டிசம்பர் 27, 202 அன்று பாகிஸ்தான் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவும் “ஃபதா 2” ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்புத்துறை (ஐஎஸ்பிஆர்) தகவல்களின்படி, இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 24, 2021 அன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட “ஃபதா 1” ராக்கெட் பாகிஸ்தானில் சோதனை செய்யப்பட்டது.
ஃபதா 2 ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஐஎஸ்பிஆர் தகவலின்படி, ஃபதா 2 ஏவுகணையில் மேம்படுத்தப்பட்ட பறக்கும் திறன் இடம்பெற்றுள்ளது. மேலும், இதில் மேம்படுத்தப்பட்ட டார்கெட் – டூ – டார்கெட் தாக்குதல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தனித்துவமான ஏவுகணையில் பொறுத்தப்பட்டுள்ள இலக்கை தாக்கும் தொழில்நுட்பம் மிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அதோடு சேர்த்து அதன் பறக்கும் திறனும் அதை வலிமைமிக்கதாக மாற்றுகிறது.
இது போன்ற சிறப்பம்சங்களால் இந்த ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கும் என்றும், அதன் குறியை தவறவே விடாது என்றும் ஐஎஸ்பிஆர் கூறுகிறது.
சில ராணுவ ஆயுதம் மற்றும் உபகரண நிபுணர்கள், இந்த ஃபதா 2 ஏவுகணை “ஃபிளாட் ட்ராஜெக்டரி ஏவுகணை” என்று அழைக்கின்றனர். அதற்கு அர்த்தம் இந்த ஏவுகணை கிடைமட்டமாக பறக்கக்கூடியது. ரேடாரில் தெரியாது.
இது குறித்து பாதுகாப்புதுறை நிபுணரான ஓய்வு பெற்ற பிரிகேடியர் சாத் முகமது பிபிசியிடம் பேசுகையில், ஃபதா ஒரு ஃபிளாட் ட்ராஜெக்டரி ஏவுகணை, இதை ராடாரில் கண்டறிந்து அழிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.
பாலிஸ்டிக் ஏவுகணைக்கென்று தனியான பாதை உண்டு, முதலில் அவை விண்ணில் பாய்ந்து பின்னர் பூமிக்கு திரும்பி வரும். அதன் பாதை மாறும் சமயத்தில் எதிரி ரேடார்கள் அதை கண்டறிந்து தாக்கும் என்கிறார் அவர்.
இந்திய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு
ஃபதா 2-இன் வெற்றிகரமான சோதனைக்கு பிறகு, அது இந்திய பாதுகாப்பு ஏவுகணை திட்டத்திற்கு எதிரான வலுவான ஆயுதமாக கருதப்படுவதாக கூறுகின்றனர் சில நிபுணர்கள்.
அதே போல் இந்தியாவும் சில காலமாகவே தங்களுடைய ஏவுகணை அமைப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட தூர எஸ்-400 ட்ரையம்ப் (Triumph) தவிர, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குறுகிய தூரம் சென்று தாக்கும் சமர் மற்றும் டிஆர்டிஓ உருவாக்கிய VSHORADS ஏவுகணைகளையும் தனது பாதுகாப்பு அமைப்பில் சேர்த்துள்ளது இந்தியா. இவை அனைத்துமே மிகக் குறைந்த தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் கடல் பரப்பில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய செய்தி நாளிதழான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தியின்படி, ‘எல்ஆர்எஸ்ஏஎம்’ என்ற பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ரஷ்யாவின் S-400 ட்ரையம்ப் போல வான் பாதுகாப்பு அமைப்பின் திறன்களைக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பில் நீண்ட தூர கண்காணிப்பு மற்றும் ரேடார் கட்டுப்பாட்டு திறன்கள் இருக்கும். மேலும் 150, 250 மற்றும் 350 கிமீ தொலைவில் உள்ள ஏவுகணைகளைக் கண்டறிந்து இடைமறிக்கும் ஆற்றலும் இதில் உள்ளது.
இந்தியா தனது பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டு தனது நகரங்கள், அணுசக்தி அமைப்புகள் மற்றும் ராணுவத்தை பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது.
இஸ்ரேலிடம் இருந்து அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க நீண்ட காலமாகவே ஆசைப்பட்டு வருகிறது இந்தியா. இந்நிலையில் அயர்ன் டோம் வாங்குவதில் இந்தியாவின் விருப்பம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் 2013 ஜூலை மாதம் செய்தி ஒன்றை வெளியிட்டது. காரணம், அந்த அமைப்பு உட்பட அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டது இஸ்ரேல்.
ஒவ்வொரு நாடும் அயர்ன் டோமை வாங்க விரும்புகிறது, ஆனால் அது பணம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தது என்று கூறுகிறார் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் பாதுகாப்புதுறை ஆய்வாளருமான எச்.எஸ்.பனாக்
“உங்களிடம் பணம் மற்றும் தொழில்நுட்பம் இருந்தால், அதை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்,” என்று கூறும் அவர், அதே சமயம் இந்த செய்தி அறிக்கைகள் எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும் என்கிறார்.
ஆவணங்களின்படி, இந்தியாவில் தொழில்நுட்பக் (பாதுகாப்பு) குறைபாடு உள்ளது. ஆனால் “ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் நாங்கள் இதை உருவாக்கினோம், அதை உருவாக்கினோம் என்று பல செய்திகள் வருகின்றன. ஆனால் அடிப்படை உண்மைகள் வேறு” என்று கூறுகிறார் அவர்.
தலைநகர் டெல்லி அல்லது வர்த்தக மையமான மும்பை போன்ற முக்கியமான இடங்களை பாதுகாக்க இந்தியாவுக்கு இதுபோன்ற அமைப்பு தேவைப்படலாம் என்று கூறுகிறார் பாதுகாப்பு நிபுணர் ராகுல் போன்ஸ்லே.
“ஆனால் நாம் அது போன்ற அச்சுறுத்தலில் இல்லை, ஏனெனில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் இந்த அமைப்பு தற்போது ஹமாஸ் போன்ற அமைப்புகள் பயன்படுத்தும் ராக்கெட்டுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது” என்று அவர் கூறுகிறார்.
‘பாகிஸ்தானுக்கு அதைச் செய்யும் திறன் உள்ளது, ஆனால் இதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதனால் வரும் எதிர் வினையும் மிகக் கடுமையாக இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிந்ததே’ என்கிறார் அவர்.
இது மிகவும் விலையுயர்ந்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்தியா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்ற நாடுகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது. மேலும், இந்தியாவில் ஏற்கனவே முக்கியமான மற்றும் தீவிரமான உள்கட்டமைப்பு பகுதிகளை பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன என்கிறார் ராகுல் போன்ஸ்லே.
இஸ்ரேலிய அயர்ன் டோம் அமைப்புகள் இந்தியாவிற்கு பலனளிக்காது என்பதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக பிபிசியிடம் கூறியுள்ளார் பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத நிபுணர் சையத் முஹமத்.
அதில் முதலாவது காரணம் இந்தியா இஸ்ரேலை விட மிகப்பெரிய நில அமைப்பை கொண்டுள்ளது. இஸ்ரேல் போன்ற சிறிய பகுதிக்கு அயர்ன் டோம் நன்கு கைகொடுக்கும் ஆயுதம். ஆனால், அதே இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு அது அவ்வளவு திறன்மிக்கதாக இருக்காது என்கிறார் அவர்.
இஸ்ரேல் ஹமாஸிடம் இருந்து வரும் ராக்கெட்டுகளை நிறுத்த இந்த அயர்ன் டோமை பயன்படுத்துகிறது. ஆனால், அந்த ஆயுதங்கள் இரண்டாம் உலக போரின்போது ஜெர்மானியர்களால் பயன்படுத்தப்பட்ட பழைய ரக ஆயுதங்கள் என்கிறார் அவர்.
மேலும், இந்தியாவோ சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து இதை விட பல மடங்கு மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் அச்சுறுத்தலை கொண்டுள்ளன. அதற்கேற்றவாறு இந்தியாவிடமும் அதிநவீன S-400 ஏவுகணைகள் உள்ளன. ஆனாலும், கூட அவர்களால் பாகிஸ்தான் ஏவுகணைகளுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது என்கிறார் சையத் முஹமத்.
