வட கொரியா தனது புதிய உளவு செயற்கைக்கோள் மூலம் வெள்ளை மாளிகையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் மேற்கத்திய நாடுகளுக்கு இதில் சந்தேகம் உள்ளது.
எனினும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தனது புதிய கண்காணிப்புக் கருவி குறித்து பெருமை கொண்டு, அதிலிருந்து கிடைத்திருப்பதாக கூறப்படும் தகவல்களயும் பகிர்ந்து வருகிறார்.
இந்தச் செயற்கைகோள் மூலம், வட கொரியா கண்டறிந்த தனது இலக்குகளின் பட்டியலை அரசு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் அமெரிக்க வடகிழக்கு கடற்கரை மற்றும் அதன் பசிபிக் பிரதேசமான குவாமில் உள்ள விமானப்படை தளங்கள் உள்ளிட்ட இலக்குகளை வட கொரியா கண்காணித்து வருவதாக அவை தெரிவித்தன.
தென் கொரிய ராணுவ இலக்குகளையும் அதன் துறைமுக நகரமான புசானையும், மேலும் சற்று தொலைவில் ரோம் கூட கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை கேட்கும் போது பெரிதாக தோன்றினாலும், உண்மையில் நிலைமைகள் வேறாக இருக்கலாம். அமெரிக்க இலக்குகளின் படங்கள் வெளியானது குறித்த செய்திக்கு விளக்கமளித்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர், “பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையின் படங்கள் ஆன்லைனில் ஏராளமாக உள்ளன,” என்று கூறினார்.
வெள்ளை மாளிகையை யாரும் இப்போதெல்லாம் கூகுள் எர்த் மற்றும் இணைய நேரடி ஸ்ட்ரீம்களில் பார்க்கலாம். பிபிசி அதை முயற்சித்தது. வெள்ளை மாளிகையின் நேரடி கேமரா யூடியூப்பில் உடனடியாக படங்கள் கிடைத்தன.
அப்படியானால், கிம் இவ்விஷயத்தில் என்ன செய்கிறார்? இதிலிருந்து அவருக்கு உண்மையில் ஏதாவது பயன் கிடைக்கிறதா?
வட கொரியாவுக்கு செயல்படும் செயற்கைகோள் உண்மையிலேயே இருக்கிறதா?
வட கொரியாவின் செயற்கைக்கோள் செயல்படுகிறதா என்பது குறித்து இன்னும் குறிப்பிடத்தக்க சந்தேகம் உள்ளது.
அது ஒரு வாரத்திற்கும் மேலாக இயங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அது, கிம்-க்கு படங்களை தொடர்ந்து அனுப்புகிறது என்பதை சுயாதீனமாக உறுதிப்படுத்தும் தகவல்கள் இல்லை. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், அதன் சுற்றுப்பாதையில் செயற்கைகோள் இருப்பதை மட்டுமே அறிந்திருப்பதாகக் கூறுகின்றன.
மேலும் வட கொரியா பற்றி தெரிந்த விஷயம் ஒன்று என்னவென்றால், அது ‘எப்போதும் பொய் சொல்லும்’ நாடு என்று கூறுகிறார், சீயோலில் உள்ள குக்மின் பல்கலைக்கழகத்தில் வடக்கு கொரிய அரசியலை ஆராயும் ஃபியோடர் டெர்டிட்டியாஸ்கி. “அவர்கள் ஏதாவது சொன்னால், அது உண்மையாக இருக்காது. எப்போதும் நடவடிக்கையைப் பாருங்கள்,” என்று டெர்டிட்டியாஸ்கி கூறுகிறார்.
பியோங்யாங் உண்மையற்ற படங்களை வெளியிடும் வரலாறு கொண்டது. அதன் மூலம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு தனது ராணுவ திறன் மற்றும் ஆயுதங்கள் குறித்து, தனது உண்மையான திறனை விட அதிகம் இருப்பதாக பிரச்சாரம் செய்யும்.
