இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து ஸ்ரேயஸ் ஐயரையும் இஷான் கிஷனையும் நீக்கியுள்ளது.
இந்த ஒப்பந்த வீரர்கள் பட்டியலை பிசிசிஐ புதன்கிழமை மாலை வெளியிட்டது. இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுக்கக்கூடும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.
இரண்டு கிரிக்கெட் வீரர்களும் இந்தியன் பிரீமியர் லீக்கில் அதாவது ஐபிஎல்லில் தங்கள் அணிகளின் ஒரு பகுதியாக இருப்பார்கள். இருவருமே தங்கள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள்.
ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஏலத்திற்கு முன்பே இரு வீரர்களையும் அவர்களது அணிகள் தக்கவைத்துக் கொண்டன.
ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் கூட பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? பின்னணி என்ன?
ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இல்லாவிட்டால் என்ன பாதிப்பு?
ஐபிஎல் ஒப்பந்தத்தில் இருப்பது அவர்களுக்கு மிகவும் நன்மை அளிப்பதாக இருக்கும். ஆனால் பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது இந்த வீரர்களுக்கு பொருளாதார ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். கூடவே அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் இது ஒரு பெரிய அடியாகும்.
ஐபிஎல் ஒரு ஆண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும். இது தவிர உள்ளூர் கிரிக்கெட்டில் பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார். 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியில் அதிக ரன் அடித்தவர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 811 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,383 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் ஷ்ரேயஸின் அதிகபட்ச ஸ்கோர் 128 ஆகும். அவர் 49 என்ற சராசரியில் விளையாடுகிறார்.
இரு வீரர்களும் பிசிசிஐ வழிகாட்டுதல்களை புறக்கணித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ஒரு கடிதம் எழுதியிருந்தார். மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட்டை (ரஞ்சி கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்) விட ஐபிஎல்-க்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பிசிசிஐ ஒப்பந்தத்தின் நன்மைகள் என்ன?
வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே பிசிசிஐயின் வசதிகளை பெற முடியும். தேசிய கிரிக்கெட் அகாடமியின் வசதிகளும் இதில் அடங்கும்.
ஒரு வீரருக்கு காயம் ஏற்படும் போது, தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கு மிகவும் முக்கியமானது.
ஒப்பந்தத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு காப்பீடும் உண்டு.
முகமது ஷமி விஷயத்தில் இதை நாம் பார்க்கலாம். ஷமி தற்போது காயமடைந்துள்ளார். ஆனால் அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தின் கீழ் இருப்பதால் அவருக்கு எல்லா வசதிகளும் கிடைத்து வருகின்றன. அவரது மருத்துவ செலவையும் பிசிசிஐ ஏற்கிறது.
பிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியல்
கிரேட் ஏ பிளஸ் (ரூ. 7 கோடி): ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.
கிரேட் ஏ (ரூ 5 கோடி): ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல். ராகுல், ஷுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா.
கிரேட் பி (ரூ 3 கோடி): சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கிரேட் சி (ரூ. 1 கோடி): ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன்,
அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் பட்டிதார்.
வேகப்பந்து வீச்சாளர் ஒப்பந்தம்: ஆகாஷ் தீப், விஜய்குமார் வியஷக், உம்ரான் மல்லிக், யஷ் தயாள் மற்றும் வித்வத் காவேரப்பா.
இஷான் கிஷனுக்கு கிடைத்த வாய்ப்புகள் குறைவு
இஷான் கிஷன் சில காலமாக இந்திய அணியுடன் தொடர்ந்து பயணம் செய்து வருகிறார். ஆனால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கமான வீரர்கள் இல்லாத போது மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நிச்சயமற்ற தன்மையால் இஷான் கிஷன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியதும் அவரது மன சோர்வு பற்றிய விவாதம் தொடங்கியது.
இஷான் கிஷன் பிசிசிஐயிடம் ஓய்வு கேட்டிருந்தார். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து பயணம் செய்வதால் ஓய்வு தேவை என்று அவர் கூறியிருந்தார்.
அணி நிர்வாகம் இது தொடர்பாக தேர்வாளர்களுடன் பேசிய பிறகு அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.
இஷான் கிஷன் 2023 ஜனவரி 3 முதல் ஒவ்வொரு போட்டியிலும் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு விளையாடுவதற்காக கிடைத்த வாய்ப்புகள் மிகக் குறைவு. கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
டெங்குவில் இருந்து மீண்டு சுப்மன் கில் திரும்பியபோது விளையாடும் பதினோரு பேரில் இருந்து இஷான் நீக்கப்பட்டார். அதேசமயம் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
அதன்பிறகு இஷான் கிஷன் ஆஸ்திரேலியாவுடனான டி-20 தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் அரைசதம் அடித்தார்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த டி-20 தொடரில் இஷான் கிஷன் பங்கேற்றார். ஆனால் அணி நிர்வாகம் ஜிதேஷ் ஷர்மாவுக்கு முன்னுரிமை அளித்தது. கிஷன் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் அவர் விளையாட்டில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்க முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இஷான் கிஷனும் இடம்பெற்றிருந்தார்.
அணி நிர்வாகம் விளையாடும் அணியில் கே.எஸ்.பாரத்தை தேர்வு செய்ததால் இஷான் கிஷனால் ஆஸ்திரேலியாவுடனான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. மூன்று ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இஷான் கிஷன் ஆட்டத்திறன் எப்படி இருந்தது?
இஷான் கிஷன் ஐபிஎல் சீசன் முழுவதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
இஷான் கிஷன் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இந்திய அணியின் வழக்கமான வீரராக இருந்து வருகிறார். ஆனால் இதுவரை அவருக்கு 27 ஒருநாள் மற்றும் 32 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர் அரிதாகவே அடுத்தடுத்த பந்தயங்களில் விளையாடியுள்ளார். அணி நிர்வாகம் அவரது பங்கை மாற்றிக்கொண்டே இருந்தது. சில சமயங்களில் அவர் ஒரு பேக்அப் ஓப்பனராகவும் சில சமயங்களில் ஸ்பெஷலிஸ்ட் கீப்பராகவும் அணியில் சேர்க்கப்பட்டார்.
இஷான் கிஷன் கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலும் விக்கெட் கீப்பர் அல்லது ஓப்பனர் என்ற இரண்டிற்குமே எப்போதும் முதல் தேர்வாக இருந்ததில்லை.
இஷான் கிஷன் மன சோர்வை காரணம் காட்டி ஓய்வுக்கான கோரிக்கை விடுப்பதற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்.
ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இஷான் கிஷன் ஏமாற்றவில்லை.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் விக்கெட் சீக்கிரமே சரிந்தது. அந்த நிலையில் இஷான் இரட்டை சதம் அடித்தார்.
இருந்த போதிலும் ஷிகர் தவானின் இடம் இஷான் கிஷனுக்கு கிடைக்கவில்லை. இந்த இடம் சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என்று கேட்டுக்கொண்ட இஷான் கிஷன் துபாயில் ஒரு பார்ட்டியில் காணப்பட்டார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது ஒழுக்கமின்மையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒழுக்கமின்மை விஷயத்தை ராகுல் டிராவிட்டே மறுத்துள்ளார்.
உலகக் கோப்பைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுடன் டி-20 தொடரில் விளையாட இஷான் கிஷன் விரும்பவில்லை என்றும் அவரது கோரிக்கையை பிசிசிஐ ஏற்கவில்லை என்றும் ஊடகங்களில் கூறப்பட்டது.
பயணம் காரணமாக தான் சோர்வாக இருப்பதாகவும், தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் இஷான் கிஷன் கூறியிருந்தார். ஆனால் அவரை துபாயில் ஒரு பார்ட்டியில் பார்க்க முடிந்தது. இஷான் கிஷன் தனது சகோதரரின் பிறந்தநாளை கொண்டாட துபாய் சென்றதாகவும் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்