
பட மூலாதாரம், Getty Images
போதை விருந்துகளில் போதைக்காக பாம்பு விஷம் பயன்படுத்தப்பட்டதாக யூடியூபர் எல்விஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போதை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாம்பு விஷத்தை வினியோகித்ததாக யூடியூபரான எல்விஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது இது தொடர்பாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, எல்விஸ் மற்றும் அவருடன் சேர்த்து ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த விருந்து நிகழ்ச்சியில் பாம்பு விஷம் கொடுத்ததற்காக இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போலீசார் நடத்திய சோதனையில், விருந்து நடந்த இடத்தில் 9 பாம்புகளும் மீட்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான மேனகா காந்தியின் புகாரின் பேரில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரில், “எல்விஷ் யாதவ் என்ற யூடியூபர் அவரது சகாக்களுடன் இணைந்து பாம்பு விஷம் மற்றும் உயிருள்ள பாம்புகளைப் பயன்படுத்தி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி, அவற்றை வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்துள்ளார்,” எனக்கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நொய்டாவில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்றதாகவும், வெளிநாட்டுப் பெண்களை அங்கு வரவழைத்து, அவர்களுடன் பாம்பு விஷம் மற்றும் பிற போதைப் பொருட்களை உட்கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எல்விஷ் யாதவ், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
போதைக்காக பாம்பைக் கடிக்க வைத்தல் சீனா, ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கூட சில பார்ட்டிகளில் பாம்பு விஷம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மறுபுறம், பாம்பு விஷத்தால் ஏற்படும் இறப்புகளில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது. இன்னும் பாம்புக்கடி ஒரு ‘கிராமம் சார்ந்த மற்றும் ஏழை மக்களின்’ பிரச்னையாக பார்க்கப்படுகிறது.
போதை விருந்துகளில் ‘பாம்புக் கடி’ போதை கிடைக்கிறதா?
இந்தியாவில் இருந்து வரும் விஷ பாம்புகளுக்கு சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் அதிக தேவை உள்ளது. வெளி நாடுகளில் கூட சிலருக்கு இது போன்ற பாம்புகளை வைத்து பொழுது போக்குவதில் அதிக ஆர்வம் உண்டு.
விமானம் மூலம் பாம்புகள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு தரை வழியாக பாம்புகள் கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அம்பலமாகி வருகிறது.
இந்தியாவில், போதை விருந்துகளில் அல்லது புத்தாண்டு பார்ட்டிகளில் குடித்துவிட்டு வேடிக்கைக்காக பாம்புகளைக் கடிக்க வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, மும்பை போன்ற நகரங்களில் விருந்துகளுக்கு குஜராத் வனப்பகுதிகளில் இருந்து விஷப்பாம்புகளை அனுப்பும் மோசடியும் அம்பலமானது.
ஏற்கெனவே கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, போதைக்கு அடிமையானவர்கள் மார்ஃபின் அல்லது ஓபியம் போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகிறார்கள்; ஆனால் அதை அடிக்கடி உட்கொள்வதால், அவர்களுக்கு அதிலிருந்து கிடைக்கும் போதை சாதாரணமான ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே அவர்கள் மேலும் போதை தேவைப்படுவதால் ஆபத்தான பொருட்களிலிருந்து போதை கிடைக்குமா எனத்தேடுகின்றனர். இத்தேடலில் அவர்களுக்கு ஒரு மாற்றாகக் கிடைப்பது பாம்பு விஷம். சிலர் பாம்பு குட்டிகளை விருந்துகளில் வைத்து, அவை கடிக்கும் போது போதை அல்லது இன்பம் பெறுவதற்காக துன்புறுத்துகின்றனர்.
மாற்று மருந்து ஏன் விஷம் என்று அழைக்கப்படுகிறது?
வெவ்வேறு வகையான பாம்பு கடித்தால் வெவ்வேறு அளவு விஷம் வெளிப்படுகிறது. அதாவது ஒரே இனத்தைச் சேர்ந்த வெவ்வேறு பாம்புகளில் விஷத்தின் அளவு அதிகமாக உள்ளது.
இதன் பொருள் என்னவென்றால், பாம்பின் வயது, பாலினம் அல்லது சூழல் ஆகியவை அதன் விஷத்தை அதிகமான அல்லது குறைவான ஆபத்தானதாக மாற்றும். எனவே, பாம்புக்கடிக்குப் பிறகு ஏற்படும் விளைவுகளின் அறிகுறிகளும் வேறுபட்டவை. அதனால்தான் அதன் சிகிச்சை சிக்கலானதாகிறது. இன்னும், பாம்புக்கடி விஷயத்தில், ‘விஷம் விஷம் தான்’ என்று சொல்வது உண்மைதான்.
பாம்பு விஷத்தில் இருந்து பெறப்படும் பல இரசாயனங்கள் சில நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. விஷத்தைப் பயன்படுத்தும் பல மருந்துகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. பாம்பு விஷத்திலிருந்து ஒரு மாற்று மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் அது இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பாம்பிலிருந்து எடுக்கப்படும் விஷத்தைக் கொண்டு பயனுள்ள மருந்துகளையும் தயாரிக்கமுடியும்.
ஒரு ஊசி சிரிஞ்சில் விஷத்தை உறிஞ்சி, அதை ‘விஷ எதிர்ப்பு சீரம்’ ஆகப் பயன்படுத்துகிறது. இந்தியாவில், விஷத்தை அகற்ற பாரம்பரிய முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. (இந்த மாதிரி வேலைகளை செய்யும் கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களுக்கு இந்த சங்கம் விஷத்தை விற்கிறது.
குதிரைகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற சில விலங்குகளுக்கு கூட தீங்கு விளைவிக்காத அளவுக்கு விஷம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக, அவற்றின் உடலில் பாம்பு விஷத்திற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. பின்னர் அவற்றின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு விஷ எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன.
வாத எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளிலும் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பக்க விளைவுகள் இல்லாமல் பாம்பு விஷத்தில் இருந்து வலி நிவாரணிகளை தயாரிக்கலாம். எனவே, தற்போது இந்த திசையில் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
சில பாம்புகளின் ஒரு லிட்டர் விஷத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கும். பெரும்பாலும் மாற்று மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக விஷத்தை பெறுகின்றன.
விஷத்தின் தன்மையைப் பொருத்து மரணம் சம்பவிக்கும்
மழைக் காலங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பாம்புக்கடியின் தாக்கம் அதிகரிக்கிறது. பாம்புக்கடிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்.
கிராமப்புறங்களில் பாம்புகள் குஞ்சு பொரிக்கும் பருவமும், விவசாயமும் பருவமழை காலங்களில் பாம்புக்கடி அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என பாம்பு தொடர்பான ஆய்வுகளை நடத்தும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாம்பு விஷத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. சில பாம்புகளின் விஷம் உடனடியாக மரணத்தை ஏற்படுத்துகிறது. சில பாம்புகளின் விஷம் மரணத்தை அளிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
சில பாம்புகள் கடித்து, அவற்றின் கூர்மையான பற்கள் மூலம் இரையின் உடலில் விஷத்தை வெளியிடுகின்றன. எனவே, விஷம் நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது. ஆனால் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மொசாம்பிக் ராஜநாகத்தைப் போல் சில பாம்புகள் விஷத்தை உமிழ்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
சிலவகை பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் போது, வேறு சிலவகை பாம்புகளின் விஷம் ரத்த மண்டலத்தைப் பாதிக்கிறது.
மூத்த விஞ்ஞானியான டாக்டர். ஹேமங் ஜோஷி 20 வருடங்களாக பாம்புக்கடி பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். பாம்புக் கடி குறித்து அவர் பிபிசி குஜராத்தியிடம் பேசினார்.
அப்போது, ”நாகப்பாம்பு மற்றும் கரும்பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. அதே சமயம் மற்ற பாம்புகளின் விஷம் ரத்த மண்டலத்தைப் பாதிக்கிறது. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு பக்கவாதம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். ரத்த மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் உடலுக்குள் நுழையும் போது, அது இரத்தத்துடன் கலந்து, உடலில் உள்ள இரத்த நாளங்களில் வெடிப்பை ஏற்படுகிறது,” என்று அவர் கூறினார்.
“பாம்பு கடித்தால், அதன் விஷத்தின் தாக்கம் 10-15 நிமிடங்களில் உடலில் வெளிப்படும். ஆனால் விஷம் 30-45 நிமிடங்களுக்குள் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது. கருப்பு பாம்பு கடித்த பிறகு, அது பெரும்பாலும் ஒன்றரை முதல் இரண்டு மணிநேரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். பின்னர் நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் மிகவும் ஆபத்தானதாக மாறும்.”
“தளர்வாகக் கடிக்கும் பாம்புகளின் விஷம் உடனடியாக செயல்படுவதில்லை. அவை கடித்த பிறகு, கடித்த இடத்தில் வீக்கம் மற்றும் கடுமையான வலி ஏற்படும்,” என்றும் அவர் கூறினார்.
உலகளவில் பாம்பு விஷத்தால் ஏற்படும் மரணங்களில் 80 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை சுமார் 64,000 ஆகும். உலகெங்கிலும் சுமார் 4,00,000 பேர் பாம்புக் கடியால் பக்கவாதம், பார்வை இழப்பு மற்றும் பிற நிரந்தர குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2000 முதல் 2019 வரையிலான இருபது ஆண்டுகளில் 12 லட்சம் மக்கள் பாம்புக்கடியால் உயிரிழந்தனர் என்பதும், பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், 25 சதவீதம் பேர் குழந்தைகள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, உண்மையான எண்ணிக்கை அரசாங்க ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பிரச்னை தீவிரமாக உள்ளது.
2001-2014 காலகட்டத்தில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் நிலைமை மோசமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, பாம்பு விஷத்தை ஒரு பிரச்சனையாக கருதி, அதற்குத் தீர்வுகள் காணும் முயற்சிகள் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாம்புக் கடியைத் தவிர்க்க முடியுமா?
பாம்புக்கடியை தவிர்க்க மிக எளிய வழிமுறைகளை பின்பற்றலாம் என பாம்பு விஷம் தொடர்பான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பாம்பின் நடத்தை தெரிந்தால், பாம்புக்கும் மனிதனுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, விஷம் என்பது பாம்புகளின் வேட்டையாடும் ஆயுதம். இது பயனுள்ளது என்பதுடன் நன்மை பயக்கும் என்பதால், பாம்புகள் அதை மிகவும் குறைவாகவே பயன்படுத்துகின்றன. எனவே பாம்புகள் வேறு வழியில்லாத போது மட்டுமே விஷத்தைப் பயன்படுத்துகின்றன.
ஒரு பாம்பை ஒருவர் பார்த்தால், அதற்கு அச்சப்படத் தேவையில்லை. மேலும், அதற்குத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அதனால் எந்த ஆபத்தும் நேராது.

பட மூலாதாரம், Getty Images
பாம்பைப் பார்த்தால் பதற்றமடையாமல், அதற்குத் தொந்தரவு செய்யாமல் இருந்தால், பெரும்பாலான நேரங்களில் பாம்புக் கடியிலிருந்து தப்ப முடியும்.
மழைக்காலத்தில் முட்டையில் இருந்து பாம்பு குட்டிகள் வெளியே வரும். மேலும், தவளைகள், எலிகள் போன்றவைக் கடந்து மனிதர்களுக்கு அவை ஆபத்தாக மாறுகின்றன. எனவே இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
சமையலறைகள், சேமிப்பு அறைகள், வைக்கோல் அடுக்குகள், குப்பைகளை அகற்றும் இடங்கள் மற்றும் இருண்ட இடங்களில் கூடுதல் கவனம் தேவை. அப்படிப்பட்ட இடங்களுக்கச் செல்லும்போது கையில் ஒரு டார்ச் லைட்டை வைத்துக் கொள்வதுடன், இயன்ற அளவு, பேசுவது அல்லது பாடுவது போல் ஏதாவது ஒலிகளை எழுப்பவேண்டும்.
வயல்களில் அல்லது திறந்த வெளிகளில் தூங்கும் போது கொசுவலைகளைப் பயன்படுத்தவேண்டும்.
பாம்புகள் அல்லது பிற விலங்குகள் தங்கள் கூர்மையான பற்களைக் காட்டுவதன் மூலம் தாக்குவதற்கு முன் ஏதாவது ஒரு அறிகுறியை வெளிப்படுத்துகின்றன. ஆனால் பிளாக் கோப்ரா அப்படி எச்சரிப்பதில்லை.
பாம்பு கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?
- இரத்த ஓட்டத்தை குறைக்க பாம்பு கடித்த இடத்தில் விரல் அளவு கட்டு கட்டவும்.
- ஒருபோதும் மிகவும் இறுக்கமாக கட்ட வேண்டாம். அப்படிச் செய்வதால் ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு, உறுப்புக்களை இழக்க நேரிடலாம்.
- கூடிய விரைவில் ஒரு பதிவு பெற்ற மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். மந்திரம், வீட்டு வைத்தியம் போன்ற அதிகாரப்பூர்வமற்ற முறைகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவேண்டும்.
- பாம்பு கடித்த பிறகு உடலை அதிகமாக அசைக்கக் கூடாது. இல்லையெனில் விஷம் உடலில் வேகமாக பரவும்.
- தண்ணீர் அல்லது திரவங்களை குடிக்கக் கூடாது.
- உடலில் அணிந்துள்ள நகைகள் மற்றும் கைக்கடிகாரத்தை அகற்றவேண்டும்.
- விவசாய நிலத்தில் வேலை செய்யும் போது நீளமான ரப்பர் காலணிகளை அணியவேண்டும்.
- இறுக்கமான ஆடைகளை அணிந்தால், அவற்றைத் தளர்த்தவும்.
- வாயால் இரத்தம் எடுக்க முயற்சிக்கக்கூடாது. பாம்பு கடித்த இடத்தில் இருந்து ரத்தம் எடுக்கவோ வெட்டவோ முயற்சிக்கக் கூடாது.
- காயத்திற்கு ஐஸ் அல்லது ஏதாவது வேதிப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. பாம்பு கடித்த நபரை தனியாக விடக்கூடாது. அவசரப்படாமல் பொறுமையாக இருக்கவேண்டும்.
- விஷமுள்ள பாம்பு கடித்தால் அதைப் பிடிக்கவோ எதிர்க்கவோ முயற்சிக்கக் கூடாது. செத்த பாம்பை கூட மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
- ஒரு பாம்பு சமீபத்தில் இறந்துவிட்டாலும், அதன் பற்களில் இன்னும் விஷம் இருக்கலாம் என்பது மட்டுமல்ல, அதனால் கூட மரணம் ஏற்படலாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்