யூனியன் பிரதேசமான லடாக்கில் என்ன பிரச்னை? அங்கிருக்கும் மக்கள் மாநில அந்தஸ்து கேட்பது ஏன்? ஆறாவது அட்டவணை கொண்டுவரப்படுமா?

யூனியன் பிரதேசமான லடாக்கில் என்ன பிரச்னை? அங்கிருக்கும் மக்கள் மாநில அந்தஸ்து கேட்பது ஏன்? ஆறாவது அட்டவணை கொண்டுவரப்படுமா?

லடாக்கில் இப்போது என்ன பிரச்னை? மக்களின் கோபம் என்ன?

பட மூலாதாரம், SONAM ANGCHUK

படக்குறிப்பு,

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி லடாக்கில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கேட்டு அங்கிருக்கும் மக்கள் சமீபகாலமாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக் பகுதி, தன் மாநிலமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி நடக்காததால், வேலை வாய்ப்பு, அடையாளம் ஆகியவற்றை இழந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். லடாக்கின் சமூக-அரசியல் அமைப்புகள் டெல்லியில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் துவங்கும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே-யில் வசிக்கும் பத்மா, பிப்ரவரி 3 அன்று கடுமையான குளிரில் லே-வில் உள்ள போலோ மைதானத்தை அடைந்தார். அங்கு லடாக் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆறாவது அட்டவணை மற்றும் மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தினர்.

பத்மா லே-வில் சிறிய ஆயத்த ஆடை கடை நடத்தி வருகிறார். வரலாறு பிரிவில் முதுகலை படித்துள்ள அவர், அரசு வேலை கிடைக்காததால், வேறு வழியில்லாமல், வருமானத்திற்காக கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வியாபாரம் முடங்கியுள்ளதாக கூறுகிறார் பத்மா.

“என் தொழில் முடங்கிக் கிடக்கிறது. நான் அதிகம் சம்பாதிக்கவில்லை. படித்து முடித்தவுடன் அரசு வேலை கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை. பிறகு தொழில் தொடங்குவதைத் தவிர வேறு வழி இல்லை,” என்கிறார் அவர்.

“இந்தத் தொழிலின் எதிர்காலமும் தற்போது இருண்டுள்ளது. இங்கு வேலையில்லாத ஒவ்வொருவரும் சொந்தமாக கடைகளைத் திறக்கிறார்கள். இதன் காரணமாக வேலை குறைந்து வருகிறது. ஆன்லைன் வணிகம் அதிகரிப்பதாலும் வியாபாரம் குறைந்து வருகிறது. லடாக் ஒரு சிறிய இடம். இங்கு மூன்று லட்சம் பேர் மட்டுமே வசிக்கின்றனர்,” என்கிறார் பத்மா.

“இவ்வளவு குறைவான மக்கள்தொகை உள்ள பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமானோர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில், எத்தனை பேர் என் கடைக்கு வருவார்கள்?” என கேட்கிறார்.

லடாக்கில் இப்போது என்ன பிரச்னை? மக்களின் கோபம் என்ன?

பட மூலாதாரம், SONAM ANGCHUK

படக்குறிப்பு,

பூஜ்ஜிய வெப்பநிலை இருந்தபோதிலும், லே-யில் ஆறாவது அட்டவணை கோரிக்கையால் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.

லடாக் குறித்த கவலை

ஒருபுறம், அவர் தனது வணிகத்தைப் பற்றி கவலைப்படுகிறார். மறுபுறம், லடாக் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படாதது பத்மாவை மிகவும் ஏமாற்றமடையச் செய்கிறது.

“எனது தொழிலை விட லடாக்கைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன். நாங்கள் எங்கள் நிலத்தை இழக்கப் போவது போல் உணர்கிறோம், சமீபத்தில் கடுமையான குளிரில், எங்கள் நிலத்தைக் காப்பாற்ற நாங்கள் பேரணி நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்கிறார் அவர்.

இப்போதெல்லாம் யூனியன் பிரதேசமான லடாக்கில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே உள்ளது, ஆனாலும், ஆறாவது அட்டவணைக்கான கோரிக்கையால் அங்கு கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.

கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, ஆயிரக்கணக்கான மக்கள் லே-வில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், லடாக்கின் பிற பகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அன்று, அபெக்ஸ் பாடி லே (ABL) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA) ஆகிய அமைப்புகள் பந்த் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இவை சமூக, மத மற்றும் அரசியல் அமைப்புகளாகும், அவை லடாக் குறித்த நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் தங்கள் இயக்கத்தை நடத்தி வருகின்றன.

பிப்ரவரி 19, 2024 அன்று, டெல்லியில் லடாக் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லடாக்கில் இப்போது என்ன பிரச்னை? மக்களின் கோபம் என்ன?

பட மூலாதாரம், MAJID JAHANGIR/BBC

படக்குறிப்பு,

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் பிப்ரவரி 25 முதல் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்குவோம் என்று சோனம் வாங்சுக் கூறுகிறார்.

‘லடாக்கில் ஜனநாயகம் இல்லை’

லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பிபிசியிடம் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்திலிருந்தும் பின்வாங்கிவிட்டதாக சோனம் வாங்சுக் கூறினார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

“யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு நல்லது நடக்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அரசாங்கம் வாக்குறுதிகளில் இருந்து நழுவிச் செல்வது போல் உள்ளது. யூனியன் பிரதேசம் அமைந்தால் அதனுடன் சட்டமன்றமும் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது,” என அவர் தெரிவித்தார்.

“ஆனால், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதன் பொருள் அப்பகுதி எப்போதும் ஆளுநரின் ஆட்சியின் கீழ் இருக்கும்,” என்கிறார் வாங்சுக்.

வாங்சுக் கூறுகையில், “நமது நுட்பமான நிலைமைகளைப் பாதுகாக்க ஆறாவது அட்டவணை செயல்படுத்தப்பட வேண்டும். முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக, 370-வது பிரிவின் பாதுகாப்பைப் பெற்றோம்,” என தெரிவித்தார்.

“யூனியன் பிரதேசம் உருவான பிறகு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு ஆறாவது அட்டவணை குறித்து பேச மாட்டோம் என பேச்சுகள் கிளம்பின,” என்கிறார் அவர்.

அவர் கூறுகையில், “சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து மீட்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் லடாக்கிற்கு அது கிடைக்காது. நமக்கு ஜனநாயகம் இல்லை என்பதுதான் இதன் அர்த்தம். இப்போது நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை,” என்றார்.

பிப்ரவரி 3-ஆம் தேதி லே-வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அங்கு செயல்பட்டு வரும் அஞ்சுமன் மொயின்-உல்-இஸ்லாம் அமைப்பின் மகளிர் பிரிவின் தலைவி ஆசியா மாலுவும் பங்கேற்றார்.

லடாக் யூனியன் பிரதேசமாக மாறிவிட்டது. ஆனால், ஆறாவது அட்டவணை மற்றும் மாநில அந்தஸ்தைப் பெறாததால், இங்குள்ள மக்கள் தங்கள் அடையாளத்தையும் கலாசாரத்தையும் இழக்கிறார்கள் என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

அவர் கூறுகையில், “எங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்கவில்லை. யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் இப்போது எங்கள் அடையாளத்தை இழந்து வருகிறோம். நமது லடாக்கே பாதுகாப்பாக இல்லாதபோது லடாக் பெண்கள் எங்கே பாதுகாப்பாக இருக்க முடியும்? எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் எதிர்காலத்திலும் போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்போம்,” என்றார்.

அஞ்சுமன் மொயின்-உல்-இஸ்லாம் என்ற அமைப்பு லே-வில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறது.

லே நகரில் வசிக்கும் துன்டுப் தன்லிஸ், சில ஆண்டுகளுக்கு முன், அரசிதழ் அதிகாரி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.

துன்டுப் அரசு வேலைக்காக நிறையப் போராடினார். ஆனால், வயதாகி விட்டதால் வேலை கிடைக்காமல் இப்போது மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

அவர் கூறுகையில், “2016-இல், நான் முதுகலை பட்டம் பெற்றேன். எனக்கு அரசிதழ் பதவி தேவை. அதற்காக நான் நிறைய தயார் செய்தேன். முன்பு ஜம்மு காஷ்மீர் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (ஜே.கே.பி.சி) விண்ணப்பித்தேன். ஆனால், 2019-இல் லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது,” என்றார்.

“அப்போதிருந்து, லடாக்கில் அரசிதழ் அதிகாரிக்கான ஆட்சேர்ப்பு இல்லை. இப்போது எனக்கு விருப்பம் இல்லை. இன்றும் நான் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறேன். லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, அரசாங்கம் நிறைய சொன்னது, எங்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தன,” என்கிறார் அவர்.

லடாக் பிரிக்கப்படுவதற்கு முன்பு, லடாக்கைச் சேர்ந்தவர்களும் ஜம்மு காஷ்மீர் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் இப்போது தனி யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு அது சாத்தியமில்லை.

லடாக்கில் இப்போது என்ன பிரச்னை? மக்களின் கோபம் என்ன?

பட மூலாதாரம், MAJID JAHANGIR/BBC

படக்குறிப்பு,

சாதிக் அலி, கார்கில் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கார்கில் மாவட்டத்தைச் சேர்ந்த சாதிக் அலியின் நிலையும் இதேதான். அவர் நீண்ட காலத்திற்கு முன்பு பட்டம் பெற்றார், ஆனால் இன்றுவரை வேலை கிடைக்கவில்லை.

சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்பு, லடாக் மக்களுக்கு அவர்களின் பழங்குடி அந்தஸ்து காரணமாக பாதுகாப்பு இருந்தது, அது இப்போது இல்லை என்று கார்கில் குடியிருப்புவாசியான ஹாஜி முஸ்தஃபா கூறுகிறார்.

முஸ்தஃபா, லே மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் சட்ட ஆலோசகர் ஆவார்.

கார்கிலில் பிபிசியிடம் பேசிய அவர், பழங்குடியினர் பெரும்பான்மையாக இருந்தாலும், லடாக்கிற்கு அந்த அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று கூறினார். பல அமைச்சகங்கள் பரிந்துரை செய்த போதிலும் மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அசாம், திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்கள் வைத்திருப்பது போல் ஆறாவது அட்டவணை எங்கள் சிறப்பு கோரிக்கை என்றும் அவர் கூறினார்.

லடாக் மக்களின் புகார் என்ன?

யூனியன் பிரதேசமாக மாறுவதற்கு முன்பு, லடாக் மக்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் யூனியன் பிரதேசம் உருவான பிறகு இந்தப் போக்கு நின்று போனது.

2019-ஆம் ஆண்டுக்கு முன், ஜம்மு மற்றும் காஷ்மீர் சர்வீஸ் செலக்ஷன் போர்டு, அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்களுக்கான ஆட்சேர்ப்பு செய்து வந்தது. மேலும் லடாக்கிலிருந்தும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், இப்போது இந்த நியமனங்களை பணியாளர் தேர்வு ஆணையம் செய்து வருகிறது.

இந்த ஆணையம் மத்திய அரசுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். தனி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டதிலிருந்து, லடாக்கில் வேலைகளுக்கான அரசிதழ் பதிவு பெறாத பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு பெரிய அளவில் நடத்தப்படவில்லை, இதனால் லடாக் இளைஞர்கள் கோபமடைந்துள்ளனர்.

லடாக் நிர்வாகம் அக்டோபர் 2023-இல் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் யூனியன் பிரதேசத்தில் ஆட்சேர்ப்பு செயல்முறை நடந்து வருவதாகக் கூறியது.

லடாக் யூனியன் பிரதேசமாக மாறுவதுடன், லடாக்கிற்கு சட்டமன்றம் மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று லடாக் மக்கள் எதிர்பார்த்தனர்.

பாஜக தனது 2019 தேர்தல் அறிக்கையிலும், கடந்த ஆண்டு லடாக் ஹில் கவுன்சில் தேர்தலிலும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையை உறுதியளித்தது.

இந்த வாக்குறுதிகளில் இருந்து பாஜக பின்வாங்கியதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் எழுந்த அதிருப்தி ஆர்ப்பாட்டமாக உருவெடுத்தது.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 244 ஆறாவது அட்டவணையின் கீழ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களின் (ADCs) தன்னாட்சி நிர்வாக பகுதிகளை உருவாக்குவதற்கு வழங்குகிறது. இதன்படி, மாநிலத்திற்குள் சட்டமன்ற, நீதித்துறை மற்றும் நிர்வாக விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிலான சுயாட்சியை அனுபவிக்க முடியும்.

மாவட்ட சபைகளில் மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளனர். நான்கு உறுப்பினர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆறாவது அட்டவணையின்படி, மாவட்ட கவுன்சிலின் அனுமதியுடன் மட்டுமே இப்பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க முடியும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் , லடாக்கின் துணைநிலை ஆளுநர் ஜி.டி. மிஸ்ரா, லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, வளர்ச்சித் துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

லடாக்கில் இப்போது என்ன பிரச்னை? மக்களின் கோபம் என்ன?

பட மூலாதாரம், MAJID JAHANGIR/BBC

லடாக் பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அதேசமயம், லடாக்கில் உள்ள பாஜக தலைவர்கள் விஷயங்களை முன்வைக்கும் விதம் உண்மையில்லை என்று கூறுகிறார்கள். லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது பாஜக தான் என்றும் அக்கட்சி கூறுகிறது.

லடாக்கில் உள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிட்டி குங்ஜாங் பிபிசியிடம் கூறுகையில், யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு, இப்போது லடாக்கில் ஒவ்வொரு பணியும் மெதுவாக முடிக்கப்பட்டு வருகின்றன, பல சிக்கல்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

அவர் கூறுகையில், “லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பொறுத்தவரை, அது இப்போதைக்கு சாத்தியமில்லை. மாநிலமாக மாற, நமக்கு சொந்த வளங்கள் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்பியிருக்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் சில ஆண்டுகளில் லடாக் மாநிலமாக மாறும் என்று நினைக்கிறேன். ஆறாவது அட்டவணையைப் பொருத்தவரை, நாங்கள் அதில் நிறைய வேலை செய்துள்ளோம்,” என்றார்.

பிட்டி குங்ஜாங் கூறுகையில், “ஆறாவது அட்டவணை பொருந்தக்கூடிய இடங்களில் கூட நாங்கள் சோதனைகளை நடத்தியுள்ளோம். அதைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் பிட்டி குங்ஜாங் கூறும்போது, ​​“இங்கு வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. லடாக்கிற்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய சில நல்ல ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அரசாங்கம் ஏன் எதுவும் செய்யவில்லை என அவரிடம் கேள்வி எழுப்பினோம்.

அவர் கூறுகையில், “லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது முதல், இதுவரை 3,500 அரசிதழ் பதிவு பெறாத பணியாளர்களுக்கான வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 2,500 பணியாளர்கள் அவுட்சோர்சிங் மூலமும் ஒப்பந்த ரீதியிலும் வழங்கப்பட்டுள்ளன. இப்படி, 6,000 வேலைகளை நாங்கள் அளித்துள்ளோம்,” என்றார்.

“தற்போது அரசிதழ் பணியிடங்களை நிரப்புவது வேறு பிரச்னை. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசுக்கு இங்குள்ள நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. எங்கள் எம்.பி.யும் அரசிடம் பலமுறை கூறியுள்ளார். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,” என்றார்.

லடாக்கில் இப்போது என்ன பிரச்னை? மக்களின் கோபம் என்ன?

பட மூலாதாரம், MAJID JAHANGIR/BBC

‘அரசின் நோக்கம் என்ன?’

மக்களுக்கு உறுதி அளித்ததன் மூலம் இரண்டு தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாகவும், அவர்களைப் பற்றி (பாஜக) நேர்மறையான சிந்தனை மக்களிடையே இருப்பதாகவும் சோனம் வாங்சுக் கூறுகிறார்.

இரண்டு தேர்தல்களிலும், மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை குறித்து பாஜக வாக்குறுதி அளித்ததாக அவர் கூறுகிறார்.

அரசாங்கத்தின் நோக்கத்தை மாற்றும் வகையில் ஒரு குழு செயற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவர் கூறுகையில், “அரசாங்கத்தின் நோக்கத்தை மாற்ற சில குழுக்கள் செயல்படுவதாக ஊகங்கள் உள்ளன. தொழிலதிபர்கள் அல்லது சுரங்க குழுக்கள் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு யாரும் எதுவும் செய்ய முடியாது என்று ஆறாவது அட்டவணையில் எதுவும் இல்லை,” என்றார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிட்டி குங்ஜாங், “வெளியொருவருக்கு நிலம் அல்லது வேலை வழங்கப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை எனக்கு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாஜக எதைச் சொன்னாலும் அது மக்களை தவறாக வழிநடத்துவதாகவே உள்ளது என்று லடாக் காங்கிரஸ் கூறுகிறது.

லே மாவட்ட காங்கிரஸின் இளைஞர் தலைவர் துண்டுப் நோர்பு கூறும்போது, ​​“லடாக்கில் மக்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம்தான் மிகப் பெரிய பிரச்னை” என்றார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் லடாக் வளர்ச்சி குறித்து, துண்டுப் கூறுகையில், “அரசு வளர்ச்சி பற்றி என்ன பேசினாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அதில் பத்து சதவிகிதம் கூட நாங்கள் களத்தில் பார்க்கவில்லை” என்றார்.

லடாக் புத்த சங்கத்தின் (LBA) இளைஞர் தலைவர் ரிக்ஜான் ஜோர், லடாக்கின் மற்ற மக்களைப் போலவே, யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தை மட்டும் பெறுவதில் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

அவர் கூறுகையில், “இப்போது நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும். லடாக்கில் சமீபத்திய சூழ்நிலையை நினைத்து நான் பயப்படுகிறேன். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை,” என தெரிவித்தார்.

முன்னதாக லடாக்கில் நான்கு எம்எல்ஏக்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் லடாக் எவ்வளவு மாறிவிட்டது என அவரிடம் கேள்வியை முன்வைத்தோம்.

அவர் கூறுகையில், “இப்போது லடாக்கில் ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. புவி வெப்பமயமாதல் அல்லது வளர்ச்சிப் பணிகள் காரணமாக லடாக்கில் முன்பை விட பனி குறைவாக இருந்தால், பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும்” என்றார்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கூறுகையில், “ஒரு குழு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதைப் போலவே, இங்குள்ள மக்களும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது முக்கியம், இதனால் அரசாங்கம் நடுநிலை வகிக்கும். எங்கள் கோரிக்கைகளை ஏற்கும்” என்றார்.

அவர் கூறுகையில், “லடாக்கில் நிலைமை மோசமடைந்து வருவதால், நாங்கள் அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அடிபணிய முடியாது,” என தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *