
பட மூலாதாரம், Mansoor Ali Khan/Instagram
திரிஷா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட சக நடிகைகள் குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது ’அநாகரிகமான’ முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
சக நடிகைகளுடன் பாலியல் வன்புணர்வு காட்சிகள் குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தன்னை குறித்து மன்சூர் அலி கான் பேசியிருப்பது ‘இழிவானது’ மற்றும் ‘அருவருப்பானது’ என, எக்ஸ் தளத்தில் திரிஷா பதிவிட்டுள்ளார். ”ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வந்த மோசமான ரசனை கொண்ட பேச்சு” என தெரிவித்துள்ள அவர், ”அத்தகைய நபருடன் நடிக்காததே நல்லது” என தெரிவித்துள்ளார். என்னுடைய சினிமா வாழ்க்கையில் அவருடன் நடிக்க மாட்டேன் என்பதில் தான் உறுதியாக இருப்பேன் என தெரிவித்துள்ள திரிஷா, “மன்சூர் அலி கான் போன்றவர்கள் மனிதத்திற்கு இழிவான பெயரை பெற்றுத் தருவதாக” கூறியுள்ளார்.
மன்சூர் அலி கானின் பேச்சுக்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Mansoor Ali Khan / Instagram
விளக்கத்திலும் சர்ச்சை
தன்னுடைய பேச்சுக்கு எதிர்வினைகள் வந்ததையடுத்து மன்சூர் அலி கான் அளித்துள்ள விளக்கமும் ‘மிக மோசமானதாக’ இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அளித்துள்ள விளக்கத்தில், தன்னுடைய திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாலும், பிரபல கட்சி சார்பாக தான் போட்டியிட உள்ளதாலும் தான் திரிஷா குறித்த தனது பேச்சு பெரிதாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் அந்த பேட்டியில் திரிஷா குறித்து நல்ல முறையில் பேசியுள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வு புகார்
நடிகைகள் குறித்து மட்டுமல்லாமல் சினிமா, அரசியல் என எந்த துறையாக இருந்தாலும் அதுகுறித்து ‘வெளிப்படையாக’ பேசுபவராக மன்சூர் அலி கான் அறியப்படுகிறார். மக்கள் பிரச்னைகளுக்காக சாலையில் தனியாக அமர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது, கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை கூறுதல் என தன்னுடைய செயல்களுக்காக விமர்சனங்களுக்கு மத்தியில் வெளிச்சம் பெற்றவராக மன்சூர் அலி கான் உள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு வழக்குகளுக்காக சிறை தண்டனை பெற்றுள்ளார் மன்சூர் அலி கான். குறிப்பாக, தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக, பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் மன்சூர் அலி கான். ஆனால், 2012-ம் ஆண்டு புகார் அளித்த பெண் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக அப்பெண் மன்சூர் அலி கானுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மற்றவர்கள் மீதான அவதூறு பேச்சுகளுக்காகவும் மன்சூர் அலி கான் சிறை சென்றுள்ளார்.
இவற்றுக்கு மத்தியில், திரிஷா எதிர்வினை ஆற்றியதைத் தொடர்ந்து மன்சூர் அலி கானின் பேச்சு பொதுவெளியில் கவனம் பெற்றிருக்கிறது.
மன்சூர் அலி கான் தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்கம், அதுவரை அவரை ஏன் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கக்கூடாது என கருதுவதாக கூறி அறிக்கை வெளியிட்டிருந்தது.

பட மூலாதாரம், Khushboo Sundar / Instagram
‘தரம் தாழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு’
மன்சூர் அலி கானின் பேச்சு குறித்து பிபிசியிடம் பேசிய குஷ்பூ, “அவருடைய தரம் தாழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடே இந்த பேச்சு. பொதுவெளியில் பெண்களை மதிக்கத் தெரியவில்லை என்றால், வீட்டிலுள்ள பெண்களை எப்படி மதிப்பார்கள். இம்மாதிரியான பேச்சுகளை முன்பு இருந்த நடிகைகள் கண்டிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால், இப்போதைய நடிகைகள் தைரியமாக அதனை வெளியில் கண்டிக்கின்றனர். இது ஆரோக்கியமானது. மக்களின் பார்வை மாறுகிறது. அதற்கேற்ப சினிமாவின் போக்கும் மாறியுள்ளது. அதனை புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

பட மூலாதாரம், Deepa Janakiraman / Facebook
எழுத்தாளர் ஜா. தீபா
”தான் பேசியது தவறு என்றே புரியவில்லை”
பெண் இயக்குநர்கள், நடிகைகள் குறித்து தொடர்ச்சியாக ஆவணப்படுத்திவரும் எழுத்தாளரும் சின்னத்திரை தொடர்களுக்கு திரைக்கதை எழுதுபவருமான ஜா. தீபா பிபிசியிடம் கூறுகையில், “தான் பேசுவது தவறு என தெரியாத அளவில்தான் மன்சூர் அலி கான் இருக்கிறார். அப்படித்தான் அவர் சினிமா துறையை பார்க்கிறார். ஒரு நடிகையை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அதில் தவறில்லை என அவர் நினைக்கிறார்.
ஒரு பெரிய நடிகரை அடிப்பது போன்று எனக்கு காட்சி இல்லை என அவர் சொல்லிவிட முடியுமா? கதாநாயகிகளை பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற காட்சிகளே இப்போது வைப்பதில்லை. அந்தளவுக்கு தமிழ் சினிமா மாறியுள்ளது. அவர் இன்னும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்திலிருந்தே வெளியே வரவில்லை” என்றார்.
எதையுமே வெளிப்படையாக பேசுகிற, யாருக்குமே அஞ்சாத நபர் என்ற பிம்பம் மன்சூர் அலிகானுக்கு உள்ளதால், தான் என்ன பேசினாலும் சரிதான் என அவர் நினைக்கிறார் என ஜா. தீபா கூறுகிறார்.
“ஒரு நடிகரின் நடிப்புத் திறமையைத் தாண்டி “அவர் கெத்து” எனக்கூறி அவரை துதிபாடுவதை நிறுத்த வேண்டும். இதுகுறித்து பொதுவெளியில் பேசியதோடு மட்டுமல்லாமல், நடிகர் சங்கத்தில் திரிஷா முறையிட வேண்டும்” என்றார் தீபா.

பட மூலாதாரம், Jeeva Sundari/Facebook
எழுத்தாளர் ஜீவசுந்தரி
’வளரும் நடிகைகள் குரல் எழுப்ப முடியுமா?’
மூத்த பத்திரிகையாளரும் தமிழ் சினிமாவில் நடிகைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதிவருபவருமான பா. ஜீவசுந்தரி கூறுகையில், “முன்பு தமிழ் சினிமாவில் பாலியல் வன்புணர்வு காட்சிகள் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான காட்சிகளில் கதாநாயகிகளின் ஆடைகள் கிழிந்திருக்கும்.
70களில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அறிமுகமான குறிப்பிட்ட நடிகை ஒருவர் பாலியல் வன்புணர்வு காட்சியில் நடித்து அறிமுகமானதாலேயே அவருக்கு ‘ரேப் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்புணர்வு காட்சிகளில் சேலைகள் கிழிந்து போய் உள்ளாடை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அவருக்கு பிரத்யேகமான உடைகளெல்லாம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. அந்தளவுக்கு பிரயத்தனப்பட்டு அந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்போது பாலியல் வன்புணர்வு காட்சிகளை வெளிப்படையாக அப்படி காண்பிப்பதில்லை. குறியீடுகளின் மூலமாகவே உணர்த்தப்படுகிறது. அப்படியிருக்கையில் மன்சூர் அலிகான் சொல்லியிருப்பது வக்கிரமானது” என தெரிவித்தார்.
எல்லா காலகட்டங்களிலும் நடிகைகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால், இப்போதைய காலகட்டத்தில் தான் நடிகைகள் அவை குறித்து குரல் எழுப்ப தொடங்கியிருப்பதாகவும் கூறுகிறார் ஜீவசுந்தரி.
நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் கதையில் இயக்குநர்கள் சொல்லாததையும் செய்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜீவசுந்தரி கூறுகிறார்.
இப்போது போன்று அல்லாமல், 60களில் தொடங்கி 2000களுக்கு முன்பு வரையே பெரும்பாலான நடிகைகளுக்கு நடிப்பு என்பது கனவு, லட்சியம் என்பதைத் தாண்டி அதுவொரு தொழிலாக இருந்திருக்கிறது. அது அவர்களின் வாழ்வாதாரம். இதனாலும் சக நடிகர்களின் பாலியல் சீண்டல்கள், பாலியல் ரீதியிலான பேச்சுகளை நடிகைகள் பொதுவெளியில் சொல்லாமல் இருந்திருப்பதாக ஜீவசுந்தரி தெரிவிக்கிறார்.
இப்போது அந்த நிலை மாறியிருப்பதால் பொதுவெளியில் நடிகைகள் பேசுவதாக அவர் கூறுகிறார். வில்லன் நடிகராக அறியப்படும் மன்சூர் அலி கான் போன்றல்லாமல் பெரிய நடிகர்கள் குறித்த இத்தகைய சர்ச்சைகளை நடிகைகள் பொதுவெளியில் பேசுவார்களா என்பது இன்றும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
“அதேமாதிரி, திரிஷா எழுப்பியது போன்று வளர்ந்துவரும் நடிகை ஒருவர், ‘தன்னால் இனி இவருடன் நடிக்க முடியாது’ என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது” என்கிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்