நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 23 முதல் 26ஆம் தேதி வரை டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கலவரம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். நான்கு நாட்களாக நடந்த கலவரத்தில் பெரும் உயிரிழப்பும் உடைமை இழப்பும் ஏற்பட்டது. பலரது வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம்கள் 40 பேரும் இந்துக்கள் 13 பேரும் அடங்குவர் என, டெல்லி காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி கேட்டு இன்றும் போராட்டம் தொடர்கிறது.
பிபிசி இந்தி சேவை அத்தகைய சில குடும்பங்களை அணுகி அவர்களின் போராட்டம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதை அறிய முயன்றது.
‘வாக்குமூலத்தை மாற்றச் சொன்னார்கள்’
இதற்காக முதலில் வடகிழக்கு டெல்லியின் கர்தம்புரி பகுதிக்குச் சென்றோம். கலவரத்தின் போது, கர்தம்புரி பகுதியில் இருந்து ஒரு வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோவில், போலீஸ் சீருடையில் இருந்த சிலர் ஐந்து சிறுவர்களை தடியால் அடிப்பதைக் காண முடிந்தது. போலீஸ் சீருடையில் இருந்தவர்கள், அந்த சிறுவர்களை ‘ஜன கன மன’ மற்றும் ‘வந்தே மாதரம்’ பாடச் சொன்னார்கள். இந்த வீடியோ இன்னும் இணையத்தில் உள்ளது.
டெல்லி கலவரத்தின் முக்கியமான வழக்குகளில் இதுவும் ஒன்று. இதன் காரணமாக, டெல்லி காவல்துறையின் பங்கு மிகவும் கேள்விக்கு உள்ளானது. வீடியோவில் காணப்பட்ட ஐந்து சிறுவர்களில் ஃபைசானும் ஒருவர். ஃபைசான் பிப்ரவரி 26, 2020 அன்று இறந்தார்.
கர்தம்புரியின் குறுகிய பகுதிகளைக் கடந்து ஃபைசானின் வீட்டை அடைந்தோம். அதிர்ஷ்டவசமாக, ஃபைசானின் தாய் வீட்டில் இருந்தார். வீட்டின் நிலைமையைக் காட்டிய கிஸ்மத்துன், ஃபைசானின் சம்பாத்தியத்தில் மட்டுமே தங்கள் குடும்பம் இயங்கி வந்ததாகக் கூறினார். தன் மகன் தாக்கப்பட்டதாகk கூறும் இடத்திற்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார்.
ஃபைசான் எப்படி இறந்தார், அவருடைய வழக்கின் நிலை என்ன என்ற கேள்விக்கு, கிஸ்மத்துன் பதிலளிக்கையில், “நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த அதிர்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தால் எனது உடல்நிலை மோசமாகிவிட்டது. ஒருநாள் போலீஸ் வந்து என் வாக்குமூலத்தை மாற்றச் சொன்னார்கள்,” என்றார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறை முதலில் ஃபைசானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் ஜோதி நகர் காவல் நிலையத்தில் ஓர் இரவு தங்க வைக்கப்பட்டதாகவும் கிஸ்மத்துன் கூறுகிறார்.
பின்னர், மறுநாள் போலீசார் தன் மகனை அழைத்துச் செல்லும்படி கூறியதாக கிஸ்மத்துன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஃபைசான் பிப்ரவரி 26 அன்று இறந்தார். ஆனால், நீதிமன்றத்தில் போலீசார் கொடுத்த ஆவணங்களின்படி, “ஃபைசான் தவறாக நடத்தப்படவில்லை, தன் விருப்பத்தின் பேரில் காவல்நிலையத்தில் தங்கியிருந்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகள் ஆகியும், இந்த வழக்கில் போலீஸ் விசாரணை இன்னும் முடியவில்லை. தன் மகனுக்கு நீதி கிடைக்காததைக் கண்டு, 2020ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார் கிஸ்மத்துன்.
தன் மகனின் இறப்புக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஒரேயொரு விருப்பம்தான் இப்போது இருப்பதாக அவர் கூறுகிறார். வழக்குரைஞர் விருந்தா குரோவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கிஸ்மத்துன் வழக்கில் போராடி வருகிறார்.
”இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதையும் தாண்டி, சம்பந்தப்பட்ட போலீசார் யார் என்றுகூட அடையாளம் காணப்படவில்லை,” என்று வழக்குரைஞர் விருந்தா கூறுகிறார்.
டெல்லி காவல்துறையின் அணுகுமுறை
விருந்தா குரோவர் கூறும்போது, “சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறுவதுதான் இந்தியாவில் காவல்துறையினரின் அணுகுமுறை. இந்த வழக்கில் எல்லாம் மிகவும் தளர்வாகி வருகிறது, ஒவ்வொரு தேதியிலும் ஒரு புதிய கதை நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுகிறது” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “பிரச்னை என்னவென்றால், இங்கு ஒரு சாதாரண ஏழை முஸ்லிம் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை போலீசார் விசாரிக்க வேண்டும். அன்றைய தினம் யார் பணியில் இருந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் போலீசாரிடம் உள்ளன. விசாரணை இப்படியே தொடர்ந்தால், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இது தொடரும் என நினைக்கிறேன். இதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு தேவை,” என்றார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இருப்பது அவசியம். ஆனால், அப்போது காவல் நிலையத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று போலீசார் கூறியதாக வழக்குரைஞர் விருந்தா குரோவர் கூறுகிறார்.
கௌசர் அலியின் வீடு ஃபைசானின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. அதே வீடியோவில் தாக்கப்பட்டவர்களில் கௌசர் அலியும் ஒருவர். அன்றைய நினைவு இன்றும் உடம்பில் சிலிர்ப்பை உண்டாக்குவதாகக் கூறுகிறார் அவர்.
அவர் கூறுகையில், “அன்று நடந்ததற்குப் பிறகு, நான் இன்னும் காவல்துறையைக் கண்டு பயப்படுகிறேன். அவர்கள் என்னை மீண்டும் அழைத்துச் செல்வார்கள் எனத் தோன்றுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார்.
உண்மையில், இந்த வீடியோவில் ஃபைசான், கௌசர் உள்ளிட்டோரை அடித்தவர்கள் போலீசார் என்பதை டெல்லி போலீசார் மறுக்கவில்லை.
இந்த வீடியோவில் காணப்படும் காவலர்களை அடையாளம் காண முயல்வதாக உயர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது காவல்துறை தனது வாதங்களை முன்வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விசாரணை எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதை அறிய டெல்லி காவல்துறையைத் தொடர்பு கொண்டோம்.
டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரான ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தேவ், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறி பேச மறுத்துவிட்டார்.
இருப்பினும், டெல்லி காவல்துறையின் தரவுகள் கலவரம் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றோம்.
தரவுகள் என்ன சொல்கின்றன?
டெல்லி போலீஸ் வட்டாரங்களில் இருந்து பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, கலவரம் தொடர்பாக மொத்தம் 758 எஃப்ஐஆர்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 2,094 பேர் பிணையில் உள்ளனர்.
நீதிமன்றம் இதுவரை 47 பேரை மட்டுமே குற்றவாளிகள் எனக் கண்டறிந்து 183 பேரை விடுதலை செய்துள்ளது. போதிய ஆதாரம் இல்லாததால் 75 பேர் மீதான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட 53 பேரின் மரணம் தொடர்பான வழக்குகளில் 14 வழக்குகளில் இன்னும் விசாரணை நடந்து வருவதாக ‘தி பிரின்ட்’ என்ற செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை நாங்கள் தொடர்புகொண்டுள்ளோம். ஆனால் விசாரணை தொடர்வதால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
சிசிடிவியை உடைக்கும் ’காவல்துறையினர்’
மற்றொரு சம்பவத்தில், வடகிழக்கு டெல்லியின் குராஜியில் உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடிய தளத்திற்கு அருகே காவல்துறை சீருடையில் இருந்த சிலர் சிசிடிவி கேமராக்களை உடைப்பதைக் காண முடிந்தது.
இந்த வீடியோவும் வைரலானது.
இந்த வழக்கில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
இந்தக் கேள்விக்கு, டெல்லி கலவரம் தொடர்பான பல வழக்குகளில் பாதிக்கப்பட்ட தரப்பின் வழக்குரைஞர் மஹ்மூத் பிரச்சா, “காவல்துறையினரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகளில்கூட டெல்லி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுநல மனுவில் எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்றார்.
பிபிசி இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல்துறையிடம் இருந்து தகவல் பெற வேண்டும். ஆனால், இதுவரை டெல்லி காவல்துறையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
ரத்தன் லால்-அங்கித் சர்மா வழக்கில் என்ன நடந்தது?
ஆனால், அனைத்து வழக்குகளிலும் டெல்லி காவல்துறையின் விசாரணை வேகம் மெதுவாக உள்ளது என்று இல்லை.
டெல்லி கலவரத்தில் பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட தலைமைக் காவலர் ரத்தன் லால் வழக்கில் இதுவரை குறைந்தது 24 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர், அவர்களில் 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஊடக செய்திகளின்படி, கடந்த ஆண்டு ரத்தன் லால் வழக்கில் மணிப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 5 குற்றப் பத்திரிகைகளை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கிலும் இன்னும் விசாரணை தொடங்கவில்லை.
புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய அங்கித் சர்மா கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 26, 2020 அன்று சந்த் பாக்கில் உள்ள சாக்கடையில் அங்கித் சர்மாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகையின்படி, அவரது உடலில் 51 காயங்கள் இருந்தன. ஊடக செய்திகளின்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை 2022 அக்டோபரில் தெலங்கானாவில் இருந்து டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தற்போது சாட்சிகளின் வாக்குமூலங்கள் விசாரிக்கப்படுகின்றன.
உமர் காலித் மற்றும் எஃப்.ஐ.ஆர் எண் 59
டெல்லி கலவரத்தின் பின்னணியில் ஓர் ஆழமான சதி இருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் குற்றப்பிரிவு கூறுகிறது. இது 2019இல் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (சிஏஏ மற்றும் என்.ஆர்.சி) போராட்டங்களின்போது அடித்தளம் போடப்பட்டது.
சிறப்புப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும் எஃப்ஐஆர் எண் 59/2020இல் இந்தச் சதி குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 2019இல், மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது. இதன் கீழ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த (இந்து, புத்தம், ஜெயின், பார்சி, கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்) மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. நீதிமன்ற உத்தரவின்படி, எஃப்.ஐ.ஆர் எண் 59இல் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தற்போது பிணையில் உள்ளனர். இந்த வழக்கிலும் இன்னும் விசாரணை தொடங்கவில்லை.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை டெல்லி கலவரத்தின் மூளையாக டெல்லி போலீசார் கருதுகின்றனர். உமர் காலித் செப்டம்பர் 2020 முதல் சிறையில் உள்ளார்.
அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதம், கலவரம் மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யுஏபிஏவின் கீழ் ஜாமீன் பெறுவது எளிதானது அல்ல. உமர் காலித்தின் ஜாமீன் மனு இரு வேறு நீதிமன்றங்களால் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு மே 2023 முதல் ஜனவரி 2024 வரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால் அதன் மீதான விவாதத்தை ஒருமுறைகூட தொடங்க முடியவில்லை.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற அவர், தற்போது மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். உமர் காலித்தின் தந்தை சையத் காசிம் ரசூல் இல்யாஸ் கூறுகையில், அவர் 15-20 நாட்களுக்கு முன்பு தனது மகனுடன் பேசினார்.
உமர் காலித் வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்படுவதைப் பற்றி, அவர் கூறுகையில், “கற்பனை செய்து பாருங்கள், விசாரணையின்றி மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. நான்கு ஆண்டுகளாகியும் வழக்கு தொடங்கப்படவில்லை. இது தொல்லை இல்லை என்றால் என்ன? கீழமை நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளாக ஜாமீன் மீதான விவாதம் நடந்தது. பிறகு உயர் நீதிமன்றம் சென்றோம்” என்றார்.
மேற்கொண்டு விளக்கமளித்த அவர், “ஜாமீன் மனு மீது 6 மாதங்கள் விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் உத்தரவு நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு மே 2023 முதல் உச்ச நீதிமன்றத்தில் 14 முறை பட்டியலிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் தள்ளிப் போகிறது. இந்த முழு வழக்கும் ஒரு கட்டுக்கதை என்று நான் நினைக்கிறேன். விசாரணைக்குச் செல்லும்போது போலீசார் எப்படி விளக்கம் அளிப்பார்கள் என்று தெரியவில்லை,” என்றார்.
இருப்பினும், நாட்டின் நீதி அமைப்பு மீது தனக்கு இன்னும் முழு நம்பிக்கை இருப்பதாக உமர் காலித்தின் தந்தை கூறுகிறார்.
நீதிமன்றத்தின் கருத்து
இந்த நான்கு ஆண்டுகளில், நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, டெல்லி காவல்துறை மீது நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது. அவர்களது விசாரணையின் தரம் மோசமாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்தது.
