செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தளங்களைக் குறி வைத்ததாக இரான் கூறியதாக அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் இதை நிராகரித்துள்ளது. இது “கடுமையான விளைவுகளுக்கு” வழிவகுக்கும் “சட்டவிரோத செயல்” என்று கூறியது.
இராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்தபடியாக கடந்த சில நாட்களில் இரானின் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நாடு பாகிஸ்தான்.
பாகிஸ்தான் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதது. செவ்வாய்க்கிழமை தாக்குதல் இரு நாடுகளின் எல்லையான பலுசிஸ்தானின் பரந்த தென்மேற்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைத் தாக்கியது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “இரான் தனது வான்வெளியில் தூண்டுதலின்றி அத்துமீறி நுழைந்ததை” கடுமையாகக் கண்டித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியது. “பாகிஸ்தானுக்கும் இரானுக்கு இடையே பல தகவல்தொடர்பு சேனல்கள் இருந்தபோதிலும் இந்த சட்டவிரோத செயல் நடந்துள்ளது நிலைமையை மேலும் தீவிரமாக்குவதாகவும்” கூறியுள்ளது.
இரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இரான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பாகிஸ்தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மேலும், “பாகிஸ்தானின் இறையாண்மை மீதான இந்த அப்பட்டமான மீறல் மற்றும் அதன் விளைவுகளுக்கு இரானே பொறுப்பு,” என்றும் கூறியுள்ளது.
இரான் திங்கட்கிழமை இரவு, வடக்கு இராக்கில் உள்ள நகரமான இர்பிலில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.
காஸா நிலப்பகுதியில் இஸ்ரேலுக்கும் இரான் ஆதரவு பெற்றா பாலத்தீனிய குழுவான ஹமாஸ் இடையே அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரானின் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மோதல்களை பெரிதாக்குவதில் ஈடுபட விரும்பவில்லை என்று இரான் அறிவித்திருந்தாலும், அதன் “எதிர்ப்பு அச்சு” என்று அழைக்கப்படும் குழுக்கள் பாலத்தீனியர்களுடன் ஒற்றுமை காட்ட இஸ்ரேலுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலிய படைகளுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது, ஷியா போராளிகள் இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கியுள்ளனர்.
ஹமாஸ் தலைவரை லெபனானில் நடத்திய தாக்குதலில் கொன்றுள்ளது இஸ்ரேல். புரட்சிகர காவலர் தளபதி சிரியாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இராக் மீதான விமானத் தாக்குதலில் இராக் போராளிகள் தலைவரை அமெரிக்கா கொன்றுள்ளது. மேலும், ஏமனில் ஹூத்தி இலக்குகள் மீதும் அமெரிக்கா குண்டுவீசியுள்ளது.
பல காலமாகவே, பாகிஸ்தானும் இரானும், ஜெய்ஷ்-அல்-அத்ல் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழுக்களை எதிர்த்து, மக்கள் தொகை குறைவான இந்த எல்லைப் பகுதியில் போராடி வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 900 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு என்பது இரு அரசுகளுக்கும் நீண்ட காலமாக கவலையாகவே இருந்து வருகிறது.
கடந்த மாதம் எல்லைக்கு அருகே நடந்த தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-அல்-அத்ல் குழுவை காரணமாக இரான் கூறுகிறது. இந்த தாக்குதல்களில் பல இரானிய காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
அப்போது, இரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹீடி, இந்த தாக்குதல்களுக்கு காரணமான போராளிகள் பாகிஸ்தானில் இருந்துதான் தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறினார்.
அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகத்தின் தகவலின்படி, ஜெய்ஷ்-அல்-அத்ல் சிஸ்தான்-பலுசிஸ்தானில் இயங்கும் “மிகவும் தீவிரமான மற்றும் செல்வாக்குமிக்க” சுன்னி போராளி குழு ஆகும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்