கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு இந்த பிரச்னை தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் கணவரின் குறட்டையை சிசிலியாவால் தாங்க முடியவில்லை. அவர் தூங்க முடியாமல் தவித்தார்.
எவ்வளவோ முயற்சிகள் எடுத்துப் பார்த்தும், கணவரின் குறட்டையை அவரால் நிறுத்த முடியவில்லை.
35 வயதான சிசிலியாவால் இதை மேலும் தாங்க முடியவில்லை. எனவே கணவன் மனைவி இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இனி ஒரே அறையில் ஒன்றாக தூங்க முடியாது என்ற முடிவு.
“என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறேன். ஓரிரு இரவுகள் அதைப் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் தொடர்ந்து அவ்வாறு தூக்கமில்லாமல் வாழ முடியாது” என்று பிபிசியிடம் கூறினார் சிசிலியா. இவர் லண்டனில் வசித்து வருகிறார்.
“இது சற்று கடினமான முடிவு தான், மனதளவில் மிகவும் கஷ்டமாக தான் உள்ளது. ஆனால் இப்படி செய்தால் தான் தூங்க முடியும் என்பதால், இந்த முடிவை எடுத்தோம்” என்கிறார் சிசிலியா.
சிசிலியா மற்றும் அவரது 43 வயது கணவர், ‘ஸ்லீப் டிவோர்ஸ்’ என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது கணவன், மனைவி தனித்தனி அறையில் தூங்கும் வழக்கம்.
“பொதுவாக ‘ஸ்லீப் டைவர்ஸ்’ என்பது தற்காலிமாக தான் கணவன் மனைவி இடையே கடைபிடிக்கப்படும். ஆனால் தனியாக தூங்குவதன் மூலம் நன்றாக தூங்க முடியும் என்பதை தம்பதியினர் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்” என்கிறார் அமெரிக்காவில் உள்ள மெக்லீன் மருத்துவமனையின் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர்.
“முக்கிய காரணம் உடல்நலம் தான். பொதுவாக குறட்டை விடும் ஒரு நபர், தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவார் அல்லது பலமுறை கழிப்பறையைப் பயன்படுத்துவார். மேலும் அவர்கள் தூக்கத்தில் அடிக்கடி புரள்வார்கள், இது பக்கத்தில் படுத்திருக்கும் நபரை மிகவும் தொந்தரவு செய்கிறது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
“‘ஸ்லீப் டிவோர்ஸ்’ என்ற இந்த டிரெண்ட் இப்போது வேகமாக பரவி வருகிறது” என்கிறார் ஸ்டெபானி கோலியர்.
இளம் தலைமுறையினர் விரும்பும் ‘ஸ்லீப் டிவோர்ஸ்’
கடந்த ஆண்டின் இறுதியில், பிரபல அமெரிக்க நடிகை கேமரூன் தியாஸ், தானும் தன் கணவரும் ஒரே அறையில் தூங்குவதில்லை என்று ஒரு போட்காஸ்டில் பேசியிருந்தார்.
மேலும் கணவன் மனைவி தனித்தனி அறைகளில் தூங்குவதை ஒரு சாதாரண விஷயமாக பார்க்க வேண்டுமென கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான எதிர்வினைகள் வந்தது. சர்வதேச ஊடகங்கள் பல்வேறு கட்டுரைகள் எழுதவும் அது வழிவகுத்தது. ஆனால் இது நடிகை கேமரூனின் கருத்து மட்டுமல்ல, பலர் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் (ஏஏஎஸ்எம்) 2023ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, மூன்றில் ஒரு தம்பதியினர், எப்போதாவது அல்லது தொடர்ந்து தனித்தனி அறைகளில் தூங்குவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்கள்.
‘மில்லினியல்கள்’ எனப்படும் புதிய தலைமுறையினர் மத்தியில் (தற்போது தோராயமாக 28 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்ட தலைமுறையினர்) ‘ஸ்லீப் டிவோர்ஸ்’ போக்கு அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 43% பேர், தங்கள் துணையுடன் அல்லாமல் தனி அறையில் தூங்குவதாக கூறியுள்ளனர்.
மற்ற தலைமுறைகளைப் பொறுத்தவரை, தலைமுறை Xஇல் (1965 மற்றும் 1980க்கு இடையில் பிறந்தவர்கள்) 33% இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தலைமுறை Zஇல் (1997 மற்றும் 2012க்கு இடையில் பிறந்தவர்கள்) 28% இதற்கு ஆதரவாக உள்ளார்கள். இறுதியாக பேபி பூமர்ஸ் எனப்படும் தலைமுறையினர் (1946 மற்றும் 1964க்கு இடையில் பிறந்தவர்கள்) 22% ‘ஸ்லீப் டிவோர்ஸ்’ முறைக்கு ஆதரவாக உள்ளார்கள்.
“குறிப்பாக இளைய தலைமுறையினர் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், இதற்கு என்ன காரணம் என சரியாக சொல்ல முடியவில்லை. கணவன் மனைவி தனித்தனியாக தூங்குவது ஒரு வகையான கலாச்சார மாற்றம். ஆனால் இளம் தலைமுறையினர் நினைப்பது என்னவென்றால் ‘நான் நன்றாக தூங்கினால், நாள் முழுவதும் நன்றாக உணர்கிறேன். எனவே இதில் என்ன தவறு?” என்கிறார் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர்.
வரலாற்றில் கணவன் மனைவி தனித்தனி அறையில் தூங்குவது புதிதல்ல.
கணவன் மனைவி ‘ஒரே படுக்கையில்’, ஒரு அறையில் தூங்குவது என்பது ஒரு நவீன கருத்தியல் என சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தொழில்துறை புரட்சியின் காரணமாக அது அதிகரித்தது என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழும்போது, இட நெருக்கடி காரணமாக இந்த முறை வந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
விக்டோரியா காலத்திற்கு முன்பாகவே திருமணமான தம்பதிகள் தனித்தனியாக தூங்குவது பொதுவான ஒன்றாக இருந்துள்ளது.
“மேலும் பணக்கார வர்க்கத்தினரிடையே, அது மிகவும் பொதுவானதாக இருந்தது. சமூகத்தின் உயர் வகுப்பினர் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் இது உதவுகிறது” என சிலியின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் சோம்னாலஜிஸ்ட் (தூக்க அறிவியல் நிபுணர்) பாப்லோ ப்ரோக்மேன் கூறுகிறார்.
தம்பதியினர் தனித்தனியாக தூங்குவது நன்மைகள் என்ன?
தனித்தனி அறைகளில் தூங்க முடிவு செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
“முக்கிய நன்மை என்னவென்றால், தொடர்ச்சியாக ஆழ்ந்த உறக்கத்தை அவர்களால் பெற முடியும். மேலும் நல்ல தூக்கம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியம்” என்கிறார் மருத்துவர் ஸ்டெபானி கோலியர்.
தொடர்ந்து பேசிய கோலியர், “ஒருவரால் தூங்க முடியாவிட்டால், அது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் செயல்பாடு வரை அனைத்தையும் பாதிக்கிறது. கூடுதலாக, நீங்கள் அடிக்கடி கோபப்படுவீர்கள், எளிதில் பொறுமையை இழப்பீர்கள். இது ஒரு வகையான மனச்சோர்வை கூட உருவாக்கலாம்” என்று கூறுகிறார்.
நன்றாக தூங்குவது ஒரு ‘ஆரோக்கியமான’ உறவைப் பேணவும் உதவும் என மனநல மருத்துவர் உறுதியளிக்கிறார்.
“தம்பதியினர், நன்றாக ஓய்வெடுக்காதபோது, அவர்களுக்குள் அதிகமாக விவாதங்கள் ஏற்படலாம், அதிகமாக எரிச்சல் அடைவார்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் புரிதலை இழக்க நேரிடும்” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நுரையீரல் நிபுணர் மற்றும் ஏஏஎஸ்எம் செய்தித் தொடர்பாளர் சீமா கோஸ்லா, மேலே உள்ள கருத்துடன் உடன்படுகிறார்.
“மோசமான தூக்கம் ஒருவரின் மனநிலையை மோசமாக்கும் மற்றும் தூக்கமின்மை உள்ளவர்கள் தங்கள் துணையுடன் வாதிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கத்தை கெடுக்கும் நபர் மீது அவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருக்கலாம், இது உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும்” என்று ஏஏஎஸ்எம் தனது ‘ஸ்லீப் டிவோர்ஸ்’ குறித்த தனது ஆய்வைத் தொடங்கியபோது அவர் குறிப்பிட்டிருந்தார்.
“ஒரு நல்ல இரவு தூக்கம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது, எனவே சில தம்பதிகள் தங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக தனியாக தூங்குவதைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
சிசிலியாவைப் பொறுத்தவரை, கணவரிடமிருந்து விலகி வேறு அறையில் தூங்குவது அவருடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது.
“நன்றாக தூங்குவது, படுக்கையில் அதிக இடம் இருப்பது, யாருக்கும் இடையூறு விளைவிக்காமல் புரண்டு படுப்பது என இது மிகவும் வசதியாக உள்ளது” என்று அவர் கூறுகிறார்.
“மேலும், உங்கள் துணை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் விரும்பும் போது அல்லது தேவைப்படும் போது தூக்கத்திலிருந்து எழ முடியும்” என்கிறார் சிசிலியா.
தனித்தனி அறையில் தூங்குவதில் உள்ள தீமைகள் என்ன?
இருப்பினும், இந்த முடிவு சில எதிர்மறை அம்சங்களையும் கொண்டு வரலாம். பல தம்பதிகள், தங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை இழப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
“எனது துணையுடனான உறவில், ஏதோ ஒன்று மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன்,” என்று சிசிலியா ஒப்புக்கொள்கிறார்.
“கணவன்- மனைவி உறவு, நெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அது அவ்வளவு தீவிரமானது அல்ல. நன்மைகள் தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
முழுநேர வேலை செய்யும் பலருக்கு, தங்கள் துணையுடன் இணையும் தருணம் என்பது அவர்கள் தூங்கச் செல்லும் நேரமாகத் தான் இருக்கும் என்று மருத்துவர் ஸ்டீபனி கோலியர் விளக்குகிறார்.
“எனவே, கணவன் மனைவி ஒன்றாக செலவழிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவதே இதற்கான தீர்வுகளில் ஒன்றாகும்” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கிடையில் ‘ஸ்லீப் டைவர்ஸ்’ என்பது எல்லா தம்பதியினருக்கும் வேலை செய்யக்கூடிய ஒன்றல்ல என்று உறுதியாக கூறுகிறார் தூக்க அறிவியல் நிபுணர் பாப்லோ ப்ரோக்மேன்.
“ஜோடியாக தூங்குவதால் சில உயிரியல் நன்மைகள் உள்ளன. பலருக்கு, கனவில் ஒரு இணைப்பு உருவாகிறது. இது மனித இனத்தின் பழமையான ஒரு இணைப்பு. உதாரணமாக, ஒரு தாய்க்கும் அவளுடைய குழந்தைக்கும், பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த பிணைப்பு உருவாகிறது. இதனால் இருவரும் ஒரே சமயத்தில் ஓய்வெடுக்கும் வகையில் ஒரே மாதிரியான தூக்க சுழற்சிகளைக் கொண்டிருப்பார்கள்” என்கிறார் பாப்லோ ப்ரோக்மேன்.
“பல வருடங்களாக ஒன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் தம்பதிகள், மனதளவில் நல்ல இணைப்பில் இருந்தால் நல்ல அமைதியான ஆழமான உறக்கத்தைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டும் ஆய்வுகள் உள்ளன. இதன் மூலம் உங்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறீர்கள்,” என்கிறார் சோம்னாலஜிஸ்ட் பாப்லோ.
மொத்தத்தில் ஒரு ஜோடி ‘ஸ்லீப் டிவோர்ஸ்’ முறையை பின்பற்ற முடிவு செய்தால், கவனத்தில் கொள்ள வேண்டிய சில பரிந்துரைகள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“ஒருவர் இந்த முறையை விரும்பி, மற்றவர் விரும்பாதபோது இது வேலை செய்யாது, ஏனெனில் அது மேலும் வெறுப்புக்கு வழிவகுக்கும்” என்கிறார் ஸ்டெபானி கோலியர்.
“சிலர் தனியாக தூங்க விரும்புவதில்லை, அது அவர்களை மனதளவில் மோசமாக உணர வைக்கிறது. இது போன்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சரிசமமாக பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என ப்ரோக்மேன் ஒப்புக்கொள்கிறார்.
“பிரச்னை உள்ளவருக்கு, அதாவது குறட்டை, தூக்கத்தில் நடப்பது அல்லது தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவது என எதுவாக இருந்தாலும், அது அவரது துணைக்கு கஷ்டமாக இருக்கலாம். இதைப் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள், பொதுவாக பல ஆண்களே தனியாகத் தூங்க தயங்குவார்கள்’’ என்கிறார் ப்ரோக்மேன்.
இருப்பினும், அதிகரிக்கும் ‘ஸ்லீப் டைவர்ஸ்’ போக்கு, ஒரு நல்ல இரவு தூக்கத்திற்காக, எதுவும் செய்யலாம் என்பதை நிரூபிப்பதாகத் தெரிகிறது.
‘குறட்டை ஒரு நோயின் அறிகுறி’
பலர் தன் துணையிடமிருந்து விலகி தனியாக உறங்க விரும்புவதற்கு முக்கிய காரணம் குறட்டை தான் என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் எஸ்.ஜெயராமன்.
“பெரும்பாலும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக குறட்டை ஏற்படுகிறது, அதாவது ஸ்லீப் அப்னியா அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்ற நோயின் அறிகுறியே குறட்டை. ஒருவர் குறட்டை விட்டால், அசந்து தூங்குகிறார் போல, தூங்கட்டும் என நினைப்போம். ஆனால் குறட்டை என்பது ஒரு நோயின் அறிகுறி. வயதானவர்களுக்கு குறட்டையின் மூலமாக மரணம் கூட நிகழலாம்” என எச்சரிக்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.
“பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த குறட்டை பிரச்னை உள்ளது. கணவன் குறட்டை விடுவதால், அருகே இருக்கும் மனைவி தூக்கத்தை இழப்பார். இது மனச்சோர்வை உண்டாக்கும். இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படலாம். வெளிநாடுகளில் இதனால் விவாகரத்து வரை செல்கிறார்கள். நம் ஊரில் பலர் பொறுத்துக் கொள்கிறார்கள். எனவே குறட்டை ஒரு தீவிரமான பிரச்னை என்பதை முதலில் உணர வேண்டும்”
“என்னிடம் குறட்டைக்கான சிகிச்சைக்கு வந்த ஒரு நபரின் மனைவி, ‘என் கணவர் அடிக்கடி மூச்சு விட முடியாமல், தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறார்’ என்றார். இவ்வாறு தூக்கத்தில் மூச்சு விட முடியாமல் முழிப்பது மாரடைப்பு வருவதற்கான அறிகுறி. தொடர்ச்சியாக குறட்டை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு இது நிகழும், முக்கியமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு” என்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.
“இளம் வயதினருக்கு குறட்டை பிரச்னை என்றால் எளிதில் குணப்படுத்தலாம். முதலில் அவர்களது தூக்க சுழற்சியை ஆய்வு செய்வோம். பின்னர் அதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். உடல் எடையைக் குறைத்தல், தொண்டையில் வளர்ந்துள்ள சதையை லேசர் மூலம் அகற்றுதல், தைராய்டு பிரச்னை இருந்தால் அதற்கான தீர்வு என நிறைய வழிகள் உள்ளன.
ஆனால், 20% பேருக்கு தான் குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்கும், 80% பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் எஸ்.ஜெயராமன்.
(இந்தக் கட்டுரையில் பிபிசி தமிழுக்காக கூடுதலாக சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்