2023 நடிகர் ஷாருக்கானுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு பெரிய வெற்றிப்படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னணியில் இருந்தார் ஷாருக். தற்போது அவரது அடுத்த படமான ‘டங்கி’ வெளியாகியுள்ளது.
தன் கேரியரில் இதுவரை தோல்வியை காணாத ராஜ்குமார் ஹிரானி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். முன்னாபாய், த்ரீ இடியட்ஸ், பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிவர். முதல் முறையாக ஷாருக் மற்றும் ஹிரானி ‘டங்கி’ திரைப்படம் மூலம் இணைந்துள்ளனர்.
பதான் மற்றும் ஜவான் படங்களில் இருந்த மாஸ் மசாலா கமர்ஷியல் அம்சங்கள் இந்த படத்திலும் இருந்தாலும், டங்கி முழுக்க முழுக்க ஹிரானியின் படமாக இருக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்தப் படம் இந்தியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், இரண்டு பெரிய வெற்றிகளுக்குப் பிறகு வெளியாகும் ஷாருக்கின் படம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ஹிரானியின் படம் என்பதாலும் டிக்கெட் முன்பதிவுகளில் இத்திரைப்படம் ஒரு சாதனை நிகழ்த்தியது.
நேற்று திரைப்படம் வெளியான நிலையில், ஷாருக் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளாரா, மற்றுமொரு மறக்கமுடியாத திரைப்படைப்பை இயக்குனர் ஹிரானி கொடுத்துள்ளாரா எனப் பார்க்கலாம்.
டங்கி என்பதன் அர்த்தம் என்ன?
சமூகம் எதிர்கொள்ளும் ஒரு வலுவான பிரச்சனையை கருவாக எடுத்துக்கொண்டு மென்மையான நகைச்சுவை கலந்து இதயத்தைத் தொடும் வகையில் ஒரு திரைப்படத்தைக் கொடுப்பதில் ஹிரானி மாஸ்டர். ‘டங்கி’ படத்திலும் ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் ஹிரானி.
‘டங்கி’ என்பது பஞ்சாபி மக்களால் பயன்படுத்தப்படும் சொல். இதன் பொருள் சட்டவிரோத குடியேற்றம். ‘டங்கி ஃப்ளைட்ஸ்’ குறித்து செய்திகளில் கேள்விப்பட்டிருக்கலாம்.
குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து ‘கழுதை விமானம்’ என்ற பயணத்தின் மூலம் பிற நாடுகளுக்கு சட்டவிரோத குடியேற்றம் நடைபெறுவதைக் குறித்து தான் இப்படம் பேசுகிறது.
பல நாடுகளைக் கடந்து சட்ட விரோதமாக பிரிட்டனுக்குள் நுழைய முயலும் நான்கு பேரின் கதையை தனக்கே உரிய பாணியில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதி- ராஜ்குமார் ஹிரானியின் களம்
மனு (தாப்ஸி), சுகி (விக்கி கௌஷல்), புக்கு, பாலி, இந்த நால்வரும் லண்டனுக்குச் செல்வதன் மூலம் தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று நினைக்கிறார்கள். அங்கு செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
ஏஜெண்டிடம் பேரம் பேசி லண்டன் செல்வதற்கான விசா பெற முயற்சி செய்கிறார்கள். ஹார்டியின் (ஷாருக்) கதாபாத்திரத்தை நால்வரின் கதைக்குள் கொண்டு வந்த விதம் கொஞ்சம் சினிமாத்தனமாகத் தெரிந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு கலந்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர் விசா செயல்முறையின் ஒரு பகுதியாக வரும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக அந்த இரண்டு நிமிட ஆங்கில தேர்வு, த்ரீ இடியட்ஸின் கல்லூரி மேடைப் பேச்சுக் காட்சியை நினைவுபடுத்தினாலும் கூட நன்றாக இருந்தது.
இந்த ஜாலியான கதையில் இடைவேளை காட்சியில் நடக்கும் ஒரு சம்பவம் இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
இரண்டாம் பாதி- உணர்வுகளின் தொகுப்பு
உண்மையான பயணம் இரண்டாம் பாதியில் தான் தொடங்குகிறது. நாட்டின் எல்லைகளைத் தாண்டிய பயணம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. சட்டவிரோதக் குடியேற்றத்தில் இத்தனை சிரமங்களும் ஆபத்துகளும் இருக்கிறதா என்று சில காட்சிகள் வியக்க வைக்கின்றன. இங்கிருந்து அனைத்து காட்சிகளும் சீராக முன்னோக்கி நகர்கின்றன.
லண்டனுக்கு வந்த பிறகு, அங்கு கதாபாத்திரங்கள் சந்திக்கும் கஷ்டங்கள் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. அதைத் தொடர்ந்து வரும் நீதிமன்றக் காட்சி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது.
இந்த காட்சியில் தேசபக்தியை சித்தரிக்க இயக்குநர் முயற்சித்துள்ளார். மனுவுக்கும் ஹார்டிக்கும் இடையேயான ஒரு மென்மையான காதலும் திரைக்கதையில் இருக்கிறது.
நினைவில் நிற்கும் ஷாருக்கான் கதாபாத்திரம்
இந்தப் படத்தின் கதை ஹார்டியின் கதையல்ல என்பது தான் உண்மை. லண்டன் செல்ல வேண்டும் என்று கனவு காணும் மனு, சுகி, புக்கு, பாலி ஆகிய கதாபாத்திரங்களின் கதை. இதில் ஹார்டி ஒரு ஆனால் தனது மேஜிக் மூலம் ஹார்டி எனும் கதாபாத்திரத்தை என்றும் நினைவில் இருக்கும் ஒரு நபராக மாற்றிவிட்டார்.
இந்த கதையில் ஷாருக் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார். ஒரு சிப்பாய் தன்னை நம்பியவர்களுக்காக தனது உயிரைக் கூட பணயம் வைப்பார் என ஹார்டி கதாப்பாத்திரம் மூலம் காட்டுகிறார்கள்.
இந்த திரைப்படத்தை முழுவதும் ஷாருக்கான் தன் தோளில் சுமந்துள்ளார் எனக் கூறலாம். ஷாருக்கின் நடிப்பை மட்டுமே பார்க்க திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு ஹார்டியின் பாத்திரம் என்றும் நினைவில் இருக்கும்.
“பதான் மற்றும் ஜவான், என்னுடைய ரசிகர்களுக்காக நான் நடித்த படம். “டங்கி” எனக்காக விரும்பி நடித்த படம்” என ஷாருக் ஏன் கூறினார் என்று படத்தைப் பார்த்த பிறகு புரியும்.
ஒரு நடிகராக அவருக்கு மிகவும் திருப்தியான படம் இது. எமோஷனல் காட்சிகளில் மட்டுமின்றி நகைச்சுவை காட்சிகளிலும் ஷாருக் தனது திறமையை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்ற காட்சியில் ஷாருக்கின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது.
அழுத்தமான வசனங்கள்
ஹார்டிக்குப் பிறகு, பார்வையாளர்களால் விரும்பப்படும் மனு என்ற கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். லண்டன் சென்று பணம் சம்பாதித்து சொந்த ஊரில் உள்ள தனது வீட்டை மீட்க வேண்டும் என்ற லட்சியமுடைய கதாபாத்திரம் மனு.
லண்டன் சென்ற பிறகு ஒரு கட்டத்தில், ஹார்டி அங்குள்ள நிலைமைகளைப் பார்த்துவிட்டு வீடு திரும்புவோம் என்று சொல்கிறான். “தனக்கு வீடு ஒன்று ஊரில் இல்லாததால் தான் இங்கு வந்தேன்” என்ற மனு பத்ரா கூறும் தருணம் பார்வையாளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதுவரை டாப்ஸி நடித்த பாத்திரங்களில் மிகவும் உணர்வுபூர்வமான பாத்திரம் இது.
சுகி வேடத்தில் விக்கி கௌஷல், கதாபாத்திரத்தின் நீளம் குறைவாக இருந்தாலும் படத்தின் மற்றொரு ப்ளஸ் அவர். ஷாருக்கிற்கு இணையாக சில காட்சிகளில் நடித்துள்ளார். இரண்டாம் பாதி திரைக்கதையில் அவரது கதாபாத்திரத்தை பயன்படுத்திய விதமும் நன்றாக இருந்தது.
டாப்ஸி மற்றும் விக்கி இருவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்களாக நடித்துள்ளனர், நிஜமாகவே இருவரும் பஞ்சாபிகள் தானா என யோசிக்க வைக்கும் அளவுக்கு அவர்களின் உச்சரிப்பு மிக இயல்பாக உள்ளது. புக்கு வேடத்தில் விக்ரமும் பாலி வேடத்தில் அனில் குரோவரும் நடித்திருந்தனர்.
நடிகர் பொமன் இரானி ஆங்கில ஆசிரியர் கதாபாத்திரத்தை தனது அனுபவ நடிப்பால் மிக எளிதாக கடந்து சென்றுள்ளார். மற்ற பாத்திரங்களின் பங்களிப்பு சற்று வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக தனித்து தெரியும் ‘டங்கி’
ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர் ராஜ்குமார் ஹிரானி. பிரேம்களில் தொடங்கி எடிட்டிங் வரை, தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான படமாக இருக்கிறது டங்கி.
பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. படத்தை இயக்குனரே எடிட் செய்துள்ளார்.
திரைக்கதையை வசனங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்வது, கதாபாத்திரத்தின் கஷ்டங்களை யதார்த்தமான காட்சிகள் மூலமாக பார்வையாளர்களுக்கு கடத்துவது என தனக்கு மிகவும் பழக்கப்பட்ட களத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகிறார் ஹிரானி.
கதாபாத்திரங்கள் திரையில் சிரித்தாலோ அழுதாலோ அதை பார்வையாளர்களுக்கு சரியாக உணர்த்தக்கூடிய திரைக்கதை பாணி இதிலும் தெரிகிறது. குறிப்பாக வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம்.
புலம்பெயர் பறவைகள் பருவ காலம் முடிந்த பிறகு திரும்ப ஒரு நிரந்தர கூடு இருக்கும், ஆனால் மனிதர்களுக்கு மட்டும் ஏன் எல்லைகள் என்ற பெயரில் பிரித்து, கூடுகளுக்கு திரும்ப முடியாத நிலை இருக்கிறது என நீதிமன்றத்தில் ஹார்டி பேசும் வசனம் குறிப்பிடத்தக்கது.
“பறவைகள் இடம்பெயர்கின்றன. நிலைமை சீரானதும், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றன. ஏன் மனிதனுக்கு இந்த நிலை இல்லை? ஏன் இந்த நிலத்திற்கு எல்லை என்ற பெயரில் வேலி போடப்பட்டுள்ளது? பணத்துக்கும், ஏழ்மைக்கும், படிக்காதவர்களின் வாழ்க்கைக்கும் ஏன் இந்த எல்லைகள்?’’ இப்படிப் பல கேள்விகளை இந்த திரைப்படத்தில் எழுப்புகிறார் ஹிரானி.
ஒரு நேர்மையான படைப்பு
பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த மற்றும் தொடர்ந்து நடக்கும் கதை தான் இந்த டங்கி. நல்ல வாழ்க்கையை அமைந்துவிடாதா என்ற ஏக்கத்தில் புலம்பெயர்பவர்களின் கதை. தனது கமர்ஷியல் அம்சங்கள் கலந்த யதார்த்த திரைக்கதையின் மூலம் டங்கியை நகர்த்திச் சென்றுள்ளார் ஹிரானி.
முன்னாபாய், த்ரீ இடியட்ஸ் மற்றும் பிகே போன்ற ஒரு திரைக்கதையை எதிர்பார்த்தது சென்றால் நீங்கள் ஏமாற்றமடைய வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் இந்த படம் ஜவான், பதான் போன்ற ஒரு மாஸ் மசாலா திரைப்படமும் அல்ல. எனவே அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனால் இந்த டங்கியை ரசிக்கலாம், பல இடங்களில் சிரிக்கலாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்