சமூக தடைகளை மீறி தன்பால் ஈர்ப்பு காதலர்களான டிம்பிள் (27) மற்றும் மனிஷா (21) திருமணம் செய்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால், அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்தத் திருமணத்தைச் செய்துள்ளனர்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய சமூகத்தில், பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்தத் திருமணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
டிம்பிள், மான்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர். மனிஷா, பதின்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இருவரும் செப்டம்பர் 18ஆம் தேதியன்று பதின்டா நகரிலுள்ள ஒரு குருத்வாராவில் சீக்கிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் இருவரும் மதம், சாதி போன்ற சமூகத் தடைகளையும் உடைத்து இந்தத் திருமணத்தைச் செய்துள்ளார்கள்.
டிம்பிளின் கூற்றுப்படி, அவர் ஒரு உயர்சாதி ஜாட் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். மனிஷா ஒரு தலித் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர். தங்கள் காதலில் சாதி, மதம் போன்ற எதன் தாக்கமும் இல்லை என்று டிம்பிள் கூறுகிறார்.
ஆனால், இந்தத் திருமணம் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இவர்களது திருமணத்தை சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் நடத்தி வைத்த கிரந்தி(பூஜை செய்பவர்), ராகி ஜாதே(பஜனை செய்பவர்) மற்றும் குருத்வாரா கமிட்டியின் பணிகளுக்கு ஸ்ரீ அகல் தக்த் சாஹிப்(சீக்கிய மதத்தின் உச்சகட்ட அதிகாரம் பொருந்திய அமைப்பு) தடை விதித்துள்ளது.
பிபிசி பஞ்சாபி குழுவினர் மான்சாவில் இருக்கும் டிம்பிள், மனிஷா தம்பதியிடம் பேசினர்.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் காதலிப்பது குற்றமில்லை
டாம்பாய் (ஆண் போன்ற தோற்றத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் தன்பாலின பெண்) ஹேர்கட்டில், சட்டை, பேன்ட் அணிந்திருந்த டிம்பிள், தனக்கு ஆண்கள் மீது ஆர்வம் இல்லை எனவும் பெண்கள் மீதுதான் ஈர்ப்பு ஏற்படுவதாகவும் தனது பெற்றோரிடம் முதன்முறையாகக் கூறியதை நினைவுகூர்ந்தார்.
அவருடைய பாலின தேர்வு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவரது பெற்றோர் டிம்பிளுக்கு ஆதரவளித்த்ஹள்ளனர்.
இதுகுறித்து மனிஷா கூறும்போது, “டிம்பிளை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை என் அம்மாவிடம் பகிர்ந்துகொண்டேன். ஆனால், அவர் முதலில் மறுத்துவிட்டார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தினேன். பிறகு அம்மா என் அப்பாவிடம் பேசி, என் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தார்,” என்று கூறினார்.
இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் காதலிப்பது குற்றமற்றது என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இன்னும் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை.
தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி இந்த ஆண்டு 21 மனுக்களை உச்சநீதிமன்றம் பரிசீலித்தது. அதன் தீர்ப்பு வரும் நாட்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசு, 2012ஆம் ஆண்டில் தன்பாலின ஈர்ப்பு சமூகத்தினரின் மக்கள்தொகை 25 லட்சம் என மதிப்பிட்டுள்ளது.
டிம்பிள் – மனிஷாவின் காதல் கதை
டிம்பிள் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயதில் இருந்தே ஆண்களுக்குப் பதிலாக பெண்களின் மீதுதான் தனக்கு நாட்டம் இருந்ததாக அவர் கூறுகிறார்.
அவருடைய பெற்றோர் அவரை மாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவர் ஒருபோதும் ஆண்களால் ஈர்க்கப்படவே இல்லை.
டிம்பிள் ஜிராக்பூரில் ஆடை வியாபாரம் செய்து வருகிறார். “2017இல் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஜிராக்பூரில் எனக்கு வேலை கிடைத்தது. எனது நிலைமையைப் புரிந்துகொண்ட ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள்,” என்றும் தனது வாழ்க்கை குறித்துக் கூறினார் அவர்.
டிம்பிள் அவருடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை. டிம்பிள் ஒருமுறை பாலின மறுசீரமைப்பு குறித்து யோசித்து மருத்துவரையும் நாடியுள்ளார். இருப்பினும், இந்தியாவில் இந்த நடைமுறையின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலை கொண்டதால், அவரது பெற்றோர் பாலின மறுசீரமைப்பு செய்துகொள்ளும் முடிவுக்கு எதிராக இருந்தனர்.
அதற்குப் பிறகு, “நான் ஐந்து ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்தேன். எங்களுக்குள் சச்சரவுகள் அதிகமாக இருந்ததால் 2023இல் பிரிந்தோம். நான் வேறு ஒரு பெண்ணுடன் மூன்று, நான்கு மாதங்கள் காதலித்தேன். ஆனால், அதுவும் வெற்றி பெறவில்லை,” என்று கூறுகிறார் டிம்பிள்.
மனிஷா தன்னுடன் பணியாற்றியதாகவும் தனது இரண்டாவது காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதெல்லாம் மனிஷா தலையிட்டு பிரச்னையைத் தீர்த்து வைத்ததாகவும் டிம்பிள் அவர்கள் இருவருக்குமான அறிமுகம் குறித்து விவரித்தார்.
“மனிஷா எனக்கு சிறந்த துணையாக இருக்க முடியும் என்பதை நான் அப்போது உணர்ந்தேன். அவரும் என்னை ரசித்தார், நாங்கள் நீண்ட நேரம் உரையாடினோம். அது எங்களை மேலும் நெருக்கமாக்கியது. நாங்கள் காதலர்கள் ஆனோம். நானும் மனிஷாவும் திருமணம் செய்துகொண்டோம்.”
மனிஷா பி.ஏ இரண்டாம் ஆண்டு வரை படித்துள்ளார். டிம்பிள் தனது காதலை முன்மொழிந்ததபோது, அவரைப் பிடித்திருந்த காரணத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக மனிஷா கூறுகிறார்.
“ஒரு பெண்ணுக்கு அவளைப் புரிந்துகொண்டு, மதிக்கும், நேசிக்கும், ஒரு குழந்தையைப் போல நடத்தும் வாழ்க்கைத் துணை தேவை. அது எனக்குக் கிடைத்துள்ளது,” என்கிறார் மனிஷா புன்னகையுடன்.
திருமணம் பற்றிய பேச்சு எப்படி தொடங்கியது?
மணமகன் வேடத்தில் டிம்பிள், தனது மணப்பெண்ணான மனிஷாவை பதின்டாவுக்கு அழைத்து வந்து பாரம்பரியமான ஆண்-பெண் திருமண முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
சுமார் 70 உறவினர்கள், நண்பர்கள் தங்கள் திருமண விழாவில் கலந்துகொண்டதாக டிம்பிள், மனிஷா தம்பதி தெரிவித்தனர்.
திருமணத்திற்கு முன்பு டிம்பிள் மனிஷாவை பற்றித் தனது பெற்றோருக்குத் தெரிவித்தார். அதேபோல் மனிஷாவும் தனது பெற்றோரிடம் டிம்பிள் குறித்துக் கூறினார்.
இருவரது பெற்றோரும் மான்சா, பதின்டா நகரங்களில் உள்ள இருவரது வீடுகளுக்கும் சென்று பேசி திருமண தேதியை செப்டம்பர் 18 என முடிவு செய்தனர்.
டிம்பிளின் தந்தை ஜக்தர் சிங், தாய் குல்தீப் கவுர் ஆகியோர் தங்கள் மகளின் முடிவு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
“எங்கள் மகளின் விருப்பத்திற்கு மாறாக ஒரு ஆணுக்கு அவரைத் திருமணம் செய்து வைக்க நாங்கள் ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை. அத்தகைய முயற்சி வெற்றிகரமாக இருக்காது எனக் கருதினோம்,” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த டிம்பிள் சீக்கிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அதற்காக அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்காமல் குருத்வாரா சாஹிப்பின் கிரந்தியை அணுகியதாகக் கூறுகின்றனர்.
திருமணத்தில் டிம்பிள் சீக்கிய மாப்பிள்ளை போல் தலைப்பாகை மற்றும் குர்தா பைஜாமா அணிந்திருந்தார்.
இவர்களது திருமணத்தைப் பற்றி தெரிந்ததும் இந்த இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் என்ன செய்வார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவதாக டிம்பிள் கூறுகிறார்.
அவர்களுக்கு “பாலியல் மட்டுமே வாழ்க்கை கிடையாது, அது எங்கள் காதல் சம்பந்தப்பட்டது,” என்று பதில் கூறும் டிம்பிள், “குழந்தை தத்தெடுப்புக்கான விருப்பங்களையும் நாங்கள் ஆராய்வோம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட சர்ச்சை
இவர்களது திருமணம் அனைவருக்கும் தெரிய வந்தபோது, சில மதத் தலைவர்கள் டிம்பிள், மனிஷாவின் திருமணத்தை எதிர்த்தனர். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக குருத்வாராவின் கிரந்தி ஹர்தேவ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து கிரந்தி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கிரந்தி ஹர்தேவ் சிங் இதுகுறித்துக் கூறுகையில், அவர்களில் ஒருவர் தலைப்பாகை அணிந்திருந்ததால் இருவருமே பெண்கள் என்பதை அடையாளம் காணத் தவறிவிட்டதாகக் கூறினார்.
தங்கள் திருமணத்தில் எந்த அவதூறும் இல்லை என்கிறார் டிம்பிள். வெளிநாடு செல்வதாகக் கூறி மக்கள் குருத்வாராக்களில் தவறான திருமணங்களைச் செய்கிறார்கள். அதுதான் மதத்திற்குச் செய்யும் உண்மையான அவமரியாதை என்று அவர் கருதுகிறார். அப்படியிருக்க அதற்கு ஏன் எதிர்ப்பு இல்லை என்றும் டிம்பிள் கேள்வி எழுப்புகிறார்.
“குருத்வாரா சாஹிப்பிடம் நாங்கள் எல்லாவற்றையும் கூறினோம். எங்கள் அடையாள அட்டைகளையும் கொடுத்தோம்,” என்று டிம்பிள் கூறுகிறார்.
பதின்டா நகரின் காவல்துறை கேப்டன் குல்னீத் சிங் குரானா பிபிசியிடம் பேசியபோது, போலீசில் புகார் எதுவும் இதுகுறித்துப் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
“உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது ஒரு குற்றமல்ல,” என்றும் அவர் கூறினார்.
மறுபுறம், சீக்கியர்களின் உச்ச மத அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பிரபந்த் கமிட்டி, மத விதிமுறைகளை மீறுவது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தனு பேடி, தன்பாலின திருமணம் உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது இந்து திருமண சட்டமும் சிறப்புத் திருமண சட்டமும் உள்ளதே முக்கியப் பிரச்னை என்கிறார் அவர். இப்போது சட்டப்படி செல்லுபடியாகும் திருமணத்தைப் பொறுத்தவரை, அதில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும். எனவே எந்த சட்டமும் ஒரே பாலினத்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை.
“அவர்கள் இணைந்து வாழ்வது அல்லது திருமணம் செய்துகொள்வது சட்டத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே அவர்கள் ஒருவருக்கொருவர் சொத்துரிமைகள், பொறுப்புகள் போன்ற சிவில் உரிமைகளை அனுபவிக்க முடியாது,” என்று கூறும் அவர், இருப்பினும் தன்பாலின திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகாது எனவும் தெளிவுபடுத்தினார்.
அதேவேளையில், “இந்தத் திருமணம் ஆவணங்களில் அங்கீகரிக்கப்படாத காரணத்தால், அவர்களது உறவில் கிரிமினல் குற்றத்தை எதிர்கொண்டால் சட்டபூர்வ கணவன், மனைவிக்கு கிடைக்கும் எந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது,” என்றும் தனு பேடி கூறுகிறார்.
உச்சநீதிமன்றம் தன்பாலின தம்பதிகள் இணைந்து வாழ்வதை அங்கீகரித்துள்ளதுடன், பராமரிப்பு செலவுகள் உட்பட இன்னும் சில உரிமைகளையும் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்டாலும்கூட அவர்களுக்கு இதே உரிமைகள் கிடைக்கும்.
சீக்கிய மதத்தின் உச்சகட்ட அமைப்பு எடுத்த நடவடிக்கை
இந்த விவகாரத்தில் ஸ்ரீ அகல் தக்த்தின் ஜத்தேதார் ரகுபீர் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீ அகல் தக்த் சாஹிப்பின் ஜத்தேதார் கியானி ரகுபீர் சிங், குருத்வாராவில் நடந்த டிம்பிள்-மனிஷாவின் திருமண சம்பவம், தார்மீக ரீதியாகவும் மதரீதியாகவும் கடுமையான விதிமீறல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“குருத்வாரா சாஹிப்பின் தலைவர் கிரந்தி ஹர்தேவ் சிங், கிரந்தி அஜய் சிங், ராகி சிக்கந்தர் சிங், தபலா கலைஞர் சத்னம் சிங் மற்றும் இந்தத் திருமணப் பணியில் ஈடுபட்ட குருத்வாரா கமிட்டியை சேர்ந்த அனைவரின் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
ஜத்தேதார் கியானி ரகுபீர் சிங், இரண்டு பெண்களின் திருமணம் சீக்கிய நெறிமுறைகளுக்கு முரணானது மட்டுமல்ல, இயற்கைக்கு மாறானது என்று கூறினார்.
உலகெங்கும் உள்ள குருத்வாரா நிர்வாகக் குழுக்கள், கிரந்திகள், ராகிகள், சாமியார்கள் அனைவரும் இந்த எதிர்ப்போக்கை மனதில் வைத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள சீக்கியர்கள் சீக்கிய நெறிமுறைகளின்படி, அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
திருமணத்தை நடத்திய கிரந்தி ஹர்தேவ் சிங், அகல் தக்த்தின் ஒவ்வொரு முடிவையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று பதின்டாவில் இரண்டு பெண்களின் திருமணத்தை நடத்தியது குறித்து ஒரு மத துணைக் குழுவை உருவாக்கி, இந்த விவகாரத்தை விரைவில் தீர்த்து வைக்குமாறு அகல் தக்த்தின் ஜத்தேதார் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் திருமணத்தை நடத்தி வைத்த கிரந்தி மற்றும் பிறரிடம் ஷிரோமணி குருத்வாரா பர்பந்த் கமிட்டி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன் மேலாளர் ஜஸ்பால் சிங், விசாரணையை முடித்துவிட்டு, அகல் தக்த் ஜத்தேதார் கியானி ரகுபீர் சிங்குக்கு அறிக்கையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்