இந்தியாவில் பல ஆண்டுகளாக சில இந்து குழுக்கள் “லவ் ஜிஹாத்” இந்தியாவில் நடைபெறுவதாக கூறி வருகின்றன. அதாவது, முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து அவர்களை மதம் மாற்றம் செய்யும் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறி வருகிறது. இதற்கு ஆதாரம் ஏதும் தரப்படுவதில்லை.
இப்போது ஒரு தலைகீழ் கூற்று ஒன்று கூறப்படுகிறது. இந்து ஆண்கள் முஸ்லிம் பெண்களை வேண்டுமென்றே கவர்ந்திழுக்க முயற்சிக்கின்றனர் என்ற கருத்து ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இது “பகவா லவ் ட்ராப்” என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூற்றுக்கு ஆதாரம் மிகக் குறைவுதான். ஆனால் அது நிஜ உலகில் வன்முறையை தூண்டுவதாக உள்ளது.
“அது மிகவும் கீழ்த்தரமானது. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை” என்று வட இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் மரியம், தனக்கு ஆன்லைனில் வந்த தவறான செய்திகளை நினைவுகூர்கிறார்.
மரியம் – (பெயர் மாற்றப்பட்டுள்ளது)- ஒரு டாக்ஸிங் தாக்குதலுக்கு (ஒருவரின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அவரது அனுமதி இல்லாமல் ஆன்லைனில் வெளியிடுவது) இலக்காகியுள்ளார். இந்து ஆண்கள் அருகில் நிற்கும் அவருடைய புகைப்படங்கள் பொது சமூக ஊடக கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டு, அவர் வேறு மதத்தவருடன் உறவுகளில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேற்று மதத்தவருடன் தொடர்பில் இருப்பது, அவரை ஆன்லைனில் தாக்குபவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை.
புகைப்படங்களில் உள்ள ஆண்கள் அவருடன் காதல் உறவில் இருப்பவர்கள் அல்ல. அவர்கள் அவருடைய நண்பர்கள். ஆனால் மரியமை தாக்குபவர்கள் நிறுத்தவில்லை. “அவர்கள் நான் இந்து ஆண்களுடன் பழகுகிறேன் என்று கூறினார்கள். அவர்கள் என் பெற்றோரை திட்டி என் வளர்ப்பை கேள்விக்குள்ளாக்கினர்” என்று அவர் கூறுகிறார்.
பழமைவாத இந்திய குடும்பங்களில் வெவ்வேறு மதங்களுக்கு இடையிலான திருமணங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும்.
தனது தகவல்களை வெளியிட்ட சில கணக்குகளின் அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் ஆண்கள் தான் தன்னை “பகவா லவ் ட்ராப்” என்ற சதிக்கு இலக்காகியதாக குற்றம் சாட்டுகிறார்கள் என மரியம் நம்புகிறார்.
“பகவா” என்றால் காவி என்று பொருள். இந்துத்துவாவுடன் தொடர்புடையதாக மாறியுள்ள ஒரு நிறம். இந்துத்துவா என்பது ஒரு வகையான தீவிர வலதுசாரி இந்து தேசியவாதத்தை ஊக்குவிக்கும் சித்தாந்தம் என அதை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். இந்த சூழலில், “பகவா” என்பது இந்துத்துவாவுடன் ஒத்ததாக பயன்படுத்தப்படுகிறது.
“பகவா லவ் ட்ராப்” என்ற சதிக் கோட்பாடு, இந்துத்துவத்தை நம்பும் ஆண்கள் முஸ்லிம் பெண்களை கவர்ந்து அவர்களை தங்கள் சமூகங்களிலிருந்து விலக்க முயற்சிக்கின்றனர் என்று கூறுகிறது. இந்த கருத்து முதன்மையாக முஸ்லிம் ஆண்களால் முன்னெடுக்கப்படுகிறது. அவர்களில் பலர் இது உண்மையிலேயே நடக்கிறது என்று பயப்படுகிறார்கள்.
பிபிசி இந்தக் கோட்பாட்டை ஆதரிக்கும் கணக்குகளின் உரிமையாளர்களுடன் பேசியது. அவர்களால் வழங்கப்பட்ட எடுத்துக்காட்டுகளை ஆய்வு செய்தது. இதில் உண்மை என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இந்தக் கதை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகிறது – ‘பகவா லவ் ட்ராப்’ என்ற சொல் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவு நிஜ உலகத்திலும் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மே மாதத்தில், மத்தியப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதில், இரு மருத்துவ மாணவர்கள் -ஒரு முஸ்லிம் பெண் மற்றும் ஒரு இந்து ஆண் -ஒரு ஸ்கூட்டரில் தங்கள் பல்கலைக் கழகத்திற்கு திரும்புவதை காண முடிகிறது.
பார்ப்பதற்கு முஸ்லிம்கள் போன்று தோற்றமளிக்கும் ஆண்கள் கூட்டம் அவர்களை சூழ்ந்திருக்கிறது. அந்த பெண் தனது மதத்திற்கு அவமானம் செய்ததற்காக கண்டிக்கப்படுகிறார். “இஸ்லாமை ஏமாற்ற யாரும் உங்களை அனுமதிக்க மாட்டார்கள்” என்று அவர்களில் ஒருவர் கத்துகிறார், மற்றவர்கள் இந்து ஆணைக் கடுமையாக தாக்குகிறார்கள்.
இந்தியா முழுவதிலுமிருந்து ஒரே மாதிரியாக இருக்கும் 15க்கும் மேற்பட்ட வீடியோக்களை பிபிசி பார்த்துள்ளது. இவை ‘பகவா லப் ட்ராப்’ சம்பவங்கள் என கூறும் வீடியோக்கள். யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸில் ஒரு கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளன. இவை #BhagwaLoveTrap என்ற ஹேஷ்டேக் உடன் பகிரப்படுகின்றன.
‘பகவா லவ் ட்ராப்’ என்பது ‘லவ் ஜிஹாத்’ என்ற பழைய, நன்கு பிரபலமான கருத்தின் எதிர் கருத்து ஆகும். ‘லவ் ஜிஹாத்’ முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கின்றனர் என்று கூறுகிறது. இது பல ஆண்டுகளாக இந்து தேசியவாதிகளால் ஆன்லைனில் பரப்பப்பட்டு வருகிறது.
“பகவா லவ் ட்ராப்” கருத்தை போலவே, இந்த கூற்றுகள் ஆதாரம் இல்லாமல் பரவுகின்றன. நிஜ உலக வன்முறைக்கு வழிவகுத்துள்ளன.
இந்தியாவில் கலப்பு மத திருமணங்கள் இன்னும் அரிதாகவே உள்ளன, பெரும்பாலான மக்கள் குடும்பங்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களையே தேர்வு செய்கிறார்கள்.
இரண்டு இந்திய செய்தி நிறுவனங்களின் சுயாதீன ஆய்வுகளில் இந்தக் கருத்தை நிறுவும் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் கூட, “லவ் ஜிஹாத்” என்பது இந்தியாவின் அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது.
இது பிரதமர் நரேந்திர மோதியின் கட்சியான பாஜகவின் அரசியல்வாதிகள் மற்றும் இந்துத்துவா சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் சில உறுப்பினர்களால் பொது தளத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது.
“பகவா லவ் ட்ராப்” கருத்து பெரும்பாலும் சமூக ஊடகங்களில், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாத கணக்குகளால் பரவுகிறது. அதே நேரம் பல உயர்மட்ட முஸ்லிம் தலைவர்களாலும் இந்தக் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
இஸ்லாமிய அறிஞரும் இந்திய செய்தி சேனல் விவாதங்களில் விமர்சகராக பங்கு பெறுபவருமான ஷோயப் ஜமாய், இந்திய ஊடகங்களில் இந்த கருத்தை தானே பிரபலப்படுத்தியதாக கூறுகிறார். ஆனால், இதன் காரணமாக நிஜ உலகில் வன்முறை ஏற்படுவதை அவர் ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார்.
“முஸ்லிம் சமூகத்திலிருந்து சட்டத்தை தங்கள் கையில் எடுக்க முயற்சிக்கும் மக்களை நான் ஆதரிக்கவில்லை. இந்த நாடு சட்டத்துக்கு உட்பட்டு இயங்குகிறது” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் ‘பகவா லவ் ட்ராப்’ என்ற கருத்து சந்தேகமின்றி உண்மை என்று அவர் நம்புகிறார். இந்து இளைஞர்கள் “இந்துத்துவா படை” மூலம் “மூளைச்சலவை” செய்யப்படுகிறார்கள். “முஸ்லிம் பெண்களை தங்கள் வலைகளில் சிக்க வைக்கின்றனர்” என்று அவர் கூறுகிறார்.
ஜமாய் மற்றும் இந்தக் கருத்தின் பிற ஆதரவாளர்கள், ஆன்லைனில் பரவி வரும் நம்பகமான வீடியோக்களின் அடிப்பையில் இதை கூறுவதாக தெரிவிக்கின்றனர். இந்த வீடியோக்கள், “பகவா லவ் ட்ராப்” கூறுவது போல், இந்துத்துவா தலைவர்கள் இந்து ஆண்களை முஸ்லிம் பெண்களைத் தொடர்பு கொள்ள தீவிரமாக ஊக்குவிப்பதைக் காட்டுகின்றன.
ஒரு வீடியோவில், இந்தியாவின் ஆளும் பாஜக கட்சியின் உறுப்பினரான யோகி ஆதித்யநாத் 2007 ஆம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்தில். “முஸ்லிம்கள் ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முஸ்லிம் பெண்களை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார். அதைக்கேட்டு, கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
ஆதித்யநாத் அதன் பிறகு உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக உயர்ந்தார். அவர் இன்னும் அந்தக் கருத்தை ஆதரிக்கிறாரா என்று பிபிசி கேட்டது. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.
