“குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கொத்தனார் வேலை செய்வதைப் போல் நடித்துக் கொண்டிருந்த திருடர்கள் கும்பல் அங்கிருந்தபடியே செயல்பட்டு வந்துள்ளது. இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பல பகுதிகளில் திருடிவிட்டு போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒளிந்து கொண்டனர். நாங்கள் (காவல்துறையினர்) அந்த கிராமத்தில் திருடர்கள் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்து அங்கே சென்றோம். அங்கு நாங்கள் காய்கறி மற்றும் பலூன் விற்பனையாளர்களாகச் செயல்பட்டோம். பலூன்கள் மற்றும் காய்கறிகளை விற்றுக்கொண்டு இரண்டு நாட்களில் திருடர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைப் பிடித்தோம்.”
திருடர்கள் எப்படி பிடிபட்டனர் என்பது குறித்து பேசும் போது, அகமதாபாத்தில் டி-ஸ்டாஃப் பிரிவைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கே. டி. ரவி இவ்வாறு கூறினார்.
ஆமதாபாத்தின் பல்வேறு பகுதிகளில் பல நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இது போல் திருட்டுக் குற்றங்களுக்கு உள்ளாகும் வீடுகள் ஒரு வித வண்ணம் பூசப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.
முதற்கட்ட விசாரணையில், பல சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சரிபார்த்த போலீசார், ஒருவர் மீது சந்தேகம் கொண்டு, விசாரணையை தொடங்கினர்.
ஆனால் சந்தேக நபரை பிடிப்பது போலீசாருக்கு எளிதாக இருக்கவில்லை. ஏனென்றால் அவர் எப்பொழுதும் மத்திய பிரதேசத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திருட்டு குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் பிடிக்க போலீசார் திட்டமிட்டு அவர்களை எப்படி பிடிப்பது என்ற திட்டத்தை தீட்டினர். அது குறித்த தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.
குற்றம்சாட்டப்பட்டவரை எப்படி பிடிப்பது?
பல்வேறு பகுதிகளில் நடந்த திருட்டுகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒட்டுமொத்த பாணி குறித்து, காவல் ஆய்வாளர் கே.டி. ரவி பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆமதாபாத்தில் பெயின்டிங் மற்றும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். அந்த வேலை செய்யும் போது, தகவல்களைச் சேகரித்து வீடுகளில் திருடுவது வழக்கம். திருடிய பின்னர் அவர்கள் மத்திய பிரதேசத்திற்குச் சென்றுவிடுவது வழக்கம்,” என்றார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆனந்த் சர்மா என்ற நபரை போலீசார் சந்தேகித்தனர்.
ஆனந்த் சர்மாவும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஆமதாபாத்துக்கு வந்து கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். ஒரு வீட்டில் அந்த வேலை பார்த்து வந்த போது, அங்குள்ள குடும்ப உறுப்பினர்களிடம் பேசி அனைத்து தகவல்களையும் அவர் தெரிந்துகொண்டு, பின்னர் மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரு கும்பலை அழைத்து வந்து திருடியிருக்கின்றனர்” என ரவி கூறினார்.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் திருடி வந்ததைப் பார்த்த போலீசார் சாணக்கியபுரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை கண்காணித்து ரோந்துப் பணிகளை முடுக்கிவிட்டனர்.
ஆனந்த் சர்மா சாணக்யபுரி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சில வேலைகளைப் பார்த்து வந்தார். இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் வாக்கிங் செல்வார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.
சோலா காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆர்.எச். சோலங்கி பிபிசியிடம் பேசியபோது, “புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் திருட்டு நடக்கலாம் என்ற சந்தேகத்தை மனதில் வைத்து ரோந்து பணியை தொடங்கினோம்,” என்றார்.
இதையடுத்து, ஆனந்த் சர்மாவை கண்காணித்து வந்தோம். அப்போது அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரு கும்பலை அழைத்து வந்திருந்தார். ஆனால் அவருடன் இருந்த இருவரும் மீண்டும் ரயிலில் மத்திய பிரதேசம் சென்றுவிட்டனர். சில நாட்களில் சாணக்கியபுரியில் ஒரு வழக்கறிஞர் வீட்டில் திருடப்பட்டது. அவரது வீட்டில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயின.
வழக்கறிஞர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து, போலீசார் விசாரணையை மேலும் துரிதப்படுத்தினர்.
குற்றவாளிகளை போலீசார் பிடித்தது எப்படி?
ஆர்.எச். சோலங்கி இது குறித்துப் பேசுகையில், “உடனடியாக சிசிடிவியை சோதனை செய்தோம். அந்த இடத்தில் இருந்து ஸ்கூட்டர் ஒன்று செல்வதை பார்த்தோம். ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் தெரியவில்லை. வழக்கம் போல் திருடர்கள் அதை போலியாக தயாரித்துள்ளனர். எனவே இந்த வழக்கை துப்பறியும் பணியாளர்களிடம் (டி-ஸ்டாஃப்) ஒப்படைத்தோம். ),” என்றார்.
டி-ஸ்டாஃப் பிரிவைச் சேர்ந்த ரவி கூறுகையில், “சிசிடிவி காட்சியில், தங்க நிறத்தில் ஒரு ஸ்கூட்டரை நாங்கள் பார்த்தோம். ஸ்கூட்டரில் முன் நம்பர் பிளேட் இல்லை. மேலும், பின் நம்பர் பிளேட் வளைந்திருந்தது. அதனால் அந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தங்க நிற ஸ்கூட்டர் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நாங்கள் அதை எளிமையாக அடையாளம் கண்டோம். அதைத் தொடர்ந்து எங்களுடைய தேடல் தொடங்கியது,” என்றார்.
“ஸ்கூட்டர் ஆமதாபாத்திற்கு வெளியே செல்லவில்லை என்பது சிசிடிவி மூலம் எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. நாங்கள் ஆமதாபாத் நகரின் உள்பகுதியில் எல்லா இடங்களிலும் தேடினோம். ஆனால் ஸ்கூட்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்கூட்டரில் இருந்தவரின் முகம் தெரியவில்லை. ஆனால், அவரது முகத்தில் கைக்குட்டை கட்டப்பட்டிருந்தது. அந்த நபர் மத்தியப் பிரதேசம் அல்லது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று நாங்கள் யூகித்தோம்.”
தொடர்ந்து விசாரணை நடத்திய போது, ஒரு இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அந்த நபரின் முகம் தெரிந்தது. ஸ்கூட்டர் குறித்து விசாரித்ததில், அது பானி பூரி விற்கும் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த் சர்மாவின் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனந்த் சர்மா அவருடைய ஸ்கூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
கே.டி. ரவியின் கூற்றுப்படி, அவர்களுடைய உண்மையான நடவடிக்கை அப்போது தான் தொடங்கியது.
இதையடுத்து குடிநீர் விநியோக ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகப்படும்படி நடந்துகொண்ட ஆனந்த் சர்மாவின் கிராமத்தைப் பற்றிய தகவல் அந்த விசாரணையில் போலீசாருக்குக் கிடைத்தது.
குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த் சர்மா, மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள பத்ரோலி கிராமத்தில் வசிப்பவர்.
பானிபூரி விற்பவர் மூலம் அவரது வீடு குறித்த தகவலை போலீசார் திரட்டினர். அப்போது அவர் கிராமத்திற்குள் குறுகிய பாதைக்கு அருகே அவரது வீடு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். எனவே அங்கு அவரைப் பிடிப்பது கடினமாக இருந்தது. அவரும் போலீசார் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தனது ஃபோனை ஆஃப் செய்து வைத்திருந்ததுடன் தனது வீட்டுக்கு அடிக்கடி வரவில்லை. ஃபோன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவருடைய இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிவது கடினமான வேலையாக மாறியது.
போலீசார் மாறுவேடம்
இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் தண்ணீர் விநியோகத் தொழிலாளியின் உதவியுடன் பலூன்கள் மற்றும் காய்கறி வண்டிகளை போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனந்த் சர்மா டீ குடிக்க வரும் பகுதியில் போலீசார் கடைகளை அமைத்தனர்.
அந்த கடைகளின் மூலம் அவர்கள் மாறுவேடமிட்டு காய்கறிகள் மற்றும் பலூன்களை விற்பனை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஆனந்த் சர்மா சில நாட்கள் அங்கு வரவில்லை.
காவல் ஆய்வாளர் கே.டி.ரவி காய்கறிக் கடைக்காரரைப் போல, ஆனந்த் சர்மா வசித்த இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு சென்றிருக்கிறார். சர்மாவின் வீடு போலீசாருக்கு முன்பே தெரிந்ததால் அங்கு ஒரு வீட்டை எடுத்துள்ளனர். இப்படி போலீசார் அந்த வீட்டில் வசித்த போது, ஆனந்த் சர்மா ஒருமுறை அப்பகுதியில் நடமாடியுள்ளார்.
இரவு நேர சோதனையில் ஆனந்த் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து 4 நாட்களாக போலீசார் முயற்சித்து இறுதியில் அவரைப் பிடித்தனர். அவர் மற்றும் அவருடைய கூட்டாளிகளிடம் இருந்து ஏராளமான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்த் சர்மாவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்