
பட மூலாதாரம், PPREDDYOFFICIAL/INSTA
பாமிரெட்டி பிச்சிரெட்டி, மேகாவின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் பத்திர விவரங்கள் குறித்து நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை அளித்த கட்சிகளின் பட்டியலில், ஹைதராபாத்தில் உள்ள மேகா இன்ஜினியரிங் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு ரூபாய் 966 கோடி நன்கொடை அளித்துள்ளது.
சிறிய நிறுவனமாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட மேகா இன்ஜினியரிங் இவ்வளவு பெரிய தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கும் பெரிய நிறுவனமாக மாறியது எப்படி? இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து அரசு ஒப்பந்தப் பணிகள் கிடைப்பது எப்படி?
மேகா இன்ஜினியரிங் நிறுவனத்தின் பின்னணி என்ன?
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம், சிறு ஒப்பந்ததாரர் என்ற நிலையில் இருந்து படிப்படியாக வளர்ந்து இப்போது அரசு ஒப்பந்தப் பணிகளையே பிரதானமாக செய்து வருகிறது.
தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் லிப்ட் பாசன திட்டத்தின் பெரும்பாலான பகுதி இந்த நிறுவனத்தால் கட்டப்பட்டது. சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான மகாராஷ்டிராவின் தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டமும் இந்த நிறுவனத்தின் கைகளில் உள்ளது.
நீர்ப் பாசனம், போக்குவரத்து, மின்சாரம் என பல துறைகளில் இந்த நிறுவனம் வணிகம் செய்து வருகிறது. சுமார் 15 மாநிலங்களில் தாங்கள் செயல்படுவதாகக் இந்நிறுவனம் கூறுகிறது. ஓலெக்ட்ரா (Olectra) மின்சார பேருந்துகளின் உற்பத்தியாளர்களும் இவர்கள் தான்.
தர வரிசைகளை வெளியிடும் பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா (The Burgundy Private Hurun India) என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவின் முதல் 10 மதிப்புமிக்க (பங்குசந்தையில் பட்டியலிடப்படாத) நிறுவனங்களில் மேகா இன்ஜினியரிங் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்நிய முதலீடு இல்லாத பூட் ஸ்ட்ராப் செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இது நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.

பட மூலாதாரம், MEGHA ENGINEERING AND INFRASTRUCTURES LTD/FACEBOOK
அரசு ஒப்பந்தப் பணிகளையே பிரதானமாக செய்து வருகிறது மேகா இன்ஜினியரிங் நிறுவனம்.
நாடு முழுவதும் செயல்படும் நிறுவனம்
ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில், விவசாய குடும்பத்தில் இருந்து வந்த பாமிரெட்டி பிச்சி ரெட்டி, 1989இல் இந்த நிறுவனத்தை தொடங்கினார். பிச்சி ரெட்டியின் உறவினர் புரிதிபதி வெங்கட கிருஷ்ணா ரெட்டி, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.
பத்துக்கும் குறைவான ஊழியர்களுடன் துவங்கப்பட்ட நிறுவனம், கடந்த ஐந்தாண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து, கணிசமாக விரிவடைந்துள்ளது. மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசஸ் என ஆரம்பிக்கப்பட்டு, 2006இல் மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமாக மாறியது.
2019இல் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள்
மேகாவின் நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் தனது முதல் அலுவலகத்தைத் திறந்தது. தொடக்கத்தில் பைப் லைன் அமைக்கும் பணிகளை அதிகளவில் செய்து வந்தது. 2014க்குப் பிறகு இந்நிறுவனத்தின் போக்கு மாறியது. தெலுங்கானா உருவான பிறகு, பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் இந்த நிறுவனத்திற்கு கிடைத்தன.
மெல்லமெல்ல ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி வட இந்தியாவிலும் பல திட்டங்களை கையிலெடுத்தது. இப்போது இந்த நிறுவனம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைக் கடந்து நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது.
ஒரு கட்டத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக அறியப்பட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா ரெட்டி. இப்போது அவர் பாஜகவுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார்.
அக்டோபர் 2019இல், மேகா குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறையும் விசாரித்தது. ஹைதராபாத் உட்பட நாடு முழுவதும் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
நிதியளித்த நிறுவனங்கள் எவை?
தேர்தல் பாத்திரங்கள் மூலமாக மேகா நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளது என்ற விவரம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
மேகா நிறுவனத்திற்கு அடுத்ததாக தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த
- டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 80 கோடியும்,
- என்சிசி நிறுவனம் 60 கோடியும்
- நாட்கோ பார்மா 57 கோடியும்
- டிவிஸ் லேப்ஸ் 55 கோடியும்
- ராம்கோ சிமெண்ட்ஸ் 54 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளன.
