
பட மூலாதாரம், @X/AP International
கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியான உறியடி திரைப்படம், அது எடுத்துக்கொண்ட கதைக்காகவும் திரைக்கதை வடிவமைப்பிற்காகவும் படமாக்கப்பட்ட விதத்திற்காகவும் பெரிதும் பேசப்பட்டது.
மிகக் குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. 2019இல் அதன் இரண்டாம் பாகம் வெளிவந்தபோது, அந்தப் படமும் குறிப்பிடத்தக்க அளவில் கவனிக்கப்பட்டது.
இந்தப் படங்களை இயக்கி, நடித்த விஜயகுமார் நடிக்கும் அடுத்த படம் என்பதாலும், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் வெளிவந்த படம் என்பதாலும் ‘ஃபைட் கிளப்’ (Fight Club) திரைப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
கடந்த 1999ஆம் ஆண்டில் டேவிட் ஃபின்சரின் இயக்கத்தில் வெளியான பிரபல திரைப்படமான ‘Fight Club’ படத்தின் டைட்டிலையும் பயன்படுத்தியிருந்ததால், இந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.
டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்குத் தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்த விமர்சனங்கள், படம் குறித்து என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, படத்தின் கதையைப் பார்க்கலாம்.
ஃபைட் கிளப் படத்தின் கதை என்ன?

பட மூலாதாரம், @X/AP International
வட சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). தனது பகுதியில் வசிக்கும் சிறுவர்களை நல்ல விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும் என்பது அவர் ஆசை. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.
ஆனால், அவருடைய தம்பியான ஜோசப் (அவினாஷ்), கிருபா (ஷங்கர் தாஸ்) என்பவருடன் சேர்ந்து போதைப் பொருள்களை விற்று வருகிறார். இதைத் தட்டிக் கேட்கும் பெஞ்சமினை ஜோசப்பும், கிருபாவும் சேர்ந்து கொன்றுவிடுகின்றனர்.
இதற்குப் பிறகு கிருபா பெரிய அரசியல்வாதியாகி விடுகிறார். தன்னை ஏமாற்றிய கிருபாவை கொல்ல முடிவெடுக்கிறார் ஜோசப். ஆனால், நேரடியாகத் தானே அதைச் செய்யாமல், கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவோடு வலம் வரும் செல்வத்தைத் (விஜய்குமார்) தூண்டிவிட்டு, தன் லட்சியத்தை நிறைவேற்ற நினைக்கிறார். கடைசியில் என்ன ஆனது என்பதே மீதிக் கதை.
படம் பழிவாங்கும் கதையாகச் சுருங்கிவிட்டதா?
ஒரு கேங்க்ஸ்டர் கதையை எடுக்க நினைத்த இயக்குநர் அதை, அடிதடி மற்றும் பழிவாங்கும் கதையாகச் சுருக்கியிருப்பதாக விமர்சிக்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
“படத்தின் தொடக்கம் ஒரு ராவான கேங்ஸ்டர் கதைக்களத்தை உறுதி செய்கிறது. ஆனால், கேங்க்ஸ்டர் கதை என்பது வெறுமனே அடிதடி, பழிவாங்கல் எனச் சுருங்குவது சுவாரஸ்யத்தை கூட்டவில்லை.
முதல் பாதி முழுவதும் கதை எதை நோக்கிப் பயணிக்கிறது, அதற்கான நோக்கம் என்ன என்பதில் தெளிவில்லை. இதற்கு நடுவே வேண்டுமென்றே திணித்த கண்டதும் காதல் வகையறா காட்சியும், அதற்கான ஒரு காதல் பாடலும் தேவையில்லாத தயாரிப்பு செலவு. அதன் பிறகு அந்த கதாநாயகியை மருந்துக்குக்கூட படத்தில் பார்க்க முடியவில்லை.
இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத்தின் இன்டர்வல் ப்ளாக் இரண்டாம் பாதியின் மீது நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இரண்டாம் பாதி முழுக்க சண்டை… சண்டை… சண்டை.. மீண்டும் சண்டை…
இடையில் கொஞ்சம் ஓய்வு அடுத்து மீண்டும்…
‘ஃபைட் கிளப்’ என்ற பெயருக்கு நியாயம் சேர்க்க இத்தனை சண்டையா?” என்று விமர்சித்துள்ளது.
கதையின் வில்லன் எப்படி?

பட மூலாதாரம், @X/AP International
மேலும், “ஒரு கட்டத்தில் உரிய காரணமில்லாத சண்டைக் காட்சிகள் அலுப்பு தட்டுகின்றன. கிருபாகரன் கதாபாத்திரம் வில்லன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவரின் வில்லத்தனம் எங்கும் வெளிப்படவில்லை.
ஜோசப் கதாபாத்திரத்தை வில்லனாக எடுத்துக்கொண்டாலும் அதற்கான காட்சிகள் அவர் மீது கோபத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக தன் அண்ணனை கொன்றவரை பழிவாங்கும் நியாயத்தை வெளிப்படுத்துகிறது.
இறுதியில் மட்டும் அவரை வில்லனாக சித்தரிக்கும் முயற்சி கைகொடுக்கிறது. ஓரிடத்தில் விஜய்குமாரின் தரப்புக்கு இழப்பு ஏற்படுகிறது. அது நமக்கு எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லை. இழப்புக்கள் பாதிப்பை ஏற்படுத்தாததால் சண்டைகளை தேமேவென பார்க்க வேண்டியிருக்கிறது,” என்கிறது இந்து தமிழ் திசை.
இரண்டாம் பாதி கதையை தேங்கச் செய்கிறதா?
முதல்பாதி விறுவிறுப்பான திரைக்கதையாலும், அதன் உருவாக்கத்தாலும் நம்மை திரையரங்கில் அமரச் செய்கின்றன. ஆனால் இரண்டாம் பாதி யூகிக்கக் கூடிய காட்சிகளால் நம்மை தேங்கச் செய்கிறது என்கிறது தினமணியின் விமர்சனம்.
“இளைஞர்களின் வாழ்வில் போதைப் பொருளும் அதன் அரசியலும் நுழைந்தால் என்ன ஆகும் எனக் காட்டியுள்ளது ஃபைட் கிளப். உறியடி திரைப்படத்தின் மூலம் சாதிய அரசியலுக்கு எதிராகப் பேசி கவனம் ஈர்த்த விஜய்குமார் அதே பாணியிலான கல்லூரி கால சண்டைகள் மூலம் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
நாம் அவ்வப்போது செய்திகளில் காணும் பேருந்து பயண சண்டைகள், பஸ் டே சண்டைகள் போன்றவற்றின் மற்றுமொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
‘அடிதடி’ கதை என்பதால் படத்தில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகம். அதேநேரம் அதிகம் பரிச்சயப்படாத முகங்கள். ஆனால் அதற்கெல்லாம் சளைக்காமல் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறது துணைநடிகர்கள் பட்டாளம்,” என்று தினமணி தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
நாயகியின் கதாபாத்திரம் எதற்கு?

பட மூலாதாரம், @X/AP International
கார்த்தியாக வரும் சரவணவேல், பழிவாங்கும் வில்லனாக வரும் ஜோசப் எனும் அவினாஷ் ரகுதேவன், அரசியல்வாதியாக மாறும் கஞ்சா வியாபாரி சங்கர்தாஸ் என பலரும் படம் முழுக்க நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர் என்றும் தினமணி பாராட்டியுள்ளது.
“விரோதம் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் அவினாஷ். அரசியல்வாதி கிருபாவை கொல்ல அவர் போடும் திட்டங்கள் அவரின் வில்லத்தனத்தை மெருகேற்றுகின்றன. முதல் பாதியில் மட்டும் வரும் நடிகை மோனிஷா மோகன் படத்திற்கு எதற்கு என்ற கேள்வி எழுந்தாலும் ஆடுகளம் திரைப்பட பாணியில் வந்த காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது தினமணி.
அதையே தி ஹிந்து ஆங்கில நாளிதழும் கூறியுள்ளது. “கதாநாயகியின் பாத்திரம் கதையில் எந்தப் பங்கையும் செலுத்தவில்லை. மேலும், அவர் வட சென்னையில் இருப்பதைப் போல காட்டப்பட்டாலும், காட்சிகள் கேரளாவைப் போல இருக்கின்றன,” என்று தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.
ஃபைட் கிளப் படத்தைப் பொறுத்தவரை, தொழில்நுட்பத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதைக்குக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.
வடசென்னையை வன்முறையுடன் காட்டும் படங்கள் பட்டியலில் ‘ஃபைட் கிளப்’ சேர்ந்துவிட்டதா?
“கடந்த சில ஆண்டுகளாகவே, வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்கள், ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் படங்கள் பெரும்பாலும் துரோகம், பழிவாங்குதல், போதைப் பொருள் கடத்துவது, கொடூரமாகக் கொலை செய்வது ஆகியவை பற்றியே இருக்கின்றன. அந்த நீளமான பட்டியலில் இணைந்திருக்கிறது ‘ஃபைட் கிளப்’.
இயக்குநர் அப்பாஸ் ஆர். ஹர்மத் ஒரு வலுவான முதல் பாதியை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாதியில் வரும் குரூர நகைச்சுவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது; சிரிக்கவும் வைக்கிறது.
ஆனால், கதையில் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் இரண்டாம் பாதியில் கதை எங்கெங்கோ அலைகிறது. படத்தில் உள்ள பல சண்டைக் காட்சிகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ‘ஃபைட் கிளப்’ தொழில்நுட்ப ரீதியாக மிக வலுவாக இருக்கிறது,” என்று இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.
தி ஹிந்து ஆங்கில நாளிதழும் இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறியிருக்கிறது.
“இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம், அதனுடைய தொழில்நுட்ப சிறப்புதான். அடுத்ததாக, பாராட்டத்தக்கது கதாபாத்திரங்களின் நடிப்பு. கோபக்கார இளைஞன் பாத்திரத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் விஜயகுமார். ஆக்ஷன் காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்,” என்று தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், @X/AP International
ஆனால், “அவருடைய பாத்திரத்திற்கு உணர்வுபூர்வமான காட்சிகள் எதுவும் அமையவில்லை. அதனால், அவருக்குப் பின்னடைவு ஏற்படும்போது அது நம்மிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதேநேரம், துணை பாத்திரங்களாக வரும் அவினாஷ் ரகுதேவன், சங்கர் தாஸ், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெறுகிறார்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, பெரிய கனவுகளுடன் இருப்பவர்களின் வாழ்க்கையில் உள்ள போராட்டத்தைச் சொல்ல நினைக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் ஒரு வடசென்னை திரைப்படமாக முடிகிறது,” என்கிறது தி ஹிந்து.
தொழில்நுட்ப ரீதியாக பலம்
இருப்பினும், இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறது இந்து தமிழ் திசை.
“திரையரங்கின் இருட்டறையில் புரொஜக்டர் ஓடிக்கொண்டிருக்க, அதை இடைமறித்துச் செல்லும் இடம், ஆங்காங்கே வரும் ஷில்அவுட் ஷாட்ஸ், ‘தளபதி’ படம் ஓடும் திரையரங்கில் வரும் சண்டைக்காட்சி, க்ளைமாக்ஸ் பேனிங் ஷாட்ஸ், ஆட்டோவிலிருந்து 4 பேர் இறங்கும்போது வைக்கப்படும் டாப் ஆங்கிள் ஷாட், அடித்துப் பிடித்து ஓடிக்கொண்டிருக்க அதே வேகத்தில் நகரும் கேமரா, தெருவிளக்கு ஒளியில் நடக்கும் சண்டைக்காட்சி என ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் லியோன் பிரிட்டோ.
இவர்கள் இருவருடன் சேர்ந்து, படத்தைத் தரமாக வடிவமைத்ததில் எடிட்டர் கிருபாகரனின் பங்கு அளப்பரியது.
முன்னுக்குப் பின்னான காட்சிகளை நான்லீனியரில் நேர்த்தியாகக் கோர்த்தது, ஆங்காங்கே வரும் ஷார்ப் கட்ஸ், இரண்டு பேர் கொல்லப்படும் இறுதிக் காட்சியை நேரத்தைக் கடத்தாமல் பாரலல் எடிட்டிங் மூலம் ஒன்றாக்கியது என படத்துக்கு மற்றொரு தூண் கிருபாகரன்.
கோவிந்த் வசந்தா – லியோன் பிரிட்டோ – கிருபாகரன் சேர்ந்து படத்தின் தரத்தை மெருகேற்றியிருக்கிறார்கள்,” என்கிறது இந்து தமிழ் திசை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்