ராமர் கோவில்: புதுப்பொலிவு பெறும் அயோத்தி – கவனிக்கப்படாத மறுபக்கம் என்ன?

ராமர் கோவில்: புதுப்பொலிவு பெறும் அயோத்தி - கவனிக்கப்படாத மறுபக்கம் என்ன?

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி

கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமர் கோவில் கட்டப்படுவதற்கான முன்னெடுப்புகள் நடந்து வந்ததில் இருந்து சர்ச்சையின் மையத்திலேயே இருந்து வருகிறது உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவில் கட்ட ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றன.

தற்போது கோவிலின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து, வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி கோவிலைத் திறந்து வைக்கிறார். பிரான் பிரதிஷ்டா என்ற கும்பாபிஷேக நிகழ்வும் அன்று நடைபெறவுள்ளது.

இதையொட்டி ‘அயோத்தி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் பல மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகின்றன. இதனால், சிறிய, ஆட்கள் அதிகம் வந்து போகாத நகரமாக இருந்த அயோத்தியின் முகம் தற்போது வேகமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.

அயோத்தியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் அங்கு நேரடியாகச் சென்றது.

எங்கு நோக்கினும் ராமாயண சின்னங்கள்

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி

அயோத்தி நகரத்திற்குள் நுழையும்போதே மக்களை வரவேற்பது எல்லா கட்டடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் ராமர் உருவம் தாங்கிய காவிக் கொடிகள். பிரதான சாலையின் நடுவே ராமாயணக் கதாபாத்திரங்களின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

சாலைகளின் சந்திப்பில் அலங்காரச் சின்னங்கள், விளக்குகள் என ராமர் கோவிலுக்குச் செல்லும் 13 கி.மீ நீளமுள்ள நகரத்தின் பிரதான சாலையான ‘ராம் பத்’ மெருகூட்டப்பட்டுள்ளது.

ராம் பத், பக்தி பத், தர்ம் பத், ஜனம்பூமி பத் என்ற நான்கு பிரதான சாலைகள் விரிவாக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

அனைத்து கடைகளின் ஷட்டர்களிலும் திரிசூலம், அனுமார், காவிககொடி, ‘ஜெய் ஸ்ரீராம்’, ஆகிய இந்து மதச் சின்னங்கள் வரையப்பட்டிருக்கின்றன

தற்போது அயோத்திக்குள் நுழையும் பிரதான சாலையான ராம் பத் சாலையில் இருந்துதான் புதிய கட்டுமானங்கள், வளர்ச்சிப்பணிகள் ஆகியவை காணக் கிடைகின்றன.

இந்தச் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகள் கடைகள் ஆகியவற்றின் முகப்புகள் மெருகூட்டப்பட்டு, ஒரே மாதிரியான இளம் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளன.

அனைத்து கடைகளின் ஷட்டர்களிலும் திரிசூலம், அனுமன், காவிக் கொடி, ‘ஜெய் ஸ்ரீராம்’, ஆகிய இந்து மதச் சின்னங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

அயோத்திக்குள் நுழையும் பிரதான சாலையான ராம் பத் சாலை

அதிகரித்திருக்கும் ஆன்மீகப் பயணிகள் எண்ணிக்கை

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

அர்ஷத் ஷேரா

தற்போது அயோத்திக்கு அதிக அளவு மக்கள் வருவதால் தங்கள் வியாபாரம் அதிகரித்து வருவதாக இச்சாலையின் இருபுறமும் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூறினர்.

ராம் பத் சாலை துவங்கும் பகுதியிலேயே ஒரு சிறிய சிற்றுண்டிக் கடை வைத்திருக்கும் அர்ஷத் ஷேரா இந்த வளர்ச்சிப் பணிகளால் பயனடைந்து இருப்பதாகத் தெரிவித்தார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. எல்லா இடங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. சாலைகள், விளக்குகள், கழிவுநீர் திடங்கள், கடைகள் அனைத்தும் நல்ல நிலையில் மாற்றப்பட்ட்இருக்கின்றன,” என்றார் அர்ஷத்.

“இப்போது இங்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். எங்கள் கடைக்கு இப்போது அதிக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். எங்கள் வருமானம் அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.

அதேபோல் அயோத்தியில் வாடகை கார் ஓட்டுபவரான ராஜா, முன்னெல்லாம் வாரத்திற்கு 3 அல்லது நான்கு சவாரிதான் கிடைக்கும் என்றும், ஆனால் தற்போது வாரம் முழுதும் சவாரி கிடைப்பதாகவும் கூறினார்.

“முன்பெல்லாம் உள்ளூர்வாசிகள் மருத்துவமனை செல்லவும், உறவினர் வீடுகளுக்குச் செல்லவும்தான் காரை வாடகைக்கு எடுப்பார்கள். ஆனால் இப்போது வாரம் முழுவதும் இங்கு வரும் வெளியூர்காரர்கள்தான் காரை வாடகைக்கு எடுக்கிறார்கள்,” என்றார்.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

கோவிலுக்குச் செல்லும் பாதையில் மக்கள் சாரிசாரியாக வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள்

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

காவிக் கொடிகள், ராமாயணப் புத்தகங்கள், கடவுளர் உருவப் படங்கள், சிலைகள், ஆகியவை விற்கப்பட்டுக்கொண்டிருந்தன.

இன்னும் கட்டுமான வேலைகள் நடந்து வரும் ராமர் கோவிலுக்குச் செல்லும் பாதையில் மக்கள் சாரிசாரியாக வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

இந்தப் பாதை முழுவதும் பல சிறிய, பெரிய கடைகள் முளைத்துள்ளன. காவிக் கொடிகள், ராமாயணப் புத்தகங்கள், கடவுளர் உருவப் படங்கள், சிலைகள், ஆகியவை மும்முரமாக விற்கப்படுகின்றன.

கோவிலுக்கும் வரும் பலரும் நெற்றியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ போன்ற எழுத்துகளைத் தரித்திருந்தனர். நெற்றியில் இதை அச்சிடும் பொட்டு வியாபாரிகளும் அதிகம் தென்படனர்.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

தமிழகத்தின் வேலூரில் இருந்து அயோத்திக்கு குழுவாக வந்திருந்த 56 வயதான லக்ஷ்மி விஜயன் (இடது).

தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இருந்தும் பல மக்கள் இங்கு வருவதைப் பார்க்க முடிந்தது.

தமிழகத்தின் வேலூரில் இருந்து குழுவாக வந்திருந்த 56 வயதான லக்ஷ்மி விஜயன், தாம் 3 நாட்கள் ரயில் பயணம் செய்து அயோத்தி வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

வெளியூரிலிருந்து வரும் பயணிகள் சிரமம் இல்லாமல் இருக்க போக்குவரத்து வசதிகள், தங்கும் வசதிகள் ஆகியவை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

கோவிலுக்கு வரும் பலரும் நெற்றியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ போன்ற எழுத்துகளைத் தரித்திருந்தனர்.

உற்சாகமாக இருக்கும் உள்ளூர் இளைஞர்கள்

முன்னர் பொழுதுபோக்கு, கேளிக்கை போன்றவற்றுக்குப் பெரிதாக எதுவும் இல்லாத சிறிய ஊராக இருந்த அயோத்தியில், அதிகரித்து வரும் வெளியூர் பயணிகளின் பொருட்டு பல புதிய உணவகங்கள், பூங்காக்கள், சதுக்கங்கள் ஆகியவை உருவாகப்பட்டுள்ளன.

இதனால், உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் உற்சாகமாக இருப்பதைக் காண முடிகிறது.

உள்ளூரில் படித்து வரும் 12 வயதான மாணவி ஆராத்யா திவாரி, தனது குடும்பத்துடன் ராமர் கோவிலுக்குச் சென்றுவிட்டு புதிதாக மேம்படுத்தப்பட்டிருக்கும் குப்தார் காட் என்ற படித்துறைப் பகுதிக்கு வந்திருந்தார்.

“முன்பெல்லாம் ‘அயோத்தியில் என்ன இருக்கிறது’ என்று தோன்றும். ஆனால் இப்போது அயோத்தியின் முகமே மாறியிருக்கிறது. ராமர் கோவில் வந்ததும் ஊரின் ‘வைப்’ மாறிவிட்டது,” என்றார்.

அதேபோல, தனது குடும்பத்துடன் குப்தார் காட் பகுதிக்கு வந்திருந்த 15 வயது மாணவரான பிரஜ்வல் திவாரியும் இதே மனநிலையைப் பகிர்ந்து கொண்டார். “முன்பெல்லாம் நண்பர்களோடு சேர்ந்து வெளியே செல்ல அயோத்தியில் வெகு சில இடங்களே இருந்தன. ஆனால் இப்போது பல ஹோட்டல்கள், பூங்காக்கள் உருவாகியுள்ளன,” என்றார்.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

புதிய விமான நிலையம்

புதிய கட்டுமானங்கள்

அயோத்தியில் புதிய விமான நிலையத்தின் முதல் கட்டப் பணிகள் முடிந்து, சிறிய அளவில் இருப்பினும், விமான சேவைகள் துவங்கியுள்ளன. பழைய ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது. புதிய பேருந்து நிறுத்தத்தின் முதல் கட்டப் பணிகளும் முடிந்திருக்கின்றன.

ராமர் கோவிலைச் சுற்றி 5 கி.மீ சுற்றளவில் பல அலங்காரப் பணிகள், மேம்பாட்டுப் பணிகளைக் காண முடிகிறது. புதிய மேம்பாலங்கள், புதிய வணிக வளாகங்கள், வாகன நிறுத்தங்கள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.

சாலைகள் இடப்படும் பணிகளும் வேகமாக நடைபெறுவதைப் பார்க முடிந்தது. 15ஆம் தேதிக்குள் சாலைப் பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டது.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

ஃபைஸாபாத் பகுதியின் ஒரு தெரு

வளர்ச்சிப் பணிகள் எட்டிப் பார்க்காத இன்னொரு அயோத்தி

‘அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் நடந்து வரும் இந்தப் பணிகள் ராமர் கோவிலைச் சுற்றியிருக்கும் பிரதான பகுதிகளில் நடந்து வருகின்றன. ஆனால், ஊருக்குள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், அயோத்தி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் இந்த வளர்ச்சிப் பணிகள் சென்று சேரவில்லை.

இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் சிதிலமடைந்து, தூசியாக இருந்தன. இங்கிருந்த வீடுகள் பெரும்பாலும் சிறியவையாகப், பராமரிப்பற்று இருந்தன.

குறிப்பாக, புதிய விமான நிலையத்திற்கு அருகே சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்த ஃபைஸாபாத் என்ற பகுதிக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றது. இந்தப் பகுதியின் பெயரும் தற்போது ‘அயோத்தி’ என்றே மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தப் பகுதியில் எந்த மேம்பாட்டுப் பணிகளோ, அலங்காரப் பணிகளோ நடந்திருக்கவில்லை.

ராமர் கோவிலைச் சுற்றி வருவதற்கான ராம் பத் மற்றும் பக்தி பத் ஆகிய சாலைகளை இணைக்கும் சாலை இந்தப் பகுதயில் இருக்கிறது. அதை விரிவாக்கும் பொருட்டு சில கடைகளும் வீடுகளும் அகற்றப்பட்டிருந்தன.

அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்று அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

சிம்மி

‘கல்வியும் வேலைவாய்ப்பும் அவசியம்’

இதே ஃபைஸாபாத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சிம்மி, ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

தங்கள் பகுதியில் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் இன்னும் செய்யப்படவில்லை என்கிறார். மேலும் ஹோட்டல்கள், மால்கள் பேன்றவை கட்டப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், கல்வி, பெண்களுக்கு வேலைவாய்ப்பு போன்றவற்றைத்தான் தாங்கள் அதிகம் எதிர்ப்பதாகக் கூறினார்.

“நகரம் மேம்படுவதைப் போல, இங்க்கருக்கும் மக்களுக்கு கல்வித் தரம் உயர வேண்டும். மால்கள், ஹோட்டல்கள் கட்டப்படுவதைப் போலவே பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.

பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்,” என்கிறார் சிமி. அப்போதுதான் அயோத்தி மாவட்டம் உண்மையான வளர்ச்சியடையும் என்கிறார் இவர்.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

குஃரான் சித்திக்கி

‘குறைகள் சரி செய்யப்பட வேண்டும்’

இதே பகுதியைச் சேர்ந்த குஃரான் சித்திக்கி ஒரு சமூகச் செயற்பாடாளர். கல்வி, வாழ்க்கைத்தர மேம்பாடு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்காகப் பணி செய்து வரும் இவர், அயோத்தியில் ஒருபுறம் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வந்தாலும் மறுபுறம் இன்னும் பல பிரச்னைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

“கடந்த 2019ஆம் ஆண்டு அயோத்தி தீர்ப்பு வந்தபின் இங்கு கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடக்கின்றன. ஆனால் வளர்ச்சி ஏற்படுவதைப் போல சில சிக்கல்களும் உள்ளன. அதையும் பார்க்கவேண்டும்,” என்கிறார் சித்திக்கி.

“நகரத்தில் அடிப்படைத் தேவைகள் மோசமாக உள்ளன. உதாரணத்திற்கு ஃபைசாபாத் பகுதியில் அரசுக் கல்வி நிறுவனங்களின் நிலை மோசமாக உள்ளது. அதேபோல் வேலைவாய்ப்புகள் அதிகமாக இல்லை. அதுவும் சரி செய்யப்படவேண்டும்,” என்றார்.

மேலும், “இப்போதும் இங்குள்ள மக்கள் முக்கியமான சிகிச்சைகளுக்காக லக்னௌ மருத்துவமனைக்குப் போக வேண்டியுள்ளது,” என்கிறார்.

அயோத்தி, ராமர் கோவில், பாஜக, நரேந்திர மோதி
படக்குறிப்பு,

அயோத்தி மாவட்ட நீதிபதி (ஆட்சியர் நிலை) நிதீஷ் குமார்

‘படிப்படியாக எல்லா பகுதிகளும் மேம்படுத்தப்படும்’

இதைப் பற்றி அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடும் மாவட்ட நீதிபதி (ஆட்சியர் நிலை) நிதீஷ் குமாரிடம் கேட்டோம்.

அதற்கு அவர், மேம்பாட்டுப் பணிகள் குறுகிய கால, இடைப்பட்ட கால, நீண்டகால திட்டங்கள் என மூன்று நிலைகளில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். முதல்கட்டப் பணிகள் மட்டும் தற்போது முடிந்திருப்பதாகவும், இடைக்காலத் திட்டங்கள் ஜனவரி மாத இறுதியில் முடிவடையும் என்றும், நீண்டகால திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக ஃபைஸாபாத் போன்ற, பணிகள் இன்னும் நடைபெறாத பகுதிகளைப் பற்றிக் கேட்டபோது, மாவட்டத்தின் வெளிப்புறப் பகுதிகள், புறநகர்ப் பகுதிகள் ஆகியவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மேம்படுத்தப் பணிகள் நடைபெற்று வருவாதாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய நிதீஷ் குமார், மாவட்டத்தில் இருக்கும் தசரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு சேவைத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“மக்களின் வீடுகளில் ‘பேயிங் கெஸ்ட்’ தங்கும் வசதிகள் அமைக்கும் திட்டம், ‘சூழலியல் சுற்றுலா’ திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்படும்,” என்றார்.

‘அயோத்தி 2047’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்துப் பணிகளும் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *