கரூரில் அரவக்குறிச்சி ஒன்றியம் வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மன்னிப்புக் கேட்டனர்.
வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதியப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே பெற்றோர்கள் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
ஏற்கெனவே சாதி ரீதியாக இந்தப் பகுதியில் சச்சரவு இருந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. பெற்றோர் சமாதானமாகச் செல்ல முயன்றாலும் சிலர் பிரச்னையை தூண்டு விடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
தற்போது பெற்றோர் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், இந்தப் பிரச்னை நிரந்தரமாக முடிவுக்கு வந்துவிட்டதா?
என்ன நடந்தது?
செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 15 பேர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாகவும், மற்ற 15 பேர் வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டது.
கரூர் பள்ளியிலும் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்துக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து சமையல் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டியல் சாதியைச் சேர்ந்த அந்த சமையலரால் காலை உணவு சமைக்கப்பட்டால் எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என மாற்று சமூகத்தை சேர்ந்த சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பள்ளிக்கு நேரில் சென்றார். உணவை மறுக்கும் பெற்றோர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சமூக நீதியின் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன் பள்ளிக் குழந்தைகளுக்கு நடுவில் பேதம் பார்க்காமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இருப்பினும் தொடர்ந்து சாதியை முன்னிறுத்தி உணவை ஏற்கமாட்டோம் என்று பேசியவர்கள் மீது எஸ் சி. எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். அதையும் மீறி எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் ஒருவர் காவல் நிலையத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிறகு, தன் பிள்ளையை பள்ளிக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தை சேர்ந்த பத்து குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களில் சிலர் பக்கத்து ஊரிலிருந்து செட்டியூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு வருபவர்கள். இந்தக் குடும்பங்கள் சாதாரண பொருளாதார குடும்ப பின்னணி கொண்டவையாகும். பத்து குடும்பங்களில் ஆறு குடும்பங்களில் பெண்கள் நூற்பாலைகளில் பணிபுரிகின்றனர். மின் பணியாளராகவும், தையல்காரர்களாகவும் இவர்கள் உள்ளனர்.
ஏற்கெனவே இரு சமூகத்தினர் இடையே சாதி ரீதியிலான சிறு சிறு சச்சரவுகள் நிலவி வந்த நிலையில், பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் சமையல் பணியாளராக சமைத்து வருவது சர்ச்சையாகி உள்ளது.
ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கப்பட்ட திட்டத்தில் முதல் இரண்டு நாட்கள் எந்த பிரச்னையும் இல்லை. அதன் பின் அந்த சமையல் பணியாளரின் சாதி ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பதினைந்து பிள்ளைகளில் 13 பேர் காலை உணவை சாப்பிடவில்லை. மாவட்ட திட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்த்த போதும், பிரச்னை சுமூகமாக முடியவில்லை. அதனைத் தொடர்ந்தே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
உணவு புறக்கணிப்பு தொடர்கிறதா?
இந்த பிரச்சனை பற்றி கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆகஸ்ட் 29ம் தேதி மகளிர் திட்ட இயக்குநர் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து பள்ளியில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து குழந்தைகளும் உணவு உண்ண வேண்டும் என்று தெரிவித்ததை தொடர்ந்து 30ம் தேதி இதர பிரிவிலிருந்து இரண்டு குழந்தைகள் மட்டுமே காலை உணவை உட்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “காலை உணவை உண்ணாத 15 குழந்தைகளின் 10 பெற்றோர்களை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து கோரிய போது பாலசுப்ரமணியம் என்பவர் அருந்ததியர் பிரிவு பெண் சமைத்தால், தம்முடைய குழந்தை உணவு சாப்பிடாது என்றும் வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்ததை அடுத்து அவர் தன் குழந்தையை காலை உணவு உண்ண ஏற்பாடு செய்வதாக மன்னிப்பு கோரினார். எனவே அவர் மீது வழக்கு தொடுக்காமல் எச்சரித்து விடுவிக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலையீட்டுக்கு பின் பெற்றோர்கள் சமாதானம் அடைந்ததாக அந்தப் பள்ளிக்கு நேரில் சென்றிருந்த , காலை உணவுத் திட்டத்துக்கு பொறுப்பான மாவட்ட மகளிர் திட்ட அதிகாரி எ.சீனிவாசன் பிபிசி தமிழிடம் பேசிய போது தெரிவித்தார்.