ஆகஸ்ட் 2023இல், தயாள்பூர் காவல் நிலைய எஃப்.ஐ.ஆர் எண். 71/20இல் கலவரம் செய்த வழக்கில் மூன்று பேரைக் கைது செய்ததைக் கேட்டபோது, கர்கடுமா நீதிமன்றத்தில் நீதிபதி புலஸ்த்ய பிரம்சலா, “இந்தச் சம்பவங்கள் முறையாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்படவில்லை. தொடக்கத்தில் செய்த தவறுகளை மறைக்கும் வகையில் பாரபட்சமாகவும் தவறாகவும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
இந்த மூன்று பேர் மீதும் கற்களை வீசி, வாகனங்களுக்குத் தீ வைத்ததாக, அரசு மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2021 செப்டம்பரில், டெல்லியின் கர்கடுமா நீதிமன்றத்தில், நீதிபதி வினோத் யாதவ், இந்த மூன்று பேரையும் விடுவித்தபோது, “சுதந்திரத்திற்குப் பிறகு டெல்லியில் நடந்த மிக மோசமான வகுப்புவாத கலவரத்தை வரலாறு காணுமானால், விசாரணையின் தோல்விக்கு விசாரணை முகமைகளை ஜனநாயக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுவார்கள். புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு அறிவியல் முறையைப் பயன்படுத்தத் தவறிவிட்டன என்பது கவனிக்கப்படும்,” என்று கூறினார்.
முன்னதாக 2022ஆம் ஆண்டில், முன்னாள் நீதிபதிகள் நான்கு பேர் மற்றும் இந்தியாவின் முன்னாள் உள்துறை செயலாளரும் டெல்லி கலவரம் குறித்த உண்மை கண்டறியும் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த அறிக்கை டெல்லி காவல்துறையின் விசாரணை மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி அரசு மற்றும் ஊடகங்களின் பங்கு குறித்தும் கடுமையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான அஞ்சனா பிரகாஷ் இந்த அறிக்கையின் இணை ஆசிரியராக இருந்தார்.
அவர் கூறும்போது, “பல சாட்சிகளின் வாக்குமூலங்கள் தாமதமாகப் பதிவு செய்யப்பட்டன. இப்போது டெல்லி காவல்துறை இந்த அறிக்கைகளை குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் பொருத்த முயல்கிறது. சிலந்தி வலையை கற்பனை செய்து பாருங்கள், சிலந்தி வலையைச் சரியாக வைத்திருப்பது கடினம். ஒரு முனை உடைந்தால்கூட, முழு வலையும் சரிந்துவிடும்,” என்றார்.
அதே உண்மை கண்டறியும் அறிக்கையில், கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்கள் பேசிய பேச்சுகள் மக்களைத் தூண்டிவிட்டதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் கூறப்பட்டது. ஆனால், பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மீது இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.
கபில் மிஸ்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஜூலை 2020இல், டெல்லி காவல்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மற்றும் பிற பாஜக தலைவர்களுக்கு எதிராக அவர்களின் பேச்சு கலவரத்தைத் தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியது.
டெல்லி போலீசார் கருத்து
டெல்லி காவல்துறைக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கு நிலை குறித்து டெல்லி காவல்துறையிடம் பேச பிபிசி பல முயற்சிகளை மேற்கொண்டது.
டெல்லி காவல்துறையின் கூடுதல் மக்கள் தொடர்பு அதிகாரி ரஞ்சய் அத்ரிஷ்யா பிபிசியிடம் பேசுகையில், “இதுவரை நடத்தப்பட்ட விசாரணை சட்டப்படி நடந்துள்ளது. விசாரணை முடிந்த பிறகு, பல வழக்குகளில் எங்களது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம்.
இந்த வழக்கின் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால், அது நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில், இறுதி அறிக்கையை வெளியிடுவோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இந்தக் கலவரங்களில் பலரது வாழ்க்கை சீரழிந்தது. ஆண்டுகள் கடந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதிக்கான போராட்டம் முடிவடையவில்லை.
கலவரம் எப்படி வெடித்தது, யார் தூண்டினார்கள்? கலவரத்தின்போது காவல்துறையின் பங்கு மற்றும் அதன் விசாரணையில் என்ன மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டன? அதற்கு டெல்லி காவல்துறை என்ன செய்தது?
இதுபோன்ற பல கேள்விகள் உள்ளன, அதற்கான பதில்கள் இன்னும் தெரியவில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்