முதலிரவுக்கு முன்பாக புதுமணத் தம்பதிகள் செல்லும் கோவில்
ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மெலியபுட்டி சந்திப்பில் அமைந்துள்ளது பழமையான ராதா வேணுகோபால சுவாமி கோவில். புதுமணத் தம்பதிகள் இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த பிறகே முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு சகோதர, சகோதரிகள் ஒன்றாகச் செல்வதில்லை.
இந்த வழக்கம் இங்கு 200 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தக் கோவில் கட்டப்பட்டதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது என்கிறார் கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் வாவிலபள்ளி ஜெகநாத நாயுடு.
“சுமார் 200 வருடங்களுக்கு முன்னர், கஜபதி நாராயண தேவ் என்ற மகாராஜா அவரது மனைவி மகாராணி விஷ்ணுபிரியாவின் ஆசையை நிறைவேற்ற இந்தக் கோயிலைக் கட்டினார். கஜபதியின் ஆட்சிக்காலத்தில் செழித்து விளங்கிய சிற்பக்கலைக்கு இந்த கோவில் ஒரு எடுத்துக்காட்டு.”
“இந்த கோவிலில் 33 தூண்கள் உள்ளன. அதிலுள்ள அழகான சிற்பங்கள் உயிருள்ள உருவங்கள் போல தோன்றும். அதனால் தான், இந்த கோவில் ஏன் தென்னிந்தியாவின் கஜுராஹோ என அழைக்கப்படுவதில்லை என பலர் கேள்வியெழுப்புகிறார்கள்” என்கிறார்.
“கோவில் சுவர்களில் பாலியல் தோரணையுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. அதனால், கோவிலுக்கு வரும் இளைஞர்கள், பெண்கள் சற்று கூச்சம் அடைகின்றனர். அக்கா, தம்பிகள் ஒன்றாக கோவிலுக்கு வந்து சங்கடப்படுவதும் உண்டு. இதனால் தான் சகோதர, சகோதரிகள் ஒன்றாக வர அனுமதியில்லை” என்கிறார் கோவில் பூசாரி சத்தியநாராயணா ரத்தோ.
பழமையான இந்த கோவில் முறையான பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து வருவதாக கவலை தெரிவிக்கிறார் ஜெகநாத நாயுடு.
“இந்தக் கோவிலைக் கட்டியதன் முக்கிய நோக்கம், தம்பதியருக்கு வேதங்கள், கலைகள் மற்றும் பாலியல் குறித்துக் கற்பிப்பதாகும். போதிய நிதியுதவியும், பராமரிப்பும் இல்லாததால், வரலாறும் தனித்துவமும் கொண்ட இக்கோவில் பாழடைந்து வருகிறது. இந்தக் கோவிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சிற்பங்களில் ஒளிந்திருக்கும் சிற்பக் கலையின் அறிவையும் அழகையும் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வது நமது பொறுப்பு” என்று கூறினார் அவர்.
தயாரிப்பு: லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
பிபிசிக்காக
நன்றி
Publisher: பிபிசிதமிழ்