“சட்டமன்ற உறுப்பினர் ,பஞ்சாயத்து தலைவர், மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெற்றோர்கள் சம்மதித்தாலும் ஊரில் இருக்கும் சிலரால் இந்த பிரச்னை தூண்டிவிடப்படுகிறது. தற்போது பிரச்னை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.” என்றார் அவர். மேலும் அதே சமையல் பணியாளர் கண்டிப்பாக அந்தப் பணியில் தொடர்வார் என்றும் உறுதியளித்தார்.
உணவில் தொடர்வதா சாதிபேதம் ?
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலர் ராஜகோபால் பிபிசி தமிழிடம் பேசிய போது, “பட்டியலினம் அல்லாமல் வேறு சமூகத்தினர் சமைத்தால் தான் உணவு சாப்பிடுவோம் என்று பெற்றோர்கள் சிலர் கூறினர். அவர்களிடம் பேசி சமாதானம் செய்ய முடியவில்லை” என்றார். சாதி மத பேதமின்றி குழந்தைகள், இருப்பது பள்ளியில்தான், அங்கேயும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தவே ஆட்சியரிடம் புகாரளித்ததாக தெரிவித்தார்.
இதே போன்று 2018ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையல் பணியாளர் பாப்பாள் என்பவர் பட்டியிலனத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் சமைத்த உணவை சாப்பிட மாட்டோம் என பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட சாதி இந்துகள் 88 பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. சாதி பாகுபாடு காட்டியர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்டோர் தொடுத்த வழக்கு இந்த மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அவர் தொடர்ந்து அதே பள்ளியில் சமையல் பணியாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு
அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு அவசியம் என 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி கே சந்துரு, சத்துணவுத் திட்டத்தின் அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக் கொண்டு தனியாக அரசு செயலர் நியமிக்கப்பட்டு அமல்படுத்தும் போது, சத்துணவு ஊழியர்களை அரசு பணியாளர்களாகவே கருத வேண்டும். அதன் படி, அவர்களின் நியமனத்தில் சாதிய இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என்பது இப்போது தலையெடுத்துள்ள பிரச்னை அல்ல. சாதிய பாகுபாடுகளின் முக்கிய வடிவமாக தனியே உணவருந்தும் முறை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
நீதிபதி சந்துருவின் உத்தரவில், எம் எஸ் எஸ் பாண்டியன் எழுதிய ‘பிராமணர்கள் மற்றும் பிராமணர் அல்லாதோர்’ என்ற நூலை மேற்கோள் காட்டி, “ஈ வெ ராமசாமி (பெரியார் என்றழைக்கப்படுபவர்) பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு சேரன்மகாதேவி குருகுலத்தில் தனித்தனியாக உணவு வழங்கப்படுவதை எதிர்த்தார்” என்று குறிப்பிடுகிறார். ஒன்றாக அமர்ந்து சாப்பிடாதது பாவம் இல்லை, அதே நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டால் அது தவறும் இல்லை என்று கூறிய மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியோடு முரண்பட்ட பெரியார் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கினார் என மற்றொரு நூலில் எழுதியிருப்பதையும் நீதிபதி சந்துரு தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
“தலித் மாணவர்கள் , 98% பேர் தங்களுக்கு சத்துணவு ஊழியர்கள் கடைசியாக உணவு பரிமாறுகின்றனர் என தெரிவித்துள்ளனர். சத்துணவு ஊழியர்கள் தங்களை தொடுவதில்லை என 87% பேரும், தங்களை தனியாக அமர வைப்பதாக 86% மாணவர்களும் தெரிவிக்கின்றனர்” என பள்ளிகளில் நிலவும் சாதி பாகுபாடுகள் குறித்த தரவுகளையும் அந்த உத்தரவில் நீதிபதி சந்துரு குறிப்பிடிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்