இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பைக்கு 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிதான் மீரா சாலை. வழக்கமாக பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அப்பகுதி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இயல்புக்கு மாறான அமைதியால் சூழப்பட்டிருந்தது.
மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அச்சத்தில் இருந்தனர். குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவில்லை. காரணம் தேசத்தின் மற்றுமொரு மூலையில் நடந்துக் கொண்டிருந்த வரலாற்று நிகழ்வின் எதிரொலியாக இங்கு பதற்றம் பரவியிருந்தது.
அந்த பதற்ற நிலையின் தொடர்ச்சியாக ஜனவரி 22 மாலை இங்கு இரு சமூகங்களுக்கிடையே வன்முறை வெடித்தது. சமூக அமைதியை பாதித்த இந்த வன்முறை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை இந்த வழக்கில் இதுவரை 19 பேரை கைது செய்துள்ளது.
இதற்கு மத்தியில் நயா நகரில் உள்ள 15 உரிமம் இல்லாத கடைகளை புல்டோசர் கொண்டு இடித்து விட்டது மீரா – பைந்தர் நகராட்சி. இதில் சில கடைகளின் ஒரு பகுதி மட்டும் உடைக்கப்பட்டுள்ள நிலையில், பல கடைகளின் முழு பகுதியும் இடிக்கப்பட்டு விட்டது.
நாங்கள் இந்தியர்கள் இல்லையா?
பிபிசி குழு அந்த பகுதிக்கு சென்றபோது 8 கடைகளின் இடிபாடுகள் மட்டுமே சாலையில் பரவிக் கிடந்தது.
சில நாட்கள் முன்பு வரை ஒருபக்கம் காய்கறி கடைகளும், மறுபக்கம் மரச்சாமான்கள், எலெக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்ட பல கடைகளும், குறையாத ஜனக்கூட்டமும் நிறைந்திருந்த பகுதி தற்போது வெறிச்சோடி காணப்பட்டது.
இடிக்கப்பட்ட கடைகளின் இடிபாடுகளுக்குள் கடையின் பொருட்களும், காய்கறிகளும் என அனைத்தும் மண்ணுக்குள் புதைந்து காணப்பட்டது.
அங்குதான் நான்கு சக்கர வாகனங்களுக்கான கேரேஜ் நடத்தி வரும் முகமது அபுல் ஹசன் ஷேக்கை நாங்கள் சந்தித்தோம். இவரது கடையும் இடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான் 22 வருடங்களாக கடை நடத்தி வருவதாகவும், அதற்கு முறையான மின்சாரக்கட்டணம் கூட செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார் அவர்.
எங்களிடம் பேசிய முகமது, “கடையில் இருந்த என்னை கையை பிடித்து வெளியே இழுத்து போட்டனர். நான் சொல்வதை கூட கேட்காமல் உடனடியாக புல்டோசர் கொண்டு கடையை இடிக்க தொடங்கி விட்டனர். கடைக்கு உரிமம் இல்லை என்றோ, நடவடிக்கை எடுக்க போகிறோம் என்று கூட முன்னறிவிப்பு எதுவும் வழங்கவில்லை. இங்கு கடை தொடங்கி 22 வருடங்கள் ஆகிறது. இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை” என்று கூறினார்.
இந்த கடையை நம்பி 5 முதல் 6 ஊழியர்கள் வரை பணியாற்றி வருவதாக கூறினார் அவர். இந்த சம்பவம் உங்களது குடும்பத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேட்ட மறுகணமே, அவரது கண்ணிலிருந்து கண்ணீர் வெளியேற தொடங்கி விட்டது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு சிறிது நேரம் முன்பு வரை இந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. எனவே, அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மக்கள் பேசிக்கொள்ள தொடங்கி விட்டனர்.
இதுகுறித்து பேசிய மற்றொரு கடைக்காரர், “நடந்த வன்முறைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த சம்பவமும் கூட இந்த பகுதியில் நடக்கவில்லை. இருப்பினும் எங்களது கடைகள் ஏன் இடிக்கப்பட்டது என்று தெரியவில்லை” என தெரிவிக்கிறார்.
கடைகள் இடிக்கப்படும் போது ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அங்கே நிலவிய பதற்றம் காரணமாக, கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள், விரைவு அதிரடிப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் அந்த பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த பகுதியில் உள்ள மற்றுமொரு கடையான ஹிஜாப் விற்கும் கடை ஒன்றை பார்க்க நேர்ந்தது. இதை அலிஷா சையத் என்ற வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள பெண் ஒருவர் நடத்தி வருகிறார்.
பெரிய நிறுவனத்தில் பணிசெய்து கொண்டிருந்த இவர் சொந்த தொழில் தொடங்க முடிவெடுத்து இந்த கடையை நடத்தி வருகிறார். இங்கு வித விதமான ஸ்கார்ஃப் மற்றும் ஹிஜாப்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உயரமான கட்டித்தில் அமைந்துள்ள இந்த கடை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த பகுதி அதிகம் புழுதி நிறைந்த பகுதி என்பதால் உடைகள் பாழாகிறது என்பதற்காக வெளிப்புறத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு கதவு மற்றும் பலகையும் பொறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த வெளிப்புற அமைவுகளை நகராட்சி நிர்வாகம் அகற்றி விட்டது.
இதுகுறித்து பேசிய அலிஷா சையத், “ இந்த சம்பவம் நடப்பதற்கு 1 நாளுக்கு முன்புதான் சமூக வலைத்தளங்களில் மீரா சாலையில் புல்டோசரை ஓட்டி செல்லுங்கள் என்று பலரும் கருத்து பதிவதை பார்த்தேன். ஏதோ நடக்கப்போகிறது என்று மனதிற்கு தோன்றியது. ஆனால், இப்படி உண்மையிலேயே புல்டோசர் கொண்டு இடித்து விடுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. எங்களையும் அவர்கள் கருத்தில் கொள்வார்கள் என்று நான் நினைத்தேன்” என்று கூறினார்.
“என்னுடைய கேள்வியெல்லாம், ஏன் அதே நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? சில நாட்கள் முன்பு அல்லது சில நாட்கள் கழித்து செய்திருக்கலாம் அல்லவா? நாங்கள் எதுவுமே செய்யவில்லை. நாங்களெல்லாம் இந்தியர்கள் இல்லையா? எங்களுக்கும் கஷ்டமாக இருக்காதா?” என்று தனது கேள்விகளை முன்வைத்தார் அவர்.
இந்த நடவடிக்கையால் அலிஷாவுக்கு 50,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுவரை இப்படி ஒரு நிகழ்வை தான் எதிர்கொண்டதில்லை எனவும் கூறுகிறார் அவர்.
மேலும் பேசிய அலிஷா “இதுவரை இங்குள்ள மக்கள் மற்றும் காவல்துறையினரால் எனக்கு இது போன்று எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை. சொல்லப்போனால் மீரா சாலையில் இப்படி எதையும் நான் உணர்ந்ததே இல்லை. எனது நண்பர்களில் 90% பேர் கூட இந்துக்கள் தான். அவர்களே இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர். ஏன் இது நடந்தது, அவர்களது உள்நோக்கம் என்ன என்பதும் எனக்கு புரியவில்லை. எனது கடையின் வெளிப்புறம், பெயர் பலகை உள்ளிட்டவற்றை உடைத்து விட்டார்கள்” என்று கூறினார்.
மீரா சாலையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து மீரா – பயந்தர் நகராட்சியின் துணை ஆணையர் மாருதி கெய்க்வாடிடம் பேசினோம்.
எங்களுக்கு பதிலளித்த அவர், “ அனுமதியில்லாத கடைகள் மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம். மாநகராட்சி விதிகளின்படி, அனுமதியில்லாமல் நடைபாதை அல்லது சாலையோரம் உள்ள கடைகளை அகற்ற முன்னறிவிப்பு செய்ய வேண்டியதில்லை. இந்த கடைகள் டிபி சாலையில் வடிகால்களை ஒட்டி அமைந்துள்ளன. இது எங்களுடைய வழக்கமான பணியின் ஒரு பகுதிதான்” என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு பிறகு இந்த பகுதியில் சில அரசியல் கூட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மீண்டும் சில கார்கள் மீது செக்டார் 3 அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலில், அப்துல் ஹக் சவுத்ரியின் கார் கடுமையாக சேதமடைந்ததாகவும், அவரது டிரைவர் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய அவர், “ அன்று பயந்தரில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது எங்கள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் எங்களை இந்துவா, முஸ்லிமா என்று கேட்டனர். அவர்கள் கையில் பெரிய பெரிய வாள்கள் இருந்தன. நாங்கள் மட்டும் ஓடாமல் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக எங்களை கொன்றிருப்பார்கள். எங்களை மட்டுமின்றி பிறரையும் தாக்கினர். அங்கிருந்த ரிக்சாவை கூட தாக்கினர்” என்று தெரிவித்தார்.
இந்த பதற்றமான சூழலால் நயா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அச்சநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நசியா சையத்தை நயா நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் 5 முதல் 6 நாட்களாக வெளியவே அனுப்பவில்லை என்று கூறினார் அவர்.
“எங்கள் குடும்பத்தில் திருமணம் ஒன்று நடக்கவுள்ளது. அதற்காக ஷாப்பிங் செல்ல வேண்டும். ஆனால், வெளியே நிலவும் அச்சமான சூழலால் நாங்கள் செல்லவில்லை. வீட்டிற்கு தேவையான பொருட்களை கூட இப்போதுதான் வாங்கியிருக்கிறோம்” என்று தெரிவித்தார் அவர்.
திருமணமாகி 15 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வரும் நசியா இது போன்ற சூழலோ, பிரச்னையோ இதுவரை எழுந்ததில்லை என்று கூறுகிறார்.
ஜனவரி 21 அன்று இந்த பகுதியில் மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அந்த பேரணிக்கு பிறகே இரு சமூகங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது பின்னால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து அந்த பேரணியின் ஒருங்கிணைப்பாளர் விக்ரம் பிரதாப் சிங் பேசுகையில், ” அனைத்து ஜாதி, மதத்தினரும் எங்கள் பேரணியில் கலந்துகொண்டனர். அதில் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்த பேரணியில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 500 பேர் மற்றும் மொத்தமாக பத்தாயிரம் பேர் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு பேரணி முடிந்தது” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “இதுவரை மீரா -பயந்தர் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. நயா நகர் மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால், இது யாரோ வெளியாட்களின் வேலை. காவல்துறை இதை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னறிவிப்பின்றி நடவடிக்கை
இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள மீரா சாலையின் ஹைதர் சவுக் கடை இடிப்பு சம்பவத்திற்கு பிறகு, ஜனவரி 24இல் தெற்கு மும்பையின் முகமது அலி சாலையில் உள்ள 35 கடைகளை இடித்துள்ளது மும்பை மாநகராட்சி.
முகமது அலி சாலையில் அமைந்துள்ள இந்த சந்தைக்கு மும்பை நகரம் முழுவதிலும் உள்ள மக்கள் வருகை புரிவதுண்டு. காவ் கல்லி என்றழைக்கப்படும் இந்த பகுதியில் நிறைய உணவுக்கடைகள் உள்ளது.
மும்பை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பிறகு அந்த பகுதிக்கு சென்ற போது மக்கள் வரத்து குறைந்திருந்தது. நடவடிக்கை எடுக்கப்பட்ட கடைகளில் ஒன்றான “சுலைமான் மித்தாய்வாலா’ உள்ளிட்ட கடைகளுக்கு சென்றோம்.
இந்த கடை 1936இலிருந்து முகமது அலி சாலையில் இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளரான சந்த் முகமதை சந்தித்தோம்.
கடைகள் இடிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், “பல கடைகள் அடைக்கப்பட்டிருந்த காலை நேரத்தில் வந்து இடித்துள்ளனர். எந்தவித நோட்டீசும் கொடுக்காமலேயே நேரடியாக வந்து இடித்து விட்டனர். குறைந்தபட்சம் முன்னறிவிப்பு செய்திருந்தாலாவது எங்களது உடமைகளையாவது பாதுகாத்திருப்போம். அடிக்கடி மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வருவதுண்டு. ஆனால், இந்த முறை அறிவிப்பு இல்லாமலேயே நடவடிக்கை எடுத்து விட்டனர். 2 லட்சம் மதிப்புள்ள எனது பொருள்கள் தற்போது நஷ்டமாகி விட்டன” என்று கூறினார்.
இவரது கடைக்கு அடுத்து 88 ஆண்டுகளாக இயங்கி வரும் நூராணி பால் கடை உள்ளது. அந்த கடையின் மேற்கூரை மற்றும் வெளிப்புற அமைவுகளும் மாநகராட்சியால் அகற்றப்பட்டு விட்டது. இதுகுறித்து பேசிய அந்த கடையின் உரிமையாளர் ஹுசைன் நூராணி, இந்த சம்பவத்திற்கும் மீரா சாலை சம்பவத்திற்கும் தொடர்புள்ளது என்று கூறினார்.
இதுகுறித்து விவரித்த அவர், “அதிகாலை 3:30 மணியளவில், அச்நாக் நகராட்சியை சேர்ந்தவர்கள் வந்தனர். அந்த நேரத்தில் பல கடைகள் திறக்கப்படவில்லை. எந்த அறிவிப்பும் இல்லாமலேயே திடீரென கடைகளை இடிக்க தொடங்கினர். இங்கு எங்களது இனிப்பு கடை ஒன்றும் உள்ளது. அவர்கள் எங்களது கடையின் மேற்கூரையை இடித்து விட்டனர். குறிப்பிட்ட சிலருக்கு எதிராக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீரா சாலை நடவடிக்கைக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளதால் இது இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம். இத்தனை வருடங்களில் இங்கு இப்படி நடந்ததே இல்லை” என்றார்.
சட்டம் என்ன சொல்கிறது?
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மாநகராட்சி உயரதிகாரி ஒருவரிடம் நாங்கள் பேசினோம்.
இந்த நடவடிக்கை குறித்து பேசிய அவர், “ அந்த பகுதியை சுத்தப்படுத்த சென்ற போது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அனுமதி பெறாத மேற்கூரைகளை மட்டுமே அகற்றினோம். மற்றபடி கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. போக்குவரத்து மற்றும் இதர காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “அனுமதி பெறாத மேற்கூரை இடிப்பு அல்லது நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அனுமதியே பெறவில்லை என்றால் எப்படி எங்களது பதிவுகளில் அது இருக்கும்? பிறகு எப்படி நாங்கள் நோட்டீஸ் தருவது? மீரா ரோடு சம்பவத்திற்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை. ஜனவரி 18ஆம் தேதி கூட ரயில்வே பணிக்கு இடையூறாக இருந்த சிவன் கோவிலை இடித்தோம். எல்லாம் விதிமுறைகள் படியே நடக்கிறது” என்று கூறினார்.
நகராட்சி விதிகளின்படி, நகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் அல்லது வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாலைகள், வடிகால், நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்பே நோட்டீஸ் கொடுக்க தேவையில்லை என்று நகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் இப்படி கூறினாலும், பிபிசி மராத்தியிடம் பேசிய மூத்த ஓய்வு பெற்ற அதிகாரி கோவிந்த் கைர்னார், நோட்டீஸ் கொடுக்காமல் அகற்றும் பணியை செய்ய முடியாது என கூறுகிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ நடைபாதையில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களை கூட முன்னறிவிப்பின்றி அகற்ற முடியாது. உச்சநீதிமன்றம், சாலையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்புகளை அகற்ற பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டலாம் என்றே கூறியுள்ளது. அனைவருக்கும் நோட்டீஸ் கொடுப்பது அவசியம்” என்கிறார்.
மேலும் பேசிய அவர் “சட்டப்படி, 351 நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதற்கு பின்பு, பதிலுக்காக ஏழு நாள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதுவரை நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
வியாபாரத்தில் தாக்கம்
இந்த நடவடிக்கை குறித்த வீடியோ வைரலாகி வருவதால் மீரா சாலை மற்றும் முகமது அலி சாலை ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள மக்களிடையே அச்சம் மற்றும் பதற்றமான சூழல் நிலவுவதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர். இது நேரடியாக அவர்களது வணிகத்தை பாதிக்கிறது.
