பவர் ப்ளேவில் சரவெடியாக வெடித்த ஜெய்ஸ்வால்
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் பெஹரன்டார்ப்புக்குப் பதிலாக ஆடம் ஸம்பாவும், ஹார்டிக்குப் பதிலாக மேக்ஸ்வெலும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியத் தரப்பில் எந்த மாற்றமும் இல்லை.
கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டாய்னிஸ், நாதன் எல்லிஸ் வீசிய முதல் இரு ஓவர்களில் பெரிதாக ரன்கள் ஏதும் இந்திய பேட்டர்கள் சேர்க்கவில்லை. 3-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். இந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியும் என15 ரன்கள் சேர்த்தனர்.
கெயில் அபாட் வீசிய 4-வது ஓவரை ஜெய்ஸ்வால் உரித்து எடுத்துவிட்டார். ஹாட்ரிக் பவுண்டரிகளை வெளுத்த ஜெய்ஸ்வால், 4வது பந்தில் ஒரு சிக்ஸரும், 5-வது பந்தில் ஒரு சிக்ஸரும் என விளாசி தள்ளி 24 ரன்கள் சேர்த்தார். ஆடம் ஸம்பா வீசிய 5-வது ஓவரில் ஜெய்ஸ்வால், கெய்க்வாட் இருவரும் தலா ஒரு பவுண்டரி என 10 ரன்கள் குவித்தனர்.
நாதன் எல்லீஸ் 6-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் அடிக்காத ஜெய்ஸ்வால், மீண்டும் ஒரு ஹாட்ரிக் பவுண்டரி விளாசி, 24 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அதைஓவரின் கடைசிப் பந்தில் ஜெய்ஸ்வால் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் ஸம்பா கேட்ச் பிடிக்கவே ஜெய்ஸ்வால் 53ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9பவுண்டரி, 2சிக்ஸர்கள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு கெய்க்வாட், ஜெய்ஸ்வால் கூட்டணி 77ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
பவர்ப்ளே முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் குவித்தது.
இஷான் கிஷன் அதிரடி
அடுத்து இஷான் கிஷன் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். இருவரும் சேரந்து நிதானமாக ஆடியதால் ரன்ரேட் வேகம் குறையத் தொடங்கியது, பவுண்டரி, சிக்ஸர்கள் பெரிதாக ஏதும் அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்தது.
மேக்ஸ்வெல் 14-வது ஓவரை வீசியபோது அவரை இஷான் கிஷன் குறிவைத்தார். மேக்ஸ்வெல் ஓவரில் 2-பந்தில்சிக்ஸர் விளாசிய இஷான், 3-வது பந்தில் பவுண்டரி விளாசினார். கெய்க்வாட் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் விளாசினார். மேக்ஸ்வெல் ஓவரில் மட்டும் 23 ரன்கள் சேர்த்தனர்.
தன்வீர் சங்கா வீசி 15-வது ஓவரில் இஷான் கிஷன் 2 சிக்ஸர் விளாசி 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன்பின் நீண்டநேரம் இஷான் கிஷன் நிலைக்கவில்லை.
ஸ்டாய்னிஷ் வீசிய 16-வது ஓவரில் எல்லிஸிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர், 3பவுண்டரிஅடங்கும். 2வது விக்கெட்டுக்கு கெய்க்வாட், இஷான் கிஷன் 87 ரன்கள் சேர்த்தனர்.
சூர்யகுமார் ஏமாற்றம்
அடுத்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஸடாய்னிஷ் வீசிய அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ப்ளிக் ஷாட்டில் லெக் சைடில் ஒரு சிக்ஸர் விளாசினார்.
ஆடம் ஸம்பா வீசிய 17-வது ஓவரில் சூர்யகுமார் ஸ்ட்ரைட் திசையில் சிக்ஸர் விளாசி அந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது.
18-வது ஓவரை எல்லீஸ் வீசினார், அரைசதத்தை நெருங்கிய கெய்க்வாட், ஒரு ரன் சேர்த்து 39-பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சூர்யகுமார் யாதவின் பலவீனமான ஸ்லோவர் பால் என்பதைத் தெரிந்து கொண்டு அவருக்கு தொடர்ந்து ஸ்லோ பவுன்ஸராக எல்லீஸ் வீசனார். இதனால் சூர்யகுமாரும் பெரிய ஷாட்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தார். ஆனால், 4-வது பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்க சூர்யகுமார் முயன்று, ஸ்டாய்னிஷிடம் கேட்சானது. சூர்யகுமார் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசிக் கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடி
இந்திய அணிக்கு கடைசிக் கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடி காட்டினார். அவர் தான் சந்தித்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டிற்கு அனுப்பி வைத்த வண்ணம் இருந்தார். 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார். கடைசிக் கட்டத்தில் 2 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா ஒரு சிக்ஸர் அடித்தார்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்