கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை தனது காவலில் எடுத்துக்கொண்டது.
அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜீய மற்றும் எல்லைப் பதற்றம் புதிய எச்சத்தை எட்டியது.
பிப்ரவரி 27 அன்று என்ன நடந்தது என்பது மீண்டும் தற்போது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த இரவு பற்றிய சில புதிய விஷயங்கள் வெளிவந்துள்ளன.
இதற்குக் காரணம், அப்போது பாகிஸ்தானில் பதவியேற்றிருந்த இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியாவின் ‘ஆங்கர் மேனேஜ்மென்ட்’ என்ற புத்தகம்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜோஹ்ரா பலோச் வியாழக்கிழமையன்று தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் இந்தக் கூற்றுகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது அவர், “இந்தப் புத்தகம் பிப்ரவரி 2019 பற்றிய இந்தியாவின் இட்டுக்கட்டப்பட்ட கதையைப் பரப்ப முயல்வதைப் போல் தெரிகிறது,” என்று கூறினார்.
ஆனால், பிப்ரவரி 2019இல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது தெளிவாகிறது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ‘நெவர் கிவ் அன் இன்ச்’ என்ற புத்தகத்தில்கூட, இந்தப் பதற்றம் இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர் அச்சம் உண்டாகும் அளவுக்கு அதிகரித்ததாகக் கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் குஜராத்தில் நடந்த கூட்டத்தில், போர் விமானியைத் திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. அது நடக்கவில்லையெனில், “தாக்குதல் நடத்த மோதி 12 ஏவுகணைகளுடன் தயாராக இருந்தார். அது நடந்திருக்கும்.”
பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நரேந்திர மோதியின் அறிக்கை பொறுப்பற்றது, போர் வெறி அடிப்படையிலானது என்று விவரித்தது. “பாலகோட் தாக்குதலுக்கு உடனடியாக, பயனுள்ள பதிலடி கொடுத்து, விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, விமானியைக் கைது செய்தது ஆகியவை தமது ஆயுதப் படைகளின் தீர்மானம், திறன் மற்றும் தயார்நிலைக்குச் சான்று,” என்று பாகிஸ்தான் கூறியது.
இந்திய விமானி அபிநந்தன் கைது செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தைக் குறைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச விரும்பினார். ஆனால், அதற்கு “எந்தவொரு ஆர்வமும் காட்டப்படவில்லை” என்று பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியா தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
இந்த மோதலின் தீவிரத்தைக் கண்டு பாகிஸ்தான் உண்மையில் “பயந்ததாகவும்” அவர் கூறினார்.
இதுதொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.
ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜோஹ்ரா பலோச் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், “அபிநந்தன் திரும்பியதன் மூலம் பதற்றங்களைக் குறைப்பதில் பாகிஸ்தான் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டியது. அதேநேரத்தில் இந்தப் புத்தகம் “பிப்ரவரி 2019 பற்றிய இந்தியாவின் புனையப்பட்ட கதையைப் பரப்ப முயல்கிறது,” என்று கூறினார்.
பிப்ரவரி 27 அன்று என்ன நடந்தது?
கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் வெடிமருந்துகளை வீசிவிட்டு, பாகிஸ்தான் மண்ணில் உள்ள தீவிரவாத பதுங்குமிடங்கள் மீது ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியதாகக் கூறியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் வெளிச்சத்திற்கு வந்தது.
அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் மிக்21 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதுடன் இந்திய விமானி அபிநந்தனைக் கைது செய்தது. பின்னர் “பதற்றத்தைக் குறைக்க” அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான அஜய் பிசாரியா சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்திலும் பிப்ரவரி 27 குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அவர் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்தார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது அவர் டெல்லியில் இருந்தார். அவர் தனது புத்தகத்தில், “பிப்ரவரி 26 அன்று காலை பாகிஸ்தானில் இந்தியா குண்டுகளை வீசியது குறித்து சமூக ஊடகங்களில் பேசப்பட்டபோது, டெல்லியில் எழுந்தேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்று காலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது சக ஊழியர் ஒருவர், ஐஎஸ்பிஆர் செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கஃபூரின் ட்வீட்டை பகிந்தார். அதில் இந்தியா போர் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்து வெடிகுண்டு வீசியதாகக் குறிப்பிட்டிருந்ததைக் கூறினார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் உள்ள ராணுவ இலக்குகளுக்கு அருகே வெடிகுண்டுகளை வீசியதன் மூலம் மறுநாள் பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததாக அவர் எழுதியுள்ளார்.
