ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

குஜராத் டைட்டன்ஸ்அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார்? மும்பை இந்தியன்ஸ் அணி அன்று 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி ஹர்திக் பாண்டியாவை திரும்பப் பெற தற்போது எவ்வளவு பணம் கொடுத்துள்ளது? பின்னணியில் நடந்தது என்ன?

ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் டிசம்பர் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே பரஸ்பரத்துடன் நடந்து வருகிறது.

ஐ.பி.எல். மினி ஏலம்

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம், Getty Images

இந்த பரஸ்பர பரமாற்றம் டிசம்பர் 12ம் தேதிவரை நடத்திக்கொள்ளலாம். அதன்பின் டிசம்பர் 19ம் தேதி நடக்கும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் வசம் இருக்கும் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் விலைக்கு வாங்க முடியும்.

அந்த வகையில் நேற்று ஐபிஎல் அணிகளுக்கு இடையே வீரர்களைப் பரிமாற்றம் செய்தல், விடுவித்தல், விலைக்கு வாங்குதல் போன்றவை நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் விருப்பம் தெரிவித்தது.

ஹர்திக் பாண்டியா – பின்னணியில் நடந்தது என்ன?

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக இரு அணிகளின் நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த உறுதியான முடிவும் எட்டாததையடுத்து, மாலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியே ஹர்திக் பாண்டியாவை தக்கவைப்பதாக அறிவித்தது. ஆனால், கடைசி கட்டப் பேச்சுவார்த்தையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்க மும்பை இந்தியன்ஸ் முன்வந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வது குறித்து மும்பை அணி நிர்வாகவோ, குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகமோ இன்று காலை வரை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி “ குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2 சீசன்களாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, தான் முதன்முதலாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புகிறார்.

இது தொடர்பாக இரு அணி நிர்வாகிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிந்தது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டார். முதன் முதலில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து கடந்த சீசனில் பைனல்வரை அணியைஅழைத்துச் சென்றார்.

மற்றொரு தனி வர்த்தகத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ஆர்.சி.பி. அணி விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம், Empics

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரின் வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தாய்வீடு திரும்புதல், ஹர்திக் அணியில் இருந்தாலே அணிக்குள் சமநிலையான போக்கு எந்த அணிக்கும் ஏற்படும். மும்பை அணியில் ஹர்திக் இருந்த போது வெற்றிகரமாக இருந்தது, 2வது முறையாக அணிக்குத் திரும்பிய ஹர்திக் பெரிய வெற்றியைத் தருவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்

ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ரூபாய் தவிர , பரிமாற்றக் கட்டணத்தையும் சேர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அன்று ரூ.10 லட்சம் இன்று ரூ.15 கோடி

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த இரு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டு, 30 இன்னிங்ஸ்களில் 833 ரன்கள் சேர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா சராசரி 41.65 ஆகவும், 133 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார், 11 விக்கெட்டுகளையும் ஹர்திக் வீழ்த்தியுள்ளார்.

2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.10 லட்சத்துக்கு ஹர்திக் பாண்டியா அன்கேப்டு வீரராக வாங்கப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் அணியில் முக்கியமான இடத்தை ஹர்திக் பாண்டியா பெற்றார்.

இதையடுத்து, 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை விடுவித்து அவரை ஏலத்தில் மும்பை அணி எடுத்து பின்னர் 2022ம் ஆண்டு விடுவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது அனைவருக்குமே வியப்பாக இருந்தது. 2021 ம் ஆண்டு ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொலார்ட் ஆகியோரை மட்டும் தக்கவைத்து பெரும்பாலான வீரர்களை விடுவித்தது.

இதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்து தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். கடந்த சீசனில், பைனல் வரை குஜராத் அணியை அழைத்துச் சென்ற பெருமை ஹர்திக் பாண்டியாவையே சாரும்.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் மிகவும் மோசமாகச் செயல்பட்டது. நாக்அவுட் சுற்றுக்குள்கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 19 மினி ஏலத்துக்குள் ஏதேனும் பெரிய முடிவுடன் மும்பை இந்தியன்ஸ் வரும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியை மீண்டும் அணிக்குள் கொண்டுவருவதற்காக 11 வீரர்களை விடுவித்து ரூ.15.25 கோடியை பெற்றுள்ளது. இது தவிர கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு ஆர்சிபி அணியிடம் விலைக்கு விற்பதால் கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கையிருப்பு அதிகரிக்கும்.

குஜராத் அணிக்கு புதிய கேப்டன்

ஐபிஎல் ஏலம்

பட மூலாதாரம், Getty Images

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா சென்றுவிட்டதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2024 சீசனில் யார் தலைமையில் களமிறங்கும் என்ற கேள் வி எழுந்தது.

இதனிடையே, 2024 ஐபிஎல் சீசனுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக சுப்மான் கில்லை குஜராத் அணிநிர்வாகம் நியமித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அவர் இருந்துள்ளார். சீனியர் கிரிக்கெட்டில் சுப்மான் கில் முதல்முறையாக கேப்டன் பதவியை ஏற்க உள்ளார்.

அணி கேப்டனாக குஜராத் அணி நிர்வாகம் நியமித்தது குறித்து சுப்மான் கில் கூறுகையில் “குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பதில் பெருமை கொள்கிறேன். என்னை அணித் தலைவராக நியமித்த அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இரு சீசன்கள் அற்புதமாக இருந்தது. எங்களின் அற்புதமான அணியை வழிநடத்திச் செல்ல அடுத்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

சுப்மான் கில்லின் கேப்டன் அனுபவம்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மான் கில்லுக்கு ஏற்கெனவே கேப்டன் அனுபவம் இருந்துள்ளது. 2018ம் ஆண்டு நடந்த 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தது பிரித்வி ஷா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த துலீப் டிராபி கோப்பைக்கான தொடரில் இந்தியா ப்ளூ அணிக்கு கேப்டனாகவும் சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடந்த தியோதர் டிராபியிலும், இந்தியா –சி பிரிவு அணிக்கும் கேப்டனாக சுப்மான் கில் இருந்து அணியை வழிநடத்தியுள்ளார்.

இளம் வயதிலேயே இந்திய அணியை வழிநடத்திய பெருமை சுப்மான் கில்லுக்கு உண்டு. இதற்கு முன் விராட் கோலி 21 வயது 124 நாட்களில் 2009-10ம் ஆண்டு தியோதர் டிராபில் கேப்டனாக இருந்திருந்தார். அவரை முறியடித்த சுப்மான் கில் 20 வயது 57 நாட்களில் தியோதர் டிராபியில் இந்திய –சி அணிக்கு கில் கேப்டனாக செயல்பட்டார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *