தனது முதல் டெஸ்டிலேயே 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 130 ரன்கள் எடுத்துள்ளார் சர்ஃபராஸ் கான்.
ராஜ்கோட் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதம் அடிக்காமல் ஒரே இன்னிங்சில் ஒரு சதம் மூலம் சர்பராஸ் கான் இந்த சாதனையை செய்திருந்தால், சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த அதே கைதட்டல் இவருக்கும் கிடைத்திருக்கும்.
26 வயதான இந்த மும்பை பேட்ஸ்மேன், தனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்ததை வேறு எந்த கிரிக்கெட் வீரரின் பயணத்தோடும் ஒப்பிட முடியாது.
ராஜ்கோட் டெஸ்டின் முதல் நாளில் சர்ஃபராஸ் கானின் வேகம் மற்றும் அவரது பேட்டிங் பாணி இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போல அமைந்திருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பல பகுதிகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் தனது மகன் கலந்து கொள்ள, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் சர்ஃபராஸ் கானை அழைத்துக் கொண்டு காரில் பயணித்திருக்கிறார் தந்தை நெளஷத் கான். அவர் பார்க்க, இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் விளையாடியது தந்தையின் பல ஆண்டு கால தவத்தைப் பூர்த்தி செய்வது போல அமைந்தது.
தந்தையின் தவம்
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் விஜய் யாதவின் ஃபரிதாபாத் அபிமன்யு கிரிக்கெட் அகாடமி, முகமது ஷமியின் சொந்த அகாடமி, டேராடூன் கிரிக்கெட் அகாடமி, கான்பூரில் குல்தீப் யாதவின் பயிற்சியாளர் நடத்தும் அகாடமி, காசியாபாத்தில் உள்ள டிஎன்எம் கிரிக்கெட் அகாடமி, மதுராவின் அச்சீவர்ஸ் அகாடமி, மீரட்டில் புவனேஷ்வர் குமாரின் பயிற்சியாளர் சஞ்சய் ரஸ்தோகியின் கிரிக்கெட் அகாடமி, டெல்லி பாரத் நகரில் உள்ள கவுதம் கம்பீரின் கிரிக்கெட் அகாடமி, லக்னோவில் விஸ்வஜித் சின்ஹாவின் கிரிக்கெட் அகாடமி அல்லது ஆக்ரா, லக்னோ, கோரக்பூர் என எத்தனையோ நகரங்கள்….
சர்ஃபராஸின் தந்தை சளைக்காமல் அவரை அழைத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் பயணித்தார்.
தந்தை நெளஷத் கான் தான் சர்ஃபராஸ் கானின் முதல் பயிற்சியாளர். நெளஷத் கானின் அர்ப்பணிப்பு குறித்து பல கதைகளை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பல்வேறு கிரிக்கெட் அகாடமிகளின் பயிற்சியாளர்கள் கூறுவார்கள்.
சர்ஃபராஸ் கானின் பல ஆண்டுகால போராட்டத்தைப் பார்த்த எல்லோரும், “உங்கள் மகன் நிச்சயமாக இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார்” என தந்தை நெளஷத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.
கடவுள் கொடுத்தால் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பார் என்று சொல்வார்கள். நெளஷத்துக்கும் அப்படித்தான் நடந்தது.
இந்த மாதம், தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவரது இளைய மகன் முஷீர் கான் சதம் அடித்ததை அனைவரும் பார்த்தனர். மறுபுறம் மூத்த மகன் சர்ஃபராஸுக்கும் இறுதியாக அவர் எதிர்பார்த்த டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்தது.
தனித்துவமான பேட்டிங் பாணியை வளர்த்தது எப்படி?
சுனில் கவாஸ்கரைத் தவிர்த்து, இந்திய கிரிக்கெட்டில் திலாவர் ஹுசைன் (1964) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (2021) ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே தங்கள் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தனர்.
இப்போது அதையே செய்ததன் மூலம், மும்பையின் புகழ் பெற்ற பேட்டிங் குடும்பத்தின் மூன்றாவது உறுப்பினராக மாறியிருக்கிறார் சர்ஃபராஸ்.
ஆனால், சர்ஃபராஸின் பேட்டிங்கில் அந்த வழக்கமான மும்பை ஸ்டைல் இல்லை. சிறிய நகரங்களில் இருந்து வந்து ஆடக் கூடிய ஒரு வீரரின் கவலையற்ற, மகிழ்ச்சியான பேட்டிங் பாணி தென்பட்டது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்ஃபராஸ் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து இந்த இடத்தை அடைந்துள்ளார். இரண்டாவது காரணம், சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கைப் பார்த்து வளர்ந்தது மட்டுமல்லாது ரோகித் சர்மாவின் அதிரடி பேட்டிங் ஸ்டைலையும் ரசிப்பவர் சர்ஃபராஸ்.
சர்ஃபராஸின் இந்த தனித்துவமான பேட்டிங் பாணியைப் பார்த்த கவாஸ்கர், வர்ணனை செய்யும் போது ஒரு புதிய அடைமொழியை உருவாக்கினார்.
ஜெய்ஸ்வால்-சர்ஃபராஸ் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஏதோ பள்ளி அல்லது கிளப் பந்துவீச்சாளர்களை போல கையாண்டு, திணறடித்த போது, “இது நவி மும்பை ஸ்கூல் ஆஃப் பேட்டிங் ஸ்டைல்” என்றார் கவாஸ்கர்.
இதுகுறித்து ஆங்கில வர்ணனையாளர் கிரேம் ஸ்வானிடம் விளக்கம் அளித்த கவாஸ்கர், “கடந்த சில ஆண்டுகளில் மும்பை நகரம் எப்படி நவி மும்பை வரை விரிவடைந்ததோ அதேபோல, பிரபல மும்பை குடும்பத்தின் ஸ்கூல் ஆஃப் பேட்டிங்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
ஒருநாள் போட்டியிலும் சாதிப்பாரா?
சர்ஃபராஸின் தந்தைக்கு கவிதைகள் மிகவும் பிடிக்கும். தன் காரில் கிரிக்கெட் போட்டிகளுக்காக இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு போகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கவிதைகள் சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சர்ஃபராஸ் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். பல வல்லுநர்கள் அவரது ஆட்டத்தில் 1990களின் மற்றொரு திறமையான மும்பை பேட்ஸ்மேனான வினோத் காம்ப்ளியின் ஒரு சாயலைப் பார்க்கிறார்கள்.
காம்ப்ளி ஒரு இடது கை பேட்ஸ்மேன். டெண்டுல்கர் போன்ற சமகால ஜாம்பவான்களுக்கு முன்னால் கூட அவர் தனக்கென ஒரு தனி பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு ஆடிய விதத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
இன்று, சர்ஃபராஸின் முன்னால் இருப்பவர் ஜெய்ஸ்வால். இவர் மும்பையைச் சேர்ந்தவர், நான்கு ஆண்டுகள் இளையவர். இப்போது சர்ஃபராஸ், ஜெய்ஸ்வாலுடன் ஒப்பிடப்படுவார்.
ஜெய்ஸ்வால் இந்த கிரிக்கெட் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் அவர் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு சிறப்பான தொடக்கம் கண்டுள்ளார்.
சர்ஃபராஸ் இந்தியாவுக்காக கிரிக்கெட்டின் குறுகிய வடிவமான டி20-யில் விளையாட முடியாமல் போகலாம். ஆனால், ஒருநாள் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் மிகவும் பயனுள்ளவராக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் நம்புகிறார்.
சர்ஃபராஸ் எந்தளவு திறமையானவர்?
ஆரம்ப கால வெற்றிக்குப் பிறகு, தனக்கு கிடைத்த புகழ் போதையில் இருந்தும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தும் காம்ப்ளியைக் காப்பாற்ற யாரும் இல்லை. ஆனால், 26 வயதான சர்ஃபராஸ், இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்பே கிரிக்கெட் களத்தில் பல பின்னடைவுகளைச் சந்தித்து, மனதளவில் வலிமையானவராக மாறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சி, தர்மசாலாவில் நடக்கவுள்ள போட்டிகளிலும் சர்ஃபராஸின் அதிரடி பேட்டிங் தொடர்ந்தால், இந்திய அணிக்காக விளையாட பல நாடுகளுக்கு பல லட்சம் கிலோமீட்டர்கள் கடந்து விமானத்தில் பயணிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
சர்ஃபராஸின் கிரிக்கெட்டுக்காகவே இதுவரை 1.5 லட்சம் கிலோமீட்டரில் 90 சதவீத தூரத்தை தனது காரில் பயணித்துள்ள அவரது தந்தைக்கு இதுவே மிகப்பெரிய குருதட்சணையாக இருக்கும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்