மார்ச் 26, 1971. மேகாலயாவின் துராவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் 83-வது படையணியின் தலைமையகத்தில் அதிகாலை 2 மணியளவில், எல்லை பாதுகாப்புப் படையின் துணை கமாண்டன்ட் வீரேந்திர குமார் கவுரை தொலைபேசியின் அழைப்பு மணி எழுப்பியது.
கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் தஞ்சம் கோரி வருவதாக மங்காச்சார் புறக்காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
“எல்லை பாதுகாப்புப் படைக்கு இதுபோன்ற முடிவை எடுக்க உரிமை இல்லை என்பதால் என்னால் இதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற கோரிக்கை எதுவும் இதற்கு முன்பு என்னிடம் வந்ததில்லை. இருப்பினும், உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து காலையில் தகவல் தெரிவிக்கிறேன். ஆனால் அதுவரை இந்திய எல்லைக்குள் யாரையும் நுழைய விடாதீர்கள்” என்று கவுர் பதில் அளித்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, பாக்மாராவில் இருந்த காவலர் ஒருவரும் இதே போன்ற தகவலை கூறினார். கிழக்கு பாகிஸ்தானில் மக்கள் கொல்லப்படுவதாக அகதிகள் கூறுகின்றனர் என அவர் தெரிவித்தார். டாலு புறக்காவல் எல்லையிலிருந்தும் இதேபோன்ற செய்தி வந்தவுடன் கவுர் போனை துண்டித்துவிட்டார். உடனடியாக மேலதிகாரியான டிஐஜி பருவாவுக்கு குறியீட்டு மொழியில் ஒரு செய்தியை அனுப்பினார் கவுர்.
அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் டிஐஜியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எல்லை பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் இருந்த ஒருவர் டிஐஜியை எழுப்பி எல்லையில் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்தார். கவுரின் செய்திக்கு பதிலளித்த அவர், அகதிகள் இந்திய எல்லைக்குள் இரவோடு இரவாக தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.
பாகிஸ்தான் ரைபிள்ஸ் படையினர் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரியை கிழக்கு பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்தனர். இந்த அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கோடியைத் தாண்டும் என்றும் அவர்கள் இந்திய மண்ணில் சுமார் ஒரு வருடம் தங்கியிருக்க வேண்டும் என்றும் அப்போது யாருக்குத் தெரியும்?
வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் துணை ராணுவப் படையான எல்லை பாதுகாப்புப் படை மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.
எல்லைப் பாதுகாப்புப் படையின் பங்கு
தலைமைக் காவலர் நூருதீன் பெங்காலி, கிழக்கு பாகிஸ்தான் ரைபிள்ஸ் படைக்கு பொறுப்பாக இருந்தார். அவர் இந்தியாவின் ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட பரிமல் குமார் கோஷுடன் நட்பு கொண்டிருந்தார். அவர் அடிக்கடி எல்லைக்கு வந்து கோஷை சந்திப்பது வழக்கம்.
மார்ச் 26 அன்று பாகிஸ்தான் ராணுவத்தின் ஒடுக்குமுறைக்குப் பிறகு, பரிமல் கோஷிடம் பாகிஸ்தான் ராணுவத்துடனான மோதலில் உதவுமாறு நூருதீன் கேட்டுக்கொண்டார். கோஷ் தனது சீருடையை மாற்றிவிட்டு சாதாரண உடையை அணிந்துகொண்டு சிட்டகாங்கில் உள்ள பாட்டியா கல்லூரியின் பேராசிரியர் அலியின் போலி அடையாள அட்டையை எடுத்துச் சென்றார். சிறிது தூரம் நடந்துசென்று பின்னர், நூருதீனுடன் ரிக்ஷாவில் சுபாபூர் பாலத்தை அடைந்தார். கிழக்கு பாகிஸ்தான் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த 6 வீரர்கள் ஏற்கனவே அங்கு இருந்தனர்.
கிழக்கு பாகிஸ்தானின் மண்ணை கையில் எடுத்து, இனி வங்கதேசத்தின் விடுதலைக்காக பாடுபடுவோம் என அவர்கள் சபதம் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர்களுக்கு எப்படி சிரமங்களை உருவாக்க முடியும் என்று கோஷ் அவர்களிடம் கூறினார். கிழக்கு பாகிஸ்தான் படையினருக்கு அறிவுரைகளை வழங்கிய பிறகு, கோஷ் இந்திய எல்லைக்குத் திரும்பினார்.
அவர் தனது அறிக்கையில் கிழக்கு பாகிஸ்தானில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தந்துள்ளார். ஆனால், தானே எல்லையைத் தாண்டி கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்றதாகக் குறிப்பிடவில்லை. மறுநாள் லெப்டினன்ட் கர்னல் ஏ.கே.கோஷ் அவரைச் சந்திக்க வந்தார்.
மோதலுக்கு முன்…
உஷினோர் மஜும்தார் சமீபத்தில் வெளியிடப்பட்ட தனது புத்தகமான ‘இந்தியாஸ் சீக்ரெட் வார்` எனும் புத்தகத்தில், “டீ குடித்துவிட்டு, பரிமல் கோஷ் ஏ.கே. கோஷிடம், தானே எல்லையைத் தாண்டி சுபாபூர் பாலத்திற்குச் செல்வதாகச் சொன்னபோது, ஏ.கே.கோஷ் கோபத்தில் தன் கையால் மேசையை பலமாக அடித்தார். இதனால் அந்த மேசையில் வைத்திருந்த தேநீர் சிந்தியது” என குறிப்பிட்டுள்ளார்.
“என்னுடைய அனுமதியின்றி சர்வதேச எல்லையைக் கடக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்? இதற்காக உங்களை ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா?” என ஏ.கே.கோஷ் கேட்டார்.
இவ்வாறு கூறிக்கொண்டே கோஷ் பதற்றத்துடன் எழுந்து தனது ஜீப்பை நோக்கி நகர்ந்தார். அப்போது பரிமல் கோஷ் அவருக்கு வணக்கம் செலுத்தினார். ஆனால் ஏ.கே.கோஷ் அவருக்கு பதிலளிக்கவில்லை. அப்போது தன் வேலை ஆபத்தில் இருப்பதாக பரிமல் கோஷ் உணர்ந்தார்.
இந்தியாவின் கிழக்கு எல்லையில் இருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லியில் உள்ள உள்துறைச் செயலாளர் கோவிந்த் நாராயணின் இல்லத்தில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அரசின் பல உயர் அதிகாரிகள் தவிர, எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் கே.ருஸ்தம்ஜி மற்றும் `ரா` உளவு அமைப்பின் இயக்குநர் ஆர்.என்.காவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகளை மத்திய பிரதேச மாநிலம் தேகன்பூரில் உள்ள அகாடமியில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் எல்லைக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
மறுநாள் லெப்டினன்ட் கர்னல் ஏ.கே.கோஷ் மீண்டும் ஸ்ரீநகர் புறக்காவல் நிலையத்திற்கு சென்றார். இம்முறை சிரித்துக்கொண்டே ஜீப்பில் இருந்து இறங்கினார். இறங்கியவுடனே, “போன தடவை நீங்கள் கொடுத்த டீயை நான் குடிக்கவில்லை. இப்போது டீ தயாராகிக் கொண்டிருக்கிறது” என்றார்.
இதைக் கேட்ட உதவி கமாண்டன்ட் பரிமல் கோஷ் நிம்மதி அடைந்தார்.
“மார்ச் 29 அன்று, பேராசிரியர் அலியைப் போன்று போலியாக, பரிமல் கோஷ் மீண்டும் கிழக்கு பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்தார். இந்த முறை, தனது மேலதிகாரியின் சம்மதத்துடன் அவர் இப்பணியை மேற்கொண்டார். அவருடன், கிழக்கு பாகிஸ்தான் ரைபிள்ஸ் படையின் நூருதீன் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த இளைஞர்களும் இருந்தனர். அவர்கள் சாதாரண உடைகளை அணிந்திருந்தனர்” என, உஷினோர் மஜும்தார் எழுதுகிறார்.
“கிழக்கு பாகிஸ்தானில் உள்ள கிளர்ச்சிப் போராளிகள், இந்தியா தங்களுக்கு உதவ முடிவு செய்திருப்பதாக பரிமல் கோஷ் சொன்னதை கேட்டு மகிழ்ச்சியடைந்தனர். பரிமல் கோஷை தோளில் சுமந்து கொண்டு நடனமாடத் தொடங்கினர். கோஷ் அங்குள்ள கிளர்ச்சி போராளிகளின் தளபதி மேஜர் ஜியா-உர்-ரஹ்மானைச் சந்தித்தார். இந்தியா தங்களுக்கு பீரங்கி குண்டுகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரினர்”
’பிடிபடாதீர்கள்’ என கூறிய இந்திரா காந்தி
டெல்லியில், ராணுவத் தளபதி ஜெனரல் மானெக் ஷா வங்கதேச விடுதலை படைக்கு வரையறுக்கப்பட்ட உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டார்.
எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் ருஸ்தம்ஜி இந்த செய்தியை லெப்டினன்ட் கர்னல் கோஷிடம் தெரிவித்தார். பரிமல் கோஷிடம் இந்தத் தகவலைக் கொடுத்த கர்னல் கோஷ், 92-வது படையணியின் தலைமையகத்தில் இருந்து சிறிய ரக பீரங்கி மற்றும் சில குண்டுகளை அனுப்ப ஏற்பாடு செய்தார்.
அடுத்த நாள், அதாவது மார்ச் 30 அன்று, பரிமல் கோஷ் இந்த பொருட்களை வங்கதேச விடுதலை படையினருக்கு வழங்கினார். மார்ச் 29 அன்று, இந்திய பாதுகாப்பு அதிகாரி கிளர்ச்சியாளர்களை சந்தித்ததாக கிழக்கு பாகிஸ்தானில் செய்தி பரவியது. ஆயுதங்கள் வந்தவுடன் வஙதேச விடுதலை படைக்கு இந்தியா ஆதரவு அளித்தது உறுதியானது.
மேஜர் ஜியா இந்த செய்தியை வங்கதேச விடுதலை படையில் இருந்த மற்ற வீரர்களுக்கு தெரிவித்தார். இதற்கிடையில், எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் ருஸ்தம்ஜி, பிரதமர் இந்திரா காந்தியிடம் அறிவுரை கேட்கச் சென்றபோது, ’நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்’ என்று கூறினார்.
சோவியத் யூனியனுக்கான இந்தியத் தூதரும், இந்திரா காந்திக்கு நெருக்கமானவருமான டி.பி.தார், வங்கதேச விடுதலை படையினருக்கு பீரங்கிகளையும் சிறிய ரக பீரங்கிகளையும் வழங்க ஆரம்பத்தில் இருந்தே விரும்பினார். ’இந்த எதிர்ப்பை எந்தச் சூழலிலும் வீழ்த்தி விடக் கூடாது’ என்று தனது நெருங்கிய நண்பரும், இந்திரா காந்தியின் முதன்மைச் செயலாளருமான பி.என்.ஹக்சருக்கு கடிதம் எழுதினார் டி.பி. தார்.
இந்திரா காந்தியை சந்தித்த அவாமி லீக் தலைவர்
மார்ச் 30, 1971 அன்று, இரண்டு மூத்த அவாமி லீக் தலைவர்களான தாஜுதீன் அகமது மற்றும் அமிருல் இஸ்லாம் ஆகியோர் இந்திய எல்லைக்கு அருகில் வந்துவிட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.
மஜும்தார் தனது மேலதிகாரி ருஸ்தம்ஜியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். தொலைபேசியில் பேசியவுடனேயே, விமான நிலையத்திற்குச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படை விமானம் மூலம் கொல்கத்தாவை அடைந்தார் ருஸ்தம்ஜி. டம்டம் விமான நிலைய ஓடுபாதையில் மஜும்தார் ருஸ்தம்ஜியை வரவேற்றார். அப்போது இரவு பன்னிரண்டு மணி ஆகியிருந்தது.
“மஜும்தார் என்னை விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கு, பாதுகாப்பு அதிகாரிகள் சூழ தாஜுதீன் அகமது அமர்ந்திருந்தார். நாங்கள் அவரையும் அமிருல் இஸ்லாமையும் எங்கள் கருப்பு அம்பாசிடர் காரில் அசாம் ஹவுஸுக்கு அழைத்துச் சென்றோம்” என ருஸ்தம்ஜி எழுதுகிறார்.
“குளித்துவிட்டு துவைத்த துணிகளை அணிந்து கொள்வதற்காக எனது குர்தா-பைஜாமாவை அவருக்குக் கொடுத்தேன்” என்று எழுதியிருக்கிறார். ”அப்போது இரவு ஒரு மணி ஆகியிருந்தது. இரவு நேரத்தில் எங்கும் உணவு கிடைக்கவில்லை. எங்கள் ஐ.ஜி. கோலக் அவர்கள் இருவருக்கும் ஆம்லெட் செய்து கொடுத்தார்.”
“அடுத்த நாள் நானும் கோலக்கும் நியூ மார்க்கெட்டுக்குச் சென்று தாஜுதீன் மற்றும் அமிருலுக்கு ஆடைகள், சூட்கேஸ்கள் மற்றும் கழிவறை பொருட்களை வாங்கினோம். ஏப்ரல் 1 ஆம் தேதி, கோலக் தாஜுதீனையும் அவரது தோழரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் பாதுகாப்பான வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் ஒரு வாரம் கழித்த பிறகு, ஏப்ரல் 9 அன்று கொல்கத்தா திரும்பினார்” என ருஸ்தம்ஜி எழுதுகிறார்.
(நாடு கடத்தப்பட்ட அல்லது சட்டவிரோத) வங்கதேசத்திற்கு புதிய அரசியலமைப்பு தேவைப்பட்டது. எல்லை பாதுகாப்புப் படையின் சட்ட அதிகாரி கர்னல் என்.எஸ். பெயின்ஸ், தாஜுதீன் அகமதுவுடன் வந்த வழக்குரைஞர் அமிருல் இஸ்லாம், வங்கதேசத்தின் தற்காலிக அரசியலமைப்பை எழுத உதவினார்.
இதை கொல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு வழக்குரைஞர் சுப்ரோதோ ராய் சவுத்ரி மறுஆய்வு செய்தார். புதிய நாட்டுக்கு என்ன பெயர் வைப்பது என்பது குறித்து பல விவாதங்கள் நடந்தன. இதற்கு, ‘கிழக்கு வங்கம்’, ‘பேங் பூமி’, ‘பங்கா’, ‘ஸ்வாதின் பங்களா’ என பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில் ’பங்களாதேஷ்’ என்ற பெயருக்கு ஷேக் முஜிப் தனது ஆதரவை வழங்கியதாக தாஜுதீன் கூறினார். வங்கதேசம் என்ற பெயரை அனைத்து தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
முன்னதாக அதன் பெயரில் இரண்டு வார்த்தைகள் இருந்தன, பின்னர் அது ’பங்களாதேஷ்’ என்ற ஒரு வார்த்தையாக மாற்றப்பட்டது. இப்போது வங்கதேச நாட்டின் உருவாக்கம் எங்கு நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அந்த விழாவை கிழக்கு பாகிஸ்தான் மண்ணில் நடத்த வேண்டும் என்று ருஸ்தம்ஜி பரிந்துரைத்தார். இதற்காக மெஹர்பூர் நகருக்கு அருகில் உள்ள பைத்யநாத் தாலில் உள்ள மம்பழ தோட்டம் தேர்வு செய்யப்பட்டது.
எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சமர் போஸ் மற்றும் கர்னல் ஐ ரிக்கியே ஆகியோர், சுமார் 200 பத்திரிகையாளர்களை கொல்கத்தாவிலிருந்து பைத்யநாத் தாலுக்கு கார்களில் அழைத்துச் செல்ல முன்முயற்சி எடுத்தனர்.
துப்பாக்கி நிழலில் பதவியேற்ற அமைச்சர்கள்
பத்திரிகையாளர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
“சாதாரண உடை அணிந்திருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் பைத்யநாத் தாலை நாலாபுறமும் சுற்றி வளைத்தனர். பாகிஸ்தான் விமானப்படையின் எந்த தாக்குதலையும் முறியடிக்க இந்திய விமானப்படை விமானங்கள் அப்பகுதியில் ரோந்து சென்றன. கிழக்கு பாகிஸ்தான் ரைபிள்ஸ் வீரர்கள், கிழிந்த அழுக்குச் சீருடையில், வங்கதேச அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். ஒரு மூலையில், இசைக் கருவிகள் ஏதுமின்றி வங்கதேசத்தின் தேசிய கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தனர்” என மனாஸ் கோஷ் தனது ‘பங்களாதேஷ் வார்: ரிப்போர்ட் ஃப்ரம் க்ரௌண்ட் ஜீரோ’ எனும் புத்தகத்தில் எழுதுகிறார்,
பின்னர் அருகிலுள்ள இந்திய கிராமத்தில் இருந்து தபேலா மற்றும் ஹார்மோனியம் இசைக்கு ஏற்பாடு செய்யும்படி கோலக்கிடம் கூறப்பட்டது. தினாஜ்பூர் அவாமி லீக் எம்.பி. யூசுப் அலி வங்கதேசத்தின் சுதந்திரப் பிரகடனத்தை மைக்கில் வாசித்தார். இதையடுத்து அமைச்சர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொண்டனர். வங்கதேசத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்பகுதி முழுவதும் ‘ஜெய் பங்களா’ என்ற கோஷங்களால் எதிரொலித்தது.
இதற்கிடையில், எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் ருஸ்தம்ஜி மற்றும் ஐஜி கோலக் மஜும்தார் ஆகியோர் இந்திய எல்லைக்குள் தங்கியிருந்து முழு நடவடிக்கையையும் கண்காணித்து வந்தனர். வங்கதேசத்தின் தற்காலிக அரசாங்கத்தின் அலுவலகம் எண். 8, தியேட்டர் சாலையில் கட்டப்பட்டது. தாஜுதீன் அகமது தனது அலுவலகத்தை ஒட்டிய அறையில் வசிக்கத் தொடங்கினார். மீதமுள்ள அமைச்சர்களுக்கு பாலிகஞ்ச் சர்குலர் சாலையில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை கட்டிடத்தில் தங்கும் வசதி வழங்கப்பட்டது.
பிரதமர் இந்திரா காந்தியுடன் தொலைபேசியில் பேசக்கூடிய சிலரில் ருஸ்தம்ஜியும் ஒருவர். ஒருநாள் அவர் போன் செய்து, கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தான் துணை உயர் ஆணையத்தின் அனைத்து வங்க ஊழியர்களும் வங்கதேசத்தின் பக்கம் மாறினால், அவர்களுக்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா? என கேட்டார். இந்த திட்டத்தில் இந்திரா காந்தி மிகவும் மகிழ்ச்சியடையவில்லை. இந்த நடவடிக்கையில் ஒரு சிறிய தவறு இந்தியாவை சிக்கலில் தள்ளும் என்று ருஸ்தம்ஜியை இந்திரா காந்தி எச்சரித்தார்.
‘நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்’ என ருஸ்தம்ஜி கூறினார். அவர் பாகிஸ்தானின் துணை உயர் ஆணையர் ஹொசைன் அலியை நேரில் சந்தித்தது மட்டுமல்லாமல் வங்கதேசத்தின் பக்கம் மாற அவரை சமாதானப்படுத்தி, வங்கதேச அரசாங்கத்தின் பிரதமரான தாஜுதீன் அகமதுவை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.
ஏப்ரல் 18 ஆம் தேதி, ஹொசைன் அலி பாகிஸ்தானுடனான தனது உறவை முறித்துக் கொள்வதாகவும், வங்கதேச அரசாங்கத்தின் மீதான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
“கொல்கத்தாவில் பத்து மணியளவில் மிக வலுவான புயல் வீசியது. இது பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பல மரங்களை வேரோடு சாய்த்தது மட்டுமல்லாமல், துணை உயர் ஆணையத்தில் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தான் கொடிக்கம்பத்தையும் வீழ்த்தியது. புயலுக்குப் பின்னர் தாமா ஹுசைன் அலி மற்றும் அவரது பணியாளர்கள் அந்த அலுவலகத்தை அடைந்தனர். அவர்களில் ஒருவர் கொடிக் கம்பத்தில் இருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு அதன் இடத்தில் வங்கதேசக் கொடியை ஏற்றினார்” என உஷினோர் மஜும்தார் எழுதுகிறார்.
அங்கிருந்த எல்லை பாதுகாப்புப் படையினர், அங்கிருந்த பாகிஸ்தான் பெயர்ப்பலகையை அகற்றிவிட்டு, அதில் ‘ஜனநாயக வங்கதேசக் குடியரசின் உயர் ஆணையர் அலுவலகம்’ என்று எழுதப்பட்டிருந்த புதிய பலகையை நிறுவினர்.
ரேடியோ டிரான்ஸ்மிட்டரை வழங்கிய எல்லை பாதுகாப்புப் படை
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை மூடியது. இந்த நடவடிக்கையில் இயக்குநர் ருஸ்தம்ஜி, ஆபரேஷன்ஸ் ஐஜி மேஜர் ஜெனரல் நரீந்தர் சிங், உளவுத்துறை ஐஜி பி.ஆர். ராஜகோபால், கிழக்கு மண்டல ஐ.ஜி. கோலக் மஜும்தார் ஆகியோர் மாறுவேடத்தில் துணை உயர் ஆணையக சாலையில் நின்று கொண்டிருந்தனர்.
27 மார்ச் 1971 அன்று, மாலை 7 மணிக்கு, முக்தி பாஹினியின் மேஜர் ஜியா-உர்-ரஹ்மான், கலூர்காட் வானொலி நிலையத்திலிருந்து சுதந்திரப் பிரகடனத்தை ஒலிபரப்பினார். மூன்று நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் போர் விமானங்கள் வானொலி நிலையத்தை குண்டுவீசி அழித்தன.
எல்லை பாதுகாப்புப் படையின் தெகன்பூர் அகாடமியில் இருந்து 200 வாட் சுருக்கலை டிரான்ஸ்மிட்டரை அதன் இயக்குநர் ருஸ்தம்ஜி ஆர்டர் செய்தார். லெப்டினன்ட் கர்னல் ஏ.கே.கோஷ் தனது படையணியின் பழைய ரெக்கார்ட் பிளேயரை வழங்கினார். அதிலிருந்து ‘ஸ்வாதின் பங்களா பேட்டர் கேந்த்ரா’ ஒலிபரப்பைத் தொடங்கியது.
“எல்லை பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் ராம் சிங் மட்டுமே இரண்டாம் உலகப்போர் கால ரேடியோ டிரான்ஸ்மிட்டரை இயக்கத் தெரிந்தவர். இந்த டிரான்ஸ்மிட்டர் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே இயங்கும். பாகிஸ்தானில் இருந்து ’போரில் போராடும் வங்கதேச மக்களுக்கான’ நிகழ்ச்சிகளை பொறியாளர்கள் மற்றும் கதாசிரியர்கள் குழு ஒலிபரப்பத் தொடங்கினர். ஆரம்ப நாட்களில் செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் ஒலிபரப்பப்பட்டன” என உஷினோர் மஜும்தார் எழுதுகிறார்.
இதைத்தொடர்ந்து, வங்கதேசத்தின் போராட்டத்திற்கு உதவுமாறு உலக மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், வங்க கவிஞர் நஸ்ருல் கீதி பாடல்கள் வாசித்தார்.
ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் அவர் 10 நிமிட இடைவெளி எடுப்பார். ஏனெனில், பழைய டிரான்ஸ்மிட்டர் அதிக வெப்பமடையும். இரண்டு பிஎஸ்எஃப் அதிகாரிகள், துணை கமாண்டன்ட் எஸ்.பி. பானர்ஜி மற்றும் உதவி கமாண்டன்ட் எம்.ஆர். தேஷ்முக் ஆகியோருக்கு ரகசிய வானொலி நிலையத்தை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது.
இவர்கள் அகர்தலாவில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்க வைக்கப்பட்டு, அவர்கள் பயணிக்க ஜீப் வழங்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, இந்த வானொலி நிலையம் மேற்குவங்கத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு கொல்கத்தாவை அடைந்த கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த வானொலி கலைஞர்களின் உதவியுடன் நிகழ்ச்சிகளை உருவாக்கும் பொறுப்பை ‘ரா’ உளவு அமைப்பு ஏற்றுக்கொண்டது.
29 பாலங்கள் இடிக்கப்பட்டன
சுபாபூர் பாலத்தை இடிக்க வங்கதேச விடுதலை படைக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் பொறியாளர்கள் மற்றும் வீரர்கள் உதவினர். ஆறு வாரங்களில், கிழக்கு பாகிஸ்தானில் 29 சாலை மற்றும் ரயில் பாலங்களை எல்லை பாதுகாப்புப் படை அழித்தது. இதன் விளைவாக பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. எல்லை பாதுகாப்புப் படையினர் கிழக்கு பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையும் போதெல்லாம், அவர்கள் சீருடையை அணிய அனுமதிக்கப்படவில்லை.
பாதுகாப்புப் படையினரால் வனப்பகுதியில் அணியும் பூட்ஸ் அணியவோ, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை எடுத்துச் செல்லவோ முடியவில்லை. படைப்பிரிவின் கமாண்டர் ரூபக் ரஞ்சன் மித்ரா, கிழக்கு பாகிஸ்தானுக்குள் ரகசியமாக நுழைந்த எல்லை பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.
“அஸ்ஸலாம்வலேகும்’ என்று சொல்லி வாழ்த்துவது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. சிலர் நமாஸ் செய்யக் கற்றுக்கொண்டார்கள், ஐந்து நேரத் தொழுகைகளின் பெயர்களை மனப்பாடம் செய்தார்கள். எல்லை பாதுகாப்புப் படையில் இருந்த இந்துகள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டார்கள். மித்ரா தனது பெயரை தலிப் ஹுசைன் என்று மாற்றிக்கொண்டார். அந்த பெயர்களை பழகிக் கொள்ள முகாமில் கூட ஒருவரையொருவர் புதிய பெயர்களில் அழைத்துக்கொண்டனர்” என உஷினோர் மஜும்தார் எழுதுகிறார்.
பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இரவில் தங்களுடைய முகாம்களில் தங்க வைத்தனர். இரவில் தெருக்களில் ரோந்து செல்ல அவர்கள் வெளியே செல்லும் போதெல்லாம், அவர்கள் மீது தோட்டாக்கள் வீசப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் இரவில் வெளியே செல்வதை நிறுத்தினர்.
வங்கதேச விடுதலை படைக்கு உதவி வழங்கவில்லை என மறுத்த இந்தியா
இந்திரா காந்தியின் முதன்மைச் செயலர் பரமேஷ்வர் நாராயண் ஹக்சர், அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கரிடம் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதைப் பற்றி புகார் செய்தபோது, அதற்குப் பதிலாக, வங்காள கொரில்லாக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதாகக் குற்றம் சாட்டினார், ஆனால் ஹக்சர் இதை மறுத்தார்.
இது சரியல்ல என்றாலும், ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உதவ 19 ராஜ்புதனா ரைபிள்களின் நான்கு கம்பெனிகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. மேலும், ஆறு பீரங்கிகளும் மூன்று அங்குல சிறிய ரக பீரங்கிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
அன்று முதல் இன்று வரை இந்தியா வங்கதேச விடுதலை படையினருக்கு உதவியதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை.
நியூயார்க் டைம்ஸ் நிருபர் சிட்னி ஷோன்பெர்க், எல்லைப் பாதுகாப்புப் படையினர் வங்கதேச விடுதலை படையினருக்கு அளித்துக் கொண்டிருந்த பயிற்சி முகாமை அடைய முடிந்தது. இந்தியா மற்றும் கிழக்கு பாகிஸ்தான் எல்லையில் நான்கு நாட்கள் தங்கியிருந்த அவர், பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் நுழைய முடிந்தது. அவர் ஏப்ரல் 22, 1971 இன் நியூயார்க் டைம்ஸ் இதழில் ‘கொரில்லா நடவடிக்கைக்காக தங்கள் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் வங்காளிகள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.
இந்த அறிக்கையில், “எல்லைப் பாதுகாப்புப் படையினர் வங்கதேச விடுதலை படையினருக்கு எவ்வாறு பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்குகிறார்கள் என்பதை நான் என் கண்களால் பார்த்தேன்” என்று எழுதினார்.
1971 போரில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் 125 பேர் உயிர் தியாகம் செய்தனர், 392 வீரர்கள் காயமடைந்தனர். போருக்குப் பிறகு, எல்லை பாதுகாப்புப் படையின் இரண்டு உயர் அதிகாரிகளான ருஸ்தம்ஜி மற்றும் அஷ்வனி குமார் ஆகியோர் பத்ம பூஷன் விருது பெற்றனர்.
ஐஜி கோலக் பிஹாரி மஜும்தாருக்கு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. இந்தப் பெருமையைப் பெற்ற முதல் ராணுவம் அல்லாத அதிகாரி இவர்தான். இது தவிர, உதவி கமாண்டன்ட் ராம் கிருஷ்ணா வாத்வாவுக்கு மரணத்திற்குப் பின் மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்