- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி நியூஸ்
-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஒரு பயணி வந்திறங்கியிருந்தால், முதலில் அவருடைய கண்ணில் படுவது அஹ்மத் ஷா மசூத்தின் பெரிய போஸ்டராகத்தான் இருக்கும்.
இதுமட்டுமின்றி, காபூலின் முக்கிய போக்குவரத்து வட்டத்திற்கும் அவரது பெயர் தான் சூட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று அவரது நினைவு தினம், ஆப்கானிஸ்தான் முழுவதும் ‘மசூத் தினமாக’ கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், இப்போது தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் மூலம் எல்லாம் மாறிவிட்டது. முதலில், காபூல் விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அவரது படம் கிழிக்கப்பட்டது என்பதுடன் அவரது பெயரிடப்பட்ட இடங்களின் பெயர்களும் மாற்றப்பட்டன.
ஆனால், ஆப்கானிஸ்தானின் பலருக்கு அவர் இன்னும் ஒரு தேசிய ஹீரோவாகவே தெரிகிறார். அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் கபிலன் அவரை ஒரு கொரில்லா தளபதியாக மாவோ மற்றும் சே குவாராவுடன் ஒப்பிட்டார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அவரது சுயசரிதையான ‘ஆப்கான் நெப்போலியன், தி லைஃப் ஆஃப் அஹ்மத் ஷா மசூத்’ நூலை எழுதிய சாண்டி கால், “எட்டு ஆண்டுகளில் குறைந்தது ஒன்பது ரஷ்ய தாக்குதல்களை எதிர்த்துப் போராடிய ஒருவரின் தைரியத்தை அவரது ரஷ்ய எதிரிகள் கூட பாராட்டினர்.
அவரது வாழ்நாள் முழுவதும் தலிபானின் மிகப்பெரிய எதிர்ப்பாளராகவே இருந்தார். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எப்போதும் அவரது புத்திசாலித்தனம், பணிவு, தைரியம் மற்றும் பாரசீக இலக்கிய அறிவைப் பாராட்டினர். அவரது 22 வயது முதல் 49 வயது வரை அவரது முழு வாழ்க்கையும் சண்டையில் தான் கழிந்தது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான் முகாமுக்குச் சென்றுவிட்டு உயிருடன் திரும்பியவர்
மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருந்த அஹ்மத் ஷா மசூத் எப்பொழுதும் ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்தது மட்டுமின்றி துணிச்சலுக்கு உதாரணமாக பல நேரங்களில் அவர் வாழ்ந்தார்.
சுமார் 25 ஆண்டுகளாக, அவர் மற்ற ஆப்கானிஸ்தான் தளபதிகளை விட தலைமை மற்றும் நிர்வாகத்தில் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். அவருடைய ஒழுக்க நெறியும் மற்றவர்களை விட மிகவும் சிறப்பாக இருந்தது.
தலிபான்களைப் போலவே, அவர் அல்கொய்தாவுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஆஃப்கானிய எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த மற்ற குழுக்கள் வெளிநாட்டு ஆதரவை எதிர்பார்த்து நாட்டை விட்டு வெளியேறின. ஆனால் சோவியத் ஆக்கிரமிப்பின் போது அவர்கள் ஒருபோதும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்பதுடன் மிகவும் கடினமான சூழ்நிலையில் பஞ்ச்ஷீரில் தொடர்ந்து போராடினர்.
தனிப்பட்ட முறையில் அகமது ஷா மசூத் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவோ அல்லது ஊழல் செய்ததாகவோ ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை. ஒரு பிரிட்டிஷ் அதிகாரி அவரை யூகோஸ்லாவியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய மார்ஷல் டிட்டோவுடன் ஒப்பிட்டார்.
“தலிபான்கள் காபூலை நோக்கி முன்னேறியபோது, அவர் தனது தோழர்கள் மறுத்தாலும் சமரசம் செய்ய தனியாக தலிபான் முகாமுக்குச் சென்றார். அவர் அங்கு சென்றவுடன் தலிபான்கள் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்று அவரது தோழர்கள் பயந்தனர், ஆனால் அவரது ஆளுமையின் தாக்கத்தின் காரணமாக அவர் அங்கிருந்து உயிருடன் திரும்பினார்,” என சாண்டி கால் எழுதுகிறார்.
அகமது ஷா மசூத் உயிருடன் திரும்ப அனுமதித்த தனது தளபதியை முல்லா உமர் பணிநீக்கம் செய்தார்.
1996 ஆம் ஆண்டு காபூலை விட்டு வெளியேற வேண்டியிருந்தபோது, அங்கிருந்து 2000 புத்தகங்களை எடுத்துச் சென்றதால், வாசிப்பதில் அவருக்கு ஆர்வம் இருந்தது எல்லோருக்கும் தெரியவந்தது.
தாலிபன்களால் தோற்கடிக்க முடியாத மசூத்
ரஷ்யர்களுக்கு எதிரான சண்டையின் போது அகமது ஷா மசூத் மிகவும் எளிமையான ஆனால் பயனுள்ள வியூகத்தை அமைத்து அதன்படி சண்டையைத் தொடர்ந்தார்.
ஏ.ஆர்.ரோவன் தனது ‘ஆன் தி ட்ரெயில் ஆஃப் லயன்- அஹ்மத் ஷா மசூத்’ என்ற புத்தகத்தில், “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த பகுதிகளில் ராக்கெட்டுகள் மற்றும் கொத்து குண்டுகளை வீசுவதற்கு முன்பு, அவர் அந்தப் பகுதிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் எண்ணற்ற கண்ணிவெடிகளைப் புதைத்துவைத்தார்.
இது அவருடைய வீரர்களுக்கு முன்கூட்டியே தெரியும். பல சமயங்களில் அந்த கண்ணிவெடிகளைத் தவிர்த்துவிட்டு, அவரது வீரர்கள் சண்டையிட வேண்டியிருந்தது. மேலும், ரஷ்ய வீரர்கள் தாக்குதலைத் தவிர்க்க இது போல் பல ஏற்பாடுகளை அவர் செய்து வைத்திருந்தார்,” என எழுதியுள்ளார்.
சில மாத காலம் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு, ரஷ்யர்கள் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் இந்த பள்ளத்தாக்கை ஒன்பது முறை தாக்கினர், ஒவ்வொரு முறையும் மசூத் அவர்களைப் போராடித் திரும்ப விரட்டியடித்தார்.
பாகிஸ்தானின் பலமான ஆதரவு இருந்தபோதிலும், அவர்களின் வீரர்கள் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகமாக இருந்தபோதிலும், தலிபான்களால் கூட மசூத்தை தோற்கடிக்க முடியவில்லை.
மசூத், பள்ளத்தாக்கின் முகப்பில் அமைந்துள்ள சலாங் சுரங்கப்பாதையை டைனமைட் மூலம் தகர்த்து, ஒரு வழியாக தனது சொந்தப் பகுதியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, பின்னர் கிராமம் கிராமமாகப் பயணம் மேற்கொண்டு, மக்கள் தங்கள் பகுதியைப் பாதுகாக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.
“தன்னம்பிக்கை மற்றும் பயமின்மை என்னை மிகவும் கவர்ந்தது” – சாண்டி கால்
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலின் போது சாண்டி கால் அகமது ஷா மசூத்தின் அருகில் அமர்ந்திருந்தார்.
சாண்டி அவரது புத்தகத்தில்,”நான் மசூத்துடன் கைகுலுக்கியபோது, முதலில் என் கண்ணில் பட்டது அவருடைய கண்கள் தான். அவை ஒரு அறிவாளியின் கண்கள் என்றே அப்போது எனக்குத் தோன்றியது.
அப்போது அவரது முகத்தில் இருந்த முதிர்ச்சி 28 வயது இளைஞனிடம் அரிதாகவே காணப்படும் ஒன்றாக இருந்தது. எங்கள் தலைக்கு மேல் ரஷ்ய விமானங்கள் பறந்த போது நாங்கள் சாதாரணமாக உட்கார்ந்திருந்தோம்.
அப்போது மசூத் மற்றும் அவரது தோழர்கள் விரைவாக அருகிலுள்ள வீட்டை நோக்கி நகர்ந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வருமாறு என்னையும் அவர்கள் சைகை காட்டி அழைத்தனர்,” என்று எழுதியுள்ளார்.
மேலும், “அந்த குண்டுவெடிப்பின் போது தேநீர் அருந்திக் கொண்டே மசூத் தனக்கு வந்திருந்த கடிதங்களைப் படித்துவிட்டு பதில் எழுதிக் கொண்டிருந்தார். அவர் அப்போது அமர்ந்திருந்த தோரணை அனைவருக்கும் ஒரு உத்தரவை பிறப்பிப்பது போல் இருந்தது.
அவருடைய தன்னம்பிக்கை மற்றும் பயமின்மை என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதும் அவர் அங்கு நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருந்தார். மசூத் ஒருபோதும் ஆங்கிலம் கற்கவில்லை. ஆனால் அவர் மிகவும் சரளமாக பிரெஞ்சு மொழி பேசினார்,” என எழுதியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் போர்வையில் ஒசாமா பின் லேடன் அனுப்பிவைத்த கொலையாளிகள்
ஒசாமா பின்லேடனும் ஆரம்பத்தில் அவருடன் ரஷ்யர்களுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டவர் தான். ஆனால் பின்னர் அவருக்கு மசூத்துடன் ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் உருவாகி, அதுவே அவரது படுகொலைக்கு காரணமாக அமைந்தது.
ஆகஸ்ட் 2002 இல், இரண்டு அரேபிய பத்திரிகையாளர்கள் அகமது ஷா மசூத்தை பேட்டி காண வந்தனர். அவரிடம் பெல்ஜிய பாஸ்போர்ட் இருந்தது. பின்னர் தான் அவர்கள் பெல்ஜியம் தூதரகத்தில் இருந்து அந்த பாஸ்போர்ட்டுகளை திருடியது தெரியவந்தது. உண்மையில், மசூத்தை கொல்ல அல்கொய்தாவால் அனுப்பப்பட்டவர்கள் தான் அந்த பத்திரிக்கையாளர்கள்.
அவர்களில் ஒருவரின் பெயர் அப்தே சத்தார் தஹ்மான். அவருக்கு 39 வயது. இரண்டாவது நபரின் பெயர் போவாரி-அல்-குவாய்ர். அவருடைய வயது 31. அவர் வலுவான உடல்வாகுடன் ஒரு குத்துச்சண்டை வீரர் போல் இருந்தார்.
அவர்கள் இருவருக்குமே தாடி இல்லை. இருவரும் சட்டையும், முழுநீள கால்சட்டையும் அணிந்திருந்தனர். மசூத்தின் உத்தரவின் பேரில், ஏரியா கமாண்டர் பிஸ்மில்லா கான் சோதனைச் சாவடியில் அவரை அழைத்துச் செல்ல ஒரு காரை அனுப்பினார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, பஷ்தூன் தலைவர் அப்துல் ரசூல் சயாஃப் தனது பழைய எகிப்திய நண்பர் அபு ஹானியிடம் இருந்து இந்த இரண்டு அரபு நண்பர்களுக்கும் அகமது ஷா மசூதின் நேர்காணலை எப்படியாவது பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
இருவரும் முதலில் லண்டனில் இருந்து இஸ்லாமாபாத் சென்று பின்னர் அங்கிருந்து காபூல் சென்றடைந்தனர். அங்கிருந்து அவர்கள் பஞ்ச்ஷீருக்கு வந்தனர். அங்கு அவர்கள் சில நாட்கள் சயாப்பின் விருந்தினர்களாக இருந்தனர்.
அஹ்மத் ஷா மசூத்துக்கு தாடி இருந்ததா ?
அம்ருல்லா சலே பின்னர் ஸ்காட்லாந்து யார்டுக்கு அளித்த அறிக்கையில், “இருவரும் நுட்பமான உபகரணங்களை எடுத்துச் சென்றதால் கவனமாக வாகனம் ஓட்டச் சொன்னதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் பஞ்சேரி டிரைவர் கூறினார்,” எனத் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியின் தளபதி பிஸ்மில்லா கான், இருவருக்கும் தாடி இல்லையென்றாலும், அவர்களின் கன்னங்களுக்கு அருகில் உள்ள தோல் மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும், சில காலத்திற்கு முன்பு அவர்கள் பெரிய தாடியுடன் இருந்திருக்கலாம் என்றும், அதை அவர்கள் சமீபத்தில் அகற்றியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்து கவனம் செலுத்திய அவர், அதை அப்போது சாதாரணமாக எடுத்துக்கொண்டார். சயாப்புடன் சில நாட்கள் தங்கிய பிறகு, இந்த பத்திரிக்கையாளர்கள் பள்ளத்தாக்குக்கு அழைத்து வரப்பட்டு அஸ்தானாவில் உள்ள மசூதின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். இங்குதான் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணியும் எழுத்தாளருமான மேத்யூ லீமிங் அவர்களைச் சந்தித்தார்.
மத்தேயு பின்னர் ‘தி ஸ்பெக்டேட்டர்’ நாளிதழில் ‘பிரேக்ஃபாஸ்ட் வித் தி கில்லர்ஸ்’ என்ற கட்டுரையில், “இந்த இரண்டு பேரும் எனக்கு அமைதியான இயல்புடைய மர்ம மனிதர்களாகத் தோன்றினர். மசூத் கொலைக்குப் பிறகு, நான் இவர்களுடன் ஐந்து ஆண்டுகள் கழித்ததை உணர்ந்தேன்.
சாப்பாட்டு மேசையில் இருந்தபோது, கொலையாளிகளிடம் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்று நான் கேட்டபோது, அவர்கள் மொராக்கோவிலிருந்து வந்ததாகத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பெல்ஜியத்தில் வாழ்ந்துள்ளனர்.
நான் மொராக்கோவைப் பற்றி ஒரு சுற்றுலா தலமாக அவர்களிடம் பேசமுயன்றபோது, அவர்களுக்கு அந்த உரையாடலில் ஆர்வம் இல்லை. இது மட்டுமின்றி, அவர்கள் இருவரும் நிறைய அரிசி மற்றும் இறைச்சி உணவுகளை சாப்பிட்டார்கள்,” என்று எழுதியுள்ளார்.
மேலும், “ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் என்னிடம் கொஞ்சம் மனம் திறந்து பேசிய போது, உங்களிடம் ஜெனரல் மசூதின் எண் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டனர். நான் இல்லை என்று பதிலளித்தேன்.
அவர் தனது எண்ணை யாரிடமும் கொடுப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஏன் அந்த எண்ணைக் கேட்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள், அவர்களது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவரைச் சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்தனர்,” மேத்யூ எழுதுகிறார்.
இந்தியாவுக்கான ஆப்கன் தூதரை சந்திக்க அழைத்த மசூத்
அப்போது, மசூத்தின் நண்பரான மசூத் கலிலி, இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக இருந்தார். செப்டம்பர் 5, 2001 அன்று, அவர் கசாக் நாட்டு வெளியுறவு அமைச்சரைச் சந்திக்க டெல்லியிலிருந்து அல்மாட்டிக்கு விமானத்தில் சென்றார். அப்போது, மசூத் அவரைச் சந்திக்க அழைத்தார்.
செப்டம்பர் 7 ஆம் தேதி, கலிலி அல்மாட்டியில் இருந்து தஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு கலிலி தனது ஹோட்டலில் தூங்கப் போனார். அம்ருல்லா ஷா அவரை அழைத்து, மசூத் வந்துவிட்டதாகவும், உடனடியாக அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.
கலிலி தூங்கப்போவதற்கு முன் தனது இரவுநேர ஆடைகளை அணிந்து கொண்டு, மசூதின் மருமகன் மற்றும் இராணுவ உதவியாளர் வதூத்துடன், மசூத்தின் கருப்பு குண்டு துளைக்காத மெர்சிடிஸ் காரில் பயணம் மேற்கொண்டு அவரது வீட்டை அடைந்தார்.
கலிலி ஸ்காட்லாந்து யார்டுக்கு அளித்த அறிக்கையில், “நானும் மசூதும் காஷ்மீர் மற்றும் இந்தியாவில் பயங்கரவாதம் குறித்து பேசிக் கொண்டே இருந்தோம். இரவு 12.30 மணியளவில் மசூத்திடம் இருந்து விடைபெற்றேன். வழக்கத்துக்கு மாறாக அவர் என்னை வழியனுப்ப வெளியே வந்தார்.
அடுத்த நாள் நாங்கள் 10 மணி முதல் 11 மணிக்குள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றோம். கோஜா பஹியுதீனுக்கு விமானம் சென்டைய 40 நிமிடங்கள் ஆனது. இதற்கிடையில் நான் அவரை பல புகைப்படங்கள் எடுத்தேன்,” என்று கூறியுள்ளார்.
மாலையில், வெளியுறவு அமைச்சகத்தின் பாதுகாப்பு அதிகாரியான அசிம் வந்து, மசூத்திடம், “நீங்கள் அரபு பத்திரிகையாளர்களை சந்திக்க விரும்புகிறீர்களா? அவர்கள் வடக்கு அலையன்ஸ் பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது. கடந்த ஒன்பது நாட்களாக கோஜா பஹவுதீனில் உங்களைச் சந்திக்கக் காத்திருக்கின்றனர்,” என்று கேட்டார்.
அஹ்மத் ஷா மசூத் மறுநாள் அவர்களுக்கு நேரம் கொடுத்தார். அன்று இரவு அவரும், கலிலியும் ஒன்றாக தங்கினார்கள். இரவு 1.30 மணி வரை ஒருவருக்கொருவர் கவிதைகள் வாசித்துக் கொண்டிருந்தனர். மறுநாள் சுமார் 11 மணியளவில் அகமது ஷா தனது அலுவலகத்தை அடைந்தார்.
மசூத் கலிலி ஸ்காட்லாந்து யார்டிடம், “அகமது ஷா காக்கி சட்டையும், ராணுவ பாணி ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு எனது புதிய பாஸ்போர்ட்டைப் பெற்றிருந்தேன். அவரிடம் காண்பித்தபோது, அதை என் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இல்லையெனில் அது தொலைந்து போகும் என்று சொன்னார். மேலும், இரண்டு அரேபிய பத்திரிகையாளர்கள் எனக்காக இரண்டு வாரங்களாக காத்திருக்கிறார்கள் என்றும் மசூத் என்னிடம் கூறினார். நான் குளிக்கப் போனேன். ஆனால் இந்த நேர்காணலுக்கு 5-10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று மசூத் என்னை தடுத்து நிறுத்தினார்,” எனத்தெரிவித்துள்ளார்.
கலிலி மேலும் கூறுகையில், “அந்த நேர்காணலின் போது, நான் மசூத்தின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்தேன். நான் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர் தோள்பட்டை என்னுடைய தோள்பட்டையைத் தொட்டுக்கொண்டிருந்தது.
