ஆளவந்தான் (2001), முத்து (1995) திரைப்படங்கள் நேற்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, வடிவேலு, மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து. ஜனரஞ்சகமான இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது.
அதேபோல, 2001-ஆம் ஆண்டு கமல்ஹாசனின் இருவேறுபட்ட நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இத்திரைப்படத்தை இயக்கியிருநதார். கலைப்புலி தாணு தயாரித்த இத்திரைப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், பாத்திமா பாபு, ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சங்கர் எஹசான் லாய் இசையமைத்துள்ளார்.
ஓடிடி வரவுக்குப் பிறகு நேரடியாக திரையரங்குகளில் படங்கள் வெளியாவது சற்று குறைந்தது. எனவே, ரசிகர்கள் அவரவர்கள் ரசிக்கும் நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் ரசிப்பதற்காக, புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, சமீப காலமாக பல பிரபல திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஆளவந்தான் திரைப்படம் தமிழ் நாடு முழுவதும் 1,000 திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2005-ஆம் ஆண்டு வரை திரைப்படங்கள் ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்டன. அதற்கு பிறகு, சினிமா கேமராக்கள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்கள் ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்டவை.
ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படங்களை அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் வடிவத்திற்கு எவ்வாறு மாற்றுகிறார்கள்? ஃபிலிம் ரோலில் படமாக்கப்படும் திரைப்படங்களுக்கும், டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்படும் திரைப்படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஃபிலிம் ரோலில் சினிமா இருந்தபோது பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் என்னவானார்கள்? அவர்கள் டிஜிட்டல் கேமராவின் நவீன தொழில் நுட்பங்களுக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்களா?
ஃபிலிம் ரோல் – டிஜிட்டல் இடையே என்ன வேறுபாடு?
“கனவு மெய்ப்பட வேண்டும்”, “பெரியார்”, “சட்டம் ஒரு இருட்டறை” உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், ஒளிப்பதிவு பற்றியும், சினிமா லைட்டிங் பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ள ஒளிப்பதிவாளர் சி. ஜே. ராஜ்குமாரிடம் ஃபிலிம் ரோல் பற்றியும், டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றியும் கலந்துரையாடினோம்.
அவர் கூறும்போது, “ சினிமா என்பதே அறிவியல் தான். சினிமா ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்டபோது, அவை ஒரு வேதியியல் மாற்றத்தின் கலவை என்றே கூறலாம். இன்றைய தலைமுறைக்கு ஃபிலிம் ரோல் பற்றி அடிப்படைத் தகவல்களைக் கூற வேண்டுமென்றால், சினிமா ஃபிலிம் ரோல்கள் கேன்களில் படப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு வரப்படும். ஒரு கேனில் 400 அடி ஃபிலிம் ரோல்கள் இருக்கும். ஒரு நாளைக்கு சுமார் 3 கேன் ஃபிலிம் ரோல்கள் வரை உபயோகப்படுத்துவார்கள்.
அடிக்கணக்காக கூற வேண்டுமானால், ஒரு நாளைக்கு 50,000 அடி முதல் 60,000 அடிவரை உபயோகப்படுத்துவார்கள். ஒரு கேன் ஃபிலிம் ரோலில் 4 நிமிட காட்சிகளைப் பதிவு செய்யலாம். ஃபிலிம் ரோல்களைப் பாதுகாப்பாக படப்பிடிப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு வந்து அதனை கேமராவிற்குள் செலுத்துவதற்கென்றே ஒரு தனி நபர் இருப்பார். அவர் பெயர் “ஃபிலிம் லோடர்”. ஃபிலிம் லோடர் ஃபிலிம் ரோலை கேமராவிற்குள் பொருத்துவதே ஒரு நுணுக்கமான பணி.
தமிழ் சினிமா எப்போது முழுவதுமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறியது என துல்லியமாக கூற முடியாது. தோராயமாக குறிப்பிட வேண்டுமானால், 2005-ஆம் ஆண்டிற்கு பிறகு டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறியது எனலாம்.
ஃபிலிம் ரோலில் பதிவு செய்யப்படும் காட்சிகள் புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டவை. அதே போல, டிஜிட்டல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்படும் காட்சிகள் எண்களை அடிப்படையாகக் கொண்டவை.
ஃபிலிம் ரோலுக்கும், டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. சூரிய ஒளியில் தெரியும் இலையை ஃபிலிம் ரோலில் படமாக்கும்போது அதன் நுண்ணிய இழைகளைக் கூட துல்லியமாக படமாக்கலாம். ஆனால், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அவ்வளவு துல்லியமாக படமாக்க முடிவதில்லை. அதே போல, குறைந்த ஒளியில் டிஜிட்டல் தொழில் நுட்பம் ஃபிலிம் ரோலை விட நன்றாக செயல்படுகிறது. இதுபோல, இரண்டிலுமே சாதக, பாதகங்கள் உள்ளன.
ஃபிலிம் ரோலில் சினிமா படமாக்கப்பட்ட காலகட்டத்தில், அதனை பாதுகாப்பதே தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மிகவும் சவாலான பணியாக இருந்தது. உதாரணமாக, படப்பிடிப்பு முடிந்தவுடன், ஒருவர் அதனை பொறுப்பாக பேருந்திலோ, ரயிலிலோ எங்கு லெபாரட்டரி உள்ளதோ அங்கு சேர்க்க வேண்டிய சிரமம் இருந்தது. அதிலும், வெளி நாட்டில் படப்பிடிப்பு என்றால் கஸ்டம்ஸில் அதற்கென தனியாக அனுமதி வாங்க வேண்டியிருக்கும். டிஜிட்டல் தொழில் நுட்பம் அதனையெல்லாம் மொத்தமாக மாற்றி விட்டது. ஒரே ஒரு பென் ட்ரைவில் மொத்த திரைப்படத்தையும் பதிவு செய்து விட்டு உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம்.
ஆனால், பணிகளை இவ்வளவு சுலபமாக்கிய டிஜிட்டல் தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி படமாக்கப்படும் திரைப்படங்கள் ஃபிலிம் ரோலில் பதிவு செய்யப்படும் திரைப்படங்களைப் போல காலம் கடந்தும் நிற்பதில்லை. தோரயமாக கூற வேண்டுமானால், ஒரு 20 வருடத்திற்கு மட்டுமே டிஜிட்டல் தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி பதிவு செய்யப்படும் திரைப்படங்கள் இருக்கும். ஆனால், முறையாகப் பாதுகாத்தால், ஃபிலிம் ரோலில் படமாக்கப்படும் திரைப்படங்கள் 100 வருடங்கள் தாண்டியும் இருக்கும்,” எனக் கூறினார்.
ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்படுவது ஏன்?
ஃபிலிம் ரோலில் எடுக்கப்படும் திரைப்படங்களை ஏன் மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றி பின்பு ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என சினிமா ஆர்வலர்களின் புரிதலுக்காக ஆளவந்தான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேள்வியெழுப்பினோம்.
அவர், “ஃபிலிம் ரோலில் சினிமா படமாக்கப்பட்டபோது, அதனை ப்ராசஸிங் லெபாரட்டரிக்கு அனுப்பி பிரிண்ட் எடுத்து, பின்னர் திரையரங்குகளில் உள்ள ப்ரொஜெக்டர்கள் மூலம் திரையில் காட்சிகளை தோன்ற வைப்பார்களல்லவா? தற்போது திரையரங்குகளும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுவிட்டன. ப்ரொஜெக்டர் என்ற ஒன்றே உலகம் முழுவதும் இல்லை. அது அழிந்து விட்ட்து.
அனைவரும் Qube, EFO, TFT, TSR உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறிவிட்டார்கள். எனவே, ஃபிலிமில் படமாக்கப்பட்ட திரைப்படத்தை அப்படியே டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றுகிறோம்” என்றார்.
அப்படியென்றால், சினிமாவை மட்டுமே நம்பி எத்தனையோ தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு புதிய தொழில் நுட்பங்கள் சினிமாவில் அசுர வேகத்தில் வரும்போது, ஃபிலிம் லோடர்கள், ஃபிலிம் ரோலை பிராசஸிங் செய்யும் லெபாரட்டரி தொழில் நுட்ப கலைஞர்கள் தற்போது என்ன ஆனார்கள்? இதனை ஒரு தயாரிப்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள் எனக் கேட்டோம்.
அதற்கு அவர், “சினிமா அப்படித்தான். நாளுக்கு நாள் தொழில் நுட்பம் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், அதற்கேற்ப ஒரு தொழில் வாய்ப்பையும் சினிமா மாற்றிக் கொடுக்கும். எனக்குத் தெரிந்த ஒரு ப்ரேஸ்சிங் லெபாரட்டரி சீஃப் பிரசாத் லேபில் சினிமா சார்ந்த ஒரு பணியில் சேர்ந்து கொண்டார்; இன்னும் சிலர் அவுட்டோர் யூனிட் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். மாற்றங்கள் தவிர்க்க முடியாதது தானே” என்றார்.
ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படம் எப்படி டிஜிட்டல் சினிமாவாக உருமாறுகிறது?
ஃபிலிம் ரோலில் எடுக்கப்பட்ட திரைப்படம் எப்படி டிஜிட்டல் சினிமாவாக மாறுகிறது என்பது குறித்து இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரும், ஆளவந்தான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளருமான திருநாவுக்கரசு அவர்களிடம் பேசினோம்.
அவர், “ஃபிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படங்களை இரண்டு வழி முறைகளை பயன்படுத்தி டிஜிட்டலுக்கு மாற்றுகிறார்கள். அவை Film Preservation, Film Restoration. ஃபிலிம் ரோல்களை Humidity குறைவான இடத்தில் வைத்து பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் இது போன்ற preservative முறையை யாரும் மதிப்பதில்லை.
அனைவருக்கும் ஒரு திரைப்படத்தை முடிக்க வேண்டும். முடித்து விட்டு அடுத்த திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசரம் தான் இருக்கிறது. இன்னொன்று, ஃபிலிம் ரோல்களை அதிலுள்ள தூசி, துரும்புகளை, கீறல்களை சுத்தம் செய்யும் Film Restoration முறை.
பிற நாடுகளில் அவர்களது திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் கொடுப்பதில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. Citizen Kane (1941) திரைப்படத்திற்கோ, God Father (1972) திரைப்படத்திற்கோ கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இங்கு எந்த திரைப்படத்திற்கும் கொடுக்கவில்லை.
மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள் இன்னும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் வெகு சில திரைப்படங்களையே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம்.
ஃபிலிம் ரோல்களை அந்த காலகட்டத்தில் Oxyberry Machine ஸ்கேன் செய்யும். அதே தொழில் நுட்பம் தற்போது, அதிர்ஷ்டவசமாக எல்வி ப்ராசாத்தில் Oxscan என்ற பெயரில் உள்ளது. அதில் ஸ்கேன் செய்யப்படும் ஃபிலிம் ரோல்கள் டிஜிட்டல்மயமாக்கபடும் போது 12k வரை ரெசல்யூஷன் கிடைக்கிறது.
நான் ஹே ராம் திரைப்படத்தினை, அதன் கருத்தியல் இன்றைய காலகட்டத்திலும் ஃப்ரெஷாக இருப்பதால் டிஜிட்டலுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன்.
எப்பொழுதும் ஃபிலிமில் படமாக்கும்போது அதன் நெகடிவ்களை இண்டெர்போசிட்டிவ் ஒன்று எடுத்து வைப்போம். அதனை ஹேராம் திரைப்பட பணிகளின் போது தொலைத்து விட்டேன்.
பின்னர், எல்வி பிரசாத்தின் எடிட்டர் கிருஷ்ணா அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். பின்னர், நான் ஃபிலிம் ரோலில் படமாக்கிய ஹேராம் திரைப்படத்தினை எல்வி ப்ரசாத்தில் டிஜிட்டல் மயமாக்கும் நவீன தொழில் நுட்பங்கள் இருப்பதால், அங்கு கொடுத்தேன்.
கொடுக்கும்போதே, ஹேராம் திரைப்படத்தினை ஃபிலிமில் படமாக்கினோம், 12k க்ளாரிட்டியில் ஸ்கேன் செய்து, அதனை டிஜிட்டலுக்கு 8k டவுன் கன்வெர்ட் செய்து, 4k க்ளாரிட்டியில் வேண்டும் என தெளிவாக கூறிவிட்டேன். அதே போல அவர்கள் எனக்கு அதனை DPX File மற்றும் Raw Tiff File-ஆக கொடுத்தார்கள்.
இதில், வியக்கத்தக்க விடயம் என்னவென்றால், Oxscan தொழில் நுட்பம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் கிடையாது.
ஃபிலிம் ரோல் முதல் டிஜிட்டல் சினிமா- பி.சி. ஸ்ரீராம் கூறுவது என்ன?
இந்தியாவின் மிக முக்கியமான, சிறந்த ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்களிடம் ஃபிலிம் ரோல் காலகட்டத்திலிருந்து டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறியது வரையிலான மாற்றத்தை எப்படி பார்க்கிறார் என கேட்டோம்.
அதற்கு அவர், ”ஃபிலிம் ரோலில் திரைப்படங்களை பதிவு செய்வதற்கு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் திரைப்படங்களை பதிவு செய்வதற்கு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது. சிலர் ஃபிலிம் ரோலில் நல்ல ஒளிப்பதிவு இல்லை என்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
சினிமா தினம் தினம் பல மாற்றங்களை அசுர வேகத்தில் காணும். நாம் நம்மை அதற்கேற்றார் போல தகவமைத்துக் கொள்ள வேண்டும். நான் இப்பொழுது எல்லா திரைப்படங்களையும் டிஜிட்டலில் தான் பதிவு செய்கிறேன்,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்