
திருப்பதி எஸ்வி உயிரியல் பூங்காவில், சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த நபரை சிங்கம் தாக்கியது. இந்த தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார்.
இறந்தவர் ராஜஸ்தானை சேர்ந்த பிரஹலாத் குஜ்ஜர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிப்ரவரி 15, வியாழன் அன்று மதியம் 2.30 மணியளவில் சிங்கம் வழக்கமாக உலாவும் பகுதிக்குள் பிரஹலாத் குதித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரஹலாத் சிங்கத்தின் பகுதிக்குள் குதித்தது ஏன்? தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இவ்வாறு செய்தாரா அல்லது மனநலம் சரியில்லாததால் உள்ளே குதித்தாரா? இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி எஸ்வி உயிரியல் பூங்கா
உண்மையில் நடந்தது என்ன?
வியாழக்கிழமை அன்று எஸ்வி உயிரியல் பூங்காவுக்கு குறைவான பார்வையாளர்களே வந்துள்ளனர்.
இந்த உயிரியல் பூங்காவில் மூன்று சிங்கங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு ஆண் சிங்கங்கள், ஒன்று பெண் சிங்கம். பெண் சிங்கத்தின் பெயர் சுந்தரி. ஆண் சிங்கங்களின் பெயர்கள் குமார் மற்றும் டொங்கல்புரா.
தினமும் காலை 8 மணி முதல் மாலை 5:30 மணி வரை, கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் 3 சிங்கங்களில், சுழற்சி முறையில் ஒன்று மட்டும் மக்கள் பார்வைக்காக வளாகத்திற்குள் விடப்படும். மற்ற இரண்டு சிங்கங்கள் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும். இந்த வளாகத்தைச் சுற்றி 8 அடி உயர வேலி போடப்பட்டுள்ளது.
வியாழன் அன்று இரண்டு சிங்கங்கள் கூண்டுக்குள் இருந்த நிலையில், டொங்கல்புரா என்ற ஒரு சிங்கம் மட்டும் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டது.
பிற்பகல் 2.30 மணியளவில் 8 அடி உயரம் கொண்ட வேலியைத் தாண்டி பிரஹலாதன் உள்ளே குதித்ததாகக் கூறப்படுகிறது.
“அவர் உயிரியல் பூங்காவின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய கொட்டகை போன்ற அமைப்பிற்கு அருகில் சென்றார். அங்குள்ள கேட்டைக் கடந்து, பின் கொட்டகையை ஒட்டியிருந்த தண்ணீர் தொட்டியில் ஏறி, சிங்கத்திற்கு உணவு அளிக்கும் பகுதியிலிருந்து உள்ளே குதித்தார்,” என நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
பிரஹலாதன் உள்ளே குதித்தவுடன், அங்கு உலாவிக் கொண்டிருந்த ஆண் சிங்கம் டொங்கல்புரா அவரைத் தாக்கியது. அவரது கழுத்துப் பகுதியில் சிங்கம் தாக்கியதால் உயிர் பிரிந்தது. இந்த தாக்குதலில் அவரது ஆடைகளும் முழுவதுமாக சிங்கத்தால் கிழிக்கப்பட்டது.


திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் தஹீம் அகமது
ராஜஸ்தானைச் சேர்ந்தவர்
இறந்தவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கிடைத்த ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில், அவர் ராஜஸ்தானை சேர்ந்த பிரஹலாத் குஜ்ஜார் என தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் தஹீம் அகமது கூறுகையில், “இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தாரிடம் விசாரித்ததில், அவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் என்பதும், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்காக ராஜஸ்தானில் இருந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது” என்றார்.
மேலும், “காப்பாளர்கள், மருத்துவர்கள் இருக்கும் கொட்டகையின் கேட்டைக் கடந்து உள்ளே சென்றுள்ளார். அந்தப் பகுதியில் இருந்து தான் சிங்கங்களுக்கு உணவளிப்பார்கள். அவர் உள்ளே செல்வதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்துள்ளனர். அதற்குள் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் ஏறி வேலியைத் தாண்டி சிங்கம் இருந்த பகுதிக்குள் குதித்துள்ளார்,” என்றார் தஹீம் அகமது.
