நவம்பர் 24, 1971 அன்று, டீன் கூப்பர் என்ற நபர், அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் விமான நிலையத்தில், வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகருக்குப் பயணம் செய்யும் டிக்கெட்டை வாங்கினார்.
நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸின் கவுன்டரில் இருந்த ஊழியர்களுக்கு அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிக்கலான குற்றத்தை இந்த நபர் செய்யப் போகிறார் என்பது அப்போது தெரியாது. 52 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த விதமான துப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
40 வயதுக்கு மேற்பட்ட நபரான டீன் கூப்பர் மென்மையாக பேசும் மனிதர். அப்போது அவர் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு டை அணிந்திருந்தார். அவரைப் பார்க்கும்போது அவர் ஒரு தொழிலதிபராகத் தெரிந்தார். விமானத்தில் ஏறியதும், தனக்கு ஒரு பானத்தை ஆர்டர் செய்தார்.
கூப்பர் தவிர, அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டதும், சுமார் 3 மணியளவில், டீன் கூப்பர் விமானப் பணிப்பெண்ணை அழைத்து ஒரு குறிப்பைக் கொடுத்தார்.
விமானப் பணிப்பெண் அந்தக் குறிப்பைப் படித்ததும் வெளிறிப் போனார். டீன் கூப்பர் வைத்திருந்த பையில் வெடிகுண்டு இருப்பதாகவும், பணிப்பெண் அமைதியாக அவருக்கு அடுத்த இருக்கையில் அமர வேண்டும் என்றும் அந்தக் குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.
பூமி விழுங்கி விட்டதா, வானத்திலேயே மாயமானாரா?
குழப்பமடைந்த பணிப்பெண் அவர் கூறியவாறே செய்ய முயற்சித்த போது, டீன் கூப்பர் பிரீஃப்கேஸ்களில் ஒன்றை லேசாகத் திறந்து உள்ளே ஒரு பார்வையைக் காட்டினார்.
ப்ரீஃப்கேஸில் சில கம்பிகள் மற்றும் சிவப்பு குச்சிகள் இருந்ததை மட்டுமே பணிப்பெண் கவனித்தார். உண்மையில் அது வெடிபொருளா அல்லது வேறு ஏதாவது வெடிகுண்டா என்று யாருக்கும் தெரியவில்லை.
குற்ற உலகின் இந்த மர்மமான புதிர், சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு இன்னும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது, இது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பினால் (FBI) இன்று வரை தீர்க்க முடியாத வழக்காக உள்ளது.
இந்த புதிரான சம்பவத்தின் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், டீபி கூப்பர் என்று அழைக்கப்படும் டீன் கூப்பர், இந்த சம்பவத்தின் போது ஒரு பயணிகள் விமானத்தை ஒற்றை மனிதராக கடத்தினார்.
ஊழியர்களை பணயக் கைதியாகப் பிடித்து இரண்டு லட்சம் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 1.65 கோடி ரூபாய்)பெற்றுக்கொண்டு, டீன் கூப்பர் பூமியில் எங்காவது விழுந்து உயிரிழந்தாரா அல்லது வானம் அவரை விழுங்கிவிட்டதா என்று இன்றும் மக்கள் கேட்கும் விதத்தில் விமானப் பயணத்தின் போது அதே விமானத்தில் இருந்து காணாமல் போனார்.
டீன் கூப்பர் மிரட்டல்
கூப்பர் தனது கோரிக்கைகளை பணிப்பெண்ணிடம் பட்டியலிட்டார். அதன்படி இரண்டு லட்சம் டாலர்கள் மற்றும் பாராசூட்டுகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும், கூப்பரிடமிருந்து பணம் தொடர்பாக ஒரு சிறப்பு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த தொகையில் 20 டாலர் நோட்டுகள் மட்டுமே சேர்க்கப்பட இருந்தது. கடத்தல்காரர் தனக்கு வழங்கப்பட்ட டாலர் நோட்டுகள் ஒரே தொடரில் இருக்கக்கூடாது, அதாவது அவற்றை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
மேலும், தனது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து விமானத்தை வெடிகுண்டை வெடிக்கச் செய்து அழித்துவிடுவதாகவும் மிரட்டினார். பணிப்பெண் இந்தச் செய்தியை விமானியிடம் தெரிவித்தபோது, சிறிது நேரம் கழித்து இண்டர்காமில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கப் போவதாக ஒரு அறிவிப்பு கேட்டது.
விமானத்தில் இருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
விமானம் தரையிறங்குவதற்கு முன்பே கடத்தல் குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கடத்தல்காரர் பணத்துடன் பாராசூட்களை ஏன் கேட்டார் என்று காவல்துறையும், எஃப்.பி.ஐயும் யோசித்துக் கொண்டிருந்தன.
விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெளியில் வெளிச்சம் இருக்கும் இடத்தில் விமானத்தை நிறுத்த வேண்டும் என்றும், வெளியில் இருந்து யாரும் உள்ளே பார்க்காதபடி உள்ளே விளக்குகளை டிம் செய்ய வேண்டும் என்றும் விமானத்தை கடத்தியவர் எச்சரித்துள்ளார்.
விமானத்தின் அருகே ஏதேனும் வாகனம் அல்லது நபர் வந்தால், விமானத்தை வெடிக்கச் செய்துவிடுவேன் என கூப்பர் மிரட்டினார்.
விமானக் கடத்தல்காரரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு விமான நிறுவனத்தின் தலைவரை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். வெடிகுண்டு அச்சுறுத்தலை மனதில் கொண்டு, பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.
விமான ஊழியர் ஒருவர் பணத்துடன் விமானத்தை அணுகினார். விமான பணிப்பெண் விமானத்தின் ஏணியை இறக்கினார். முதலில் இரண்டு பாராசூட்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஒரு பெரிய பையில் பணம் கொடுக்கப்பட்டது.
கடத்தல்காரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர் 36 பயணிகளையும் ஒரு விமானப் பணிப்பெண்ணையும் விடுவித்தார். அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கினார்கள்.
பாராசூட் உதவியுடன் தப்பிய டீன் கூப்பர்
கூப்பர் இரண்டு விமானிகளையும், ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் ஒரு விமானப் பொறியாளரையும் விடுவிக்கவில்லை. மேலும் விமானத்தை நியூ மெக்ஸிகோ நகரத்திற்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
விமானத்தின் முழு ஊழியர்களும் காக்பிட்டிலுல் அமர்ந்திருக்க, கூப்பர் விமானி அறைக்கு வெளியே இருந்தார். கூப்பர் விமானத்தை 150 நாட்ஸ் வேகத்தில் பத்தாயிரம் அடி உயரத்திற்கு கொண்டு செல்லும்படி விமானிக்கு அறிவுறுத்தினார்.
விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானி அறையில் சிவப்பு விளக்கு எரிந்தது. இதன் பொருள் என்னவென்றால் விமானத்தின் கதவை யாரோ திறந்து விட்டார்கள் என்று அர்த்தம்.
அப்போது விமானி கூப்பரை இண்டர்காம் மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஏதாவது தேவையா என்று கேட்டார். அதற்கு கோபமாகப் பதில் அளித்த கூப்பர், ‘’இல்லை,’’ என்றார்.
வெறும் மர்மங்களை மட்டுமே கொண்டிருந்த கடத்தல்காரர், விமானியிடம் பேசிய கடைசி வார்த்தைகள் இவை தான். இதையடுத்து அவர் தலைமறைவானார். பாராசூட் மூலம் கூப்பர் பணத்துடன் விமானத்தில் இருந்து குதித்தது பின்னர் தெரியவந்தது.
இருபது டாலர் நோட்டின் மர்மம்
பணத்தின் மொத்த எடை இருபத்தி ஒரு பவுண்டு இருக்கும் என்பதால் இருபது டாலர் நோட்டுகளை மட்டும் ஏன் அவர் கேட்டார் என்பது பின்னர் புரிந்தது. இதை விட குறைவான தொகையுடன் கூடிய டாலர்களைக் கேட்டிருந்தால், எடை அதிகமாக இருந்திருக்கும் என்பதால் விமானத்தில் இருந்து குதிப்பது ஆபத்தானது.