பின்னர், சில பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததை இந்திய அறிக்கை உறுதிப்படுத்தியது. பிப்ரவரி 27 அன்று கப்பல்களுக்கு இடையிலான சண்டையின்போது இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனின் விமானம் பாகிஸ்தான் ஏவுகணைக்கு இலக்கானது.
அவரது விமானம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏழு கி.மீ தொலைவில் விழுந்தது. அபிநந்தன் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2019 பிப்ரவரியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த சண்டை அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும் என்பதை உலகம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ எழுதிய ‘நெவர் கிவ் அன் இன்ச்’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அவர் வியட்நாமில் இருந்தபோது, பாகிஸ்தான் ஒரு தாக்குதலுக்கு அணு ஆயுதங்களைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டது என பயந்த இந்தியப் பிரதிநிதி தன்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பியதாகவும் இந்தியாவே அணு ஆயுத மோதலுக்கான தயாரிப்புகள் குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தான் பாகிஸ்தானின் ‘உண்மையான தலைவர்’ ஜெனரல் பஜ்வாவை தொடர்புகொண்டதாக மைக் பாம்பியோ எழுதியுள்ளார். அவர் அதை மறுத்ததாகவும் ஆனால் இந்தியா அணு ஆயுதங்களை நிலைநிறுத்தத் தயாராகி வருவதாக அஞ்சியதாகவும் மைக் பாம்பியோ குறிப்பிட்டார்.
அந்தப் பதற்றத்தைக் குறைக்க, ‘பி-ஃபைவ்’ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் அழைத்ததாக முன்னாள் இந்திய தூதர் அஜய் பிசாரியா தனது நூலில் எழுதியுள்ளார்.
பிரதமர் மோதியுடன் இம்ரான் கான் பேச முயன்றாரா?
பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானம் தாக்கிய பின்னர், பாகிஸ்தானின் பதிலடியில் இந்திய விமானி பிடிபட்ட பிறகு, “ராஜதந்திரிகளின் பார்வையில், பதற்றம் அதிகரிக்கும் சாத்தியம் குறித்து பாகிஸ்தான் உண்மையில் பயப்படுவதாகத் தோன்றியதாக” பிசாரியா தனது புத்தகத்தில் கூறுகிறார்.
இதைப் பற்றி பிசாரியா தனது நூலில், “அந்தச் சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தெஹ்மினா ஜன்ஜூவா மாலை 5:45 மணிக்கு ராணுவத்திடம் இருந்து வந்த செய்தியை விவரிப்பதற்காக உரையாடலை நிறுத்தினார். அந்த செய்தியில் இந்தியா 9 ஏவுகணைகளை ஒரே நாளில் எந்த நேரத்திலும் ஏவக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது.
ராஜதந்திரிகள் தங்கள் நாட்டுத் தலைவர்களுக்கு இதைத் தெரிவிக்க வேண்டும் என்றும் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும் இந்தியாவிடம் கேட்டுக்கொள்ள வேண்டுமென தஹ்மினா ஜன்ஜுவா விரும்பினார். இதன் காரணமாக, இஸ்லாமாபாத் மற்றும் புது டெல்லியின் தூதரகங்களில் பரபரப்பு ஏற்பட்டது,” என்று எழுதியுள்ளார்.
பி-5 ராஜதந்திரி ஒருவரை மேற்கோள் காட்டி, “பாகிஸ்தான் தனது கவலைகளை நேரடியாக இந்தியாவிடம் தெரிவிக்க வேண்டுமென்று அந்த ராஜதந்திரிகளில் ஒருவர் கூறியதாகவும்” அவர் எழுதியுள்ளார்.
அந்த நேரத்தில் இஸ்லாமாபாத்தில் இருந்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் மெஹ்மூத்திடம் இருந்து நள்ளிரவில் தனக்கு அழைப்பு வந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச விரும்புவதாகவும் பிசாரியா குறிப்பிட்டுள்ளார்.
“நான் மூத்த அதிகாரிகளுடன் அதைப் பற்றிப் பேசினேன். அவர்கள் எங்கள் பிரதமர் தற்போது இங்கு இல்லையென பதிலளித்தனர். ஆனால், இம்ரான் கான் ஏதேனும் முக்கியமான செய்தியைத் தெரிவிக்க விரும்பினால், அவர் அதை நிச்சயமாக என்னிடம் கொடுக்கலாம்.”
அதன் பிறகு அன்றிரவு தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் பிசாரியா எழுதியுள்ளார். இதற்கிடையில் பதற்றத்தைக் குறைக்கவும் இந்தியாவின் ஆவணத்தைச் செயல்படுத்தவும் தீவிரவாத பிரச்னையைத் தீர்க்கவும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அமெரிக்கா, பிரட்டனின் தூதர்கள் இந்தியாவுக்குத் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பிரதமரே இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் விமானி அபிநந்தன் மறுநாள் இந்தியா திரும்புவார் என்றும் தூதர்கள் இந்தியாவிடம் தெரிவித்தனர்.
மார்ச் 1ஆம் தேதி, விமானி அபிநந்தன் திரும்புவதற்கான செயல்முறையை இந்தியா இறுதி செய்யத் தொடங்கியது எனக் கூறும் அவர், “அபிநந்தன் திரும்புவது குறித்து ஊடக நாடகத்தை உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் கேட்க முடிவு செய்ததாகவும்” எழுதியுள்ளார்.
மேலும், “அபிநந்தனை அழைத்து வர இந்திய விமானப்படை விமானத்தை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் அனுமதிக்க மறுத்தது. அவர் மாலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இறுதியாக இரவு 9 மணிக்கு விடுவிக்கப்பட்டார்,” என்றும் கூறியுள்ளார்.
‘இது இந்தியாவின் இட்டுக்கப்பட்ட கதை’
கடந்த வியாழனன்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜோஹ்ரா பலோச், இந்தப் புத்தகம் பிப்ரவரி 2019 பற்றிய இந்தியாவின் இட்டுக்கட்டப்பட்ட கதையைப் பரப்ப முயல்வதைப் போல் இருப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது பாகிஸ்தான் பிரதமரின் அழைப்பை இந்தியா ஏற்க மறுத்ததாக அஜய் பிசாரியா கூறியதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டார்.
மும்தாஜ் ஜோஹ்ரா பலோச், “இந்தியாவிலுள்ள அரசாங்கம் புல்வாமா சம்பவத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியது. இந்தி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதும், இந்திய விமானியை பாகிஸ்தான் கைது செய்ததும் என பாலகோட் இந்தியாவின் ராணுவ தோல்வி என்பது பிசாரியாவுக்கு நன்றாகவே தெரியும்.
அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்து கொண்டது. ஆனால் ஒரு தூதரக அதிகாரி பலத்தை வெளிப்படுத்துவது பற்றிப் பேசுவது வருந்தத்தக்கது,” என்றார்.
பிப்ரவரி 28ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தனை மார்ச் 1ஆம் தேதி விடுதலை செய்வதாக அறிவித்தார்.
அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “இன்று இந்தியா புல்வாமா பற்றி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், அதற்கு முன்பு அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்,” என்று சபையில் கூறினார்.
நாம் உறவுகளை மேம்படுத்த முயன்று வருகிறோம் என்றும் அவர் கூறினார். “நேற்றும் நான் மோதியுடன் பேச முயன்றேன். இந்தச் செயலை பலவீனமாகக் கருதக்கூடாது. நீங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நான் இந்தியாவிடம் கூற விரும்புகிறேன். ஏனெனில், இதுபோன்ற சூழ்நிலையில் நாங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்