
பட மூலாதாரம், GETTY IMAGES
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர்.
இந்தத் தரவரிசையின் மூலம், பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார்.
ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வீரர் கபில்தேவ் கிட்டத்தட்ட முதலிடத்தை நெருங்கினார். ஆனால், அவரால் முதலிடத்தைப் பெற முடியவில்லை. 1979-80 ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் கபில் தேவ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் செய்ய முடியாத சாதனையை தற்போது பும்ரா செய்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இரண்டு இன்னிங்ஸ்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சமீபத்திய தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி, 881 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். ஐசிசி தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை.
இந்த வரிசையில், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை (841 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளினார் பும்ரா. அஸ்வின் மார்ச் 2023இல் இருந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இதற்கு முன், தரவரிசைப் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடத்தைப் பிடித்ததே அவரின் முந்தைய சாதனைகளில் சிறந்தது.
சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பாராட்டு

பட மூலாதாரம், GETTY IMAGES
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்து – இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்திலும், இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் நடைபெற்றது. விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் பும்ரா ‘ஆட்ட நாயகன்` விருதை வென்றார்.
இந்தப் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சிறப்புப் பிரிவு பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாத்தியமான, அற்புதமான இன்ஸ்விங் யார்க்கர் மூலம் பும்ரா, ஆலி போப்பின் மிடில் மற்றும் லெக் ஸ்டம்புகளை வீசிய விதத்தைப் பாராட்டினார். தான் பார்த்த சிறந்த யார்க்கர்களில் இதுவும் ஒன்று என்றார்.
இந்தியாவிலிருந்து நான்காவது பந்து வீச்சாளர்
விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 45 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரே இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது இது பத்தாவது முறையாகும்.
பும்ரா 34 டெஸ்ட் போட்டிகளில், பத்து முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா. ஐதராபாத் டெஸ்ட் போட்டியிலும் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் இதுவரை இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பும்ரா. அவர் 10.67 என்ற சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இதுவரை நான்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மட்டுமே முதலிடத்தைப் பிடித்துள்ளனர். நான்காவது பந்து வீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. பும்ராவுக்கு முன், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன் சிங் பேடி ஆகியோர் பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்தனர்.
வித்தியாசமான பந்துவீச்சும் காயங்களும்

பட மூலாதாரம், GETTY IMAGES
பும்ராவின் பந்துவீச்சு வித்தியாசமானது. இந்தத் தனித்துவமான பந்துவீச்சு நடவடிக்கையின் காரணமாக, பும்ரா குறைந்த ரன்-அப்பில் அதிக வேகத்தை அடைய முடிந்தது. ஆனால், இதிலுள்ள பிரச்னை என்னவென்றால், இத்தகைய அதிவேக பந்துவீச்சு முதுகுத்தண்டில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பும்ரா தனது சர்வதேச போட்டிகளை தொடங்கியதில் இருந்து இந்த பந்துவீச்சு நடவடிக்கையால் நீண்ட நேரம் பந்து வீச முடியாது என்று ஆய்வாளர்கள் கருதினர்.
வயது மற்றும் உடற்தகுதி காரணமாக, முதல் ஐந்து ஆண்டுகளில் பும்ரா எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக அவருக்குக் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவருக்குப் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டில், இடதுகை கட்டைவிரல் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லை. ஆனால், அவர் காயத்தில் இருந்து மீண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கடந்த 2019ஆம் ஆண்டில், பும்ரா கீழ் முதுகு அழுத்த எலும்பு முறிவு பிரச்னையால் அவதிப்பட்டார். வழக்கமான கதிரியக்க பரிசோதனையின்போது இந்தச் சிக்கல் கண்டறியப்பட்டது. இதனால் அவர் நான்கு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார்.
பிரிட்டனில் சிகிச்சை பெற்று வந்த அவர், இந்தியா-நியூசிலாந்து தொடருக்காக இந்திய அணிக்குத் திரும்பினார்.
முதுகு வலியிலிருந்து மீண்ட பும்ரா

பட மூலாதாரம், GETTY IMAGES
பும்ரா 2022இல், கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை. இந்தப் பிரச்னையில் இருந்து மீள குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், இதிலிருந்து மீள கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆனது.
இதனால், 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் பும்ரா தவறவிட்டார்.
மார்ச் 2023இல் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் கழித்த பிறகு, ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு எதிரான T20I தொடருக்கான இந்திய கேப்டனாக பும்ரா அணிக்குத் திரும்பினார். அதன்பிறகு அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
அக்டோபர் 5 முதல் நவம்பர் 19, 2023 வரை இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பும்ரா 11 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அந்தப் போட்டியில் பும்ராவின் ஆட்டத்தைப் பற்றிப் பேசிய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “அவர் ஒரு தலைமுறைக்கானவர்” என்று அவரை பாராட்டினார்.
பும்ரா அனைத்து வடிவங்களிலும் விளையாடும் திறன் மற்றும் போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவர் என டிராவிட் பாராட்டினார். அவர்தான் போட்டியின் வெற்றியாளர் என்று கூறினார்.
பும்ரா மீண்டும் களமிறங்கிய பிறகு சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் களமிறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறுவதைவிட தற்போது நிம்மதியாக இருக்கிறது என பும்ரா கூறினார். இதிலிருந்து குணமடைவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுத்ததாகக் கூறினார்.
அதன் பிறகு பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தொடங்கி சமீபத்தில் நடைபெற்ற விசாகப்பட்டினம் டெஸ்ட் வரை விளையாடிய ஏழு போட்டிகளில் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
‘முழு பலத்தையும் பயன்படுத்துவேன்’

பட மூலாதாரம், GETTY IMAGES
விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு, தான் எண்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை என்றும் எண்களில் அக்கறை காட்டினால் மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
“இந்தியாவின் வெற்றிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என அவர் தெரிவித்தார்.
“விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு யார்க்கர் மட்டுமே ஒரே வழி என்று நான் நினைத்தேன். அதனால்தான் ஆலி போப்பிற்கு யார்க்கர் வீசினேன்” என்றும் அவர் கூறினார்.
“வேகப்பந்து வீச்சுக்கு நான் தலைவர் அல்ல. ஆனால், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவது எனது பொறுப்பு” என்றார்.
“ஒவ்வொரு விக்கெட்டும் வித்தியாசமானது. விக்கெட்டை எடுக்க எனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும்” என்று பும்ரா கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்