மழை வேறு விடாமல் கொட்டுகிறது. ஆனால், சுடுகாட்டுக்கு இறந்த தனது தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் தவித்தார் ஆறாவமுதன். வந்திருந்த உறவினர்கள் ஆங்காங்கே மழைக்கு கிடைத்த இடத்தில் ஒதுங்கி நின்றனர்.
மழை 2 மணி நேரம் கழித்து சற்றே இடைவெளி விட உடலை தகனம் செய்து விடலாம் என சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு சுடுகாட்டில் அடுத்த சோதனை காத்திருந்தது. விறகுகள் அனைத்தும் மழையில் நனைந்து விட்டன.
இருந்த போதும் விறகுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சடலத்தை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
எருவாமுட்டி என வழக்கு மொழியில் அழைக்கப்படும் சாண வறட்டி வைத்து கற்பூரத்தை கொளுத்திய போது கற்பூரம் மட்டுமே எரிந்தது. வறட்டியும் நனைந்திருந்ததால் சடலத்தில் நெருப்பு பிடித்த பாடில்லை.
ஒருவழியாக மண்ணெண்ணையை ஊற்றிஊற்றி சடலத்தை எரிக்க முயற்சித்த போதும் தீப்பிடிக்க தொடங்கிய சற்று நேரத்தில் மழை வந்துவிட்டது. அடுத்த 2 தினங்களுக்கு சடலத்தை எரிக்க முடியாமல் மழை தொடர்ந்து பெய்தது.
பாதி மட்டுமே எரிந்த சடலத்தில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய கிருமியும் பருவ தொடங்கிவிட்டது. அஸ்திக்காகக் காத்திருந்தவர்கள்கூட சோர்ந்துவிட்டனர்.
இது ஈரோடு மாவட்ட கவுந்தப்பாடியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்று அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.
கவுந்தம்பாடி மட்டுமல்ல, மழைக்காலங்களில் இதுதான் ஒரு சில கிராமங்களின் நிலையாக இருந்தது. இதை அடுத்து தான் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த மயானங்கள் மேம்படுத்தப்பட்டு எரிமேடைக் கொட்டகைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், சில இடங்களில் அதுவும் பராமரிப்பற்று போகவே மேற்கூரை பெயர்ந்து மீண்டும் விறகு நனைதல், சடலங்கள் முழுமையாக எரியாது இருத்தல் உள்ளிட்ட சிக்கல் இருந்தது. பின்னர், மின்மயானங்கள் இந்த சிரமம் ஏதுமின்றி சடலங்களை எரியூட்ட நகர்ப்புறங்களில் வந்தபோதும், சில கிராமத்தினருக்கும், மலைவாழ் மக்களுக்கும் இது தற்போது வரை சிக்கலான நடைமுறையாகவே உள்ளது.
நடமாடும் மின்மயானம் உருவானது எப்படி?
கொரோனா பெருந்தொற்று காலத்தில், இறந்த நோயாளிகளின் சடலத்தை அரசே புதைத்தாலும், சடலங்களை அப்புறப்படுத்த இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர்.
எங்கு சென்றாலும் விறகுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அத்துடன் எரிக்கவோ புதைக்கவோ இடமின்றி அலையும் சூழலும் உருவானது. மின்மயானங்களிலும் எரியூட்ட நேரம் கிடைக்காமல் தவிக்கும் சூழல்தான் இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு சடலங்கள் எரிக்கும் இடத்துக்கே மின்மயானம் சென்றால் எப்படி இருக்கும்? என்று ஆலோசித்தார் ஈரோடு மாவட்ட மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உருவாகியுள்ள ஆத்மா மின்மயானத்தின் நிறுவனரும் மருத்துவருமான சகாதேவன்.
ஏற்கெனவே 2007 முதல் மின்மயானத்தில் எரியூட்டும் முறையை அவர் நன்கு அறிந்திருந்தார். பின் தொழில்நுட்பப் பிரிவினருடன் கலந்தாலோசித்து, இப்படி ஒரு எரியூட்டு இயந்திரத்தை செய்து அதை ஆம்புலன்சில் வைத்து எடுத்துச் சென்று எரியூட்டச் செய்யத் தேவையானவற்றை வடிவமைத்தனர்.
இதுகுறித்து பேசிய மருத்துவர் சகாதேவன் அதன் வடிவமைப்பை விளக்கினார். “நடமாடும் எரியூட்டும் இயந்திரத்தின் அடியில் சுழலும் சக்கரங்களை பொருத்தி அதனை ஒரு சங்கிலி உடன் இணைத்து, ஆம்புலன்ஸில் இருந்து சரிவான இறங்கு தளத்துடன் கூடிய இரும்பு சாளரத்தில் பொருத்தினர். அதனை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கும் வகையில் ஆட்டோமேட்டிக் மோட்டார் வசதி மூலம் சங்கிலியோடு பிணைத்தபடியே இறக்கினர். அதிக எடை இருந்தபோதும் மிகவும் பொறுமையாகவும் பாதுகாப்போடும் கீழே இறக்கும் வகையில் இதை வடிவமைத்தனர்.” என்றார்
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
முதலில் சோதனை முயற்சியின் போது வந்த சவால்களையும் அதை எவ்வாறு மேம்படுத்தினர் என்பதையும் ஆத்மா மின்மயான அறக்கட்டளை செயலர் வி.கே.ராஜமாணிக்கம் விளக்கினார். “முதலில் உருவாக்கப்பட்ட நடமாடும் எரியூட்டும் இயந்திரம் ஒரு உடலை எரித்து சாம்பலாக்கி முடிக்க 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இது நமக்கிருக்கும் நேரப் பற்றாக்குறைக்கு அதிக நேரம்.
எனவே, மீண்டும் அதன் தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி, கேஸ் மூலம் எரிவதோடு மட்டுமின்றி ஜென்செட் அமைத்து அதைக் கொண்டு அதிக காற்றை கொண்டு நெருப்பின் தீவிரத்தை அதிகரித்தோம். இதனால், ஒரு சடலம் எரிந்து முடித்து சாம்பலாகும் நேரம் 2-லிருந்து ஒரு மணி நேரமாகக் குறைந்தது. ஆகவே, இந்த இயந்திரத்தின் உதவியால் ஒரு மணி நேரத்தில் சடலத்தை எரித்து அஸ்தியை உறவினர்களிடம் அளித்துவிட முடியம்” என்றார்.
“இறந்தவர் விருப்பத்தை நிறைவேற்றலாம்”
இறந்தவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாகக் கூறினார் வி.கே.ராஜமாணிக்கம். “பெரும்பாலும் வயதானவர்கள் தாங்கள் நீண்ட நாட்களாக வசித்த இடத்திலேயே தங்களை புதைக்கவோ எரிக்கவோ வேண்டும் என கேட்பார்கள். உதாரணத்துக்கு ஒரு 80 வயதான முதியவர் ஒரு தோட்டத்தில் வெகு நாட்களாக வாழ்ந்திருப்பார். அவரது கடின உழைப்பு அனைத்தையும் சேர்த்து அந்த தோட்டத்தை அவர் வாங்கி இருப்பார். மிகவும் ஆசை ஆசையாய் அதில் மரங்களை வளர்த்து இருப்பார்.
அப்படி இருக்கும்போது அவர் உயிரிழந்த பிறகு அதே தோட்டத்தில் வைத்து அவரது உடலை எரியூட்டினால் அந்தப் புகையானது அந்தத் தோட்டம், அங்கிருக்கும் மரங்கள் முழுக்கவும் நிறையும். இது அவர்களின் ஆத்மா சாந்தி அடைய உதவும் என்று நம்புகிறோம். எனவே கிராம சுடுகாடுகளுக்கு மட்டுமின்றி யாரேனும் அவரவர் சொந்த தோட்டத்தில் வைத்து இறந்தவரின் சடலத்தை எரியூட்ட வேண்டும் என்று கேட்டால் நாங்களும் இந்த நடமாடும் மின் மயானம் மூலம் தகனம் செய்து ஒரு மணி நேரத்தில் அஸ்தியைக் கொடுத்து விடுகிறோம்” என்றார்.
“தக்க சமயத்தில் உதவியது”
இந்த இயந்திரத்தின் மூலம் பயனடைந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த சரோஜினி பிபிசி தமிழிடம் பேசினார். “கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி எனது மாமனார் உயிரிழந்து விட்டார். சடலத்தை எடுப்பதற்கு இரவு 10 மணி ஆகிவிட்டது. மழை வரும் என நாங்கள் முன்கூட்டியே கணித்திருந்ததால், நடமாடும் மின்மயானத்தை வரவழைத்திருந்தோம். இரவு 10 மணிக்கு சடலத்தை வைத்து எரியூட்ட தொடங்கியதும் மழை சடசடவென வந்துவிட்டது.
எங்களது கிராமத்தில் வழக்கமாக கட்டைகளை அடுக்கித்தான் சடலங்களை ஏரியூட்டுவோம். ஆனால் இந்த இயந்திரம் பயன்படுத்தியதால், நாங்கள் சிரமத்துக்கு ஆளாகாமல் தப்பித்தோம். எங்களை பார்த்து எங்கள் நல்லிகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பலரும் அவர்களது குடும்பங்களிலோ உறவினர்களிலோ இறப்பு ஏற்பட்டால் இந்த வாகனத்தை தான் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்” என்று கூறினார்.
காசியில் அஸ்தி கரைக்க ஏற்பாடு
நடமாடும் தகன இயந்திரம் பற்றிய தனது அனுபவம் பற்றி விவரத்தார் ஈரோட்டைச் சேர்ந்த வெள்ளியங்கிரி. “எனது தாய் இறந்த போது இதில்தான் தகனம் செய்தோம். இதற்கு கட்டணமாக, முதலில் ரூ.7500 முதல் ரூ.9000 வரை வசூலித்து வந்தனர். பின்னர், ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில், பகலில் ரூ.5,000 -ம் இரவில் ரூ.6,000-ம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ஏழை மக்கள் தங்கள் பெற்றோரின் அஸ்தியை காசியில் கரைக்க விரும்பினால் கூட, அதற்கென ஒரு தனி கட்டணம் வசூலித்து அஸ்தியின் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு, அவர்களே அதை காசியில் கரைக்கின்றனர். அதை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரும் பார்த்து பயன்பெறும் வகையில் உதவுகின்றனர். இது மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.” என்றார்.
செலவும் குறைவு
நடைமுறை செலவுகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான கட்டணமே என்கிறார் ரோட்டரி கிளப்பின் ஆத்மா மின்மயான அறக்கட்டளையின் தலைவர் வி.ராஜமாணிக்கம். “ஒரு குடும்பத்தில் யாரேனும் மரணமடைந்தால் அந்த குடும்பத்தினருக்கு செலவு அதிகமாகவே இருக்கும். அது பெரும்பாலும் எதிர்பாராத செலவாகத்தான் இருக்கும். ஒரு வேளை இறந்தவர் அந்தக் குடும்பத்தில் சம்பாதிக்கக் கூடிய ஒரே நபராக இருந்தால், அக்குடும்பத்தின் எதிர்காலமும், பொருளாதாரமும் கேள்விக்குறியாகவே இருக்கும்.
அந்த நேரத்தில் 30 முதல் 100-200 பேர் என வரும் அனைத்து உறவினர்களையும் மின்மயானத்துக்கு அழைத்துச் செல்ல ஒரு வேன், பஸ் உள்ளிட்டவற்றை வாடகைக்கு எடுப்பது கூடுதல் சுமையாகவே இருக்கும். அந்த சுமையை குறைக்கும் வகையில் நடமாடும் தகன வாகனமானது அவர்களது இருப்பிடத்திற்கே சென்று விடுகிறது. இதற்கு, ஈரோடு ஆத்மா மின்மயானத்தில் இருந்து சென்று வர 10 கிலோமீட்டருக்குள் இருக்கும் இடங்களுக்கு ரூ.5,000 மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை அடுத்து கிலோ மீட்டருக்கு ரூ. 20 ரூபாயும் இரவில் எரிக்க கூடுதலாக ரூ.1,000-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, செலவைப் பொறுத்தவரை இது மிகவும் சிக்கனமானதாகவும் அதே சமயம் நவீனமயமானதாகவும் உள்ளது” என்றார்.
வேறு என்னென்ன வசதிகள் உள்ளன?
நடமாடும் தகன வாகனத்தில் மேலும் பல வசதிகள் இருப்பதாக கூறினார் ஆத்மா அறக்கட்டளையின் பொருளாளர் சரவணன். “கேஸ் மூலமும் ஜென்செட் மூலமும் உடலை எரியூட்டுவது மட்டுமின்றி, இரவு நேரங்களில் சுடுகாட்டில் ஒரு தோட்டத்திலே வைத்து எரிக்கும் போது, அங்கு வெளிச்சம் குறைவாக இருக்கும். எனவே, அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் உள்ளன. சுமார் ஒரு ஏக்கர் வரையில் ஒலிக்கக்கூடிய ஸ்பீக்கர்களும் உள்ளன. அதில்
‘ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!”
என்ற மின்மயானங்களில் சடலத்தை எரியூட்டும் போது ஒலிக்கும் மென்மையான, அமைதி தரக்கூடிய அதே பாடல் ஒலிக்கும். அத்துடன் பக்கவாட்டில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஆவேசத்தில் யாரும் வந்து இயந்திரத்தை தொடாமல் தடுக்க இயந்திரத்தை இயக்குபவர் பாதுகாப்புக்கு நிற்பார்.” என்றார்.
சுற்றுச்சூழலுக்கும் உகந்தது!
இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது என விளக்கம் அளித்தார் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் சகாதேவன். “எருவா முட்டி, விறகு உள்ளிட்டவற்றை வைத்து எரிக்கும் போது அது சுற்றுச்சூழலுக்கு அதிக புகை மாசுவை கொடுக்கும். ஆனால் இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான புகையோடு ஆத்ம திருப்தியுடன் சடலத்தை எரிக்க உதவுகிறது. கிராமப்புற மக்கள் மட்டுமின்றி மலைப்பகுதியில் இருந்து மின்மயானத்தை தேடி வர முடியாத மக்களுக்காகவும், எங்களது வாகனம் அவர்களை தேடிச் செல்கிறது.
ஒவ்வொரு ஊரிலும் ரோட்டரி சங்கம் செயல்பட்டு வருகிறது. அவையும் அரசாங்க உதவியுடன் இது போன்ற ஒரு நடைமுறையை முன்னெடுத்தால் ஈரோடு மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் குறிப்பாக நாடு முழுக்கவும் இதனை விரிவு படுத்தினால் மக்கள் அனைவரும் பயன் பெற ஏதுவாக இருக்கும்.
பொதுவாக வீடு தேடி வரும் ஆம்புலன்ஸ் போல, வீடு தேடி வரும் அனைத்து சேவைகளுக்குமே மக்கள் மத்தியில் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதே போல்தான் நடமாடும் மின் மயானத்திற்கு கூட வரவேற்பு அதிகம் உள்ளது. மக்களின் பணம், நேரம், அலைச்சல் ஆகியவற்றை மிச்சப்படுத்தும் இந்த இயந்திரத்தை நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு செல்ல அரசு உதவ வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்