டாலரின் மதிப்பு அதிக அளவு இருந்தால், எடை குறைவாக இருக்கும். ஆனால் அவற்றைப் பயன்படுத்தினால் ஆபத்து இல்லாமல் இருக்காது. இருப்பினும், எஃப்.பி.ஐ புத்திசாலித்தனமாக இருந்தது என்பதுடன் அந்த அனைத்து நோட்டுகளிலும் ‘எல்’ என்ற குறியீட்டை பதித்திருந்தது.
ஆனால் இங்கு கூப்பர் பாராசூட் கேட்டதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்தால், ஏன் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
விமானத்தை விரட்டியடிக்க காவல்துறை திட்டமிட்டிருந்தது உண்மை. முதலில் அது F-106 விமானத்தைப் பயன்படுத்த நினைத்தது. ஆனால் இந்த வேகமான போர் விமானங்கள் கூப்பர் கோரியபடி குறைந்த வேகத்தில் பறக்க முடியாது.
எனவே, சர்வதேச காவல் அமைப்பிடமிருந்து T-33 விமானங்கள் கோரப்பட்டன. ஆனால் இந்த விமானங்கள் கூப்பர் பயணித்த விமானத்தை அடைந்த போது அவர் குதித்துவிட்டார்.
பறக்கும் விமானத்தில் என்ன நடந்தது?
பயணிகள் விமானம் பத்திரமாக தரையிறங்கியது, ஆனால் காக்பிட்டிலிருந்து வெளியேறிய பிறகு, கூப்பரின் எந்த அறிகுறியும் இல்லை என்பதை ஊழியர்கள் கவனித்தனர். விமானத்தில் அவரது டை மற்றும் பாராசூட் மட்டுமே இருந்தன.
அவர் விமானத்தில் இருந்து வெளியே குதித்த இடத்தின் அடிப்படையில், லேக் மெரூன் என்ற இடத்தைச் சுற்றியுள்ள நிலத்தில் அவர் தரையிறங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பு உடனடியாக அந்தப் பகுதியில் அவரைத் தேடத் தொடங்கியது. மேலும், நூற்றுக்கணக்கான மக்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. படிப்படியாக தேடலின் பரப்பு விரிவடைந்தது. ஆனால் அந்த முயற்சியில் எந்த ஒரு வெற்றியையும் அடைய முடியவில்லை.
கூப்பர் காற்றில் மறைந்தது போல் தோன்றியது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தது. அதில் விமானத்தைக் கடத்தி பணத்தைப் பெற்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் பாராசூட் உதவியுடன் விமானத்தில் இருந்து குதித்தார்.
ஆனால் இந்த முறை ரிச்சர்ட் ஃப்ளூயிட் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க புலனாய்வு அமைப்பு தேடிவந்த நபர் தான் பிடிபட்டதாக முதலில் நம்பப்பட்டது.
டாலர் நோட்டுகளின் வரிசை எண்கள்
ஆனால், விமானப் பணிப்பெண்ணிடம் அவருடைய முகத்தைக் காட்டிய போது, இது அதே நபர் இல்லை என்று கூறினர். டீன் கூப்பரின் வெற்றிகரமான கடத்தலின் தாக்கத்தால் ரிச்சர்ட் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்பது புரிகிறது.
பல ஆண்டுகளாக எஃப்.பி.ஐ. கூப்பரைப் பற்றி தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. பின்னர் விமானத்தில் இருந்து குதித்த போதே அவர் கூப்பர் உயிரிழந்துவிட்டார் என நம்பத் தொடங்கியது.
அதன் பின் 1980 ஆம் ஆண்டில், ஒரு குழந்தை ஒரு ஆற்றின் அருகே கிழிந்த பழைய இருபது டாலர் நோட்டுகளைக் கண்டுபிடித்தது. அதன் மொத்த மதிப்பு 5,800 டாலர்கள். இந்த தகவல் எப்.பி.ஐ.க்கு கிடைத்ததும், வரிசை எண்ணை பரிசோதிக்கும் நடவடிக்கை தொடங்கியது.