நான் அந்த பத்திரிக்கையாளர்களிடம், நீங்கள் எந்த பத்திரிக்கையில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்களில் ஒருவர் ஒரு பத்திரிகையைச் சொன்னபோது மற்றவர், அவர் பத்திரிக்கையில் பணியாற்றவில்லை என்றும் மாறாக ஐரோப்பாவின் இஸ்லாமிய மையத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். இவர்கள் பத்திரிக்கையாளர்கள் இல்லை என்று நான் மசூத்திடம் சொன்னேன்.
ஆனால், மசூத் தனது முழங்கையால் என்னை லேசாக அழுத்தி, அவர்கள் வேலையைச் செய்யட்டும் என்று கூறினார். பிறகு மசூத் அவரிடம் எத்தனை கேள்விகளைக் கேட்பீர்கள் என்று கேட்டார்,” என்றார்.
அதற்கு அந்த நேர்காணல் செய்தவர்கள் ஒரு முழுநீள தாளை எடுத்து அதில் இருந்த கேள்விகளைக் காட்டினர். அதில் 10 முதல் 15 கேள்விகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை ஒசாமா பின் லேடனைப் பற்றிய கேள்விகளாக இருந்தன.
நேர்காணலின்போது நடந்த குண்டுவெடிப்பு
அவர்களது முதல் கேள்வி, ஆப்கானிஸ்தானின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது தான். கலிலி அதை மொழிபெயர்த்தவுடன், பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
“குண்டு வெடிக்கும் சத்தம் எனக்கு கேட்கவில்லை. ஆனால் ஒரு நீல நிற நெருப்புப் பந்து என்னை நோக்கி வருவதை நான் பார்த்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் அப்போதும் நல்ல சுயநினைவுடன் இருந்தேன்.
அப்போது என் மார்பில் ஒரு கை படுவதை உணர்ந்தேன். அது அகமது ஷா மசூதின் கை. அப்போது தான் நான் சுயநினைவை இழந்தேன்,” என்று கலிலி விவரிக்கிறார்.
குண்டு வெடிப்பு சத்தத்தால் அந்த வீடு முழுவதும் அதிர்ந்தது. அப்போது வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்தது. அஹ்மத் ஷாவின் கூட்டாளிகளான அரேஃப் மற்றும் ஜம்ஷித் ஆகிய இருவரும் தலிபான்கள் அங்கு வான்வழித் தாக்குதலை நடத்தியதாக நினைத்தனர்.
அப்போது, அரேபிய கொலையாளிகள் கேமராவை மசூத்தின் முன் வைத்தனர். ஆனால் உண்மையில் அந்த வெடிகுண்டு பத்திரிக்கையாளர்கள் வேஷத்தில் வந்த கொலையாளிகளின் பெல்ட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
மசூதின் காவலர்கள் அனைவரும் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். கிட்டத்தட்ட சுயநினைவை இழந்த மசூத், முதலில் கலிலியை காப்பாற்றச் சொன்னார். மேலும், மசூத் உடனடியாக ஒரு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த கார், அவருடன் ஹெலிபேடை நோக்கி வேகமாகச் சென்றது.
மசூத்தின் பாதுகாவலர் அரேஃப் பின்னர் அளித்த சாட்சியத்தில், “அஹ்மத் ஷா மசூதின் உடல் முழுவதும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவரது வலது கையில் ஒரு விரலின் ஒரு சிறிய பகுதி வெட்டப்பட்டிருப்பதையும் நான் பார்த்தேன்.
மசூத், கலிலி மற்றும் மற்ற காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தஜிகிஸ்தானின் நகரமான ஃபர்குஹருக்கு கொண்டுசெல்லப்பட்டனர்,” எனத்தெரிவித்தார்.
