உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள யோகி ஆதித்யநாத் தலைமையில் அரசு, தங்களுக்கு எதிராக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை உ.பி. முதலமைச்சர் அலுவலகம் பிறப்பித்துள்ளது. அதில், ஊடக அமைப்பினால் வெளியிடப்பட்ட மற்றும் ஒளிபரப்பப்படும் ‘எதிர்மறை’ செய்திகளை சரிபார்க்க, ஆன்லைன் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் அமைப்பான ஐ.ஜி.ஆர்.எஸ்., இல் விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு கோட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உத்தரவின்படி, இதுபோன்ற செய்திகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, இந்தச் செய்தி ஏன் வெளியிடப்பட்டது என்று கேட்கப்படும். இதனுடன், செய்தியின் நகல் தகவல் துறைக்கும் அனுப்பப்படும்.
இந்த சுற்றறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் முதன்மைச் செயலாளர் சஞ்சய் பிரசாத் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.
சுற்றறிக்கையில், “ஏதேனும் செய்தித்தாள்/ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட அல்லது தவறான தகவல்களின் அடிப்படையில் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு மாநில அரசு அல்லது மாவட்ட நிர்வாகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாகக் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், அந்த ஊடகம்/ செய்தித்தாள் நிர்வாகத்திடம் விளக்கம் பெற வேண்டும். அந்த விளக்கத்தை தகவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் முடிவு குறித்து ஊடகவியலாளர்கள் கூறுவது என்ன?
உத்தர பிரதேச அரசின் இந்த உத்தரவை அம்மாநில பத்திரிக்கையாளர்கள் எப்படி பார்க்கிறார்கள், இந்த உத்தரவின் நோக்கம் என்ன என்பது குறித்து பத்திரிகையாளர்கள், அரசாங்கத்தின் ஊடகப் பிரதிநிதிகளிடம் பிபிசி பேசியது.
மூத்த பத்திரிகையாளர் அம்பரீஷ் குமார் உத்தரபிரதேச அரசின் உத்தரவை பத்திரிகையாளர்களை மிரட்டும் முயற்சியாகவே பார்க்கிறார்.
அவர் பிபிசியிடம் பேசும்போது “பெரும்பாலான ஊடகங்கள் ஏற்கனவே பாஜகவுடன் நிற்கின்றன. கேள்வி எழுப்புவதற்கு சிலர் மட்டுமே எஞ்சியுள்ளனர். அவர்கள் அரசாங்கங்களைக் கேள்வி கேட்கிறார்கள். இப்போது அவர்களையும் அச்சுறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
“அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்றது”
எல்லாவற்றிற்கும் மேலாக, அரசுக்கு எதிரான செய்திகளை விசாரிப்பதன் நோக்கம் என்ன?
இந்த கேள்விக்கு அம்பரீஷ் குமார் பதிலளிக்கையில், “இது மிகவும் அபத்தமான முடிவு. எது செய்தி, எது செய்தியல்ல என்பதை இந்த அரசு எப்படி முடிவு செய்யும்? ஒரு வகையில் போலீஸை செய்தி ஆசிரியராக்குவது போன்றது இது. செய்தியை கண்காணித்து அதில் தவறு இருந்தால் வழக்குப் பதிவு செய்வது, சிறைக்கு அனுப்புவது என்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
பத்திரிகையாளர்களின் பணியில் இந்த உத்தரவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அம்பரீஷ் குமார் கூறும்போது, “பாஜகவினரிடம் ஒரு ட்ரோல் ஆர்மி இருக்கிறது, அவர்களிடமிருந்து பத்திரிகையாளர் தப்பித்தாலும், இப்போது இந்த புதிய பிரச்சனை அவர்களுக்கு முன் வந்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்து ஆட்சிக் காலத்திலும் பத்திரிகையாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அரசாங்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் செய்திகளை எழுதியதற்காகவோ அல்லது கொடுத்ததற்காகவோ பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் உள்ளன” என்றார்.
மேலும், “யோகி அரசு பத்திரிகையாளர்களை ஒடுக்க முயல்கிறது, ஊடகங்களில் பெரும் பகுதியினர் இது குறித்து மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்றது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஊடகவியலாளர்கள் மீதான நடவடிக்கை புதிது அல்ல
இருப்பினும், இது ஒரு புதிய விஷயம் அல்ல என்று நியூஸ் ட்ராக் செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய மூத்த பத்திரிகையாளரான யோகேஷ் மிஸ்ரா கூறுகிறார்.
முலாயம் சிங் யாதவ் முதல் மாயாவதி, அகிலேஷ் யாதவ், யோகி ஆட்சி வரை உ.பி.யில் பத்திரிகையாளர்களிடம் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
“முன்பு இருந்தே இப்படி நடக்கிறது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சுற்றறிக்கையின் கடைசிப் பத்தியில் தவறான செய்திகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எழுதப்பட்டிருப்பது பெரிய விஷயம். ஏற்கனவே இதனை கண்காணிக்க ஊடக நிர்வாகங்கள் இருக்கின்றன. தற்போதும் நாம் ஏதேனும் தவறான செய்திகளை வெளியிட்டால், அதற்கு மறுப்பு வெளியிடப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் செல்ல உரிமை உண்டு. அப்படியிருக்கும்போது இதுபோன்ற சுற்றறிக்கைகள் வருகிறது என்றால், இது குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் ” என அவர் கூறுகிறார்.
ஐ.ஜி.ஆர்.எஸ் மூலம் செய்திகளை அரசு சரிபார்த்ததன் நோக்கம் என்ன?
“உங்கள் செய்திகளை ஐஜிஆர்எஸ் மூலம் சரிபார்ப்போம் என்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடம் அரசு கூறுகிறது. செய்திகள் மூலம் ஏதேனும் பிரச்னை எழுப்பப்பட்டால், பிரச்னைகள் தீர்க்கப்படும் என்றும் கூறுகிறது. ஆனால் இது ஏற்கனவே நடந்து வருகிறது” என்கிறார் யோகேஷ் மிஸ்ரா.
“செய்திகளின் அடிப்படையில் மட்டுமே மாயாவதி தனது அரசை நடத்தினார். அவர் செய்தித்தாள்களின் பத்திகளை படித்தார். செய்தி உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். செய்தி உண்மையானது என்று உணர்ந்தால், குறிப்பிட்ட பிரச்னையை சரி செய்வதற்கு அதிகாரிகளை அழைத்து பேசுவார். அகிலேஷ் யாதவும் அதையே செய்தார். யோகி ஆதித்யநாத் அதைத்தான் செய்திருக்க வேண்டும். ஆகவே, இதுபோன்ற ஒரு அமைப்பு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும்போது, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் அவர் கேள்வி” எழுப்புகிறார்.
உ.பி. அரசு என்ன சொல்கிறது?
யோகி அரசின் இந்த புதிய உத்தரவு குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமாரிடம் பிபிசி பேசியது.
அப்போது அவர், “ஊடகவியலாளர்களை பயமுறுத்துவது இதன் நோக்கம் அல்ல. சில துறைகளில் குளறுபடிகள் நடப்பதாக மாவட்டங்களில் பல செய்திகள் வெளியாகின்றன. ரோடு உடைந்துள்ளது, மருத்துவமனையில் சிகிச்சை சரியாக நடக்கவில்லை என்பது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்” என்று பதிலளித்தார்.
இது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றும் அவர் கூறுகிறார்.
“நீங்கள் அந்த உத்தரவை படித்து பார்த்தால் புரியும். ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஊடகவியலாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக தவறாக பரப்பப்படுகிறது. போலி செய்திகளை தடுப்பதே இந்த உத்தரவின் நோக்கம் ” என்று மிருத்யுஞ்சய் குமார் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் மீதான நடவடிக்கைகளும் வழக்குகளும்
உத்தரபிரதேசத்தில் உள்ள ஊடக நிறுவனங்களின் செய்திகளை விசாரிக்கும் இந்த புதிய உத்தரவை, பொறுப்பான ஊடகவியலுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்று அரசும் நிர்வாகமும் விவரிக்கிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உ.பி.யில் பத்திரிகையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மை.
எனவே, வெளியிடப்பட்ட மற்றும் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படும் தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் மீதான நடவடிக்கை குறித்த புதிய சுற்றறிக்கை ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் கவலையடையச் செய்துள்ளது.
யோகி அரசின் ஆட்சிக் காலத்தில், பத்திரிகையாளர்களுக்கு எதிராக பல கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள. இதில், கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதான வழக்கு மிகவும் பிரபலமானது.
அக்டோபர் 2020 இல், ஹத்ராஸில் ஒரு தலித் சிறுமியின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தியை சேகரிக்க சென்ற சித்திக் கப்பன் மதுரா அருகே கைது செய்யப்பட்டார். மதத்தின் அடிப்படையில் பல்வேறு சமூகத்தினரிடையே பகைமை மற்றும் மத உணர்வுகளை ஊக்குவித்தல் மற்றும் தேசத்துரோகம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
28 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். சித்திக் கப்பனுக்கு சர்ச்சைக்குரிய பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், ஹத்ராஸ் கலவரத்தை பரப்பும் சதியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக ஜூன் 2020 இல், இணையதள பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோதி தத்தெடுத்த கிராமமான டோம்ரியில் மக்கள் பட்டினி கிடப்பதாக அவர் செய்தி வெளியிட்டிருந்தார். அவர் மீது SC/ST சட்டத்தின் கீழ் மற்றும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுப்ரியா சர்மா மீதான வழக்கு
பிரதமர் மோதியால் தத்தெடுக்கப்பட்ட கிராமமான டோம்ரியில் ஊரடங்கின் போது மக்களின் நிலை குறித்து சுப்ரியா சர்மா தனது இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் போது மாலா தேவி என்ற பெண் உட்பட பலரிடம் அவர் பேட்டி கண்டிருந்தார்.
தான் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்ததாகவும் கொரோனா முடக்கத்தால் தனது பொருளாதார நிலைமை மோசமாகி உணவுக்கே வழியில்லாமல் போனதாகவும் மாலா தேவி கூறியது அந்த இணையப்பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.
அவர் தன்னிடம் ரேஷன் கார்டு இல்லை என்றும், அதனால் தனக்கு ரேஷன் கிடைக்கவில்லை என்றும் செய்தியாளரிடம் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதும், இந்த விஷயங்களை தான் செய்தியாளரிடம் கூறவில்லை என்றும், தனது ஏழ்மையை அந்த நிருபர் கேலி செய்ததாகவும் மாலா தேவி கூறினார்.
மாலா தேவியின் புகாரின் பேரில், வாரணாசியில் உள்ள ராம்நகர் காவல் நிலைய போலீஸார் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
இணைய ஊடகத்தின் ஆசிரியர் பெயரும் எஃப்ஐஆரில் இடம்பெற்றிருந்தது. அதேவேளையில், தனது கட்டுரையில் உண்மைக்கு அப்பால் எதையும் எழுதவில்லை என்று சுப்ரியா ஷர்மா தெரிவித்தார்.
இந்த எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி சுப்ரியா சர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில், வழக்கை முழுமையாக விசாரிக்கும் வரை அவரை கைது செய்யவும் நீதிமன்றம் தடை விதித்தது.
தி வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீதான வழக்கு
மூத்த பத்திரிகையாளரும், ‘தி வயர்’ஆங்கில செய்தி இணையதளத்தின் ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன் மீதும் இரண்டு எஃப்ஐஆர்கள் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார் என்று வதந்திகளை பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றது அனைவருக்கும் தெரியும் என்றும் இதில் வதந்தி பரப்புவதற்கு எதுவும் இல்லையென்றும் தி வயர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அறிவுஜீவிகள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பல பிரபல சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குல் என்று அவர்கள் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் சித்தார்த் வரதராஜன் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
பல உள்ளூர் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
இதற்கு முன்னரும் உ.பி.யில் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் பலர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு கொரோனா முழு ஊரடங்கு காலத்தில், உ.பி.யின் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அஜய் பதாரியா மீது உள்ளூர் நிர்வாகம் எஃப்ஐஆர் பதிவு செய்தது. ஊரடங்கின்போது உணவைப் பெறுவது தொடர்பாக பார்வையற்ற தம்பதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி அஜய் படோரியா ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
உள்ளூர் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக மாவட்ட ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கடந்த ஆண்டு, மிர்சாபூரில் மதிய உணவில் முறைகேடு நடந்ததாகக் செய்தி வெளியிட்ட செய்தியாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அரசாங்கத்திடம் கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டன.
குறிப்பாக மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில், ‘அச்சு ஊடக பத்திரிகையாளர் எப்படி வீடியோ எடுக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரத்தில் இந்திய பிரஸ் கவுன்சில் தலையிட வேண்டியிருந்தது.
31 ஆகஸ்ட் 2019 அன்று, மிர்சாபூரில் பத்திரிகையாளர் பங்கஜ் ஜெய்ஸ்வாலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அரசுப் பள்ளியில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் குழந்தைகளுக்கான மதிய உணவு முறைகேடுகள் தொடர்பான செய்தியை பங்கஜ் ஜெய்ஸ்வால் வெளியிட்டிருந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் பங்கஜ் ஜெய்ஸ்வாலின் பெயர் எஃப்ஐஆரில் இருந்து நீக்கப்பட்டது.
மிர்சாபூரில், மதிய உணவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் சூடு ஆறாத நிலையில், பிஜ்னோரில் ஐந்து பத்திரிகையாளர்கள் மீது போலிச் செய்தியை வெளியிட்டதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
மறுபுறம், அசம்கரில், பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பத்திரிகையாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு கிராமத்தில் இருந்த பொதுக் குழாயில் இருந்து வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்கள் தண்ணீரை குடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் இந்த பத்திரிக்கையாளர் செய்தி வெளியிட்டிருந்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் இட்டுக்கட்டி எழுதியுள்ளதாக அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் குற்றஞ்சாட்டியது.
இந்த விவகாரத்தில், தவறான விளக்கம் இருப்பதாக கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதேபோல், செப்டம்பர் 10, 2019 அன்று, ஆசம்கரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் குறித்து ஆய்வு செய்த ஆறு பத்திரிகையாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர்களில் ஒருவரான சந்தோஷ் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டார்.
பிரசாந்த் கனோஜியா கைது
2019 ஆம் ஆண்டில், உ.பி.யின் முதலமைச்சருக்கு எதிராக சமூக ஊடகங்களில் அநாகரீகமான கருத்துகளைக் கூறியதாக லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் கோட்வாலியில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
பிரசாந்த் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறி முதலமைச்சரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாக போலீசார் குற்றம் சாட்டினர்.
பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரசாந்த் கனோஜியா விடுவிக்கப்பட்டார். பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டதைக் கேள்விக்குட்படுத்தி உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கருத்துகளை தெரிவித்ததோடு அவரை 11 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் எடுத்த முடிவையும் விமர்சித்தது.
பிரசாந்த் கனோஜியா வெளியிட்ட ஒரு ட்வீட் காரணமாக, லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் அவர் மீண்டும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்