அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்கும் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொன்ஸி என்பது ஒரு முதலீட்டு மோசடி திட்டம். அதாவது, புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதிலிருந்து பணத்தை எடுத்து பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பது.
இந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கோபால கிருஷ்ணன், மணிவண்ணன் சண்முகம், சக்திவேல் பழனி ஆகியோர் இணைந்து அமெரிக்காவில் நண்பன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வகையில் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் சார்பில் 2021 ஏப்ரம் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரை சுமார் 1,079 கோடி ரூபாயை(130 மில்லியன் டாலர்) முதலீடுகளாக பெற்றுள்ளதாகவும் எஸ்இசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நண்பன் வென்ச்சர்ஸ் என்ன செய்தது ?
நண்பன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் முதன்மையானவர் ஜி.கோபாலகிருஷ்ணன் எனும் ஜி.கே. தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு நிதித்துறையில் எந்த முன் அனுபவமும் இல்லை என்றும், ஆனால், 1997 ஆம் ஆண்டு முதல் பங்கு வர்த்தகத்தில் உள்ள ஆர்வம் காரணமாக பங்கு வர்த்தகம் செய்து வந்ததாகவும் ஹிண்டன்பர்க் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் எஸ்இசி, நீதிமன்றத்தில் அனுமதிபெறுவதற்கு முன், ஹிண்டன்பர்க் சார்பில் இந்த மோசடி குறித்து அறிக்கை வெளியாகியிருந்தது.
அதன் அறிக்கைப்படி, பங்கு வர்த்தகத்தின் போதிய பணம் ஈட்ட முடியாத ஜி.கே., 2001 ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகத்தில் தான் ஒரு புதிய உத்தியை கண்டுபிடித்துள்ளதாகவும், அந்த உத்தியின்படி எல்லாக் கால கட்டத்திலும் 100% லாபம் தர முடியும் என்றும், அந்த உத்திக்கு காப்புரிமை பெற்றிருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
அந்த உத்தியை பயன்படுத்தி மக்களிடம் முதலீடுகளாக பணத்தை பெற்று வந்துள்ளார். ஆனால், ஜி.கே. அப்படி எந்த ஒரு காப்புரிமையும் பெறவில்லை என ஹிண்டன்பர்க் தனது ஆராய்ச்சி அறிக்கையில் கூறியுள்ளது.
1,003 முதலீட்டாளர்களிடம் 957 கோடி பெற்ற நண்பன் நிறுவனம்
எல்லா காலகட்டத்திலும் 100% லாபம் தரும் உத்தியை அனைவருக்கும் கற்றுத்தருவதாகக் கூறி, ‘நண்பன் பவுன்டேஷன்’ என்ற அமைப்பை 2019 ஆம் ஆண்டில் ஜி.கே தொடங்கியுள்ளார்.
நண்பன் பவுண்டேஷன் இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்றும், ஜி.கே.வின் உத்தியில் உள்ள முதல் இரண்டு நிலைகள் இலவசமாக கற்றுத் தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதனை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறியுள்ளது.
நண்பன் பவுண்டேஷனுக்கு பிறகு, ஜி.கே. ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தையும் தொடங்கி, 2020 ஜூன் முதல் முதலீடுகளைப் பெற்றுள்ளார்.
எஸ்இசி.யிடம் `நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனம் தாக்கல் செய்துள்ள தகவல்படி, 2020 முதல் 1003 முதலீட்டாளர்களிடம் 957 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், விதிமுறைகளின்படி, 915 கோடி ரூபாய்க்கு மேல் நிர்வாகச் சொத்து மதிப்பு இருந்தால், எஸ்இசி.யிடம் பதிவு செய்ய வேண்டும். இதனால், `நண்பன் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ நிறுவனம் முதலீட்டு ஆலோசகராக எஸ்இசி.யிடம் பதிவு செய்துகொண்டது. பிறகு 2023 மார்ச் மாதத்தில் முதலீட்டு ஆலோசகர் பதிவை வாபஸ் பெற்றுக்கொண்டது.
‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தின் இந்த மோசடியை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளிக்கொண்டு வந்த சில மாதங்களிலேயே, நிறுவனத்தையும் அதன் சொத்துகளையும் அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) முடக்கியுள்ளதால், மக்களின் பணம் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக முடியுமா?
நமது வங்கிக் கணக்கிலிருந்து நாம் எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் செலவழிக்கப்படுகிறதா அல்லது முதலீடு செய்யப்படுகிறதா என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிட்ட பிற ஆடம்பரங்களுக்கான செலவு நமது வருமானத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நம் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவரிடம் விலையுயர்ந்த போன் இருந்தால், அதே போனை வாங்கினால் நமக்கு அதிக செலவாகும். ஆனால் அந்த செல்போன் மூலம் நமது எதிர்காலத்திற்கு தேவையான படிப்பு அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள வேலைகளைச் செய்தால் அது ஒரு முதலீடு.
பலர் மற்றவர்களின் உடைமைகள், வாழ்க்கை முறைகளை கவனித்து, தங்கள் வருமானத்தை இதுபோன்ற விஷயங்களுக்கு செலவிடுகிறார்கள். இது நிதி திட்டமிடல் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.
“தேவையில்லாத பொருட்களை வாங்கும் பழக்கம் உள்ளவர்கள், ஒரு நாள் தங்களுக்குத் தேவையான பொருட்களை விற்றுவிடுவார்கள்” என்று வாரன் பஃபெட் கூறியதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
குறுகிய காலத்தில் பணம் ஈட்ட முடியுமா ?
பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் வலுவான நிதி ஆதாரங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் குறுகிய காலத்தில் அந்த பணத்தை ஈட்டவில்லை.
பங்குச் சந்தை என்பது விரைவாக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தளம் என்ற எண்ணத்தில் பல புதிய முதலீட்டாளர்கள் உள்ளனர். இது முற்றிலும் தவறான கண்ணோட்டம்.
ஏதாவது ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் இரட்டிப்பு லாபமும், இரண்டு ஆண்டுகளில் அதிக லாபமும் கிடைக்கும் என்ற விளம்பரங்களை நாம் பார்த்து வருகிறோம்.
இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். ‘ரிஸ்க்’ இல்லாத முதலீடு என்று எதுவும் இல்லை. குறுகிய காலத்தில் நிறைய பணம் வருகிறது என்றால் அதிலுள்ள இடர்பாடுகளை(Risk) நாம் கவனிக்க தவறக்கூடாது.
மேலும், எதிர்கால விருப்பங்களைப் பொறுத்தவரை, ஒரு நபர் ஒரு வருடத்தில் தனது முதலீட்டை விட பல மடங்கு அதிக பணத்தை ஈட்டியுள்ளார் என்ற அறிக்கைகளை நாம் காண்கிறோம்.
இவை அதிக ஆபத்துள்ள முதலீட்டு வழிகள் ஆகும்.
தனிநபர் நிதிக் கொள்கைகளின்படி, முதலீடு என்பது ஒரு நீண்ட கால விஷயம் ஆகும்.
முதலீடு அவசியமா ?- கேள்வியும் பதிலும்
1. ஏதேனும் எதிர்பாராத ஆபத்து, உயிரிழப்பு ஏற்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்க உங்களிடம் நிதி இருப்பு உள்ளதா?
பொதுவாக, இதுபோன்ற எண்ணங்கள் மன உறுதியை குறைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நிதி திட்டமிடல் என்று வரும்போது உணர்ச்சிகளுக்கு இடமில்லை. இது உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பு பற்றியது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் செலவுகளை ஈடுசெய்ய போதுமான ஆயுள் காப்பீட்டை வைத்திருப்பது அவசியம்.
2. சில எதிர்பாராத இடையூறுகள் காரணமாக எனக்கு மாத ஊதியம் தரும் வேலை இல்லையென்றால், தற்போதைய வாழ்க்கை முறையைத் தொடர முடியுமா?
அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, தனியார் ஊழியர்களுக்கு இல்லை. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி பல ஊழியர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் நாம் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு ஒரு நிதித் திட்டத்தை(financial plan) உருவாக்க வேண்டும்.
3. உங்கள் தற்போதைய நிதி ஆதாரங்கள் உங்கள் குழந்தையின் உயர் கல்விக்கு பணம் செலுத்த போதுமானதா?
இது ஒரு கற்பனையான கேள்வியாகத் தோன்றலாம். ஆனால் தற்போதைய தலைமுறையினரின் வாழ்நாளில் குழந்தைகளின் கல்வியே மிகப்பெரிய செலவு என்றால் அது மிகையாகாது.
பணவீக்கத்தைக் (inflation) கருத்தில் கொண்டு உங்கள் குழந்தையின் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பிற்கான போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. உங்கள் ஓய்வு கால வாழ்க்கையை இப்போது இருப்பதைப் போல வசதியாக மாற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளதா?
ஓய்வு கால வாழ்க்கை இன்னும் வெகுதொலைவில் உள்ளது என்ற தவறான எண்ணத்தில் பலர் உள்ளனர். ஆனால், தனிநபர் நிதிக் கொள்கைகளின்படி, தவிர்க்க முடியாத செலவைப் பற்றி நாம் அறிந்தால், அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும்
5. உங்கள் குடும்பத்தில் ஏதேனும் பரம்பரை நோய் உள்ளதா?
இதுவும் மிக முக்கியமானது. ஏனெனில் இத்தகைய நோய் குறைபாடு இருந்தால் நாற்பது வயதுக்கு பிறகு சரி செய்ய முடியாது. அத்தகைய நேரத்தில் காப்பீடு எடுப்பதும் கடினம். எனவே அதிக கவரேஜ் கொண்ட பாலிசியை எடுத்துக்கொள்வது பரம்பரை நோய் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல பரிந்துரையாகும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்