தேர்தல் பத்திரம் தொடர்பான மேலும் அதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றன என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?
தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், இன்று மேலும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 12, 2019-ல் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை அடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதி தொடர்பான விவரங்களை சீலிட்ட உறையில் வழங்கின. அவை உறை திறக்கப்படாமலே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மார்ச் 15ஆம் தேதி தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, நீதிமன்ற பதிவுத்துறை அந்த ஆவணங்கள் மற்றும் அதன் டிஜிட்டல் பதிவுகளை எங்களிடம் வழங்கியது. அந்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன’’ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தரவுகளில் ஒரு கட்சிக்கு எந்த ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து எந்தத் தேதியில் தேர்தல் பத்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.
பாஜக பெற்ற தொகை எவ்வளவு?
பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இது மார்ச் 3, 2017 முதல் ஜூலை 10, 2023 வரை பெறப்பட்ட தொகையாகும்.
2017 – 18 நிதியாண்டில் ரூ.210 கோடி நிதி பெற்றுள்ள பாஜக, 2023-24 நிதியாண்டில் ரூ. 421 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளது. இது நான்கே மாதங்களில் பெறப்பட்ட தொகை என்பது கவனிக்கத்தக்கது.
அதிகபட்சமாக 2019-2020 நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகையை பாஜக பெற்றுள்ளது.
எனினும், யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றோம் என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்தில் அளித்த ஆவணத்தில் பாஜக நேரடியாக குறிப்பிடவில்லை.
காங்கிரஸ் பெற்ற தொகை எவ்வளவு?
காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 1,334 கோடி நிதி பெற்றுள்ளது.
இது மார்ச் 13, 2018 முதல் செப்டம்பர் 30,2023 வரை பெறப்பட்ட தொகை.
அதிகபட்சமாக 2018 – 2019 நிதியாண்டில் ரூ.383 கோடி காங்கிரஸ் நிதி பெற்றுள்ளது.
அதன் பிறகு தேர்தல் பத்திரம் மூலமாக காங்கிரஸுக்கு வந்த நன்கொடை கணிசமாக சரிந்துள்ளது.
யாரிடம் எவ்வளவு நிதி பெற்றோம் என்ற விவரம் காங்கிரஸ் அளித்துள்ள ஆவணத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.
திமுக எவ்வளவு நிதி பெற்றது?
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 656.5 கோடி பெற்றுள்ளது.
இதில் பெருந்தொகையை லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் நிறுவனமே வழங்கியுள்ளது.
2019 முதல் நவம்பர் 14, 2023 வரை பல்வேறு கட்டங்களாக இந்த நிறுவனம் ரூ.509 கோடியை திமுகவிற்கு வழங்கி உள்ளது. உச்சபட்சமாக 2021 – 2022 நிதியாண்டில் ரூ. 249 கோடியை இந்த நிறுவனம் வழங்கி உள்ளது.
அதிமுக எவ்வளவு நிதி பெற்றது?
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6.05 கோடி நிதி பெற்றுள்ளது.
இது ஏப்ரல் 2, 2019 முதல் நவம்பர் 10, 2023 வரை பெறப்பட்ட தொகை.
இதில் ரூ.5 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகமே வழங்கியுள்ளது.
திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதற்காக, திமுக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது” என தெரிவித்துள்ளார்.
ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் நிதி பெற்றது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என போராடியது திமுக. அதற்கென வலுவான சட்டத்திற்காக சட்டப் போராட்டை முன்னெடுத்ததும் திமுக. ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்துபவர்கள் ஆளுநரை சென்று பார்த்தனர். அதற்கு அதிமுக சிறிய கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. திமுக மீது அதிமுக வீண் குற்றச்சாட்டு சுமத்துகிறது” என்றார்.
மேலும், அந்நிறுவனத்திடமிருந்து நிதி வாங்கியதை திமுக மறுக்கவில்லை என்றும் எனினும் அந்நிறுவனம் ஆதாயம் பெறும் வகையிலான செயலில் திமுக ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.
தேர்தல் பத்திரம் தொடர்பாக பாஜக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், திமுக மீதான விமர்சனத்தால் நீர்த்துப் போகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் பத்திரங்கள் திட்டமிடப்பட்ட கொள்ளை. ரிசர்வ் வங்கி சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்துதான் இதனை பாஜக கொண்டு வந்தது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
வருமான வரித்துறையோ அல்லது அமலாக்கத்துறையோ சோதனை நடத்திய பிறகு குறிப்பிட்ட நிறுவனங்கள் பாஜகவுக்கு நிதி அளித்திருக்கின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை” என்றார்.
தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
தேர்தல் பத்திர விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா, பாஜக, ‘இந்தியா’ கூட்டணி இதை எப்படி கையாள்கின்றன என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
“தேர்தல் நிதி ரகசியமாக இருக்க வேண்டும் என்ற விஷயத்திற்குள் பாஜக சென்றது ஏன்? அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு நிதி வழங்கியதையும் பொருத்திப் பார்க்கக் கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறலாம். ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் பத்திரத்தைக் கொண்டு வந்த பாஜகவுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது” என்றார்.
மேலும், “மற்ற கட்சிகள் பணம் வாங்கவில்லையா என கேட்கலாம். எல்லா கட்சிகளுக்கும் பணம் வேண்டும். தேர்தல் பத்திரம் தான் ஒரே வழி எனும்போது மற்ற கட்சிகள் எந்த வழியில் நிதியை பெறும்? ஒவ்வொரு தன்னாட்சி பெற்ற நிறுவனங்களும் இந்த ஆட்சியில் நீர்த்துப் போய்விட்டன. அப்படி இந்த விஷயத்தில் பாரத ஸ்டேட் பேங்க் நீர்த்துப் போய்விட்டது. தேர்தலில் இது எப்படி எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்