பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதன் விறுவிறுப்பான டாஸ்க்குகள் தான் மக்களை ஈர்த்து டிவியின் முன்னாள் அமர வைக்கும் ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விதவிதமான டாஸ்க்குகளை கொடுத்து அதில் வெற்றி பெறுபவர்கள் பாராட்டப்படுவார்கள். இதுவே நாள் தவறாமல் பிக்பாஸ் வீட்டினர் யாரையாவது ட்ரெண்டிங்கில் வைத்திருக்கும்.
அப்படி இந்த சீசனின் 51வது நாளில் “உங்கள் வாழ்க்கையின் பூகம்பம்” என்ற ஒரு டாஸ்க் பிக்பாஸ் வீட்டினருக்கு தரப்பட்டுள்ளது. அதில் அவர்களது வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு குறித்து இங்கு சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்படி ஒவ்வொருவராக தங்களது வாழ்வை உலுக்கிய சம்பவங்களை பகிர்ந்து கொள்ள நடிகர் விசித்ரா பகிர்ந்து கொண்ட தகவல் பிக்பாஸ் வீட்டை மட்டுமல்ல அதற்கு வெளியேயும் பெரும் பூகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளம் முழுவதும் அதுவே விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
விசித்ரா கூறியது என்ன?
இது குறித்து அவர் கூறுகையில், “2001ம் ஆண்டு ஒரு படத்தில் நடிப்பதற்காக மலம்புழா சென்றேன். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். அங்குதான் என்னுடைய வருங்கால கணவரையும் முதன்முதலில் பார்த்தேன். அங்கு நடந்த ஹோட்டலை 3 ஸ்டாராக உயர்த்தும் விழாவிற்கு மேலாளர் அழைத்ததன் பேரில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வுக்கு சென்ற போது அந்த படத்தின் நடிகர் என்னை முதல் முதலில் அப்போதுதான் பார்க்கிறார். என்னுடைய பேரை கூட கேட்காமல், இந்த படத்தில் நடிக்கிறீங்களா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னவுடன் என்னுடைய அறைக்கு வந்துருங்க என்று சொல்லி விட்டார்” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “அதை மறுத்து என்னுடைய அறைக்கு சென்று விட்டேன். அதற்கு அடுத்தநாள் தொடங்கி செட்டில் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. தினசரி அந்த நடிகரின் ஆட்கள் மது அருந்தி விட்டு வந்து என்னுடைய அறை கதவை தட்டி கொண்டே இருப்பார்கள்.
அப்போது அங்கு மேலாளராக இருந்த என்னுடைய கணவர்தான் எனக்கு உதவி செய்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையில் என்னை தங்க வைத்தார். இருப்பினும் அந்த நடிகரின் ஆட்கள் மது போதையில் நான் இல்லாத அறை கதவை தட்டி கொண்டே இருப்பார்கள்” என்று கூறினார்.
மேலும், இதனால் ஆத்திரமடைந்த நடிகர் மற்றும் அவரது ஆட்கள் இவரை பழிவாங்க மோசமான செயல் ஒன்றை செய்ததாகவும் பதிவு செய்துள்ளார். “ஒரு நாள் ஷூட்டிங்கில் கூட்டமாக நடிக்க வேண்டிய சூழலில் தொடர்ந்து ஒருவர் என்னுடைய உடலில் தொடக் கூடாத இடங்களில் தொடுவது போல் இருந்தது. முதலில் அது ஏதோ தவறுதலான விஷயமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றாவது முறையும் அது நடக்கும்போது யார் அதை செய்தார்கள் என்று கண்டுபிடித்து அவரை இழுத்து கொண்டு போய் ஸ்டண்ட் மாஸ்டரிடம் நிறுத்தினேன்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், அந்த ஸ்டண்ட் மாஸ்டரோ அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னையே பளார் என்று ஒரு அரை விட்டதாக அவர் பகிர்ந்துள்ளார். அப்போது அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் என ஒருவரும் இவருக்கு ஆதரவாக வரவில்லையாம்.
மேலும் பேசிய விசித்ரா, “அப்போதே அங்கிருந்து அழுதுகொண்டே வெளியேறி தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் தலைவருக்கு உடனே அழைத்து நடந்ததை சொன்னேன். அவர் நீங்க நடிக்க வேண்டாம். வந்துருங்க என்று சொல்லி விட்டார். பின் இங்கு வந்ததும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க சொன்னார் அதையும் கொடுத்தேன். ஆனால் செயலாளரோ இங்கெல்லாம் வர வேண்டியதில்லை காவல் நிலையம் போங்க என்று சொல்லி விட்டார். அப்போதும் வழக்கு போட்டு வாய்தா வாய்தாவாக நடந்து நான் ஓய்ந்தது மட்டுமே மிச்சம். எனக்கு எதுவும் நீதி கிடைக்கவில்லை. அதோடு இந்த துறையை விட்டு விலகி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
படப்பிடிப்பின் போது விசித்ராவுக்கு நேரிட்ட மோசமான அனுபவம் குறித்த அவரது பேச்சு பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே மட்டுமின்றி வீட்டிற்கு வெளியேயும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் வீட்டாரின் எதிர்வினை
இதை சிறிதும் எதிர்பார்க்காத பிக்பாஸ் வீட்டினர் பலரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இதற்கு பின்னால் வீட்டிற்குள் ஒரு சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. அதில் தற்போது கேப்டனாக இருக்கும் தினேஷ் “ விசித்ரா வாரவாரம் விவாதத்தை கிளப்புவதற்காகவே இப்படி ஏதாவது பேசுகிறாரோ என்று தோன்றுகிறது” என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்துள்ள ரசிகர்கள் பலரும் தினேஷை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இதர பிக்பாஸ் போட்டியாளர்களும் இருவரும் என்ன கருத்து சொல்லியுள்ளார்கள் என்பதை ஆராய்வதில் குழுகுழுவாக விவாதம் நடத்தி வருகின்றனர்.