கடந்த சில நாட்களாக இந்த சம்பவங்கள் மற்றும் அது சார்ந்த பல்வேறு விவாதங்களால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஹுசைன் நூராணி கூறுகையில், “இரண்டு மூன்று நாட்களாக இந்த பகுதிக்கு மக்கள் வரவில்லை. இங்கு உணவு கடைகளுக்காகவே ஒரு தெரு உள்ளது. தெற்கு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் இங்கு வருவார்கள். ஷாப்பிங்கிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளதால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தங்களுக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளதாக மீரா சாலையைச் சேர்ந்த அலிஷா கூறுகிறார்.
இது குறித்து பேசிய அவர், “நிறைய சேதம் ஏற்பட்டுள்ளது. கடைக்கு பொருட்கள் வாங்க ஐயாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் வந்து பொருட்கள் விற்றபிறகு, அந்த பணத்தை கொண்டு தேவையான பொருட்களை வாங்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதே நாளில் கடை இடிக்கப்பட்டது. இன்னும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராததால் யாரும் கடைக்கும் வரவில்லை. இதானல் தேவையான பணம் கிடைக்கவில்லை. நிலைமை சீராக சில நாட்கள் ஆகும்” என்றார்.
‘இரு சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதே தீர்வு’
முதலில் மீரா சாலையில் உள்ள நயா நகர், அடுத்த நாளே முகமது அலி சாலை என அனுமதியற்ற கடைகள் மீது அடுத்தடுத்து புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது ஏன் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
இதுபற்றி சமூக ஆர்வலர் ஃபெரோஸ் மிதிபோர்வாலா பேசுகையில், “இதுபோன்ற செயல்பாடுகள் மூலம், யாராவது எதிர்த்து பேசினால் அவர்களது கடைகளை உடைப்போம் என்ற செய்தியை அவர்கள் கூற விரும்புகிறார்கள். வாழ்வாதாரத்திற்காக பிழைப்பு நடத்தி வந்த ஏழை மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்ற செயல்களை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பார்த்திருக்கிறோம். தற்போது மகாராஷ்டிராவும் அதையே செய்ய முயற்சிக்கிறது” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “இவ்வாறான நடவடிக்கை இஸ்லாமிய சமூகத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால், இந்து சமுதாயமும், இஸ்லாமிய சமுதாயமும் அச்சத்தில் உள்ளன. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பயப்படுகிறார்கள். இது வெறுப்பையும், வெறுப்பு வன்முறையையும் வளர்க்கிறது. இதற்கு இரு சமூகத்தினரும் ஒன்றுபடுவதுதான் ஒரே தீர்வு,” என்கிறார்.
மீரா சாலையில் பணிபுரியும் சாதிக் பாஷாவும் இதே கருத்தையே முன்வைக்கிறார். இவர் மீரா சாலையில் சம்பவம் நடந்தபோது அதே பகுதியில் இருந்தவர்.
அதுகுறித்து அவர் பேசுகையில், “அரசியல் உரைகள் சூழலைக் கெடுத்துவிட்டன. இதற்கு முன்பு இதே பாணியிலான புல்டோசர் நடவடிக்கையை உத்திரபிரதேசத்தில் பார்த்தோம். தற்போது அதேபோன்ற நடவடிக்கை இங்கும் முன்னெடுக்கப்படுகிறது. இதில் உள்ளூர் அரசியலும் உண்டு. வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், மீரா சாலையில் நடந்த சம்பவங்களை கவனித்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் வீடியோ மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகளை வைரலாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் உத்தரபிரதேசத்தில் முதன்முதலில் இதுபோன்ற புல்டோசர் ஆப்பரேஷன் தொடங்கப்பட்டது. அவர் ‘புல்டோசர் பாபா’ என்றும் அழைக்கப்பட்டார். அதன் பிறகு சிவராஜ் சிங் சவுகான் அரசு புல்டோசர்களைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது போன்ற பெரும்பாலான சம்பவங்களில் இலக்குகள் இஸ்லாமியர்களாக இருந்தனர். மேலும் புல்டோசர் ஒரு மதத்திற்கு எதிராக செயல்படும் ஒரு கருவியாக பார்க்கப்பட்டது. இதற்கிடையில், அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு எதிராக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்