மசூத் இறந்துவிட்டதாக இந்திய மருத்துவர் அறிவித்தார்
மசூத் கலிலி பின்னர் நினைவு கூர்ந்த போது, “நான் ஹெலிகாப்டரில் இருப்பது போல் உணர்ந்தேன். சுமார் 10-15 வினாடிகள் கண்களைத் திறந்தேன். மசூதின் முகம் மற்றும் தலைமுடியில் ரத்தம் வழிவதைக் கண்டேன். அதன் பிறகு நான் மீண்டும் சுயநினைவை இழந்தேன். எட்டு நாட்களுக்குப் பிறகு நான் சுயநினைவுக்கு வந்தேன்.
அதற்குள் நான் ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தேன். அகமது ஷா மசூத் இப்போது இல்லை என்று என் மனைவி என்னிடம் கூறினார்,” எனத்தெரிவித்தார்.
கலிலியின் மனைவி அவனது சாமான்களை எடுத்துக்கெண்டிருந்த போது, அவரது பாஸ்போர்ட்டைக் கண்டுபிடித்தார். அதை அகமது ஷா மசூத் தான் கலிலியின் சட்டையின் மேல் பாக்கெட்டில் வலுக்கட்டாயமாக வைத்திருந்தார்.
இது குறித்து நினைவு கூர்ந்த கலிலி, “என் மனைவி எனது பாஸ்போர்ட்டைத் திறந்து பார்த்தார். 15 வது பக்கம் வரை பல ஆணிகள் சிக்கியிருந்தன. இந்த பாஸ்போர்ட் தான் என் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று அப்போது எனக்குத் தெரியவந்தது,” என்றார்.
மசூத் பர்குஹாரை அடைந்தவுடன், அங்கிருந்த ஒரு இந்திய மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். குண்டுவெடித்த சில நிமிடங்களில் அகமது ஷா மசூத் இறந்துவிட்டதாக அவரது காவலர்கள் தெரிவித்தனர்.
மசூத் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மறைக்கப்பட்ட செய்தி
இந்த கொலை சம்பவம் சில நாட்களுக்கு வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.
தலிபான்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு வடக்கு முன்னணிக்கு எதிராக ஒரு புதிய இராணுவப் பிரச்சாரத்தைத் தொடங்கலாம் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.
9/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு மசூத் கொல்லப்பட்டார். ஆனால் அந்தச் சம்பவம் காரணமாக மசூத் படுகொலை செய்யப்பட்டது இந்த சம்பவம் போதுமான அளவுக்கு பேசப்பட்ட சம்பவமாக மாறவில்லை.
அல்கொய்தாவின் கொலையாளிகள் அஹ்மத் ஷா மசூத்தை பல வாரங்களாகக் கொல்லத் திட்டமிட்டிருந்ததால், அந்த இரு சம்பவங்களும் 48 மணிநேர இடைவெளியில் நடந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். மசூதின் கொலையின் பின்னணியில் அல்கொய்தா இருந்ததாக மசூத் கலிலி ஆழமாக நம்புகிறார்.
அவர் ஸ்காட்லாந்து யார்டுக்கு அளித்த அறிக்கையில், “ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா முழுவதும் ஒரு வகையான மதப் பிளவை உருவாக்க விரும்பினார். ஆனால், அகமது ஷா மசூத்தை அழிக்காமல் இதற்கு சாத்தியமில்லை என்பதால் தான் அந்தக் கொலை நடந்தது,” எனத்தெரிவித்துள்ளார்.
“நியூயார்க்கில் என்ன செய்யவேண்டும் என்பதை ஒசாமா பின் லேடன் நன்றாக அறிந்திருந்தார். அந்த சம்பவத்துக்குப் பின், அவருக்கு பாதுகாப்பு தேவை என்றும் அவர் அறிந்திருந்தார். கமாண்டர் மசூத் படுகொலை ஒரு வகையில் தலிபான் தலைவர் முல்லா ஓமருக்கு ஒரு பரிசாக இருந்தது,
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்