இன்று காலை முதல் நியூஸ்க்ளிக் என்ற செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பல பத்திரிகையாளர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, “பத்திரிகையாளர்கள் மற்றும் நியூஸ்கிளிக் உடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. இந்த விஷயத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாங்கள் பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து நின்று, இந்த சோதனை குறித்து தெளிவான விவரங்களை அளிக்குமாறு அரசை வலியுறுத்துகிறோம்,” எனத் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, இந்த செய்தி இணையதளம் சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது என்பதுடன் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. இந்நிலையில், டெல்லி காவல்துறையின் பதிலுக்காக காத்திருப்பதாக பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர் அபிசார் ஷர்மா தனது எக்ஸ் பதிவில், “டெல்லி போலீசார் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். எனது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நியூஸ்கிளிக்குடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர் பாஷா சிங், “இந்த போனில் இருந்து எனது கடைசி ட்வீட் இது தான். டெல்லி போலீசார் எனது போனை பறிமுதல் செய்துள்ளனர்,” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் என்ன சொன்னார்?
இந்த செய்தி இணையதளம் ஆகஸ்ட் மாதத்தில் கூட ஒரு பேசுபொருளானது. இந்த இணையதளத்தை மேற்கோள் காட்டி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியை குறிவைக்கத் தொடங்கினார்.
அப்போது பேசிய அனுராக் தாக்கூர், “2021 ஆம் ஆண்டிலேயே, நியூஸ்க்ளிக் இணையதளம் வெளிநாட்டவர்களின் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. அதை அப்போதே நாங்கள் வெளிப்படுத்தினோம்,” என்று கூறியிருந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நியூஸ்கிளிக் இணையதளத்துக்கு ஆதரவாக களமிறங்கியதாகவும் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்க தொழில் அதிபரான நெவில் ராய் சிங்காம் மூலம் சீன நிறுவனங்கள் நியூஸ்கிளிக்கிற்கு நிதியுதவி செய்கின்றன என்றும், ஆனால் அந்த நிறுவனத்தின் ஆதரவாளர்கள் இந்தியர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் அந்த செய்தி இணையதளத்திற்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டதாகவும் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி, டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப் பிரிவினர் நியூஸ்க்ளிக் இணையதளத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை அகற்றக் கோரி போலீசார் மனு அளித்ததைத் தொடர்ந்து நியூஸ்க்ளின் இணையதளத்தின் தலைமைச் செய்தி ஆசிரியர் அதிகாரி ப்ரபீர் பர்க்கயஸ்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அவரை போலீசார் கைது செய்யக்கூடாது என்றும், அவர் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஜுலை 7 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ப்ரபீர் பர்க்கயஸ்தாவுக்கு எதிராக பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 406 மற்றும் 420-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்திருந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்