
பட மூலாதாரம், ANI
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அளிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கூடுதல் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மார்ச் 11-ஆம் தேதி மறுத்துவிட்டது. மார்ச் 12-ஆம் தேதி மாலைக்குள் (இன்று) தேர்தல் பத்திரங்கள் வாங்குவது தொடர்பான தகவல்களை எஸ்பிஐ அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த தகவலை மார்ச் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவான பலர் வரவேற்றுள்ளனர். தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல் வெளியான பிறகு, அரசியல் கட்சிகளின் நிதியுதவி குறித்து தெரியவரும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
பாஜகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், ANI
எஸ்பிஐ வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
தேர்தல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும் அஞ்சலி பரத்வாஜ், “எஸ்பிஐ உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் அவர்களிடம் முழுமையான தரவு உள்ளது. தேர்தலுக்கு முன்பு இந்தத் தரவை வழங்க எஸ்பிஐ விரும்பவில்லை என்று தெரிகிறது,” என்றார்.
“இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்பிஐ ஏன் தரவை கொடுக்க விரும்பவில்லை, யார் தடுக்கிறார்கள், எஸ்பிஐ எதை மறைக்கிறது, யாருக்காக மறைக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்.
“தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளும் கட்சிகள் பெரும் பங்கைப் பெறும். தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக பாஜக பணம் பெற்றுள்ளது என்பது உறுதி.
“தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2017-18 மற்றும் 2022-23-க்கு இடையில் பாஜக சுமார் ரூ.6,566 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், ரூ.9,200 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன,” என்றார்.
அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை அளிக்கும் போது, நன்கொடைக்கு ஈடாக சில நன்மைக்காக அவ்வாறு செய்திருக்கலாம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
அஞ்சலி பரத்வாஜ் கூறும்போது, “ஆளும் கட்சிக்கு நன்கொடை வழங்கும்போது, ஏதோ ஒரு நம்பிக்கையை மனதில் வைத்துதான் கொடுக்கப்படுகிறது. நாம் பணத்தை நன்கொடையாக வழங்கினால், அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று நன்கொடையாளர் நினைக்கிறார்” என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இது நிறைய விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும். எந்த ஆதாயமும் பெறுவது ஊழலுக்கு மிகப்பெரிய காரணம், யாருடைய நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெறுகிறது? என்ன கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன? அந்தக் கொள்கைகள் சில நிறுவனங்களுக்குப் பலன் தருகிறதா? அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு பணம் கொடுத்துள்ளனவா? என்பதெல்லாம் தெரியவரும்” என்றார்.
அவர் கூறுகையில், “சில நிறுவனங்களுக்கு எதிராக ஏதேனும் ஒருசட்ட முகமையில் வழக்கு இருந்திருக்கிறதா? நன்கொடை வழங்கிய பிறகு அந்நிறுவனம் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனரா? இப்படி பல விஷயங்கள் வெளிவரும்” என்றார்.
தேர்தல் பத்திர விவகாரம் குறித்து பத்திரிகையாளர் நிதின் சேதி கூறுகையில், “நமக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்கள் இதன்மூலம் உறுதிப்படுத்தப்படும். அதாவது, இந்த திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் பாஜக தான் என்பது உறுதியாகும்,” என்றார்.
இந்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தவுடன், எதிர்க்கட்சிகளும் தங்கள் சொந்த நலனுக்காக அதைப் பயன்படுத்த முயற்சிக்கும் என்று நிதின் சேதி நம்புகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில், “இந்திய வரலாற்றில் தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழலாக இருக்கப் போகிறது, இதில் ஊழல் தொழிலதிபர்களின் தொடர்பை அம்பலப்படுத்துவதன் மூலம் நரேந்திர மோதி அரசின் உண்மையான முகத்தை நாட்டிற்கு வெளிப்படுத்தும்” என பதிவிட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, பாஜக தலைவர் பிருத்விராஜ் ஹரிசந்தன் பிடிஐ செய்தி முகமையிடம், “தேர்தல் பத்திரங்கள் அரசியல் ஊழலைக் குறைத்துள்ளதா அல்லது அதிகரித்ததா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். இதை நீதிமன்றமே மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்,” என்றார்.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI
எஸ்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே.
எஸ்பிஐ கடந்த மார்ச் 4-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை அளிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியிருந்தது எஸ்பிஐ.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், எஸ்பிஐ தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள், யார் பணமாக்கினார்கள் என்பது பற்றிய தகவல்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
எஸ்பிஐ தனது மனுவில், தேர்தல் பத்திரங்களை வழங்குவது மற்றும் பணமாக்குவது தொடர்பான தரவு இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ளன என்று கூறியிருந்தது.
இந்த தரவுகள், தனது மைய தரவுத்தளத்தில் இல்லை என்றும் எஸ்பிஐ கூறியிருந்தது. இந்த செயல்முறை ‘அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால்’ கால அவகாசம் கேட்டது எஸ்பிஐ.
ஒவ்வொரு பத்திரத்திலும் ஒரு தனிப்பட்ட எண் கொடுக்கப்பட்டுள்ளது, அதை புற ஊதா ஒளியில் படிக்க வேண்டும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
அதன் பின்னரே பத்திரம் குறித்து தெரியவரும். இதைத் தவிர, அதை வாங்கியவர் யார் என்பதை அறிய வேறு எந்த அடையாளமும் இல்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
பத்திரங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை வாங்கியவர்கள் பற்றிய தகவல்கள் ஆவணங்கள் வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இரண்டையும் இணைக்க அதிக நேரம் எடுக்கும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2019 மற்றும் பிப்ரவரி 2024-க்கு இடையில் 22,217 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன, அவற்றின் தகவல்கள் பொருந்த வேண்டும்.
நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

பட மூலாதாரம், Getty Images
எஸ்பிஐயின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த இரண்டு தகவல்களையும் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐயிடம் நீதிமன்றம் கூறவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு வகையான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலாவதாக, பத்திரம் எப்போது வாங்கப்பட்டது, வாங்குபவரின் பெயர் மற்றும் வாங்கிய ஒவ்வொரு பத்திரத்தின் விலை என்ன என்பதையும் இரண்டாவதாக எந்தக் கட்சிக்கு எவ்வளவு பத்திரங்களை பெற்றன, பத்திரங்களை பெற்ற தேதி என்ன மற்றும் பத்திரங்களின் மதிப்பு என்ன ஆகிய தகவல்களை உச்ச நீதிமன்றம் கேட்டது.
இந்த தகவல் எஸ்பிஐயிடம் உள்ளது, எனவே தாமதமின்றி தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியது.
எஸ்பிஐயும் இதை ஏற்றுக்கொண்டது, ஆனால் தகவலை வழங்க இன்னும் மூன்று வாரங்கள் கோரியது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
ஏப்ரல் 12, 2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்கும் நன்கொடை அளிப்பவர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அந்த பத்திரத்தின் மதிப்பு என்ன, எந்த தேதியில் எந்த கணக்கில் திரும்பப் பெறப்பட்டது என்பதை தெரிவிக்கவும் செப்டம்பர் 2023-இல் உத்தரவிடப்பட்டது. இந்தத் தகவலைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அளிக்குமாறு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதவிர, மார்ச் 12-ஆம் தேதிக்குள் தகவல்களை சமர்ப்பிக்காவிட்டால், வேண்டுமென்றே உத்தரவை மீறுவதாகக் கருதி எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பிஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் நீதிமன்றம் கூறியது.
விசாரணையின் போது, இந்த தாமதத்திற்கு எஸ்பிஐ-யையும் நீதிமன்றம் கண்டித்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “கடந்த 26 நாட்களில் இந்த தகவல்களை இணைப்பது தொடர்பாக எவ்வளவு வேலை செய்தீர்கள்? இதை ஏன் உங்கள் மனுவில் குறிப்பிடவில்லை? இந்த தகவல் பிரமாண பத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கேட்டார்.
நீதிமன்றத்தின் இந்தக் கேள்விக்கு எஸ்பிஐ வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் குறித்த தகவல்களை தகவல்களை வழங்குவதில் வங்கி தவறு செய்யாமல் இருக்க தான் கால அவகாசம் கேட்பதாக சால்வே வாதிட்டபோது, நீதிபதி சஞ்சீவ் கன்னா, “இது நாட்டின் நம்பர்-1 வங்கி, இதை எப்படி கையாள்வது என எஸ்பிஐ-க்கு தெரியும் என நம்புகிறோம்” என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவு என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES
வெளிப்படைத்தன்மையை ஆதரிப்பவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா ஒருமுறை தேர்தல் பத்திர வழக்கை விசாரித்தார். முடிவு வந்த பிறகு, “மார்ச் 12-ஆம் தேதி மாலைக்குள் தகவல் கொடுக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.
தகவல்களை இணைக்க வேண்டும் என்ற எஸ்பிஐயின் வாதம் முற்றிலும் அபத்தமானது என்றும், தகவல் தராமல் அதை மறைக்க நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஜனநாயக உரிமைகளுக்கான அரசு சாரா அமைப்பின் (ADR) ஜக்தீப், இது ஒரு முக்கியமான உத்தரவு என்று கூறினார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் இந்த அமைப்பும் மனு தாக்கல் செய்திருந்தது.
“ஒன்று நன்கொடையாளர்கள் குறித்த தகவல்கள், மற்றொன்று பத்திரங்களிலிருந்து பெறப்பட்ட பணம் குறித்த தகவல்கள் என தனித்தனி பட்டியல்கள் இருக்கும். ஆனால் இது புதிய தகவல்களை வெளிப்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
“தனிப்பட்ட பட்டியல்களில் தேதி போன்ற பல அடையாளம் காணும் அம்சங்கள் இருக்கும், ஏனெனில் பத்திரங்கள் 15 நாட்களுக்குள் பணமாக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். எனவே, எந்த ஒரு அரசியல் கட்சியும் குறிப்பிட்ட தொகைக்கான பத்திரத்தை மீட்டெடுத்திருந்தால், யார் எதை மீட்டெடுத்தார்கள் என்பது குறித்துத் தெரியவரும்.
இது நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதுகுறித்த தகவல்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்றும் தெரிவித்தார். எல்லா அரசியல் கட்சிகளும் யாரிடம் நன்கொடை பெற்றோம், எதற்காக நன்கொடை பெற்றோம் என்பது குறித்து அக்கறை கொள்வார்கள் என அவர் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்