விசாரணையில் தான் அவர் எதற்காக குதித்தார் என்ற முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயிரியல் பூங்காவில் பிரஹலாத் குஜ்ஜாரின் உடல்
“அந்த வளாகம் எப்போதும் பூட்டியே வைக்கப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் பார்வையாளர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள். அவர் அப்படிச் செய்ததற்குக் காரணம் அவருடைய மனநிலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது விசாரணைக்கு பிறகே தெரியும். “
“இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சிங்கம் அவரைத் தாக்கியதால் பூங்கா ஊழியர்கள் சிங்கத்தைக் கூண்டில் அடைத்தனர். பின்னர், உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது,” என்று திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் தஹீம் அகமது கூறினார்.
சிங்கத்துடன் செல்ஃபி எடுக்க வேண்டுமென்ற ஆசையில் தான் பிரஹலாத் இப்படி செய்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “செல்ஃபி எடுக்கச் சென்றது போல தெரியவில்லை. ஏனெனில் அவரது கைப்பேசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது சட்டைப் பையில் இருந்த குறிப்பில் சில தொலைபேசி எண்கள் இருந்தன. ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் அவர் பெயர் பிரஹலாத் என்று தெரிந்து கொண்டோம். பிரேத பரிசோதனைக்கு பின், என்ன நடந்தது என்பது தெரியவரும்,” என அவர் தெரிவித்தார்.

உயிரியல் பூங்கா காப்பாளர் செல்வம்
‘ஊழியர்கள் தடுக்க முயன்றும் அவர் உள்ளே குதித்தார்’
பிரஹலாத் குஜ்ஜார் சிங்கங்களின் வளாகத்தை நோக்கி சென்ற போது, உயிரியல் பூங்கா ஊழியர்கள் அவரைத் தடுக்க முயன்றதாக மக்கள் தெரிவித்தனர். உள்ளே செல்ல வேண்டாம் என சத்தம் போட்டு அவரை தடுக்க முயன்றதாகவும், அதற்கு முன் அவர் உள்ளே குதித்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரியல் பூங்கா கண்காணிப்பாளர் செல்வம் பிபிசியிடம், பிரஹலாத் ஒரு சாதாரண பார்வையாளரைப் போல தான் பூங்காவிற்குள் வந்ததாகவும், இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், “அப்போது அந்த வளாகத்திற்குள் ஒரு ஆண் சிங்கம் இருந்தது. அவர் உள்ளே குதிப்பதைக் கண்டவுடன் சிங்கம் அவரைத் தாக்கியது. அப்போது, எங்கள் ஊழியர்களும், மருத்துவர்களும் அதைத் தடுக்க கடுமையாக முயன்றனர். ஆனால், சிங்கம் அவரை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. சிங்கத்தைக் கூண்டிற்குள் அடைத்த பிறகு, போலீசார் மற்றும் அனைவரும் வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் முழு விபரம் தெரியவரும்,” என்றார் செல்வம்.
இதுபோன்ற சம்பவங்கள் தங்கள் உயிரியல் பூங்காவில் இதுவரை நடந்ததில்லை எனவும், அந்த நபர் 8 அடி உயர வேலியைத் தாண்டி உள்ளே குதித்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறினார் கண்காணிப்பாளர் செல்வம்.
வழக்கமாக சிங்கம் உலாவும் பகுதியை சற்று தள்ளி நின்று தான் மக்கள் பார்ப்பார்கள் என்றும், அவர் அருகே சென்ற போது ஊழியர்கள் தடுத்துள்ளனர், ஆனால் திடீரென ஓடிச் சென்று, வேலியைத் தாண்டி குதித்து விட்டார் என பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர்.
உயிரியல் அடுத்துள்ள புடிபட்லா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சுதா யாதவ் கூறுகையில், எஸ்வி உயிரியல் பூங்காவைச் சுற்றி எங்கும் கேமராக்கள் இல்லை எனவும், கேமராக்கள் இருந்திருந்தால் சிசிடிவியில் பார்த்து முன்பே அவரை தடுத்து நிறுத்தியிருப்பார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
உயிரியல் பூங்காவின் ஒரு பகுதி புடிபட்லா பஞ்சாயத்துக்கு உட்பட்டது, மீதமுள்ள பகுதி வனத்துறையின் கீழ் வருகிறது.
ஆண் சிங்கம் மனித ரத்தத்தை சுவைத்ததால், அதனிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் பாதுகாப்பை அதிகரிக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்