பாலியல் அத்துமீறலை பொதுமைப்படுத்துகிறாரா தினேஷ்?
விசித்ரா தன்னுடைய மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிறகு அவரிடம் இதுகுறித்து உரையாடலில் ஈடுபட்ட தினேஷ் “நீங்கள் சொன்னது போல் 2 இயக்குநர்கள் செய்தால், 6 இயக்குநர்கள் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று வேலை பார்க்கலாமே, அவர்களை அங்கீகரிக்கலாமே” என்பது போன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக “நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அதே சமயத்தில் இதே துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள். எல்லா பெண்களுக்கும் இப்படி நடப்பதில்லை என்பதையும் நீங்கள் பேச வேண்டும்” என்பது போல பேசியிருக்கிறார்.
மேலும், “நியாயமாக தொடர்ந்து நின்று நீதிக்காக போராடுபவர்களுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது, நீங்கள் நிலைத்து போராடாமல் நடுவிலேயே விட்டு விட்டீர்கள்” என்று பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டும் தொனியில் பேசியுள்ளார் அவர்.
அதேபோல் “அந்த காலம் வேறு. அன்று இருந்தது போல் இப்போது அவ்வளவு தீவிரமான பிரச்னைகள் இல்லை. ஆண்கள் இதுபோல் கேட்கவே பயப்படுகிறார்கள். எனவே மாற்றம் நிகழ்ந்துள்ளது அதை ஒப்புக்கொள்ளுங்கள்” என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அவர் பேசியிருக்கிறார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த மாயாவும் இவர் ஏதோ நல்ல நோக்கத்தில் தான் கூறியுள்ளார் என்பது போன்று பூர்ணிமாவிடம் பேசி கொண்டிருக்கும் காட்சிகள் நிகழ்வில் பதிவாகியுள்ளது.
இதுவே, “தினேஷ் பாலியல் அத்துமீறலை பொதுமைப்படுத்துகிறார்” என்ற கருத்தோடு சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை தாக்க காரணமாக அமைந்துள்ளது.
விசித்ரா பாகுபாடாக நடந்து கொள்கிறாரா?
சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த வீடியோக்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக X(ட்விட்டர்) பயனர் ஒருவர், “இவ்வளவு மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதற்காக விசித்ராவுக்கு என்னுடைய அனுதாபங்கள். அதே சமயம் அதே வீட்டில் இருந்த பிரதீப்புடன் இருப்பது தங்களுக்கு அசௌகரியமாக இருக்கிறது என்பதை மாயா மற்றும் பூர்ணிமா சொன்ன போது அவர்களை கேள்வி எழுப்பியதும், குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியதும் பாசாங்குத்தனமானது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதே காரணத்திற்காக முன்பு விசித்ராவை விமர்சனம் செய்தவரும், சினிமா துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான சின்மயி தற்போது விசித்ராவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தனது பதிவில், “தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலை எப்போது வெளியே சொன்னாலும் ஒரு பெண்ணுக்கு எந்த நீதியும் கிடைக்க போவதில்லை. அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் குற்றவாளி பக்கமே நிற்கப் போகிறார்கள்.
அந்த குற்றவாளியோ சமூகத்தில் நன்கு சம்பாதித்து, உயரத்தை அடைந்து வாழ்க்கையில் ஒரு இடத்தில் அமர்ந்து விடுவார். எந்த சங்கம் இருந்தும் எந்த பயனும் இல்லை. இதில் இன்னும் மோசம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே அறிவுரை கூறுவது, மேலும் தாக்குவது, ஆதரவு கிடைக்காமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
ஒரு பெண் தனக்கு நடந்ததை வெளிப்படுத்தும் போது அதை கேள்வி கேட்கவோ அல்லது ஏன் இப்போது வந்து சொல்கிறாய் என்று கேட்கவோ யாருக்கு உரிமை இல்லை. அவர்கள் அப்படியே தங்கள் நாக்கை கடித்து முழுங்கி கொள்ளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பலர் சமூக வலைத்தளங்களில் பரவலாக விசித்ராவுக்கு ஆதரவான பதிவை பகிர்ந்து வரும் அதே சமயத்தில் சிலர் பிரதீப் விஷயத்தில் மாயா மற்றும் பூர்ணிமாவிடம் விசித்ரா நடந்து கொண்ட விதம் குறித்தும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்