புதிய ஏவுகணையால் முன்னிலை பெற்ற பாகிஸ்தான்
ஃபதா-2 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை மூலம், ராணுவ அரங்கில், குறிப்பாக எல்லை அடிப்படையில் பாகிஸ்தான் ஒரு உச்சத்தை பெற்றுள்ளதாக, சில இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர்.
பாகிஸ்தானின் இந்த புதிய ஏவுகணை எல்லை அடிப்படையில் இந்தியாவை விட கூடுதல் நன்மையை பாகிஸ்தானுக்கு அளிக்கிறது என்றும், இது பாகிஸ்தான் இராணுவத்திற்கு நன்மையளிக்கும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்னைகளை அறிக்கையிடும் போர்ட்டலான இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு தெரிவிக்கிறது.
‘திறன் அடிப்படையில் பார்த்தால் , இது குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி’ என்று கூறுகிறார் ராகுல் போன்ஸ்லே
“பாகிஸ்தானின் ஃபதா-2 வானது, இந்தியாவின் பினகா (Pinaka) மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சரைப் போன்றது என்றும், “பாகிஸ்தானின் பீரங்கித் திறன்களை இது மேம்படுத்தும்” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது இரண்டு நாடுகளுக்கும் இயல்பான வளர்ச்சிதான் என்று கூறும் அவர், இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை உருவாக்குகின்றன என்கிறார். இந்த ஆயுதங்கள் மிகவும் பயனுள்ளவை என்பதை ரஷ்யா – யுக்ரைன் போர் நிரூபித்துள்ளது.
பாகிஸ்தானின் ஏவுகணை பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தான் நடத்தியுள்ள இரண்டாவது ஆயுத சோதனை இது என்பதை உள்ளூர் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
2023 அக்டோபர் 18 அன்று, பாகிஸ்தான் அபாபில் ஏவுகணையை சோதனை செய்தது. இதுவே தெற்காசியாவில் பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட முதல் ஏவுகணையாகும்.
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளில் நிபுணரான சையத் முகமது அலியின் கூற்றுப்படி, அபாபில் மற்றும் ஃபதா 2 ஆகிய இரண்டின் சோதனைகளும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் இராணுவ செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
நீண்ட காலமாகவே இந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்க அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர், தற்போது அதன் நம்பகத்தன்மையை சோதிக்க விரும்புகின்றனர். தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, தற்போது இந்த ஆயுதத்தை இராணுவத்தின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதனிடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள்.’
‘இந்தியாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாஜகவின் போர் மனப்பான்மையும் இதற்கான காரணங்களில் ஒன்று என்பதை எல்லைகளை தாண்டி தினமும் வெளிவரும் அறிக்கைகளை வைத்து மதிப்பிடலாம். வழக்கமான பாணியில் தேர்தலுக்கு முன் இந்தியா எதுவும் தவறான நடவடிக்கைகளை எடுக்கும் முன், பாகிஸ்தான் ராணுவத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம்” என்று கூறுகிறார் முஹம்மது அலி.
தெற்கு ஆசியாவின் ஆயுதப் போட்டி
‘இந்த ஆயுத பந்தயம் ஒன்றும் புதிதல்ல, 1947ம் ஆண்டிலிருந்தே தொடர்வதுதான்’ என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற பிரிகேடியர் சாத் முஹம்மது.
மேலும் சர்ஃபேஸ் டூ சர்ஃபேஸ் ஏவுகணைகளை உருவாக்குவதற்கும், அவற்றைச் சுட்டு வீழ்த்துவதற்கான ஏவுகணைகளை உருவாக்குவதற்கும் உலகின் இராணுவப் படைகளுக்கு இடையே நிலவும் போட்டி மிகவும் பழமையானது. இந்தப் போட்டி தெற்காசியாவில் மீண்டும் மீண்டும் நடைபெற்று வருவதாக கூறுகிறார் அவர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுமே தங்களது இராணுவ வளர்ச்சியில் மிகவும் உணர்திறன் கொண்டவை, மேலும் இரு நாடுகளும் தங்களது எதிரிகளை எதிர்கொள்ள உலகளாவிய கூட்டாளிகளுடன் இணைந்து உள்ளூரில் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதில் முதலீடு செய்து வருகின்றன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்