உலகக்கோப்பை: உயிர்த்தெழுந்த தென் ஆப்பிரிக்கா – ‘மிரட்டல் வெற்றி’ சாத்தியமானது எப்படி?

உலகக்கோப்பை: உயிர்த்தெழுந்த தென் ஆப்பிரிக்கா - 'மிரட்டல் வெற்றி' சாத்தியமானது எப்படி?

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அன்று 2019, ஜூலை 6ஆம் தேதி. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரிலிருந்து தென் ஆப்பிரிக்கா அணியினர் தாயகத்துக்கு சோகத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து லீக் சுற்றிலேயே வெளியேறிய பெருத்த அவமானத்துடன் வீரர்கள் இறுகிய முகத்துடன் காணப்பட்டனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் பல முன்னணி வீரர்களுக்குத் தொடர்ந்து நாம் விளையாடலாமா என்ற கேள்வி எழுந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் எதிர்காலமே கேள்விப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டப்பட்டது.

கதை முடிந்ததா?

அந்த ஆண்டில்தான் இந்தியாவிடம் சொந்த நாட்டிலேயே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு பயணம் செய்து, ஒருநாள் தொடரையும் இழந்தது.

இந்தத் தோல்விகளைப் பார்த்த ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க அணி “அவ்வளவுதான் கதை முடிந்தது” என்று முடிவுரை எழுதாத குறையாக விமர்சித்தனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் எதிர்காலத்தைச் சுற்றி ஒருவிதமான இருள் சூழ்ந்திருந்தது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் சமூகப் பொருளாதாரம் அவர்கள் திறமையைத் தக்கவைத்துக் கொள்வதை கடினமாக்கியது.

எச்சரிக்கை மணி

ஆனால், 4 ஆண்டுகளுக்குப் பின் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு புதிய எழுச்சியுடன் தென் ஆப்பிரிக்க அணி களம் கண்டு, அனைத்து அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக்கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி குவித்ததே அதன் மீள் உருவாக்கத்தின் சாட்சி.

தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் மற்றும் கிரிக்கெட் உண்மை நிலை எதுவாக இருந்தாலும், மன உறுதியுடன் நாங்கள் மீள் உருவாக்கம் பெற்றுள்ளோம் என்று முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை அணிகளுக்குப் பறைசாற்றியிருக்கிறது.

மாற்றமில்லை, ஆனால் மாறியிருக்கிறது

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியில் இருந்த வீரர்களுக்கும், இப்போதைய அணியில் இருக்கும் வீரர்களுக்கும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவர்களின் அணுகுமுறை, மனநிலை, போட்டியை எதிர்கொள்ளும் முறை, தந்திரம், திட்டமிடல் மாறியுள்ளது.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், வான் டெர் டூசென், டீ காக் ஆகியோர் இருந்தனர். ரபாடா, கேசவ் மகராஜ், ஷாம்சி ஆகியோர் மட்டுமே இந்த இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டனர்.

டேவிட் மில்லர் டி20 போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். மற்ற வகையில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

நடுப்பகுதி ஓவர்களில் மார்க்ரம், கிளாசன் இருவர்தான் சுழற்பந்துவீச்சை அதிகம் எதிர்கொள்ளக்கூடிய பேட்டர்களாக இருந்தனர். அணியைச் சரிவிலிருந்து பெரும்பகுதியான போட்டிகளில் மீட்கும் பேட்டர்களாகவும் இருந்தனர். ஆனால், நேற்று நடந்த கதையே வேறு. கிளாசனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, மார்க்கிரமுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவ்வளவுதான்.

ஹோம் ஓர்க்

இந்த உலகக்கோப்பைத் தொடரில் நாம் முன்னெப்போதும் பார்த்திராத வேறுபட்ட தென் ஆப்பிரிக்க அணியைப் பார்த்துள்ளோம்.

குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்கக் கடுமையான “ஹோம் ஓர்க்” செய்து வந்திருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டிலிருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நடுப்பகுதி ஓவர்களில் 42 ரன்கள் சராசரி வைத்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்திலேயே தென் ஆப்பிரிக்கா மற்ற அணிகளுக்கு மிக அபாயகரமான எச்சரிக்கை அளித்து தங்கள் அடியைப் பலமாக வைத்துள்ளது.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடப் பழகிய எங்களால், இந்திய ஆடுகளங்களிலும் ஆட முடியும் என்பதை நேற்றைய ஆட்டத்தில் வெளிப்படுத்தினர்.

சாதனையின் மூலம் மிரட்டல்

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி சேர்த்த 428 ரன்கள் மற்ற அணிகளுக்கு மிரட்டலாக இறங்கியுள்ளது. உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா நேற்று சேர்த்த ரன்கள்தான் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர்.

இதற்கு முன் 2015இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்கள் சேர்த்திருந்த சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது. உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் தென் ஆப்பிரிக்கா 3 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் ஓர் அணியில் 3 பேட்டர்கள் சதம் அடித்ததும் இதுதான் வரலாற்றில் முதல்முறை. இந்த ஒரு சாதனையே, உலகம் எழுந்து அமர்ந்து, தென் ஆப்பிரிக்க அணியை நிமர்ந்து பார்க்கப் போதுமானது.

இதில் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து, உலகக்கோப்பைத் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரராகத் தன்னை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் உறுதியான, அவசரப்படாத அணுகுமுறைதான் மற்ற அணிகளைக் கவலையடையச் செய்துள்ளது.

‘டாப் கியரு’க்கு மாறிய ஆட்டம்

இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆட்டம் நிதானமாக உயர்ந்து, ரன் ரேட்டை உயர்த்தியது. 11 முதல் 20 ஓவர்கள் வரை ஓவருக்கு 7 என்ற ரன்ரேட்டில் தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

பின்னர் 21 முதல் 30 ஓவர்களில் 88 ரன்களையும், அடுத்த 10 ஓவர்களில் 85 ரன்களையும், கடைசி 10 ஓவர்களில் 137 ரன்களையும் சேர்த்து ரன்ரேட்டை டாப்-கியருக்கு மாற்றியது.

இதுபோன்ற தென் ஆப்பிரிக்காவின் கட்டுக்குலையாத கவனம், நிதானம் இனி வரும் போட்டிகளில் எதிரணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

டீ காக் அணுகுமுறையில் மாற்றம்

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இதில் நேற்று சதம் கண்டவர்களில் மார்க்ரம், வேண்ட் டூசென் ஆகிய இருவரைத் தவிர டீ காக் முக்கியமானவர். இதுவரை ரன்மெஷினாக மட்டுமே பார்க்கப்பட்ட டீ காக், அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறிதான். ஆனால், இதுவரை பல உலகக்கோப்பையில் விளையாடிய டீ காக், ஒரு சதம்கூட அடிக்கவில்லை.

இந்தப் போட்டியில் அந்தச் சாதனையைச் செய்யவேண்டிய முனைப்பில், மெதுவாகவே ஆட்டத்தைத் தொடங்கி, நிதானமாக நகர்ந்தார். இலங்கை அணி சுழற்பந்துவீச்சை அறிமுகம் செய்தபோது, டீ காக் 21 பந்துகளில் 28 ரன்கள் என்று நிதானமாக ஆடி வந்தார். தனஞ்செயா டி சில்வா பந்தில் ஸ்வீப்ஷாட் அடித்து சுழற்பந்துவீச்சுக்கு அச்சப்படவில்லை என்று பிரகடனம் செய்தார்.

மெல்ல தனது ரன் சேர்க்கும் கியரை மாற்றிய டீ காக், செட்டில் ஆன பின், நடுப்பகுதி ஓவர்களை நன்கு பயன்படுத்தினார். நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் ஒரு சிக்ஸர் உள்பட 56 பந்துகளில் 87 ரன்களை டீ காக் குவித்தார். டீ காக்கிற்கு துணையாக ஆடிய வேன் டெர் டூசெனும் பெரிதாக ரிஸ்க் எடுக்கும் ஷாட்களை ஆடாமல் நிதானாக ஆடினார்.

ப்ரீமியம் பேட்டராக அடையாளம்

மார்க்ரம்-மை பொருத்தவரை, பாரம்பரிய ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தன்னை ஒரு ப்ரீமியம் பேட்டராக அடையாளப்படுத்தி இருக்கிறார். 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மார்க்ரமின் பேட்டிங் திறமை மெருகேறியிருக்கிறது.

நடுப்பகுதி ஓவர்களில் மார்க்ரம் சராசரி 64 ரன்கள்தான். ஆனால், நேற்று 107 ரன்களை குவித்தார். தான் பயணிக்க ஏதுவான தளம் இருந்தால் என்ன செய்ய முடியும் என்பதையும், டெத் ஓவர் வரை தனது இன்னிங்ஸை எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் வெளிப்படுத்தினார்.

இந்த ஆட்டத்தில் முத்தாய்ப்பாக அமைந்தது மார்க்ரம் அடித்த சதம்தான். உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 49 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். நிதானமாக ஆடத் தொடங்கிய மார்க்ரம், 34 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

ஆனால், அடுத்த 15 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டி 49 பந்துகளில் சதம் அடித்து மார்க்ரம் வரலாறு படைத்தார். பதிரணா வீசிய ஒவரில் மட்டும் 26 ரன்களை மார்க்ரம் சேர்த்ததுதான் திருப்புமுனை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மான்செஸ்டரில் நடந்த அந்த இருண்ட, கசப்பான இரவைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்டோம் என்பதை தென் ஆப்பிரிக்க அணியினர் நேற்று வெளிப்படுத்திவிட்டனர்.

பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணிகளா?

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சத்துக்காகவே டி20 கிரிக்கெட் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரையும் அதேபோன்று மாற்றப் பார்க்கும் ஐசிசியின் செயல், கிரிக்கெட்டின் தாத்பரியத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஃபீல்டிங் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகள், முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேவில் 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே இரு ஃபீல்டர்கள் மட்டும்தான், அதன்பின் 4 பீல்டர்கள்தான் என்ற புதிய கட்டுப்பாடுகளையும் ஐசிசி விதித்து பேட்டர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறது. முன்பு 5 ஃபீல்டர்கள் வரை வெளியே நிறுத்தலாம் என்ற விதிமுறை திருத்தப்பட்டு, ரன்மழை பொழிய ஏதுவாகியிருக்கிறது.

பத்து ஓவர்களுக்கு மேல் 4 ஃபீல்டர்களை வெளியே நிறுத்தும்போது, எப்படியாவது ஏதாவது ஒரு திசையில் அது மிட்ஆன், ஸ்குயர் லெக், லாங் ஆன், தேர்ட் மேன், கவர் என ஏதாவது ஒரு திசையில் ஆள் இல்லாத சூழல் இருக்கும். அந்தப் பகுதியை நோக்கி பேட்டர்கள் ஷாட்களை ஆடும்போது ஓவருக்கு 8 முதல் 10 ரன்கள் எளிதாகக் கிடைத்துவிடும்.

இந்த விதிமுறை மாற்றம் பந்துவீச்சாளர்களை நிராயுதபாணியாக்கி, பேட்டர்கள் அவர்களை வதம் செய்ய கதவை திறந்துவிட்டதுபோல் இருக்கிறது.

கிரிக்கெட் போட்டி என்பது, பந்துவீச்சாளர்களுக்கும், பேட்டர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் களமாக இருந்தால்தான் மோதல் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், முதலில் பேட் செய்யும் அணி, பந்துவீசும் அணியை நையப்புடைத்து எட்டமுடியாதா வகையில் 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்துவிடும்.

அந்த இலக்கை துரத்தும் போக்கில் சென்று எதிரணி தோல்வி அடையும். எதிரணி இதுபோன்ற பெரிய ஸ்கோரை துரத்தும்போதே தோற்கப் போகிறது என்பது ரசிகர்களுக்கே தெரிந்துவிடும். அப்படி இருக்கையில் போட்டியில் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.

அது மட்டுமல்லாமல் எதிரணி பேட்டர்கள்கூட, இதுபோன்ற மாபெரும் இலக்கை எவ்வாறு துரத்துவது என்ற எண்ணத்துடன் களமிறங்கும்போது, அவர்களை அழுத்தம், நெருக்கடி பற்றிக்கொண்டு எளிதாக பெவிலியன் திரும்பவும் வழி ஏற்பட்டுவிடுகிறது.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மட்டும் 45 பவுண்டரிகள் அடித்தது, அதாவது 180 ரன்களை பவுண்டரி மூலமே சேர்த்தது. 14 சிக்ஸர்கள் மூலம் மட்டுமே 84 ரன்களை சேர்ததது. ஏறக்குறைய 45+14=59 பந்துகள் ஏறக்குறைய 10 ஓவர்களில் மட்டும் தென் ஆப்பிரிக்க அணி 264 ரன்களை சேர்த்திருக்கிறது.

ஏறக்குறைய 120 பந்துகளை டாட் பந்துகளாக தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் விட்டுள்ளனர். அதாவது பவுண்டரி, சிக்ஸர் மூலமே ரன்களை சேர்த்தால் போதும் என்ற மனநிலையோடு இருந்தனர். இதுபோன்று பேட்டர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தையும், விதிமுறையையும் மாற்றினால், போட்டி என்பது ஒருதரப்பாகவே இருக்கும்.

ஐசிசி ஆடுகளங்களா, இந்திய மைதானங்களா?

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ஐசிசி நடத்தும் ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்டர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் களமாக இருக்க வேண்டும். ஆனால், டெல்லியில் நேற்று ஆட்டம் நடந்த மைதானம், ஆமதாபாத் மைதானம் போன்றவை பேட்டர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருக்கிறது. அந்தத் தன்மையை மாற்றாமல் ஐசிசி ஆடுகளங்களை அமைக்க வேண்டுமே தவிர, பொழுதுபோக்கு அம்சத்துக்காக ஆடுகளத்தின் மண்ணை இறுகச் செய்து(compaction) ஆடுகளத்தை உயிரற்றதாக மாற்றக்கூடாது.

ஆடுகளத்தின் மண்ணை இறுகச் செய்து பிட்ச் அமைக்கும்போது, அந்த ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டர்களுக்கே சாதகமாக இருக்கும். பந்துவீச்சாளர் என்னதான் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும், பேட்டை நோக்கித்தான் பந்து சீராக வரும், அடித்து ஆடுவதற்கு பேட்டர்கள் பெரிதாக ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க ஆடுகளம் இறுகாமல், மண் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். வேகப்பந்துவீச்சுக்கும் அவ்வாறு இருக்க வேண்டும். அப்போதுதான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும், வேகப்பந்துவீச்சாளர்களும் ஸ்விங் செய்ய முடியும்.

இதுபோன்று ஆடுகளத்தை இறுகச் செய்து, பொழுதுபோக்கு நோக்கத்துடன் பிட்ச் அமைக்கும்போது, பேட்டர்கள் கையில் ஆயுதத்தை வழங்கி, நிராயுதபாணிகளாக பந்துவீச்சாளர்களை நிறுத்தி போர் செய்வதுபோல் இருக்கும்.

ஆடுகளத்தைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்க கேப்டன்

வெற்றிக்குப் பின் தென் ஆப்பிரிக்கக் கேப்டன் பவுமா ஆடுகளம் குறித்துக் கூறுகையில் “இந்த வெற்றிதான் நாங்கள் எதிர்பார்த்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த பேட்டரிடமும் தவறைப் பார்க்கவில்லை. பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். தனிப்பட்ட பேட்டர்களாகவும் சிறப்பாகவே செயல்பட்டனர்.

பேட்டரை நோக்கி பந்து அருமையாக வந்ததால்தான் பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்தது. தொடக்கத்தில் சூழலுக்கு ஏற்ப நகர்வது கடினமாக இருந்தது, பின்னர் சரி செய்துவிட்டோம். சுழற்பந்துவீச்சை இனிவரும் போட்டிகளில் அதிகம் பயன்படுத்துவோம்,” எனத் தெரிவித்தார்.

சீரான வலிமையில் பேட்டர்கள் இருக்கிறார்களா?

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அணிக்கும் இந்த ஆடுகளங்கள் சாதகமாக இருந்ததுதானே, அந்த அணியிலும் 3 பேட்டர்கள் அரைசதம் அடித்தார்களே என்று கேட்கலாம். ஆனால், தென் ஆப்பிரிக்க அணியில் இருப்பது போல் கீழ்வரிசை வரை பிஞ்ச்ஹிட்டர்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை.

அனைத்து அணிகளிலும் ஒரே மாதிரியான பேட்டர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை. எந்த அணியில் வலிமையான பேட்டர்கள் இருக்கிறார்களோ அந்த அணிதான் இதுபோன்ற ஆடுகளில் ஆதிக்கம் செய்யும் என்பதே நிதர்சனம்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு மோசமாக அமைந்ததா அல்லது ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததா என்பது கேள்விக் குறிதான். ஏனென்றால், இலங்கை அணித் தரப்பில் 4 பந்துவீச்சாளர்களின் பந்துகளும் வெளுத்து எறியப்பட்டன.

பதிரணா 10 ஓவர்களில் 95 ரன்கள், ரஜிதா 90 ரன்கள், மதுசங்கா 85, வெல்லாலகே 81 ரன்களை வாரி வழங்கினர். ஒருநாள் போட்டியில் ஒரு அணியில் 4 பந்துவீச்சாளர்கள் சராசரியாக 80 ரன்களுக்கு மேல் வாரிக் கொடுப்பது இது 2வது முறை.

இதில் வெல்லாலகே சிறந்த இடது கை சுழற்பந்துவீச்சாளர். ஆசியக் கோப்பைத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அவரது நிலைமை நேற்று பரிதாபம்.

ஸ்டெயினின் விளக்கம்

ஆனால், தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் நேற்று இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இலங்கை அணியினர் மோசமாகப் பந்து வீசினார்கள். அதன் விளைவுதான் இவ்வளவு பெரிய ஸ்கோர்,” என்று விளக்கம் அளித்தார்.

தவறு செய்துவிட்டோம்

இலங்கை அணியின் கேப்டன் ஷனகா கூறுகையில், “ மிகப்பெரிய ஸ்கோர் செய்யும் போட்டியாக நான் எதிர்பார்த்தேன். நாங்கள் லென்தை தவறவிட்டோம், செயல்திட்டம் சிறப்பாக இல்லை. அடுத்து வரும் போட்டியில் நாங்கள் இதை மாற்ற வேண்டியது அவசியம்.

சுமார் 350 ரன்கள் வரை எடுக்க முயன்றோம். அசலங்கா, மென்டிஸ் சிறப்பாக ஆடினர். 3 முக்கிய பந்துவீச்சாளர்களை நாங்கள் இழந்தது பெரிய பலவீனம். தோல்வி அடைந்தாலும், பேட்டிங் செய்த விதம் ஆறுதலாக இருக்கிறது. அடுத்த போட்டியில் இன்னும் வேகத்துடன் இருப்போம்,” எனத் தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *