷிவானி மிஸ்ரி, “காதலில் இருந்து பிரிந்த பிறகும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்,” என்கிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்