உச்சநீதிமன்றம் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை சட்டப்பூர்வமாக்கி தீர்ப்பளித்தது. அதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு லடாக் தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் கேட்டபோது, அவர் லடாக்கின் ஒரு பகுதி சீனாவுடையது என உரிமை கொண்டாடினார்.
லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை எனவும் இந்தியா அதை ஒருதலைபட்சமாகவும் சட்டவிரோதமாகவும் உருவாக்கியது எனவும் அவர் குற்றம்சாட்டினார். “இந்தியாவின் உள்நாட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சீன-இந்திய எல்லையின் மேற்குப் பகுதி எப்போதும் சீனாவுக்கே சொந்தமானது என்ற உண்மையை மாற்றாது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்க இந்தியா முடிவு செய்த நேரத்தில், சீனாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின் மூலம் “இந்தியா ஒருதலைபட்சமாகத் தனது சட்டங்களைத் திருத்தியுள்ளது” என்றும் சீனா அப்போது கூறியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன சொல்கிறது?
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பின் 370வது பிரிவை இந்தியா 2019ஆம் ஆண்டு ரத்து செய்து, அந்தப் பகுதியை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது சட்டப்பூர்வமானது என ஒருமனதாகக் கூறியது.
கடந்த திங்களன்று இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், 370வது சட்டப்பிரிவு தற்காலிகமானது எனவும் அதை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனவும் கூறியது.
மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட தனி இறையாண்மை ஜம்மு-காஷ்மீருக்கு கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன?
கடந்த 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கிழக்கு லடாக்கின் எல்லையில் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள பகுதிகளுக்குள் சீன ராணுவம் நுழைந்தது. இந்தப் பகுதியை இந்தியா தனது பிரதேசமாகக் கருதுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, எல்லையில் இருபுறமும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
லடாக் மீதான சீனாவின் உரிமைகோரலை மீண்டும் வலியுறுத்துவதற்கு ஒரு நாள் முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் காஷ்மீர் குறித்தும் பதிலளித்திருந்தார்.
சட்டப்பிரிவு 370 குறித்த இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் மாவோ நிங்கிடம் கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்தவர், ‘காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது,” என்று கூறியிருந்தார்.
“சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் சர்ச்சையைத் தீர்க்க வேண்டும். இதனால், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க முடியும்,” என்றும் மாவோ நிங் கூறினார்.
காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதற்கு இந்தியா தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
பாகிஸ்தானின் எதிர்வினை என்ன?
பாகிஸ்தானின் தற்காலிக அரசாங்கத்தில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானியும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை விமர்சித்தார்.
ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்தியா மேற்கொண்ட ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கைகளை சர்வதேச சட்டம் அங்கீகரிக்கவில்லை. “இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு நீதித்துறை ஆதரவு கிடைத்தாலும் எந்த முக்கியத்துவமும் இல்லை,” என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுதவிர இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஒ.ஐ.சி-யும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கவலை தெரிவித்திருந்தது.
ஒ.ஐ.சி. அமைப்பின் அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது. மேலும் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் அதைக் குறிவைத்துப் பேசியது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “தொடர்ந்து மனித உரிமை மீறல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிபோரின் சார்பாக ஒ.ஐ.சி அமைப்பு இந்த எதிர்வினையை ஆற்றியுள்ளது,” என்று அவர் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்