இது தவிர, சுமார் 30 தெலுங்கு நிறுவனங்களும், தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்ட தனிநபர்களும் இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்துள்ளனர்.
இந்த பட்டியலில் சிமென்ட் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் உள்ளன. கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்களும் இதில் அடக்கம். இவற்றில் பெரும்பாலானவை ஹைதராபாத்தில் உள்ளன.

பட மூலாதாரம், TELANGANACMO
அதிக நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பாரத் இராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) நான்காவது இடத்தில் உள்ளது.
அதிக நிதி பெற்ற கட்சிகள் எவை?
நாடு முழுவதும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடைகளைப் பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. மொத்தம் ரூபாய் 6 ஆயிரம் கோடியை பாஜக பெற்றுள்ளது. இது மொத்த தேர்தல் பத்திர நிதியில் கிட்டத்தட்ட பாதியாகும்.
பாஜகவைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் ரூபாய் 1,600 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூபாய் 1,400 கோடியும் பெற்றுள்ளன. அதிக நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பாரத் இராட்டிர சமிதி (பிஆர்எஸ்) நாட்டிலேயே நான்காவது இடத்தில் உள்ளது.
பிஆர்எஸ் கட்சிக்குப் பிறகு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏழாவது இடத்தில் 337 கோடி நிதியையும், 8வது இடத்தில் உள்ள தெலுங்கு தேசம் 219 கோடி நிதியையும், 15வது இடத்தில் உள்ள ஜன சேனா 21 கோடி நிதியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளது.
ஆனால், தேர்தல் குழுவிற்கு எஸ்பிஐ வங்கி வழங்கிய தகவல்கள் முழுமையானதாக இல்லை. யார், எந்த நாளில் எவ்வளவு நிதியை டெபாசிட் செய்தார்கள்? யார், எந்த நாளில் எவ்வளவு நிதியைப் பெற்றார்கள்? போன்ற தகவல்கள் இல்லை.
அசல் பட்டியல் கொடுக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான பக்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பத்திகள் தகவல்கள் உள்ளன. பணம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் என இரு பட்டியல்கள். அவர்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது.
நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கிய தேதிகளை வைத்து, தொடர்ந்து அந்த நிறுவனங்கள் பெற்ற லாபம் என்ன அல்லது அதற்கு முன்பாக அந்த நிறுவனங்கள் சந்தித்த வழக்குகள் எவை என்பதை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தத் தரவுகள் துல்லியமாகவும் தெளிவாகவும் ஒருங்கிணைக்கப்படும் வரை, யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது புதிராகவே இருக்கும்.
இந்த விவகாரத்தில் சிபிஎம் கட்சி மட்டுமே தேர்தல் பத்திரங்களை நிராகரித்தது. நாங்கள் தேர்தல் பத்திரங்களை தீவிரமாக எதிர்க்கிறோம் என்று கூறிய அக்கட்சி, அதன் மூலமாக இதுவரை ஒரு ரூபாயைக் கூட பெறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பத்திரங்களின் வரிசை எண் இல்லாததால் சிக்கல்
ஸ்டேட் வங்கி வழங்கிய தகவல்களில் நன்கொடை வழங்குபவரின் பெயரைத் தவிர பத்திரங்களின் வரிசை எண் இல்லை. பத்திரம் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலில் எந்த நாளில் எவ்வளவு பத்திரங்கள் வாங்கப்பட்டது என்பது உள்ளது.
அதேபோல் இரண்டாவது பட்டியலிலும் பத்திர வரிசை எண் குறிப்பிடப்படவில்லை. இந்த இரண்டு பட்டியலிலும் பத்திர வரிசை எண்கள் கொடுக்கப்பட்டிருந்தால், எந்தெந்த கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பதை, பத்திர வரிசை எண்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்.
பத்திர வரிசை எண்களை பொருத்தும் பணியை முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த வரிசை எண்களை எஸ்பிஐ வங்கி கொடுத்திருந்தால், ஊடகங்களும், தொண்டு நிறுவனங்களும், ஆர்வமுள்ள தரப்பினரும் அவற்றைப் பொருத்திப் பார்த்து, எந்தக் கட்சி யாரிடம் நன்கொடை பெற்றது என்பதைக் எளிதாகக் கண்டுபிடித்திருக்கலாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்