கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்ட புறநகர் பகுதியில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் வீட்டில் இருந்து 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அப்பகுதி மக்களிடம் ஒரு விதமான விரக்தி மனநிலை நிலவுவதுடன், தனிமையில் வாழ்ந்து வந்த அந்த குடும்பம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
காவல்துறை விசாரணையில், அந்த குடும்பத்தின் தலைவர் 85 வயதான ஜெகன்னாத் ரெட்டி, அவரது மனைவி பிரேமா (80), மகள் த்ரிவேணி (62) மற்றும் இரண்டு மகன்கள் கிருஷ்ணா (60), நரேந்திரா (57) ஆகியோரின் எலும்புக்கூடுகள் தான் இவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பம் நீண்ட காலமாகவே தனிமையில் வாழ்ந்து வந்துள்ளது. இதனால், ஜூன் – ஜூலை 2019 முதல் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்த போதும் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.
ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை சிலர் பார்த்த போதுதான் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. அப்பகுதி மக்கள் இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் வந்து சோதனை செய்து அந்த 5 எலும்புக்கூடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
காவல்துறை சொல்வது என்ன?
இதுகுறித்து பிபிசி ஹிந்தியுடன் பேசியுள்ள சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர குமார் மீனா, “ ஜெகன்னாத் ரெட்டியின் உறவினர் அளித்துள்ள தகவலின்படி, அவரது குடும்பம் ஆசிரமம் செல்ல திட்டமிட்டு வந்தததாக” தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த வீடு நீண்டநாளாக பூட்டி கிடந்ததை பார்த்த மக்கள், அவர்கள் ஆஷ்ரமம் போயிருக்க கூடும் என்று நினைத்துள்ளனர்.
இந்த தகவலை அந்த குடும்பத்திற்காக சில வழக்குகளில் ஆஜராகியுள்ள வழக்கறிஞரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால், இந்த குடும்பத்தை கடைசியாக எப்போது மக்கள் பார்த்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்த பகுதி புதிதாக உருவாக்கப்பட்ட புறநகர் பகுதி என்பதால் வெகு சில வீடுகளே இந்த வீட்டை சுற்றி அமைந்துள்ளன. அதிலும் சில வீடுகள் கடந்த இரண்டாண்டுகளில் கட்டப்பட்டவை. ரெட்டியின் வீட்டிற்கு மிக அருகில் உள்ள வீடே 100 அடி தள்ளிதான் இருக்கிறது.
அவர்கள் வீட்டிற்கு வலது புறத்தில் கூட ஒரு வீடு உள்ளது. ஆனால் ரெட்டி குடும்பம் யாருடனும் சேராமலேயே இருப்பதால், அந்த வீட்டினரும் இவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமலேயே இருந்துள்ளனர்.
யாராவது கதவை தட்டினால் கூட ரெட்டி வீட்டிலிருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். ஜன்னல் வழியாக மட்டுமே பேசுவார்களாம்.
சில ஆண்டுகளாகவே இந்த வீட்டை சுற்றி இருக்கக்கூடிய மக்கள் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், காவல்துறை அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த வீடு பூட்டியே இருப்பதால் காவல்துறையும் இந்த பகுதிக்கு அடிக்கடி வராமல் இருந்துள்ளது. அதன் வெளிப்புற வாயிற்கதவும் பூட்டியே இருந்துள்ளது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த வாயிற்கதவு உடைந்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் மெயின் கதவும் உடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணையின் போது, சில ஆவணங்களும், ஒரு சில மருத்துவமனைகளுடைய மருத்துவ அறிக்கைகளும் அந்த வீட்டில் கிடைத்துள்ளன.
அந்த மருத்துவ அறிக்கைகள் பெங்களுரு மற்றும் இதர பகுதி மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டவை. நிம்மன்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெகன்னாத் ரெட்டிக்கு உடலில் ரத்த கசிவு இருப்பதாக வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையும் அங்கு கிடைத்துள்ளது.
அவரது மகள் ஸ்பான்டிலிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , மகன் கிருஷ்ணா உடல் பருமன் மற்றும் இதய நோயால் பாதிக்கப் பட்டிருந்ததாகவும் மருத்துவ அறிக்கைகள் கிடைத்துள்ளன. இளைய மகன் நரேந்திரனின் உடல்நலம் தொடர்பான எந்த தகவலும் அங்கு காணப்படவில்லை.
“இந்த மருத்துவ அறிக்கைகளை அரசு மருத்துவர் மூலம் சோதனை செய்து வருவதாக” தெரிவித்துள்ளார் மீனா.
கன்னட மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், அதில் அந்த குடும்பம் தவறான முடிவை எடுக்க முடிவு எடுத்திருப்பதற்கான குறிப்புகள் காணப்பட்டதாகவும், மேலும் அதில் கையெழுத்தோ அல்லது தேதியோ குறிப்பிடப்படவில்லை என்றும் பிபிசி ஹிந்தியிடம் பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெயர் சொல்ல விரும்பாத காவலர் பிபிசி ஹிந்தியிடம் கடிதம் குறித்து கூறும்போது, அதை அந்த குடும்பத்தில் யார் எழுதியிருப்பார்கள் என தெரியவில்லை என்றும், மேலும் அதுவும் அரைகுறையான கடிதமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ரெட்டி குடும்பம் தங்களது உடல்நலக் கோளாறுகளால் நீண்ட நாட்களாகவே அவதிப்பட்டு வந்ததாக அவர்களின் உறுப்பினர் ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, ரெட்டியின் மகளுக்கு திருமணமாகாததாலும் அவர் மிகுந்த கவலையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அந்த அதிகாரியின் தகவலின்படி, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வீடு பலமுறை சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்