இந்த முறை வட கொரியா தான் பெறுவதாகக் கூறப்படும் படங்களை வெளியிடாமல் இருக்கத் தேர்வு செய்துள்ளது. எதிரிகள் தான் என்ன பார்க்கிறார்கள் என்பதை துல்லியமாகத் தெரிந்துகொள்ளாமல் இருக்க, பட ஆதாரங்களை வெளியிடாமல் இருக்கலாம்.
ஆனால் கடந்த காலத்தில் தான் பெருமிதம் கொள்ளும் படங்களை வெளியிட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில், விண்வெளியிலிருந்து பார்த்த பூமியின் புகைப்படங்களை வெளியிட்டது, இது வட கொரியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஏவுதலில் எடுக்கப்பட்டது என்று கூறியது.
செயற்கைகோளின் மூலோபாதய முக்கியத்துவம்
செயற்கைக்கோள் உண்மையிலேயே செயல்பட்டு வருகிறது என்றால், அந்த கண்காணிப்பின் மூலம் கிடைக்கும் தகவல்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
வட கொரிய செயற்கைக்கோள் 3மில்லி மீட்டர் முதல் 5மில்லி மீட்டர் பிக்சல் என்ற வரையறுக்கப்பட்ட தெளிவுத்திறன் வரம்பைக் கொண்டுள்ளது என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
“எனவே அது வெள்ளை மாளிகையைப் பார்க்க முடிந்தாலும், அதற்கு தந்திரோபாய பயன்பாடு இல்லை,” என்று சீயோலில் உள்ள அசான் இன்ஸ்டிடியூட் ஃபார் பாலிசி ஸ்டடீஸில் வடக்கு கொரிய ராணுவ ஆய்வாளர் யுக் யாங் கூறுகிறார்.
படங்கள் மோசமான தரத்தில் இருந்தாலும், வடக்கு கொரியாவின் செயற்கைக்கோள் இப்போது அணுசக்தி தாக்குதல்களுக்கான இலக்குகளை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க முடியும். “எனவே செயற்கைக்கோளுக்கு அதன் மூலோபாய முக்கியத்துவம் உள்ளது,” என்று யாங் கூறுகிறார்.
தற்போது இது மேலும் முக்கியமான உளவுத்தகவல்களைத் திரட்டப் போதுமானதாக இல்லாவிட்டாலும், இந்த நடவடிக்கை வட கொரியா தனது தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாகவும் இருக்கலாம்.
“குறிக்கோள் என்னவென்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் அதன் ஏவுகணை ஏவுதல்களை இயல்பாக்குவுது,” என்று சீயோலில் உள்ள எவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச படிப்புகள் பேராசிரியர் லைஃப்-எரிக் ஈஸ்லி கூறுகிறார்.
வட கொரியா அரசு, தனது செயற்கைக்கோள் திட்டத்தை நீண்ட காலமாக பாதுகாத்து வருகிறது. இதை வைத்திருப்பது ஒரு இறையாண்மை உரிமை, ஒரு ராணுவ அவசியம் மற்றும் ஒரு உள்நாட்டு அரசியல் வாக்குறுதி என்று அரசு கூறுவதாக பேராசிரியர் ஈஸ்லி கூறுகிறார்.
ஜேம்ஸ் மார்ட்டின் சென்டர் ஃபார் நான்ப்ரொலிஃபரேஷன் ஸ்டடீஸ் (சிஎன்எஸ்) இல் செயற்கைக்கோள் பட ஆய்வாளராக இருக்கும், டேவ் ஷ்மெர்லர், “இது அவர்களுக்கு பூஜ்யத்திலிருந்து ஏதோ ஒன்று கிடைத்திருப்பதற்கான ஒரு பெரிய பாய்ச்சல்,” என்று அவர் நினைக்கிறார். “ஆனால் அவர்கள் சேகரிக்கும் படங்களை பார்க்காத வரை, அதன் பயன்பாடு குறித்து ஊகிக்க மட்டுமே முடியும்,” என்று அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகளுக்கு தனது பலத்தை அறிவிக்கும் செயற்கைகோள்
வட கொரியாவுக்கு, வானத்தில் கண்காணிப்பது என்பது அரசியல் ரீதியாக நீண்டகால நோக்கமாக உள்ளது. குறிப்பாக மேற்கு நாடுகள் ஏற்கனவே பல தசாப்தங்களாக அதன் பிரதேசத்தை கண்காணித்து வருகின்றன என்பதால்.
“பியோங்யாங் அமெரிக்க செயற்கைக்கோள்கள் என்ன பார்க்கின்றன என்பதைக் கண்டு அஞ்சுகிறது. மேலும் அது சீயோல் உடனான ஒரு விண்வெளி மற்றும் ஆயுதப் பந்தயத்தில் உள்ளது என்று நம்புகிறது,” என்று பேராசிரியர் ஈஸ்லி கூறுகிறார்.
வட கொரியாவின் முக்கிய செய்தித்தாள், ரோடோங் ஸின்மம், இந்த அறிக்கைகளை வெளியிட்டிருப்பதால், அவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று டெர்டிட்டியாஸ்கி கூறுகிறார்.
மேற்கத்திய பார்வையாளர்களுக்காக, தனது சக்தியை வெளிப்படுத்த நினைக்கிறது வட கொரியா, அது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி. மேலும், வட கொரியாவின் ராணுவ மற்றும் அணு ஆயுத தளங்களை தாக்க வேண்டாமென்று மேற்கை தடுக்கும் திட்டமிட்டப்பட்ட எச்சரிக்கை செய்தியாகவும் இது உள்ளது.
‘ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுக்கிறது வட கொரியா’
“நீங்கள் எப்போதாவது எங்கள் ராணுவ இலக்குகளை தாக்க துணிந்தால், நாங்கள் உங்களைக் கொல்வோம் என்பது தான் செய்தி.”
“அவர்கள் வெள்ளை மாளிகை குறித்து ஏன் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள் என்றால், அந்தச் செய்தியை ஜோ பைடனுக்கே நேரடியாக சொல்லத் தான். அதாவது நாங்கள் உங்களைப் பார்க்கிறோம். அமெரிக்காவை மட்டுமல்ல, திரு. பைடன், உங்களையே பார்க்கிறோம், நாங்கள் உங்களைக் கொல்ல முடியும்,” என்று டெர்டிட்டியாஸ்கி கூறுகிறார்.
தனிமைப்படுத்தப்பட்ட கம்யூனிச சர்வாதிகாரமான வடகொரியாவில் வசிப்பவர்களுக்கு, தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றிய கூற்றுக்கள் நாடு நன்றாக செயல்படுவதைக் காட்டும். கடந்த வாரம் ஏவுதலின் அறிவிப்பு மற்றும் செவ்வாய்க்கிழமை புகைப்பட அறிக்கைகள் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் சபைகளுக்கான ‘தேர்தல்களை’ ஒட்டி வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
“புதிய செயற்கைக்கோள் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் போன்ற முக்கிய இடங்களைப் பார்க்க முடியும் என்ற கூற்று சர்வதேச மக்களை விட, உள்நாட்டு மக்களுக்கான செய்தியாக தான் இருக்கிறது,” என்று இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் கொரிய ஆய்வுகள் விரிவுரையாளர் டாக்டர் சார்லி சோன் கூறினார்.
“சாதாரண வட கொரிய குடிமக்களிடம் இணைய வசதிகள் இல்லை. மற்ற இடங்களின் செயற்கைக்கோள் படங்களைப் பார்க்க உலகில் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன என்பது குறித்து அவர்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது,” என்கிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்