
பட மூலாதாரம், GETTY IMAGES
2019-ல் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்போவதில்லை என இந்தியாவின் சில மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. குடியுரிமை மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், அது சாத்தியமா?
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமையன்று வெளியிட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம், அஃப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, பௌத்தம், பார்சி, கிறிஸ்தவர், சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 2014ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால், அவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த தேதியை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த விண்ணப்பத்தைச் செய்யலாம்.
பிரிவு 1 A, பிரிவு 1 B என இரண்டு பிரிவுகளில் இதற்கான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1 A-வைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழங்கிய பிறப்புச் சான்றிதழ், வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம், அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், கல்விச் சான்றிதழ்கள் போன்றவை ஆவணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 1 B-ஐப் பொறுத்தவரை, இந்திய அரசு வழங்கிய விசா, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பொது விநியோக அட்டை, PAN அட்டை, திருமணச் சான்றிதழ் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே 2014க்கு முன் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதற்கென உள்ள என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
‘தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது’

பட மூலாதாரம், MK STALIN / FACEBOOK
இந்தச் சட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவை எதிர்கின்றன.
முன்னதாக இந்தச் சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.கவும் இப்போது இதனை எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
இன்னும் சில வாரங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருமென சில வாரங்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர் ஷாந்தனு தாக்கூர் தெரிவித்தபோது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, அந்தச் சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார்.

பட மூலாதாரம், @mkstalin/X
பினராயி விஜயன் எதிர்ப்பு
அதேபோல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மேற்கு வங்கத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது எனக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகள் திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
“இஸ்லாமியச் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் செயல்படுத்த மாட்டோம் என இடது ஜனநாயக முன்னணி அரசு பல முறை தெரிவித்திருக்கிறது. அந்த நிலையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத, பிரிவினைவாத சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒற்றுமையுடன் செயல்படும்,” என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார் பினராயி விஜயன்.

பட மூலாதாரம், Getty Images
பினராயி விஜயன்
மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?
ஆனால், குடியுரிமை வழங்குவது என்பது மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வரும் நிலையில், மாநில அரசு ஒன்று குடியுரிமை தொடர்பான சட்டங்களை அமல்படுத்த முடியாது என அறிவிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது பிரிவு எந்தெந்த விவகாரங்கள் மத்தியப் பட்டியலிலும் மாநிலப் பட்டியலிலும் பொதுப் பட்டியலிலும் வருகின்றன என்பதை வரையறுக்கின்றது.
இதில் மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 விவகாரங்கள் இருக்கின்றன. இதில் 17வது அம்சமாக குடியுரிமையைக் குறிப்பிடும் ‘Citizenship, naturalisation and aliens’ என்ற விவகாரம் வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து சட்டமியற்றும் உரிமை முழுக்க முழுக்க நாடாளுமன்றத்திற்கே உரியது. மத்தியத் தொகுப்பில் உள்ள இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை மாநிலங்கள் மீற முடியாது.

பட மூலாதாரம், GETTY IMAGES
கபில் சிபல்
மாநில அரசு தடுக்க முடியுமா?
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாட்டின் குறிப்பிடத்தகுந்த வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல், 2020ஆம் ஆண்டில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கேரள மாநிலத்தில் நடந்த கேரள இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்ட அவர், “சிஏஏ நிறைவேற்றப்பட்டுவிட்டால், நான் அதைச் செயல்படுத்த மாட்டேன் என எந்த மாநிலமும் சொல்ல முடியாது. நீங்கள் எதிர்க்கலாம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரலாம், அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும்படி மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அதைச் செயல்படுத்த மாட்டேன் எனச் சொல்வது அரசியல்சாசன ரீதியாக சிக்கலானது,” என்று தெரிவித்தார்.
மேலும், குடியுரிமை கோருபவர்கள் இதற்கென மத்திய அரசு வடிவமைத்துள்ள இணையதளத்தில் முன்பே பெற்ற ஆவணங்களோடு நேரடியாக விண்ணப்பிப்பார்கள் என்பதால், இதனை மாநில அரசு எப்படித் தடுக்க முடியும் அல்லது செயல்படுத்தாமல் இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
‘இது அரசியல் ரீதியான எதிர்ப்பு’

பட மூலாதாரம், GETTY IMAGES
கோப்புப்படம்
இதனை ஒரு வகையான அரசியல் எதிர்ப்பு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.
“இது ஒரு அரசியல் ரீதியான எதிர்ப்பு, அவ்வளவுதான். இந்தியாவில் குடியுரிமை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. இது தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்றும். இந்திய குடியுரிமை தொடர்பான சட்டம் 1955இல் இயற்றப்பட்டுவிட்டது. அதில்தான் இப்போது திருத்தம் செய்யப்படுகிறது. இதில் மாநிலங்கள் ஏதும் செய்ய முடியாது என்றாலும், இப்படிச் சொல்வது ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமானதுதான். இது ஒருவகையான எதிர்ப்புதான்.
“மத்திய அரசின் அலுவல் மொழி விவகாரம்கூட இப்படித்தான். மத்திய அரசு இந்தியை தன் அலுவலில் முழுமையாகப் பயன்படுத்தலாம் என்றாலும் மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பின் மூலம் அதனைத் தடுத்து வைத்திருக்கின்றன. அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்,” என்கிறார் ஹரி பரந்தாமன்.
‘இதை முழுமையாகச் செயல்படுத்த முடியாது’

பட மூலாதாரம், GETTY IMAGES
கோப்புப்படம்
குடியுரிமை என்பதும் குடியுரிமை வழங்காமல் இருப்பதும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது என்றாலும் மாநில அரசின் உதவியில்லாமல் எதையும் செய்ய முடியாது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டன்டீன்.
“சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதான். குடிமக்கள் பதிவேட்டை மாநில அரசின் உதவியின்றி உருவாக்கிவிட முடியுமா? உதாரணமாக, இந்த சிஏஏ சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை பெற முடியாது. அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என சொன்னால், அதை மாநில அரசுதானே செய்ய வேண்டும்? அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம்,” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
ஆனால், இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு அரசியலுக்காகத்தான் உருவாக்குகிறது என்கிறார் அவர்.
“இது பா.ஜ.கவின் மற்றும் ஒரு ஜும்லா. வட இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் வலுவாக உள்ள பகுதிகளில் தாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் காட்டி, மத பிரிவினையைச் செய்ய முயல்கிறார்கள். இதையெல்லாம் அவர்களால் முழுமையாகச் செயல்படுத்த முடியாது,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், GETTY IMAGES
கோப்புப்படம்
‘இதற்கான தேவை என்ன?’
இதனை சட்ட ரீதியாகப் பார்ப்பதைவிட, இதற்கான தேவை என்னவெனப் பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.எம். விஜயன்.
“1947- 48-இல் இந்தியாவுக்கு வந்தவர்கள், 50களில் இந்தியாவில் வசித்தவர்கள் இந்தியக் குடிமக்கள் என ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. இப்போது புதிதாக இதைச் செய்வதற்கான நோக்கம், இஸ்லாமியர்களை ஒதுக்குவதாகக் காட்டுவதற்குத்தான். தேசிய குடிமக்கள் பதிவேட்டையெல்லாம் மாநில அரசுகளின் உதவியோடுதான் செய்ய வேண்டும். அதெல்லாம் எப்படி நடக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்கிறார் விஜயன்.
ஆனால், இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டவை அல்ல என்பதால், அசாம் போன்ற மாநிலங்களில் உள்ள எதிர்ப்பை வேறு மாதிரி பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்