கூப்பரின் கோரிக்கையின் பேரில் கொடுக்கப்பட்ட அதே நோட்டுகள் தான் இவை.
ஒரு வேளை இரவில் மரங்கள் நிறைந்த பகுதியின் நடுவில் விழுந்ததால் குதித்த பிறகு கூப்பர் உயிர் பிழைக்கவில்லை என்ற எண்ணத்திற்கு இது மேலும் வலுவூட்டியது.
டீன் கூப்பர் எங்கே போனார்? என்ன ஆனார்?
இருப்பினும், எல்லோரும் இந்த யோசனைக்கு உடன்படவில்லை. கூப்பர் குதிக்கும் போது, டாலர் நோட்டுக்கற்றையின் ஒரு பகுதி நோட்டுகள் அவரிடமிருந்து விழுந்திருக்கலாம் என்று பலர் நம்பினார்கள். மீதமுள்ள பணத்துடன் அவர் பாதுகாப்பாக தரையிறங்கி, அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை அடுத்து கூப்பர் தொடர்பான புதிரின் மர்மம் ஆழமடைந்தது என்பதுடன் டீன் கூப்பர் அமெரிக்காவில் பிரபலமான ஆளுமையாக உருமாறினார். ஆனால், உண்மையான டீன் கூப்பர் யார், அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது இதுவரை யாருக்கும் தெரியாது என்பது வேறு விஷயம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2011 இல், மரியா கூப்பர் என்ற பெண், டீன் கூப்பர் உண்மையில் தனது மாமா என்று கூறினார்.
ஒரு விமானம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் உரையாடலைக் கேட்டதாக மரியா கூறினார். ஆனால் மரியா தனது மாமா விமானத்திலிருந்து குதித்த பிறகு பணத்தை காற்றில் தவறவிட்டதாகவும் கூறினார்.
அதற்குள் இதுபோன்ற பல கதைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் இந்தக் கதையின் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடத்தப்பட்ட பயணிகள் விமானத்தின் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய ஒருவர், மரியாவின் மாமாவின் படத்தைப் பார்த்து, அவரது தோற்றம் கடத்தல்காரரைப் போலவே இருப்பதாகக் கூறினார். ஆனால் அவரது இந்த கூற்றையும் டீன் கூப்பரையும் அதிகாரிகளால் இணைத்துப் பார்க்க முடியவில்லை. மீண்டும் அவருடைய கோப்புகள் தொடர்ந்து விசாரணையின் ஊடாக நகர்ந்துகொண்டிருந்தன.
2016 ஆம் ஆண்டில், களைத்துப்போன அமெரிக்க புலனாய்வு அமைப்பு, இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்காக வெளியிடப்பட்ட ஆதாரங்களை மற்ற வழக்குகளில் பயன்படுத்த முடிவு செய்தது. 45 ஆண்டுகள் விசாரணை நடத்தியும், புலனாய்வு அதிகாரிகள் இந்த குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.
இந்த வழக்கில் அவர்கள் இப்போது அதிக கவனம் செலுத்தவில்லை என்றாலும், யாருக்காவது ஏதேனும் தகவல் இருந்தால், அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று புலனாய்வு அமைப்பு ஏற்கெனவே ஒரு அறிவிப்பை முன்வைத்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் பிடிபடாத ஒரே கடத்தல்காரர் டீன் கூப்பர் மட்டுமே. மேலும் அவரது நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 அன்று, அவரைத் தேடி அமெரிக்க புலனாய்வு அமைப்பு தனது முதல் தலைமையகத்தை கட்டிய இடத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
வணிக உடைகளை அணிந்தவர்கள், கண்ணாடி அணிந்தவர்கள் மற்றும் பாராசூட்களை வைத்திருப்பவர்கள் ஏரியல் உணவகத்தில் இன்னும் கூடுகிறார்கள்- இந்தக் கூட்டம் இரவு வரை தொடர்கிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்