“பகவா லவ் ட்ராப்” கருத்தின் ஆதரவாளர்கள் தாங்கள் கூறுவது உண்மை என்று எடுத்துரைக்க பிபிசியுடன் பகிர்ந்து கொண்ட 10 குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளை நாங்கள் ஆராய்ந்தோம். இவை அனைத்திலும் இந்து ஆண்கள் முஸ்லிம் பெண்களுடன் காதல் அல்லது திருமண உறவுகளில் இருக்கின்றனர். இவர்கள் வேண்டுமென்றே இது போன்ற உறவுகளில் ஈடுபட்டு முஸ்லிம் பெண்களை மதம் மாற செய்து துன்புறுத்துகின்றனர் என்று பகவா லப் ட்ராப் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
எங்களுக்குக் குறிப்பிடப்பட்ட அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் இந்து ஆண்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் இடையே உறவுகள் இருந்தாலும், இரண்டு உறவுகளில், பெண்கள் மதம் மாறவில்லை.
ஆறு நிகழ்வுகளில், இந்து ஆண்கள் தங்கள் இஸ்லாமிய காதலிகளை அவர்களின் மத அடையாளங்கள் காரணமாக கொன்றதாக பரவலாக கூறப்படுகிறது. ஆனால், அவற்றில் நான்கு வழக்குகளில் கொலைக்கான காரணம் நிதி அல்லது குடும்ப தகராறுகள் என காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிற வழக்குகளில் வன்முறைக்கான காரணங்களை செய்திகள் அல்லது காவல்துறை அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை, ஆனால் இவை ‘பகவா லவ் ட்ராப்’ சம்பவங்கள் என கூற எந்த ஆதாரமும் இல்லை.
‘பகவா லவ் ட்ராப்’ சம்பவங்கள் குறித்த மேலும் சில வீடியோக்களை இந்திய உண்மை-சரிபார்ப்பு இணையதளமான Boom Live அம்பலப்படுத்தியுள்ளது.
இந்துத்துவா அமைப்புகள் கூறுவது என்ன?
இந்துத்துவா குழுக்கள் ‘பகவா லவ் ட்ராப்’ கருத்தை மறுக்கின்றன.
“இந்துக்கள் நடத்துவதாக கூறப்படும் இதுபோன்ற செயல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் -ன் தலைவர் அலோக் குமார் கூறுகிறார். ஜமாய் போன்ற அறிஞர்கள் முன்வைக்கும் கூற்றுகள் உண்மையல்ல என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், “லவ் ஜிஹாத்” உண்மையானது என்று குமார் நம்புகிறார். “இந்து பெண்களை தங்கள் வலைக்குள் இழுக்கும் முஸ்லிம் ஆண்களின் ஒரு பெரிய பிரிவு உள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.
இந்த இரண்டு கோட்பாடுகளையும் சமமான எதிரிகளாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் சிலர் அப்படி ஏற்றுக் கொள்வதில்லை.
“லவ் ஜிஹாத் பெரிய அரசியல் ஆதரவு பெற்றுள்ளது” என்று பகவா லவ் ட்ராப் பற்றி எழுதிய முதல் பத்திரிகையாளர்களில் ஒருவரான ஃபாத்திமா கான், இந்தியாவின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை சுட்டிக்காட்டுகிறார். “மறுபுறம், பகவா லவ் ட்ராப் என்பது ஒரு வளர்ந்து வரும் சதித்திட்டக் கோட்பாடு. இது அரசியல் ஆதரவு பெற்றதில்லை.” என்கிறார் அவர்.
இந்த நாட்டில் உள்ள பல விவாதங்கள் போல, இந்த பிரச்சினையும் அரசியல் கட்சிப் பிரிவினையால் சூழப்பட்டுள்ளது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் நிலவும் மதப் பிளவுகள், இதுபோன்ற கோட்பாடுகள் ஆன்லைனில் வளர்ந்து, நிஜ உலகில் தீங்கு ஏற்படுத்த பரந்த வாய்ப்பை உருவாக்குகின்றன.
டாக்ஸிங் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பெண் மரியம் இதற்கு ஒரு சான்று. அவருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளால் மிகவும் துன்பமடைந்ததால் மோதல்களைத் தவிர்க்க அவர் வேலையை விட்டு சில காலம் ஓய்வு எடுக்கிறார்.
“நான் வாழும் பகுதியில் நான் முதன்முறையாக பாதுகாப்பாக உணரவில்லை. நான் வெளியே செல்வதற்கே மிகவும் பயந்தேன்” என்று அவர் கூறுகிறார். தன்னை ஆன்லைனில் தாக்கியவர்களை பார்த்து “நீங்கள் பெண்களைப் பாதுகாப்பதாகக் கூறுகிறீர்கள் . ஆனால் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கையை அழிக்கிறீர்கள்” என்று கூறுகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்