சங்கரன்கோவில்: போலீஸ் தாக்கி ஓட்டுநர் பலியா? உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் – என்ன நடந்தது?

சங்கரன்கோவில்: போலீஸ் தாக்கி ஓட்டுநர் பலியா? உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் - என்ன நடந்தது?

தென்காசி காவல்துறை விசாரணையில் ஓட்டுநர் மரணம்

கடந்த மார்ச் 8ஆம் தேதி, காவலர்கள் தாக்கியதில் ஓட்டுநர் இறந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் இறந்த ஓட்டுநரின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்தன.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பிபிசி செய்தியாளரிடம் பேசுகையில், “முருகனின் மரணத்திற்கான காரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. மாஜிஸ்திரேட் விசாரணை முடிந்த பிறகுதான் காவலர்கள் அடித்தார்களா என்பது தெரிய வரும்,” என்று கூறினார்.

காவல்துறையினர் தாக்கியதில் இறந்த ஓட்டுநருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், காவலர்கள் தாக்கியதால் டிரைவர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் சீருடையில் இருந்த மூன்று காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இறந்த விவகாரத்தில் என்ன நடந்தது? காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்துவது ஏன்?

ஓட்டுநர் மரணத்தில் எழுந்த பிரச்னை

தென்காசி காவல்துறை விசாரணையில் ஓட்டுநர் மரணம்
படக்குறிப்பு,

இறந்த ஓட்டுநர் முருகனுக்கு ஒரு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகளும் உள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்குபுதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 37 வயதான இவர், சொந்தமாக வேன் வைத்து ஒட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதியன்று மாலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தினரை மகா சிவராத்திரியை முன்னிட்டு சங்கரன்கோவிலுக்கு தனது வேனில் இவர் அழைத்து வந்துள்ளார்.

வரும் வழியில், சங்கரன்கோவில் அருகே ஓட்டுநர் முருகன் ஒட்டி வந்த வேன், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது இடித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், முருகனை தாக்கியவாறே அவரது வாகனத்தில் இருந்து அவரைக் கீழே இறக்கியதாக இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஓட்டுநர் இருக்கையில் இருந்த முருகனை, மூன்று காவலர்கள் அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக முருகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது வேனும் பறிமுதல் செய்யப்பட்டு சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு காவலர்களால் கொண்டு செல்லப்பட்டது.

சிறிது நேரத்திலேயே, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகனைக் காண அவரது உறவினர்கள் சங்கரன்கோவில் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் சென்று பார்க்கும்போது முருகன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முருகன் மனைவியின் தம்பி சங்கர் குமார் பேசுகையில், “சிவராத்திரி என்பதால் அன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அப்போது முன்னாள் சென்ற ஆட்டோ மீது என் மச்சானின் வேன் லேசாக இடித்துவிட்டது. இதையடுத்து அருகிலிருந்த காவலர்கள், என் மச்சானை அடித்து இழுத்துச் சென்றனர்.

நான் காவல் நிலையத்திற்குச் சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் அவர் இருந்தார். உடனடியாக வேனில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றோம். என் மச்சானை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரின் மரணம் பற்றி காவல் நிலையத்தில் கேட்டபோது எந்தப் பதிலும் அவர்கள் சொல்லவில்லை,” என்றார்.

இதையடுத்து, முருகனின் சொந்த ஊரான வடக்குபுதூர் கிராம மக்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்குச் சென்று நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முருகனை அடித்து இழுத்துச் சென்ற மூன்று காவலர்களையும் கைது செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 8ஆம் தேதி இரவு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

நீடிக்கும் போராட்டம்

தென்காசி காவல்துறை விசாரணையில் ஓட்டுநர் மரணம்

அங்கிருந்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் முருகனின் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தைக் கைவிட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காவலர்கள் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதையடுத்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து மார்ச் 9 அதிகாலை 3 மணிக்கு இறந்த ஓட்டுநர் முருகனின் உடல் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் முருகன் இறந்து 6 நாட்களாகியும், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முருகனின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டும், உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து, அந்தப் பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை சங்கரன்கோவில் – ராஜபாளையம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

தனது சகோதரியின் கணவன் மரணத்தில் நீதி வேண்டி போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கர் குமார், தனது தரப்பு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“காவலர்கள் தாக்கியதில் என் மச்சான் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை சம்பந்தபட்ட காவலர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. 5 நாட்களாகியும் பிரேத பரிசோதனை முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை. நேற்று மாலை வரும் என்ற சொன்ன அறிக்கையின் முடிவு, இப்போது வரை வெளியிடவில்லை. இது சந்தேகத்தை அதிகமாக்குகிறது.”

மேலும் கணவரை இழந்த தன்னுடைய சகோதரிக்கு அரசு வேலையும், முருகனுடைய குழந்தையின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் சங்கர் தெரிவித்தார். இந்தக் கோரிக்கைகளை நிறைவேறினால், மட்டுமே முருகனின் உடலை வாங்குவோம் என்றார் அவர்.

போராட்டத்தை கையில் எடுத்த அதிமுக

தென்காசி காவல்துறை விசாரணையில் ஓட்டுநர் மரணம்

ஓட்டுநர் முருகனின் சந்தேக மரணம் தொடர்பாக நீதி கேட்டு நடந்த சாலை மறியல் போராட்டத்தில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பசுபதி பாண்டியனின் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறை விசாரணையின் போது ஓட்டுநர் இறந்த விவகாரத்தை அதிமுகவும் கையில் எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை எழுப்பியிருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 33 மாதங்களில் காவல்துறை விசாரணையின்போது 18 பேர் இறந்துள்ளனர் என்றும், விசாரணைக்கு அழைத்துச் சென்று அவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, காவல்துறையினருக்கு உளவியல் பயிற்சி அளிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இறந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு அரசு சார்பாக 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இறந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பாக ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை என்ன சொல்கிறது?

தென்காசி காவல்துறை விசாரணையில் ஓட்டுநர் மரணம்

முருகனின் இறப்புக்கு காவல்துறை தான் காரணம் என்று அவரது உறவினர்கள் கூறி போராட்டம் நடத்தி வரும், இந்தச் சம்பத்தில் அவரை தாக்கியதாகக் கூறப்படும் மூன்று காவலர்களின் அடையாளங்கள் இதுவரை ஊடகங்களிடம் பகிரப்படவில்லை.

முருகனின் மைத்துனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பிபிசி செய்தியாளரிடம் பேசுகையில், “முருகனின் மரணத்திற்கான காரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. மாஜிஸ்திரேட் விசாரணை முடிந்த பிறகுதான் காவலர்கள் அடித்தார்களா என்பது தெரிய வரும்.

மேலும் காவல் நிலையத்தில் முருகன் மயங்கிய நிலையில் இருந்தபோது அவரது உறவினர்கள் மட்டுமே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுடன் காவலர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் அவர் எப்போது இறந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு மட்டுமே அவரின் இறப்புக்கான நேரமும், காரணமும் தெரிய வரும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தெரித்தார்.

பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, இன்று இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *